நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 26 - இ.எம்.ஐ-யில் பொருள்கள்... எதிர்கால இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 26 - இ.எம்.ஐ-யில் பொருள்கள்... எதிர்கால இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 26 - இ.எம்.ஐ-யில் பொருள்கள்... எதிர்கால இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ன் வருமானத்துக்குக் கடன் எவ்வளவு வாங்கலாம், எவ்வளவு வாங்கினால் நெருக்கடியில் சிக்காமல் வாழமுடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அகலக்கால் வைத்துவிட்டு, பிறகு எதிர்காலத்துக்குச் சேர்க்க முடியாமல் நிறைய பேர் தவிக்கிறார்கள். அவர்களில் துரைசங்கரும் ஒருவர். துரைசங்கர் என்ன சொல்கிறார்...     

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 26 - இ.எம்.ஐ-யில் பொருள்கள்... எதிர்கால இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

“எனக்குச் சொந்த ஊர் மதுரை. தற்போது சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் அக்கவுன்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறேன். மாதம் 43,000 சம்பளம் வாங்குகிறேன். என் வயது 35. என் மனைவி பட்டப்படிப்பு படித்தவர். வீட்டுப் பொறுப்பைக் கவனித்துக்கொள்கிறார். கடந்த ஆண்டு  புறநகரில் 23 லட்சம் மதிப்பில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கினேன். கையில் உள்ள சேமிப்புகள் போக 18 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினேன். மாதம் 17,000 வீட்டுக் கடன் இ.எம்.ஐ செலுத்தி வருகிறேன்.

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். முதல் குழந்தை மூன்றாம் வகுப்புப் படிக்கிறாள். இரண்டாவது குழந்தை யூ.கே.ஜி படிக்கிறாள்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 26 - இ.எம்.ஐ-யில் பொருள்கள்... எதிர்கால இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!



வீடு வாங்கும்முன் வாடகையாக ரூ.6,000 மட்டுமே செலுத்தி வந்தேன். சொந்தமாக வீடு வாங்கிய பிறகு பெரும்பகுதி தொகை வீட்டுக் கடனுக்குப் போய்விடுவதால் கொஞ்சம் சிரமமான சூழலில்தான் குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது. வீட்டுக் கடன் மட்டுமல்லால் புது வீட்டுக்குக் குடிவந்த பிறகு வீட்டுக்குத் தேவையான பொருள்களை என் மனைவி இ.எம்.ஐ-யில் வாங்கிவிட்டார். அதற்கு மட்டுமே மாதம் 9,000 போய்விடுகிறது. எந்த முதலீடும் இதுவரை செய்யவில்லை. முதலீடு செய்ய பணம் ஒதுக்க முடியவில்லை. இரண்டு குழந்தைகளுக்கான படிப்புச் செலவு மட்டுமே மாதம் ரூ.5,000 ஆகிறது.

முதல் குழந்தையின் மேல்படிப்புக்கு இன்னும் 9 வருடங்களில் 8 லட்சமும், இரண்டாவது குழந்தையின் மேற்படிப்புக்கு 12 வருடங்களில் ரூ.8 லட்சமும் வேண்டும். முதல் குழந்தையின் திருமணத்துக்கு 15 வருடங்களில் ரூ.10 லட்சமும், இரண்டாவது குழந்தையின் திருமணத்துக்கு 17 வருடங்களில் ரூ.10 லட்சமும் தேவை. என் ஓய்வுக் காலத்தில், அதாவது 23 ஆண்டுகள் கழித்து மாதம் ரூ.15,000 தேவையாக இருக்கும். என் அலுவலகத்தில் பி.எஃப் தொகையாக மொத்தம் ரூ4,000 (2000 +2000) செலுத்தி வருகிறார்கள். (கேட்டுள்ள எல்லா தொகைகளும் இன்றைய மதிப்பில்)

ஹெல்த் ஃப்ளோட்டர் பாலிசி அலுவலகம் மூலம் ரூ.2 லட்சத்துக்கு எடுத்துக்கொடுத்துள் ளார்கள்.  இன்றைய சூழலில் என் எதிர்காலத்தை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. நீங்கள் நல்ல தீர்வைச் சொன்னால் எதிர்காலத்தைச் சிறப்பாக்கிக் கொள்ள முடியும்” என்ற துரைசங்கர் தன் வரவு செலவு விவரங்களை மெயிலில் அனுப்பிவைத்தார்.

