நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வடக்கே பங்கு... தெற்கே தங்கம்... மாற வேண்டுமா நம் முதலீட்டு மனோபாவம்?

வடக்கே பங்கு... தெற்கே தங்கம்... மாற வேண்டுமா நம் முதலீட்டு மனோபாவம்?
பிரீமியம் ஸ்டோரி
News
வடக்கே பங்கு... தெற்கே தங்கம்... மாற வேண்டுமா நம் முதலீட்டு மனோபாவம்?

ராதிகா குப்தா, சி.இ.ஓ. எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட்சி.சரவணன்

நிதித் துறையில் ஒரு டஜன் ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவரும், சுமார் 11,000 கோடி ரூபாயை நிர்வகித்துவரும் எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியுமான (சி.இ.ஓ) ராதிகா குப்தா அண்மையில் சென்னை வந்திருந்தார். இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒரே பெண் சி.இ.ஓ இவர்தான்.  நாணயம் விகடன் இதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி இனி...   

வடக்கே பங்கு... தெற்கே தங்கம்... மாற வேண்டுமா நம் முதலீட்டு மனோபாவம்?

2017 பிப்ரவரியில் நீங்கள் எடெல்வைஸ் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பதவியேற்றபோது, நிறுவனம் சார்பில் ரூ.6,500 கோடி நிர்வகிக்கப்பட்டது. இப்போது அது சுமார் ரூ.11,000 கோடியாக அதிகரித்துள்ளது. எப்படி இது சாத்தியமானது?

“மியூச்சுவல் ஃபண்டில் சிறு முதலீட்டாளர்களை அதிகமாக முதலீடு செய்யவைக்கும் வழிகளைக் கொண்டுவந்துள்ளோம். குறிப்பாக, முதலீட்டின் லாபத்தைக் குறைக்கும் செலவு விகிதத்தைப் (Expenseive Ratio) பாதியாகக் குறைத்துள்ளோம். அதாவது, எங்களின் லார்ஜ்கேப் ஃபண்டில் இந்தச் செலவு விகிதத்தை சுமார் 2.6 சதவிகிதத்தி லிருந்து 1.3 சதவிகிதமாகக் குறைத்துள்ளோம். இதனால், ஃபண்ட் மூலமான லாபம் அதிகரிக்கும்போது முதலீடு தேடி வருகிறது. நாங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில் 75% ஈக்விட்டி ஃபண்டுகளைச் சார்ந்ததாக இருக்கிறது.”

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை தற்போது ரூ.22 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. இந்த வளர்ச்சி அடுத்த 5-10 ஆண்டுகளில் எப்படியிருக்கும்?


“ஆண்டுக்குச் சராசரியாக      20-25% வளர்ச்சியிருக்கும் என எதிர்பார்க்கிறோம். அந்த வகையில், இரு மடங்குக்கு மேல் வளர்ச்சியிருக்கும்.”

செபியானது லார்ஜ் கேப், மிட்கேப், ஸ்மால்கேப், பேலன்ஸ்டு ஃபண்டுகளை வகைப்படுத்தி இருக்கிறதே. இதனால்  முதலீட்டாளர் கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் யாருக்கு லாபம்?

“இரு தரப்பினருக்கும் நல்ல  லாபம் கிடைக்கும் என்றே சொல்லலாம். முதலீட்டாளர்கள் சரியான ஃபண்டில் முதலீடு செய்யும் நேரத்தில், ஃபண்ட் மேனேஜர்களும் ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோவைச் சரியாக அமைக்க செபியின் இந்த விதிமுறைகள் நிச்சயம் உதவும்.”  

வடக்கே பங்கு... தெற்கே தங்கம்... மாற வேண்டுமா நம் முதலீட்டு மனோபாவம்?

தொடர்ந்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரித்து வர என்ன காரணம்?

“தற்போதைய நிலையில், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற முதலீடுகள் லாபகரமாக இல்லை. அந்த வகையில், விவரம் தெரிந்த வர்களின் முக்கிய முதலீடாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மாறி இருக்கிறது. இதில், ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டு லாபத்துக்கு வரி கிடையாது என்பது கவர்ச்சியான அம்சமாக இருக்கிறது. சிறு முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி முறையில் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிகரித்திருப்பதும் முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.”

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இன்னும் பெரும்பாலான மக்களைக் குறிப்பாக, கிராம மக்களைப் போய்ச் சேரவில்லையே?

“இப்போது படிப்படியாக மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புஉணர்வு அனைவரிடமும் ஏற்பட்டு வருகிறது. கிராம மக்கள் முழுமையாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய சில காலம் எடுக்கலாம். அதற்கான நடவடிக்கையை ஆஃம்பி, செபி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து எடுத்து வருகின்றன.”

