நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தொழில் தொடங்கலாம் வாங்க... வெற்றியைத் தேடித் தரும் ஃப்ரான்சைஸி தொழில் வாய்ப்புகள்!

தொழில் தொடங்கலாம் வாங்க... வெற்றியைத் தேடித் தரும் ஃப்ரான்சைஸி தொழில் வாய்ப்புகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில் தொடங்கலாம் வாங்க... வெற்றியைத் தேடித் தரும் ஃப்ரான்சைஸி தொழில் வாய்ப்புகள்!

தொழில் தொடங்கலாம் வாங்க... வெற்றியைத் தேடித் தரும் ஃப்ரான்சைஸி தொழில் வாய்ப்புகள்!

புதிய தொழில் வாய்ப்புகளைத் தேடும் எதிர்கால தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டும் விதமாக சென்னையில், கடந்த 21-ம் தேதி ‘பிசினஸ் A to Z’ என்னும் நிகழ்ச்சியை நடத்தியது நாணயம் விகடன். ராணி சீதை மன்றத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்குப் பல நூறுபேர் திரண்டு வந்திருந்தனர். ஃப்ரான்சைஸ் தொழிலில் இருக்கும் எதிர்கால வாய்ப்புகள் பற்றி இந்த நிகழ்ச்சியில் விளக்கமாக எடுத்துச் சொல்லப்பட்டது.    

தொழில் தொடங்கலாம் வாங்க... வெற்றியைத் தேடித் தரும் ஃப்ரான்சைஸி தொழில் வாய்ப்புகள்!

இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசினார் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன். ‘‘தொழில்முனைவர்களுக்கு மூன்று முக்கிய பண்புகள் இருக்க வேண்டும். முதலாவதாக, சமயோஜித புத்தி (Emotional Quotient). இரண்டாவதாக, வியாபார புத்திசாலித்தனம் (Business Acumen). மூன்றாவதாக, தலைமைப்பண்பு (Leadership). வருங்காலத்தைக் கணிக்கும் திறன்,  ஓர் அணியைக் கட்டமைக்கும், ஈர்க்கும் திறமை போன்றவை தலைமைப்பண்பில் அடங்கும்.

நான் எந்த வியாபாரத்தில் நுழைவதாக இருந்தாலும், அதுபற்றி முடிவெடுக்க ஆறு விஷயங்களைக் கவனிப்பேன். 1) நம் செயல்திறன் வீணாகக்கூடாது. பிரமாண்ட முயற்சிகளில் இறங்கி, நம் செயல்திறனை வீணடிக்கக்கூடாது. 2) முதலீடு அதிகமாக இருக்கக்கூடாது. 3) புது முயற்சியாக இருக்க வேண்டும்; மக்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்க வேண்டும். அமெரிக்காவில் ஒருவர், நாய்களுக்கான ஐஸ்கிரீம் தயாரிக்கிறேன் என்று தொழில் தொடங்கி பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார். ஆக, புதுமை என்பது மக்களின் தேவை அடிப்படையிலும், நம்மால் செய்ய முடிவதாகவும் இருக்க வேண்டும். 4) லாப விகிதம் அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தொடக்கத்திலேயே லாப விகிதம் அதிகமாக இருந்தால், சின்னச் சின்ன தவறுகள் காரணமாகக் கீழே விழ நேர்ந்தாலும் எழுவதற்கு உதவியாக இருக்கும். 5) நம் வியாபாரம் அதிக மதிப்புடையதாக இருக்க வேண்டும். பிற்காலத்தில் விற்பதாக இருந்தாலும், அதற்கு நல்ல விலை கிடைக்குமா, அதற்கான மதிப்பு இருக்குமா என்று பார்க்க வேண்டும். 6) ஆன்லைன் மூலம் அதை   விற்பனைக்குக் கொண்டுசெல்ல முடியுமா என்று பார்ப்பேன்’’ எனப் புதிய தொழில்முனைவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களைச் நச்சென்று சொன்னார்.    

தொழில் தொடங்கலாம் வாங்க... வெற்றியைத் தேடித் தரும் ஃப்ரான்சைஸி தொழில் வாய்ப்புகள்!

அடுத்ததாக கேட் சென்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் காரையடிசெல்வன் பேசினார். ‘‘1987-ல் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு மேன்ஷனில்தான் கேட் சென்டர் நிறுவனத்தைத் தொடங்கினோம். ரூ.18 லட்சம் முதலீட்டில், மூன்றே மூன்று கணினிகளுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது 840 பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது’’ என்றவர், கேட் சென்டர்  நிறுவனத்தின் ஃப்ரான்சைஸ் உரிமையைப் பெறுவதற்கான வழிமுறைகளையும், எதிர்கால வாய்ப்புகளையும் எடுத்துச் சொன்னார்.
 
அடுத்ததாக, டைகூன் + அட்வைஸர்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வும், ஸ்தாபகருமான  எம்.சத்யகுமார், ‘‘அடிமட்ட சிறுதொழில்முனைவர் களான பூ வியாபாரிகள், இட்லிக்கடை வியாபாரிகள், காய்கறி விற்பவர்கள் கந்துவட்டியை நம்பியே தொழில் நடத்தி வந்தார்கள். அவர்களது தொழிலுக்கு உதவும்விதமாகக் கொண்டுவரப் பட்டதே முத்ரா கடனுதவித் திட்டம். இந்தக் கடனை வாங்குபவர்களால் சொத்து உத்தரவாதம் எதையும் தரமுடியாது என்பதைக் கணக்கில் கொண்டே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் மட்டும் ஒரே ஆண்டில் பல லட்சம் பேர் கடன் பெற்றிருக்கிறார்கள். ரூ.50,000 - ரூ.10 லட்சம் வரை இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து வங்கிகளிலும் கடனுதவி அளிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டவர், இந்தக் கடனை வாங்குவதற்குத் தொழில்முனைவர்கள் செய்யவேண்டிய விஷயங்களைச் சொன்னார்.   

