நடப்பு
தொடர்கள்
Published:Updated:

புத்திசாலித்தனமான முதலீடு... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

புத்திசாலித்தனமான முதலீடு... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
புத்திசாலித்தனமான முதலீடு... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

பாஸ்டன் ஸ்ரீராம்

ம்மவர்கள் முதலீடு செய்வதே பெரிய விஷயம். அப்படிச் செய்கிறவர்களும் சிலபல தவறுகளைச் செய்துவிடுவதால், அந்த முதலீட்டின் மூலம் பயனை அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே, புத்திசாலித்தனமான முதலீட்டுக்கு நாம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் என்னென்ன?    

புத்திசாலித்தனமான முதலீடு... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

1. செலவும், முதலீடும் ஒன்றல்ல

எது செலவு, எது சேமிப்பு என்பதில் பலருக்கு  குழப்பம் இருக்கிறது. தங்கம் நல்ல முதலீடு என இன்னும்கூட பலரும் நினைக்கிறார்கள். தங்க நகை வாங்குவது முதலீட்டில் வராது. தினமும் ஓட்ட பயன்படுத்தும் காரும் அப்படித்தான். ரூ.10  லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய கார், ஷோரூமை விட்டு சாலைக்கு வந்ததும் அது செகண்ட் ஹாண்ட் காராகி, அதன் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் ஆகிவிடும்.

இதுபோலவே, காப்பீடும் செலவே. ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, பொருள்களுக்கான காப்பீடு எல்லாம் செலவே. பலரும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் ‘முதலீடு’ செய்வதாக நினைத்துப் பணத்தை விரயம் செய்கின்றனர். இன்ஷூரன்ஸ் கம்பெனிகளைக் காப்பீடு பாலிசி பெற மட்டுமே அணுக வேண்டும். முதலீடு என்பது உங்கள் பணத்தை பல மடங்கு பெருக்குவதாக இருக்க வேண்டும். 

புத்திசாலித்தனமான முதலீடு... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!2. ஓய்வுக்காலத் தேவைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி

“பாதை மாறிய கால்கள் ஊர் போய் சேராது” என்பது முதலீட்டுக்கும் பொருந்தும். ஓய்வுக்காலத்துக்காக காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது தவறானது. காப்பீடும் முதலீட்டு வளர்ச்சியும் வழங்கும் திட்டங் களில் (ULIP) உங்களுக்குத் தேவையான அளவு காப்பீடும் கிடைக்காது, வருமானமும் கிடைக்காது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பங்குச் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்றாலும், நீண்ட நாள் தொடர்ந்து முதலீடு செய்யும்போது, அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. 

3. தொடர்ச்சியான முதலீடே ஜெயிக்கும்

பங்குச் சந்தை வேகமாக வளர்ந்து வரும்போது எல்லாரும் முதலீடு செய்கிறார்கள் என்று நாமும் செய்வது தவறு. அதைவிடப் பெரிய தவறு, பங்குச் சந்தை விழும்போது முதல் ஆளாக போய் பணத்தை எடுப்பது. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டுகொள்ளாமல் அதில்  சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plan - SIP) முறையில் தொடர்ந்து முதலீடு செய்வது நல்லது.  

4. முதலீட்டைப் பரவலாக்காமல் இருப்பது

என்ரான் நிறுவனம், தன் ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பு முழுவதையும் என்ரான் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய அனுமதித்தது. அந்த நிறுவனம் திவாலானபோது, ஊழியர்கள் தங்கள் சேமிப்பு முழுவதையும் இழக்க நேரிட்டது. எல்லா முட்டைகளும் ஒரே கூடையில் (Don’t put all your eggs in one basket) வந்ததால் வந்த தொல்லை இது. ஒரு நல்ல சொத்துப் பகிர்வில் (Asset Allocation) நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள், கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட், தங்கம்/ வெள்ளி அனைத்தும் இருக்க வேண்டும்.

5. கட்டணங்களில் கவனம் செலுத்தாதது

ஒவ்வொரு முதலீட்டுக்கும் கட்டணம் உண்டு. அவற்றில் கூடுதல் கவனம் அவசியம். மியூச்சுவல் ஃபண்டுகளில் கட்டணமானது செலவு விகிதம் என அழைக்கப்படும். இதனைப் பார்க்க சிறிதாகத் தெரியும். கட்டணங்கள், 20-30 ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும்போது போர்ட்ஃபோலியோவின் செயல் திறனை அது பெரிய அளவில் பாதிக்கும். ஒரே மாதிரியான இரு ஃபண்டுகளை ஒப்பிடுகையில் குறைவான செலவு விகிதம் கொண்ட ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது. உதாரணம், இண்டெக்ஸ் ஃபண்டுகள்.

