
கேள்வி - பதில்

புதிதாகக் கட்டிய அப்பார்ட்மென்ட்டில் இரண்டாவது தளத்தில் வீடு வாங்க இருக்கிறேன். வீட்டின் உறுதித்தன்மையை எப்படிக் கண்டுபிடிப்பது?
மணிகண்டன், கோயமுத்தூர்.

பார்த்தசாரதி, மதிப்பீட்டாளர், சார்ட்டர்ட் இன்ஜினீயர்
‘‘நீங்கள் அந்த வீட்டை வாங்கும்முன், உடன் ஒரு கட்டடப் பொறியாளரை அழைத்துச் சென்று அந்த அடுக்குமாடி வீட்டின் உறுதித் தன்மையைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அதற்குமுன்னதாக அந்தக் கட்டடத்தின் பில்டிங் பிளான் மற்றும் கட்டுமானப் பொருள்கள் வாங்கிய விவரங்களைக் கேட்டுப் பெறவேண்டும். அந்த விவரங்களை வைத்தே இன்னும் தெளிவாக முடிவெடுக்க இயலும். அதன்பின், அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை உண்மைதானா என்பதை நேரில் சென்றும் தெரிந்துகொள்ளலாம்.
முதலில் அந்தக் கட்டடம் அமைந்துள்ள பகுதி நீர்ப் பிடிப்புப் பகுதியா என்பதை அறிந்துகொள்வது அவசியம். அதன்பின்னர், அந்தப் பகுதியின் மண் தன்மை எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அந்தக் கட்டடத்தில் அமைக்கப் பட்டுள்ள தூண்களின் எண்ணிக்கை, இடைவெளி, தூண்களின் தடிமன் மற்றும் உள்ளுக்குள் பயன்படுத்தப்பட்டிருக்கும் கம்பிகளின் தடிமன் போன்றவற்றை, பில்டிங் பிளானை வைத்துச் சரிபார்ப்பதன்மூலம் கட்டடத்தின் தரத்தைக் கணித்துவிடலாம். அதேபோல, சுவரில் பூசப்பட்டுள்ள கலவையையும் சோதித்துத் தெரிந்துகொள்ள இயலும். இதுபோன்ற சோதனை களின் மூலம் கட்டடத்தின் தரம் குறித்துக் கண்டுபிடித்துவிடலாம்.’’
என் வயது 27. ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. ரூ.5 லட்சத்துக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பரிந்துரைக்க முடியுமா?

கதிர், ராஜபாளையம்.
வி.குருநாதன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர், டிவிஎஸ் இன்ஷூரன்ஸ்
‘‘மருத்துவக் காப்பீட்டை எல்லோரும் இளம்வயதிலேயே எடுப்பது நல்லது. நீங்கள் உங்கள் மனைவியின் வயது விவரங்களைத் தரவில்லை. ஆனாலும், உங்களின் வயதை வைத்தே அவரது வயதையும் தோராயமாகப் புரிந்துகொண்டு சில பரிந்துரைகளைத் தந்துள்ளேன். மருத்துவக் காப்பீட்டைத் தனியாகவும், குடும்ப அடிப்படையிலும் எடுத்துக் கொள்ளலாம்.
மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது பேசிக் மற்றும் சூப்பர் டாப் அப் என இரண்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. என்னதான் வேலை செய்யும் நிறுவனத்தில் காப்பீடு கொடுத்தாலும், உங்களுக்கென தனிப்பட்ட பேசிக் பிளான் மருத்துவக் காப்பீடு வைத்துக்கொள்வது நல்லது. ஒருவேளை, பணியிலிருந்து வெளியேறும் காலத்திலோ, பணி ஓய்வின்போதோ அல்லது அடுத்த நிறுவனத்தில் காப்பீடுக்கு ஒப்புதல் தரவில்லை என்றாலோ இந்த பேசிக் பிளான் கைகொடுக்கும். இல்லையெனில் மருத்துவத்திற்கு கையிலிருந்து செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது பிரீமியம் தொகையை மட்டும் பார்க்காமல், மருத்துவமனை அறை வாடகை விவரங்கள், மருத்துவக் காப்பீட்டில் எந்தெந்த நோய்கள் கவர் ஆகின்றன, எந்தெந்த நோய்கள் விடுபடுகின்றன உள்ளிட்ட பல விவரங்களையும் சரிபார்த்து, அதன் நிறைகுறைகளுக்கேற்ப காப்பீட்டுத் திட்டத்தை எடுப்பது நல்லது.
இனி சில மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை பரிந்துரைக்கிறேன். இவற்றின் விவரங்களை ஆராய்ந்தறிந்து, உங்களுக்கேற்ற திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ரூ.5 லட்சம் கவரேஜுக்கு : ராயல் சுந்தரம் பிரீமியம் ரூ.9,335, யுனைடெட் இந்தியா பிரீமியம் ரூ.12,378, ரெலிகேர் பிரீமியம் ரூ.9,575.’’
என் வயது 40. ரூ.10 லட்சத்தை 15 ஆண்டு களுக்கு மொத்தமாக முதலீடு செய்தால், 15 ஆண்டு களுக்குப்பின் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் போல வருமானம் கிடைக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களைச் சொல்லுங்கள்.

