
ட்விட்டர் சர்வே - வருமான வரியை எப்படிச் செலுத்துகிறீர்கள்?
ஜனவரி மாதம் வந்துவிட்டாலே போதும், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் கவலைபட ஆரம்பித்துவிடுவார்கள். காரணம், வாங்குகிற சம்பளத்தில் கணிசமான பகுதி வருமான வரிக்காகவே போய்விடும்.

மாதச் சம்பளம் வாங்குகிறவர்களில் எத்தனை பேர் திட்டமிட்டு ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுமையின்றி வரி கட்டுகிறீர்கள், எத்தனை பேர் எந்த வகையான திட்டமிடாமலும் இல்லாமல் கடைசி மூன்று மாதங்களில் வரி கட்டுகிறீர்கள் என்கிற கேள்வியை நாணயம் விகடன் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) சர்வேயில் கேட்டோம்.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் சுமார் 63% பேர் திட்டமிட்டு ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுமை தெரியாமல் வரி கட்டுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் நிதி நிர்வாகத்தில் நல்ல விழிப்புஉணர்வு கொண்டவர்கள் என்றே சொல்ல வேண்டும். ஆண்டு முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக வரி கட்டும்போது கடைசி மூன்று மாதங்களில் மொத்த வரியையும் கட்ட வேண்டிய கட்டாயம் இல்லாமல் போய்விடுகிறது.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் சுமார் 37% பேர் வருமான வரி செலுத்துவதில் எந்தத் திட்டமிடலும் இல்லாமல், கடைசி மூன்று மாதங்களில் செலுத்துவதாகச் சொல்லி யிருக்கிறார்கள். இவர்கள் கொஞ்சம் திட்டமிட்டால், எந்த வகையிலும் கஷ்டப்படாமல் வருமான வரியைச் செலுத்தலாம். உதாரணமாக, இவர்களில் ஒருவர், ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் வரி செலுத்த வேண்டுமெனில், மாதமொன்றுக்கு ரூ.2,500 செலுத்தினாலே போதும்.
வருமான வரி செலுத்துவதில் இதுவரை திட்டமிடாதவர்கள், இனியாவது மாதந்தோறும் பணத்தை ஒதுக்கி, சிரமமின்றி வரி கட்டுவோம்!
-ஏ.ஆர்.கே