நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பென்ஷன் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது?

பென்ஷன் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது?
பிரீமியம் ஸ்டோரி
News
பென்ஷன் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது?

கேள்வி - பதில்

பென்ஷன் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது?

என் வயது 32. மாதாமாதம் ரூ.2000 முதலீடு செய்து 50 வயதில் பென்ஷன் கிடைக்கும் திட்டத்தைப் பரிந்துரைக்கவும்.

பென்ஷன் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது?



- தினேஷ், மதுரை


சங்கர், நிதி ஆலோசகர்


‘‘பென்ஷன் பிளானில் முதலீடு செய்தால், 60 வயதான பிறகுதான் அதனைப் பயன்பாட்டிற்கு எடுக்க முடியும். அதற்குமுன்னதாக எடுப்ப தென்றால், திருமணம், வீடு கட்டுவது போன்ற காரணங்களைக் காட்டி குறிப்பிட்ட தொகையை எடுக்கலாம். ஆனால், இப்படி இடையிலேயே எடுப்ப தென்றால் பென்ஷன் என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். முதுமையில் பயன்படுத்தத் தான் இந்த முதலீடு. ஆக, வேறு வழியே இல்லையென்றால் மட்டுமே அந்த முதலீட்டிலிருந்து பணம் எடுக்கலாம். ஹெச்.டி.எஃப்.சி அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மியூச்சுவல் ஃபண்டுகளின் பென்ஷன் திட்டங்களில்  முதலீடு செய்யலாம். ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப ஈக்விட்டி, கார்ப்பரேட் பாண்டுகள், அரசு பாண்டுகள் போன்ற ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்கலாம்.’’

என் வயது 32. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். எஸ்.ஐ.பி முறையில் ஐந்துக்கும் மேற்பட்ட ஃபண்டுகளில் மாதம் 25,000 ரூபாய் முதலீடு செய்யலாமென இருக்கிறேன். 18 ஆண்டுகளின் முடிவில் குறைந்தபட்சம் ரூ.4 கோடி கிடைக்க வேண்டும். எப்படிப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்?

பென்ஷன் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது?

மாறன், திருநெல்வேலி

என்.விஜயகுமார், நிதி ஆலோசகர், www.vbuildwealth.com


‘‘மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலம் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி சிறந்ததாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, மாதம் ரூ.25,000 வீதம், 18 ஆண்டுகளுக்குச் செய்யப்படும் முதலீட்டுக்குச் சராசரியாக ஆண்டுக்கு 13% வருமானம் கிடைத்தால், முதலீடு ரூ.2,15,80,706-ஆகப் பெருகியிருக்கும். கடந்த காலத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முதலீடு 18% வரை வருமானம் கொடுத்திருக்கிறது என்றாலும், நீங்கள் ஓரளவு சராசரியான எதிர்பார்ப்பை வைத்துக்கொள்வதே நல்லது. எனவே, ரூ.4 கோடி என்ற இலக்கை ஏற்கெனவே கூறிய 13% வருமானத்தில் எட்ட வேண்டுமெனில், முதலீட்டு ஆண்டுகளை மேலும் 4.5 ஆண்டுகள் அதிகரித்தால் சுமார் ரூ.4,04,56,800 கிடைக்கக்கூடும். அல்லது அதே 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.47,000 முதலீடு செய்துவந்தால், 13% வருமானத்தில் ரூ.4 கோடி ரூபாய் இலக்கை எட்ட முடியும். முடிந்த வரை எஸ்.ஐ.பி முதலீட்டில் முதலீட்டுக் காலம் அதிகமாக இருப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

எஸ்.ஐ.பி முதலீட்டில் மேற்கொள்ள வேண்டிய மூன்று ஃபண்டுகள்... 1. ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்சியல் ஃபோகஸ்டு புளூஷிப் ஃபண்ட் - லார்ஜ்கேப், 2. ஹெச்டிஎஃப்சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிடீஸ் மிட்கேப் டைவர்சிஃபைடு, 3. ஆதித்ய பிர்லா அட்வான்டேஜ் ஃபண்ட் - டைவர்சிஃபைடு ஃபண்ட்.’’

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு புதியவனான நான், மாதம் ரூ.2,000 பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆலோசனை கூறுங்கள்.

பென்ஷன் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது?



மகேஷ், சேலம்

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்


‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு நீங்கள் புதியவர் என்பதால், சில அடிப்படை விஷயங்களைக் குறிப்பிடுகிறேன். ஃபண்ட் மேனேஜர்களின்  நிபுணத்துவத்துவம், ரிஸ்க் பரவலாக்கல், சிறு தொகையில் முதலீடு செய்யும் வசதி, எளிதில் பணமாக்கும் வசதி ஆகியவை இதில் உண்டு.  பணத் தேவையிருப்பின் உடனே எடுக்கவோ, இல்லாதபட்சத்தில் நிறுத்தவோ, பின்பு முதலீட்டைத் தொடரவோ இதில் முடியும். ஆண்டு முழுக்க எப்போது வேண்டுமானாலும் உங்கள் முதலீட்டை நீங்கள்  கண்காணிக்க முடியும். நேரடியாகவோ அல்லது ஆம்ஃபி (AMFI) முகவர் மூலமாகவோ முதலீட்டைத் தொடங்கும் வசதியும் இதில் உள்ளது. 