6. கடந்த கால வருமானத்தை மட்டும் பார்த்து முதலீடு செய்வது 

ஒரு ஃபண்டின் ஐந்து மற்றும் பத்தாண்டு கால வருமானம் / வளர்ச்சி ஒரு முக்கியக் காரணி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது மட்டுமே முதலீட்டை முடிவு செய்யும் காரணியாக இருக்க முடியாது. ஃபண்டின் ஸ்டைல், அளவு, கட்டணம், டேர்ன் ஓவர், ரேட்டிங், ஃபண்ட் மேனேஜரின் செயல்திறன் ஆகிய காரணிகளை வைத்தே ஒரு ஃபண்டில் முதலீடு செய்யலாமா என்று முடிவு செய்ய வேண்டும். சிலர் ஓராண்டு வருமானத்தை வைத்து முதலீட்டு முடிவை எடுப்பார்கள். இது மகா தவறு.

7. வருமான வரிச் சலுகையில் மட்டும் கவனம் செலுத்துவது

அதிகம் பேர் முதலீட்டைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணியாக வரி விலக்கை நினைக்கிறார்கள். வரி விலக்கில்லா முதலீடு 20% வளர்ச்சி தரும் நிலையில், வருமான வரி விலக்குத் தரும் முதலீடு 10% தந்தால் அதில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமாக இருக்காது. எனவே, வரி விலக்கு என்பதை மட்டும் பார்க்காமல், அது தரும் வருமானத்தையும் பாருங்கள்.

8. அதிக ரிஸ்க் எடுப்பது அல்லது ரிஸ்க்கே எடுக்காமல் இருப்பது

சிலர் அஸெட் அலோகேஷன்படி பிரித்து முதலீடு செய்யாமல் எல்லாப் பணத்தையும் அக்ரெஸிவ் பங்குகளில் முதலீடு செய்வார்கள். மார்க்கெட் வீழ்ச்சி அடையும்போது இந்த போர்ட்ஃபோலியோ அதிக அளவில் நஷ்டத்தைத் தரும். வேறு சிலரோ, சேமிப்பு முழுவதையும் வங்கி வைப்பு நிதியில் வைத்திருப்பார்கள். இவர்களின் முதலீடு பாதுகாப்பாக இருந்தாலும், வளர்ச்சி மிகக் குறைந்த அளவில் இருக்கும். இந்த இரு நிலைகளும் தவறு. முதலீட்டைப் பிரித்துச் செய்வதன் மூலம் ரிஸ்க் குறைவதோடு, அதிக வருமானமும் கிடைக்கும்.

9. ஆலோசகர்களைத் தவிர்ப்பது அல்லது நண்பர்களை ஆலோசகர்களாக்குவது

முதலீடு செய்யத் தேவையான அளவு அறிவு, அனுபவம், நேரம் இருப்பவர்கள் பிறர் துணையின்றி தாமே முதலீடு செய்யலாம். பெரும்பாலானோருக்கு இவை மூன்றும் இருப்பதில்லை. அவர்கள், ஒரு நல்ல நிதி ஆலோசகரை நாடுவது நலம். டாக்டர், வக்கீலைப்போல நிதி ஆலோசகரும் ஒரு புரஃபஷனல்தான். அவருக்கும் கட்டணம் கொடுக்க வேண்டும். அந்தச் செலவு உங்கள் முதலீட்டைப் பாதுகாப்பாக வைக்கவும், அதே சமயத்தில் வளர்ச்சி காண வைக்கவும் உதவும். நண்பர்களை ஆலோசர்களாக்குவதைத் தவிர்ப்பது நட்புக்கு நல்லது.

10. தொடர்ந்து கண்காணிக்காமல் இருப்பது

முதலீடு என்பது ஒரு நீண்ட பயணம் போன்றது. அவ்வப்போது போகும் பாதை, வேகம், எரிபொருள் அளவு இவற்றைக் கண்காணிப்பது போல, முதலீட்டிலும் செய்ய வேண்டும். நான்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி போய்க்கொண்டிருக்கிறது. இனி ரிட்டயர்மென்ட் வரை எதுவும் பார்க்க வேண்டாம் என்று இருக்க முடியாது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது போர்ட்ஃபோலியோவைப் பார்த்து, அதை மாற்றியமைக்க வேண்டுமெனில், அதை செய்தே ஆகவேண்டும். 

புத்திசாலித்தனமான முதலீடு... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

25 ஆண்டுகளில் இந்திய சந்தைதான் பெஸ்ட்!

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கொண்ட பொருளாதார நாடுகளை ஒப்பிடும்போது, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தைதான் மிகச் சிறப்பான வருமானத்தைத் தந்திருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் நிஃப்டி 1,357 சதவிகிதமும், சென்செக்ஸ் 1,289 சதவிகிதமும் லாபம் தந்திருக்கின்றன. ஜெர்மனி 755%, அமெரிக்கா 688% லாபம் தந்திருக்கின்றன.

கொரியா, தைவான், சீனா, பிரான்ஸ் நாட்டு பங்குச் சந்தைகள் 200 சதவிகித்துக்கு மேல் வருமானம் தந்துள்ளன. இங்கிலாந்து நாட்டு பங்குச் சந்தை 179 சதவிகிதமும், ஜப்பான் பங்குச் சந்தைகள் வெறும் 44 சதவிகிதமும் வருமானம் தந்துள்ளன.