வரவு செலவு விவரங்கள்

மாத வருமானம்     : ரூ.44,000

வீட்டுக் கடன் இ.எம்.ஐ     : ரூ.17,000

பொருள்களுக்கான இ.எம்.ஐ     : ரூ.9,000  (இன்னும் ஒரு வருடத்துக்குச் செலுத்த வேண்டும்)

கல்விச் செலவு     : ரூ.5,000

குடும்பச் செலவுகள்     :    10,000

இதரச் செலவுகள்     :    ரூ.1,000

மீதம்     :    ரூ.2,000


இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“நாம் ஏற்கெனவே பலமுறை சொன்ன அதே அறிவுரையைத்தான் உங்களுக்கும் சொல்ல வேண்டியுள்ளது. ஐந்து அதிமுக்கியமான இலக்குகளை வைத்துக்கொண்டு, அந்த இலக்குகளுக்கு எந்த முதலீடும் செய்யாதபட்சத்தில் நீங்கள் சொந்த வீடு வாங்கியது மிகப்பெரிய தவறு.

சொந்த வீடா, நிம்மதியான வாழ்க்கையா என்பதில் தெளிவு மிக அவசியம். உங்கள் வீட்டுக் கடனுக்காக பெரும்பகுதி சம்பள பணத்தை இ.எம்.ஐ செலுத்த பயன்படுத்திவிடுவதால்தான், உங்கள் எதிர்கால இலக்குகளுக்கு முதலீடு செய்ய முடியாத நிலை இருக்கிறது. அத்துடன், வீட்டுக்குத் தேவையான பொருள்களை ஒவ்வொன்றாக வாங்காமல் மொத்தமாக வாங்கிவிட்டதால், அதற்காகத் தனியாக ரூ9,000 செலுத்தி வருகிறீர்கள்.  

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 26 - இ.எம்.ஐ-யில் பொருள்கள்... எதிர்கால இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!

உங்கள் எல்லா இலக்குகளுக்கும் முதலீடு செய்ய வேண்டுமானால் மாதம் ரூ.26,700 தேவையாக இருக்கும். ஆனால், மாதம் ரூ.2,000 மட்டுமே உங்களிடம் சர்ப்ளஸ் உள்ளது. இதிலிருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும் எவ்வளவு பெரிய தவறை நீங்கள் செய்துள்ளீர்கள் என்று. இனி என்ன செய்ய முடியும் எனப் பார்ப்போம்.

முதலில் 15 ஆண்டுகள் என்ற அடிப்படையில் வாங்கியுள்ள உங்கள் வீட்டுக் கடனை 25 ஆண்டுகள் என மாற்றி அமையுங்கள். இதனால் நீங்கள் இ.எம்.ஐ செலுத்துவதில் ரூ.4,000 குறையும். இந்த ரூ.4,000 மற்றும் மீதம் உள்ள ரூ.2,000 என மொத்தம் ரூ.6,000 ரூபாயில் உங்கள் முதலீட்டைத் தொடங்குங்கள். அடுத்ததாகப் பொருள்களுக்கான இ.எம்.ஐ முடிந்த பிறகு அடுத்த ஆண்டிலிருந்து 9,000 கூடுதலாக முதலீடு செய்ய முடியும்.

உங்கள் முதல் குழந்தையின் மேற்படிப்புக்கு ரூ.15 லட்சம் தேவையாக இருக்கும். இன்ஜினீயரிங் சேர்ப்பதாக எடுத்துக்கொண்டால் நான்கு ஆண்டு படிப்பு என்பதால், முதலீட்டுக் காலத்தைக் கூடுதலாக மூன்று வருடங்கள் சேர்த்து 12 ஆண்டுகள் எனக் கணக்கிட்டுக் கொள்ளவும். மாதம் ரூ.5,400 முதலீட்டில் தொடங்கி படிப்படியாக ஆண்டுக்கு 5% அதிகரிக்கவும்.