அடுத்த 3-5 ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்படலாம் என எதிர்பார்க்கப்படும் துறைகள் எவை?

“இரண்டு துறைகளைக் குறிப்பிடலாம். ஒன்று, எஃப்.எம்.சி.ஜி என்கிற நுகர்வோர் துறை. இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகரித்து வருவதே இந்தத் துறையின் வளர்ச்சிக்கான சாதகமாக உள்ளது. தற்போது, இந்தியா இரண்டு ட்ரில்லியன் பொருளாதார நாடாக உள்ளது. இது அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ஐந்து ட்ரில்லியன் பொருளாதார நாடாக மாறும் என்பதால், எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த நிறுவனங்கள் வேகமான வளர்ச்சி காணும். அடுத்து, தனியார் துறை நிதிச் சேவை நிறுவனங்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக, இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், வெல்த் மேனேஜ்மென்ட், பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி) போன்றவை நன்கு வளர்ச்சியடையும்.”

பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில், வட இந்தியர்களுக்கும் தென் இந்தியர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?

“வட இந்தியர்களின் முதலீட்டில் பெரும் பகுதி பங்குச் சந்தை சார்ந்ததாக இருக்கிறது. பங்கு முதலீடு என்பது அவர்களின் ரத்தத்திலே ஊறியதாக இருக்கிறது. அந்த வகையில், அவர்கள் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது மிகச் சாதாரணமாக உள்ளது. பிள்ளைகளின் பிறந்த நாள், திருமணம் போன்றவற்றுக்குப் பங்குகளைப் பரிசாகக் கொடுப்பதை வட இந்தியாவில் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். குஜராத், மும்பை, கொல்கத்தாகாரர்கள் பங்கு முதலீட்டில் பரிச்சயம்மிக்கவர்களாக இருக்கிறார்கள். தென் இந்தியர்கள் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் மிகவும் மோசம் என்று சொல்ல முடியாது. முன்பைவிட அவர்கள் இப்போது பங்கு முதலீட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். வீட்டில் நடக்கும் விஷேசங்களில் தங்க நகை, தங்க நாணயம் போன்றவற்றை அன்பளிப்பாகக் கொடுத்து வருகிறார்கள். இந்த மனோபாவம் சென்டிமென்டுடன் தொடர்புடையது என்பதால், இது மாறுவதற்குச் சிறிது காலம் ஆகும்.’’
      
ஏற்கெனவே 2000-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கும்போது, பல நிறுவனங்கள் புதிய ஃபண்டுகளை (என்.எஃப்.ஓ) கொண்டு வருகின்றன. இது சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதா?

“ஏற்கெனவே இருக்கிற தீம்களில் வருகிற புதிய ஃபண்டுகளில் சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தேவையில்லை. புதுமையான தீம்களில் வரும்போது அவற்றை முதலீட்டுக்குப் பரிசீலிக்கலாம். நாங்கள் கூட ஐ.பி.ஓ அடிப்படையில் புதிய ஃபண்ட் ஒன்றைக் கொண்டு வந்துள்ளோம்.”

ஃபண்டில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு உங்கள் ஆலோசனை..?
    
“பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் பொறுமை மிக முக்கியம். சந்தையின் தினசரி ஏற்ற இறக்கங்களைக் கண்டு கவலைப்பட வேண்டாம். அதிகம் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைப்பவர்கள் பேலன்ஸ்டு ஃபண்ட், ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ரிஸ்க் எடுக்கத் தயார், பங்குச் சந்தை பற்றி நன்கு தெரியும் என்பவர்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஆனால், இந்த முதலீடு நீண்ட காலத்துக்கானதாக இருப்பது மிக அவசியம்.”

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

வடக்கே பங்கு... தெற்கே தங்கம்... மாற வேண்டுமா நம் முதலீட்டு மனோபாவம்?

இந்தியாவின் ஜி.டி.பி 5 டிரில்லியன் டாலர்!

சுவிட்சர்லாந்திலுள்ள டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் பேசிய  பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க உலக தொழிலதிபர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதாகவும், முந்தைய காலங்களில் இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். “21 ஆண்டுகளுக்கு முன், 1997-ம் ஆண்டில் அப்போதைய இந்திய பிரதமர் டாவோஸ் நகருக்கு வந்தபோது இந்தியாவின் ஜி.டி.பி-யானது 400 பில்லியன் டாலர்களாக இருந்தது. தற்போது அது 6 மடங்கு அதிகரித்துள்ளது. வரும் 2025-ம் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 5 டிரில்லியன் டாலர்களை எட்டியிருக்கும்” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் மோடி.