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் எனில், முதலீட்டுக் காலத்தைக் குறைந்தது 5 - 8 வருடங்களுக்கு வைத்துக்கொள்வது அவசியம். எஸ்.ஐ.பி முறையில் இரண்டு பேலன்ஸ்டு ஃபண்டுகளில் தலா ரூ.1,000 மூலம் முதலீட்டைத் தொடங்குங்கள். எல் & டி இந்தியா புரூடென்ஸ் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட் உங்களுக்குச் சரியானவைகளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.’’

 2017-ம் ஆண்டில் டீ-லிஸ்ட் செய்யப்பட்ட ரிச்வே இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Richway Infra) நிறுவனத்தின் 100 பங்குகளை வைத்திருக்கிறேன். இவற்றை விற்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

பென்ஷன் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது?

கீர்த்தனா, திருச்சி

ரெஜிதாமஸ், பங்குச் சந்தை ஆலோசகர்


‘‘டீ-லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனப் பங்குகளை விற்க இயலாது. அவற்றை வாங்க யாரும் முன்வர மாட்டார்கள். ரிச்வே நிறுவனத்தையோ, பதிவாளரையோ தொடர்புகொண்டு அவர்களின் உதவியால் மட்டுமே அந்தப் பங்குகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற இயலும்.’’

என்னிடமுள்ள 20 லட்சம் ரூபாயை மாதாமாதம் வருமானம் வரும் விதமாக முதலீடு செய்ய விரும்புகிறேன். சரியான முதலீட்டு யோசனை கூறுங்கள்.

கிறிஸ்டோபர், அருப்புக்கோட்டை

பென்ஷன் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது?



எஸ்.ராஜசேகரன், நிதி ஆலோசகர்


‘‘தங்களிடம் உள்ள ரூ.20 லட்சத்தைக் கீழ்க்கண்ட வழியில் முதலீடு செய்து வருமானம் பார்க்கலாம். 1. வங்கியில் முதலீடு செய்து ஆண்டுக்கு  6% முதல் 6.5% வட்டி வருமானம் பெறலாம். 2. அஞ்சலக சேமிப்புத் திட்டத்தில் சீனியர் சிட்டிஷன் மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் ஆண்டுக்கு 8% வட்டி கிடைக்கும். 3. எல்.ஐ.சி நிறுவனத்தின் ஜீவன் அக்சயா என்ற திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் 7% வருமானம் கிடைக்கும். 4. பிரதமரின் சீனியர் சிட்டிஷன் பென்ஷன் திட்டம் உள்ளது. 5. மியூச்சுவல் ஃபண்டில் மன்த்லி இன்கம் பிளானில் முதலீடு செய்யலாம். இதில், ஆண்டுக்கு 8-12% வருமானம் கிடைக்கக்கூடும். உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து மேலே கண்ட முதலீட்டுத் திட்டங்களில் ரூ.20 லட்சத்தைப் பிரித்து மேற்கொள்ளவும்.’’

பாகப்பிரிவினையின் மூலம் ரூ.8 லட்சம் கிடைத்துள்ளது. இதனை என் மகனின் கல்லூரிப் படிப்புக்காக 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பயன்படுத்த உள்ளேன். இந்தத் தொகையை எதில் முதலீடு செய்வதென ஆலோசனை கூறுங்கள்.

பென்ஷன் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது?

சக்திவேல், கமுதி

எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர், wealthladder.co.in


‘‘உங்களின் தேவையானது மகனின் கல்லூரிப் படிப்புக்கானது என்பதாலும், 2019-ம் ஆண்டு மார்ச் மாதமே தேவைப்படும் என்பதாலும் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டைத் தவிர்த்து, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதே  சரி. ஃப்ராங்க்ளின் இந்தியா அல்ட்ரா ஷார்ட் பாண்ட் ஃபண்ட்– ரூ.4,00,000.  பி.ஓ.ஐ ஆக்சா டிரஷரி அட்வான்டேஜ் ஃபண்ட் – ரூ.4,00,000.’’

தொகுப்பு: தெ.சு.கவுதமன் 

பென்ஷன் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது?

மம்தா பானர்ஜியின் பெருந் தன்மை!

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா. இந்த மாநாட்டில் முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல் உள்பட பலரும் கலந்துகொண்டு, மேற்கு வங்கத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யத் தயார் என்று சொல்லியிருக் கின்றனர்.

இந்த மாநாட்டின் வரவேற்புரையில், ‘மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் முதலீடு செய்யுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் மம்தா. பக்கத்திலிருக்கிற மாநிலங்களிலும் முதலீடு செய்யச் சொன்னது மம்தாவின்  பெருந்தன்மை யையே காட்டுகிறது!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.