இரண்டாவது குழந்தையின் மேற்படிப்புக்கு 5,300 முதலீட்டில் தொடங்கி ஆண்டுக்கு 5% படிப்படியாக அதிகரித்து வரவும். 14 ஆண்டுகளுக்கு முதலீடு செய்துவந்தால் இலக்கை அடையலாம். இந்த முதலீட்டை அடுத்த ஆண்டிலிருந்துதான் தொடங்க இயலும். 

முதல் குழந்தையின் திருமணத்துக்கு ரூ.28 லட்சம் தேவைப்படும். மாதம் ரூ.5,000 முதலீட்டில் தொடங்கி ஆண்டுக்கு 5% படிப்படியாக அதிகரித்து வரவும்.

இரண்டாவது குழந்தையின் திருமணத்துக்கு 17 ஆண்டுகளில் ரூ.32 லட்சம் தேவையாக இருக்கும். மாதம் ரூ.4,200 முதலீட்டில் தொடங்கி படிப்படியாக ஆண்டுக்கு 5% அதிகரிக்க வேண்டும்.

அடுத்து, ஓய்வுக்காலத்தில் மாதம் ரூ.15,000 தேவை எனக் கொண்டால் அன்றைய நிலையில் மாதம் ரூ.71 ஆயிரம் தேவையாக இருக்கும். அப்படியானால் கார்ப்பஸ் தொகையாக ரூ.2 கோடி தேவை. மாதம் ரூ.13,800 முதலீடு செய்ய வேண்டும். பி.எஃப் மூலமான தொகையைத் தவிர, ரூ.11,000 முதலீடு செய்ய வேண்டும். அல்லது ரூ.6,850 முதலீட்டில் தொடங்கி படிப்படியாக ஆண்டுக்கு 5% அதிகரிக்க வேண்டும்.

கடைசி இரண்டு இலக்குகளுக் கும் முதலீடு செய்ய இன்றைய சூழலில் வாய்ப்பு இல்லை. இந்த இலக்குகளுக்கு முதலீட்டைத் தொடங்க வேண்டுமானால் இரண்டு வழிகள்தான் இருக்கிறது.

ஒன்று, உங்கள் மனைவிக்கு வேலைக்குப் போகும் தகுதி யிருப்பின் பணிக்குச் செல்வதன் மூலம் கூடுதல் வருமானத்தைப் பெறலாம். இரண்டாவது,  உங்கள் தகுதியை  உயர்த்திக்கொண்டு அதிக சம்பளத்தில் வேலையை அமைத்துக்கொள்ளலாம்.

முயற்சியிருந்தால் முடியாத காரியம் எதுவுமில்லை. இப்போதே முயற்சியில் இறங்குங்கள். இரண்டே ஆண்டுகளில் இப்போதைய வருமானத்தைவிட இரட்டிப்பு வருமானத்தைப் பெற சாத்தியம் உண்டு.

பரிந்துரை : ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட் ரூ.2,000, ஐ.சி.ஐசி.ஐ புரூ போகஸ்டு புளூசிப் ரூ.2,000,   மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோகஸ்டு மல்டிகேப் ஃபண்ட் ரூ.2,000

வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கியதற்கான இ.எம்.ஐ முடிந்த பிறகு அடுத்த ஆண்டு ரூ.9,000-க்கு முதலீட்டை ஆரம்பிக்கும்போது முதலீட்டுக்கான ஃபண்ட் திட்டங்களைத்  தீர்மானித்துக் கொள்வதே சரியாக இருக்கும்.”

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878
                      
- கா.முத்துசூரியா

உங்களுக்கும்  நிதி ஆலோசனை வேண்டுமா?

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 26 - இ.எம்.ஐ-யில் பொருள்கள்... எதிர்கால இலக்குகளுக்கு முட்டுக்கட்டை!



finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களை குறிப்பிட்டு  குடும்ப புகைப்படங்களுடன் அனுப்புங்கள்.

உங்கள் செல்போன் நம்பரை தவறாமல் குறிப்பிடவும். தொடர்புக்கு:  9940415222