நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்!

செல்லமுத்து குப்புசாமி

ர் எளிமையான உளவியல் கேள்வி. நாம் ரூ.1,000 முதலீடு செய்திருக்கும் பங்கு ரூ.1,100 ஆக உயர்கிறது எனில் மகிழ்வீர்கள். இதுவே  ரூ.1,200-ஆக உயர்ந்தால்...? அப்போதும் மகிழ்வீர்கள், சற்றுக் கூடுதலாக.  

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்!

சரி, ரூ.1,000 முதலீடானது ரூ.1,500-ஆக, ரூ.2,000-ஆக, ரூ.5000-ஆக மாறினால்...? நாம் அடையும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. 

லாபம் அதிகரிக்க, அதிகரிக்க நம் மகிழ்ச்சியும் அதிகரிக்கிறது. நமது மகிழ்ச்சிக்கு அளவுகோல் இருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

மகிழ்ச்சிக்கு அளவுகோல் உள்ளதென்றால், கவலைக்கும் அளவுகோல் இருக்க வேண்டும் என்பதுதானே லாஜிக்?  

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்!நம் முதலீட்டின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் என வைத்துக்கொள்வோம். அடுத்த நாள் அந்த முதலீட்டின் சந்தை மதிப்பு ரூ.50 ஆயிரம் உயர்ந்து, ரூ.5.5 லட்சம் ஆகிறது. அதைப் பார்த்து நாம் பரம சந்தோஷமடைவோம்.

சரி, 50 ஆயிரம் உயர்வதற்குப் பதிலாக 50 ஆயிரம் சரிகிறது. அதனால் முதலீட்டின் மதிப்பு ரூ.4.5 லட்சமாகக் குறைகிறது. அப்போது வருத்தப்படுவோம்.

ஆனால், இந்த வருத்தத்தின் அளவுகோல் என்ன? ரூ.50 ஆயிரம் லாபம் கிடைத்தபோது உண்டான அதே சந்தோஷத்தின் அளவுதான் ரூ.50 ஆயிரம் நஷ்டம் தந்த வருத்தமும் இருந்திருக்குமா?

உதாரணத்துக்கு, ரூ.50 ஆயிரம் லாபம் தருகிற சந்தோஷத்தின் அளவு 100 கிராம் என்றால், அதே ரூ.50 ஆயிரம் நஷ்டம் தருகிற சோகத்தின் அளவு 200 கிராமாவது இருக்கும்.

ஒரு குழந்தைக்குப் பொம்மை வாங்கித் தரும் போது, அது சிரிப்பதைவிட அந்தக் குழந்தைக்குச் சொந்தமான பொம்மையை (இனிமேல் அது தனக்குக் கிடைக்கவே கிடையாது என்ற வகையில்) பிடுங்கி இன்னொரு குழந்தைக்குக் கொடுக்கும்போது பல மடங்கும் அழுது கூச்சலிடும். அதன் நீட்சியைத்தான் நாம் ஷேர் மார்க்கெட்டில் காண்கிறோம். இதுவே ஷேர் மார்க்கெட் இழப்புகள் தொடர்பாக உலக அளவில் பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மையும் ஆகும்.

இத்தனைக்கும் நாம் அடையும் லாபம் அல்லது நஷ்டம் எனக் கருதுவது உண்மையான லாபமாகவோ, நஷ்டமாகவோ இருக்காது. அன்றைக்கு மார்க்கெட் நிலவரத்தில் என்ன விலையோ அதனைப் பிரதிபலிக்கும். நம் முதலீட்டை விற்றால் மட்டுமே அது நாம் உணர்ந்த (Realized/Actual) லாபமாகவோ அல்லது நஷ்டமாகவோ இருக்கும். மற்றபடி அது வெறும் காகித (Perceived) லாபம் அல்லது நஷ்டம் மட்டுமே. காகித லாபத்தைவிட, காகித நஷ்டம் நமது இதயத்தைப் பலவீனமாக்குவதைப் பற்றித்தான் பேசுகிறோம்.

ஷேர் மார்க்கெட்டில் லாபம், நஷ்டம் இரண்டையும் சமமாகப் பாவிக்கும் மனோபக்குவத்தை நல்ல முதலீட்டாளர் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது மிக மிகக் கடினம். பங்குச் சந்தையில் நாம் சந்திக்கும் இழப்பு நம்மையும், நமது தன்னம்பிக்கை, நடவடிக்கை, சிந்திக்கும் விதம், செயல்பாடுகளின் தனித்துவம் ஆகியவற்றையும் பாதிக்காத வகையில் பக்குவமடைவது அவசியம். இதைப் பற்றி பேசுவது எளிது. ஆனால், தனக்கு நிகழும்போது நடைமுறையில் கடைபிடிப்பது சிரமம். இதற்கு நிறைய பயிற்சி தேவைப்படும்.

ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் தவிர்க்க இயலாதவை. நீங்கள் பத்து நிறுவனங்களின் பங்குகளை வாங்கினால், அந்தப் பத்தும் ஒரே வேகத்தில் வளராது. சில பங்குகள் வேகமாக வளரலாம். சில மெதுவாக வளரலாம். சில நிறுவனங்கள் அப்படியே தேங்கிப் போகலாம். வேறு சில தேயலாம் - அதாவது, இழப்பை ஈட்டித் தரலாம். ஷேர் மார்க்கெட்டில் லாபம் சம்பாதிப்பது என்பது எப்படி இயற்கையான விஷயமோ, அதேபோல நஷ்டமடைவதும்.

நம் கட்டுப்பாட்டில் இல்லாத பல விஷயங்கள் நமக்கு இழப்புகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் நாம் தவறாக எடுத்த முடிவுகள் நமக்கு நஷ்டம் தரும். ஆனால், நஷ்டம் என்றாலே நாம் அதை உணர்வுபூர்வமாக எடுத்துக்கொள்கிறோம். நம் சிந்திக்கும் திறனும், பகுத்தாய்ந்து முடிவெடுக்கும் திறனும் தடுமாறிப்போய்விடுகிறது; நஷ்டமா, நமக்கா என்று பதற்றமாகிவிடுகிறோம்.

உண்மையில் இதுபோன்ற சமயங்களில்தான் நிதானமாக இருக்கப் பழக வேண்டும். தப்பான முடிவென்றால், அதனை தவறென்று ஒப்புக் கொண்டு அதே தவறை மீண்டும் செய்யாதிருக்கக் கற்க வேண்டும். தவறான முதலீட்டில் இழப்பு ஏற்பட்டால், அதனை நஷ்டத்தில் விற்க வேண்டியது அவசியம்.

ஆனால், அப்படி விற்பதற்கு நம் மனது ஒப்புக்கொள்ளாது. ரூ.100-க்கு வாங்கிய பங்கு ரூ.90-ஆகக் குறைந்திருக்கும்போது நாம் விற்க மாட்டோம். அப்படிச் செய்தால் நாம் தவறு செய்ததாக ஆகிவிடும் என்பதால், நாம் நஷ்டத்தில் விற்பதில்லை. அது மறுபடியும் 100-ஆக உயரும் வரை காத்திருப்போம். அதற்கு சில வருடங்கள்கூட ஆகலாம். அப்படிக் காத்திருக்காமல் அதை விற்று, வேறு நல்ல பங்குகளில் போட்டிருந்தால் ஒருவேளை அந்த முதலீடு பலமடங்கு பெருகி யிருக்கலாம்.

என்னைக் கேட்டால் இழப்புகளை, அந்த இழப்பு தரும் வலியை எவ்வளவு சீக்கிரம் அனுபவித்து உணர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் உணர்வது அவசியமானது. நீங்கள் ஐயாயிரம் ரூபாயில் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்றால் அப்போதே கொஞ்சம் நஷ்டத்தைச் சுவைத்து, உணர்ந்து  அழுதுவிடுவது நல்லது. அந்த வலி என்னவென்று தெரிந்துவிடும். அப்படியில்லாமல் உங்களது ஒட்டுமொத்த செல்வத்தையும் ஷேர் மார்க்கெட்டில் போட்டு, முதலீட்டின் மதிப்பு ரூ.30 லட்சம் / ரூ.50 லட்சம் என இருக்கும்போது 20% அல்லது 30% நஷ்டம் வந்து, அதை நீங்கள் முதன்முதலாக அனுபவிக்க நேர்ந்தால், அது கொடுமையான அனுபவமாகவே இருக்கும்.

பங்குச் சந்தையில் உங்கள் முதலீடு நல்ல விதத்தில் நடக்கும் நிறுவனத்தில் இருந்தால், குறுகிய காலத்தில் நஷ்டம் வந்தாலும், நீண்ட காலத்தில் அந்த நஷ்டத்திலிருந்து வெளியே வந்து, நல்ல லாபத்தையும் பார்க்க முடியும் என்று யாராவது சொன்னால், நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், உணர்வுபூர்வமாக அனுபவித் தவர்கள் அது எத்தனை பெரிய உண்மை என்று உணர்வார்கள்.