தொழில் தொடங்கலாம் வாங்க... வெற்றியைத் தேடித் தரும் ஃப்ரான்சைஸி தொழில் வாய்ப்புகள்!

அடுத்ததாக, வங்கிகள் தரும் தொழில் கடன்கள் குறித்து சிட்டி யூனியன் பேங்கின் முன்னாள் ஏ.ஜி.எம் மற்றும் இந்த வங்கியின் ஊழியர் பயிற்றுக் கல்லூரியின் விரிவுரையாளராகவும் இருக்கும் மௌனிசாமி பேசினார். “சிறுதொழில்முனை வர்களுக்கு உதவும் விதமாக PMEGP, PMMY, UYEGP, NEEDS, ACABC என ஐந்து விதமான திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. முத்ரா திட்டத்துக்குக் கடனுதவி தரும் பணமதிப்பீட்டை வைத்து இதை மூன்றாகப் பிரித்துள்ளார்கள். ரூ.50,000 வரை கடனுதவி தரும் திட்டத்திற்கு சிசு (Shishu) என்றும், ரூ.50,000 - ரூ.5 லட்சம் வரை கடனுதவி தரும் திட்டத்திற்கு கிஷோர் (Kishore) என்றும், ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் வரை கடனுடவி தரும் திட்டத்திற்கு தருண் (Tharun) என்றும் பெயர். இந்தக் கடனுதவியைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கால அளவு ஐந்து ஆண்டுகள். இதனைப் பெறுவதற்குத் தொழில் திட்ட மதிப்பீடு கொடுக்க வேண்டும்” என்றார்.

அடுத்ததாக, வாஷ்ஷப் லாண்டரி நிறுவனத்தின் சக நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான துர்காதாஸும், சக ஸ்தாபகரும், சி.இ.ஓ-வுமான பாலசந்தரும் அவர்களுடைய நிறுவனம் செய்யும் தொழில் பற்றியும், அதிலுள்ள எதிர்கால வாய்ப்புகள் பற்றியும், இந்த நிறுவனத்தின் ஃப்ரான்சைஸ் எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். கணவன் - மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் இன்றைய சூழலில், துணி துவைப்பது பலருக்கும் சிரமமான வேலையாகிவிட்டது. இதற்கு ஒரே தீர்வு, நவீன சலவையகம்தான்’’ என்றார்.   

தொழில் தொடங்கலாம் வாங்க... வெற்றியைத் தேடித் தரும் ஃப்ரான்சைஸி தொழில் வாய்ப்புகள்!

அடுத்ததாக, மேபெல் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஹெட் ஹனி பாலசந்தர், அந்த நிறுவனம் செய்துவரும் தொழில் பற்றியும், அந்தத் தொழிலுக்கு இருக்கும் எதிர்கால வளர்ச்சி குறித்தும் பேசினார். ‘‘மனிதர்களின் அடிப்படைத் தேவை உணவு, உடை, இருப்பிடம். தற்போதைய தலைமுறையினர் உடைகளுக்கு முக்கியத் துவம் தருகிறார்கள். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது’’ என்று சொன்னார் அவர்.  அடுத்ததாக, ரெட்பாக்ஸ் நிறுவனத்தின் பார்ட்னர் வைபவ் குமாரவேல், தனது நிறுவனம் குறித்துப் பேசினார். “மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை போரூரில் ‘சைனீஸ் ஸ்டோரி’ என்ற ரெஸ்டாரென்ட் தொடங்கினோம். அதைத் தொடர்ந்தே இந்த ரெட் பாக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம். நன்கு வளர்ந்துவரும் இந்த உணவகத்தை இன்னும் விரிவுபடுத்துகிறோம்’’ என்றார். 

இறுதியாக, ‘நேச்சுரல்ஸ்’ நிறுவனத்தின் சக நிறுவனரும், சி.இ.ஓ-வுமான சி.கே.குமாரவேல், புதிதாகத் தொழில் தொடங்கு பவர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்களைப் பற்றி பேசினார். “நாங்கள் நேச்சுரல்ஸ் தொடங்கிய போது, பியூட்டி பார்லர் என்பது மேல்தட்டு மக்களுக்கானதாகவே இருந்தது. அதை எல்லோருக் குமானதாகக் கொண்டுவர முடியுமா என்று யோசித்தோம். அப்படியே செய்தோம். நாங்கள் பியூட்டி பார்லரைத் தொடங்கிய போது எனக்கோ, எனது மனை விக்கோ எந்த முன்அனுபவமும் கிடையாது. இதுதான் எங்கள் வெற்றிக்கான காரணமும். தொழில் தெரியாதவர்களால் மட்டுமே அந்தத் தொழிலை மாற்றி அமைக்க முடியும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், ‘‘எங்களைத் தொழில்முனைவர் களாக மாற்ற நினைக்கும் நாணயம் விகடனுக்கு நன்றி’’ எனப் பாராட்டினார்கள்.

தெ.சு.கவுதமன்

படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்