இது சம்பந்தமாக (செல்போன்கள் எல்லாம் இல்லாத) முன்னொரு காலத்தில் எப்போதோ கேள்விப்பட்ட ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு வியாபாரி இருந்தார். அவருக்கு பிசினஸில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அவருடைய கணக்குப்பிள்ளை, முதலாளிக்கு போன் செய்து சொல்ல வேண்டும். சொன்னால் முதலாளி  கவலைப் படுவார். அதற்காகச் சொல்லாமலும் இருக்க முடியாது. நிலைமையை எப்படிக் கையாள்வது என யோசித்த கணக்குப்பிள்ளை ஒரு யோசனை செய்தார்.

“அய்யா, இரண்டு கெட்ட செய்தி. ஒண்ணு, ஸ்கூல் டூர் போன இடத்துல ஒரு விபத்து நடந்திருக்கு. நம்ம சின்ன முதலாளி அந்த இடத்துலேயே இறந்துட்டாராம். நான் மத்த விஷயத்தை விசாரிச்சுட்டு அப்புறமா போன் பண்றேன். இரண்டாவதா, நம்ம பிசினஸ்ல அந்த நார்த் இந்தியா பார்ட்டியோட ஒரு டீலிங் செஞ்சோமே... அதுல 50 லட்சம் ரூபாய் நஷ்டம்” என வைத்துவிடுகிறார்.

மறுபடியும் பத்து நிமிடம் கழித்து, கணக்குப்பிள்ளை முதலாளிக்கு போன் செய்து, “அய்யா, நான் விசாரிச்சுட்டேன். விபத்துல இறந்தது நம்ம தம்பி இல்லையாம். அது இன்னொரு பையனாம். நம்ம தம்பிக்கு ஒண்ணும் ஆகல” என்றதும் முதலாளி பெருமூச்சுவிடுகிறார்.

“அப்புறமா அந்த பிசினஸ் நஷ்டம் வந்துங்கையா...” எனக் கணக்கு பிள்ளை இழுக்கவும், முதலாளியோ, “அது போனாப் போகுது. இன்னொரு டீலிங்ல புடிச்சுக்கலாம் விடுங்க” எனச் சொல்கிறார்.

ஒரு கோட்டை அழிக்காமலே அதைச் சிறிதாக்குவதற்கு அதைவிட பெரிதாக இன்னொரு கோடு வரையும் அதே பழைய பீர்பால் காலத்து டெக்னிக்தான். சிறு வயதிலேயே பங்குச் சந்தை முதலீட்டைத் தொடங்கிவிடுவது நல்லது. அந்தச் சிறு வயதிலேயே சிறிய அளவில் நஷ்டத்தையும் பார்த்துவிடுவது நல்லது!

(லாபம் சம்பாதிப்போம்)

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்!

10 ரூபாய் நாணயம் சட்டப்படி செல்லும்!

ரிசர்வ் வங்கியானது 14 விதங்களில் வெளி யிட்டுள்ள 10 ரூபாய் நாணயம் சட்டப்படி செல்லும் என மத்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி இருக்கிறது. 10 ரூபாய் நாணயத்தின் நம்பகத் தன்மையைச் சந்தேகப் பட்டு, சில நகரங்களில் உள்ள வர்த்தகர்கள் வாங்க மறுத்து வருவது குறித்து ரிசர்வ் வங்கிக்குப் புகார் வந்தது. இதனையடுத்து, ரிசர்வ் வங்கியானது, “அரசு வெளியிடும் 10 ரூபாய் நாணயங்களில் சமூகம், கலாசாரம் மற்றும் பொரு ளாதாரத்தை விளக்கிச் சொல்கிற மாதிரியான விஷயங்கள் இருக்கும். இந்த விஷயங் கள், குறித்த காலத்துக்கு ஒருமுறை மாறும்’’ எனச் சொல்லி யிருக்கிறது. இனியாவது 10 ரூபாய் நாணயக் குழப்பம் தீரட்டும்!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்!

வங்கிகள்   கடன் வழங்குவது திடீர் உயர்வு!

நம் நாட்டில் வங்கிகள் கடன் வழங்குவது கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்குத் தற்போது உயர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை வங்கிகள் அளித்த மொத்தக் கடன் தொகை ரூ.82 லட்சம் கோடியாகும்.

கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.8.2 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகள் கடன் தந்திருக்கின்றன. ஜனவரி 5-ம் தேதிக்கு முந்தைய இரண்டு வாரங் களில் மட்டும் ரூ.1.09 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரித்து இருப்பது என்பது, நம் பொருளாதாரம் வளர்ச்சி  பெற்று வருகிறது என்பதையே காட்டுகிறது. வளரட்டும்... வளரட்டும்!