வாசுதேவன், சாயல்குடி
சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர்
‘‘ரூ.10 லட்சத்தை ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் தரக்கூடிய மிட்கேப் மற்றும் லார்ஜ்கேப் ஃபண்டுகளில் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் போது, அது ரூ.55 லட்சம் அளவிற்கு வளர்ந்து நிற்கும். 15 வருடங்கள் கழித்து அந்த ஃபண்டை பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்து எஸ்.டபிள்யூ.பி (SWP) முறையில் உங்களுக்குத் தேவையான தொகையை ஒவ்வொரு மாதமும் எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கான திட்டங்கள் இதோ:
ஹெச்டிஎஃப்சி டாப் 200 - ரூ.3 லட்சம், ஏபிஎஸ்எல் ப்யூர் வேல்யூ ஃபண்ட் - ரூ. 4 லட்சம், ரிலையன்ஸ் மிட் & ஸ்மால்கேப் ஃபண்ட் - ரூ.3 லட்சம் என ரூ.10 லட்சத்தைப் பிரித்து முதலீடு செய்யலாம். 15 வருடங்கள் கழித்து, அப்போதைக்கு உள்ள ஒரு நல்ல பேலன்ஸ்டு ஃபண்டில் முதலீடு செய்யலாம்.’’
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனக்குச் சம்பளத்தைப் பணமாகத்தான் தருகிறார்கள். பி.எஃப், இ.எஸ்.ஐ போன்ற எந்த வசதியும் இல்லை. ஆனால், எந்த அலுவலகமாக இருந்தாலும் பி.எஃப் தொகை கட்டாயம் பிடிக்கப்பட வேண்டுமென நண்பன் கூறுகிறான். இது சரியா என்பதைச் சொல்லுங்கள்.
திருவாசகம், சேலம்

சலீல் சங்கர், மண்டல பிஎஃப் கமிஷனர்-I, சென்னை.
‘‘வருங்கால வைப்பு நிதி மற்றும் பல்வகை சட்டத்தின்படி, தனியார் நிறுவன ஊழியர் களுக்குப் பயனளிக்கக்கூடிய பி.எஃப் திட்டத்தை, பணியாளர்கள் எண்ணிக்கை 20 அல்லது அதற்கு மேல் இருக்கும் நிறுவனங்கள் தொடங்கியாக வேண்டும்.
அதேபோல, தொழிலாளர்களின் ஊதியக் கணக்கீட்டின்படி, ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும்போதே ஒரு பணியாளரின் அடிப்படைச் சம்பளமானது 15,000 ரூபாயைவிட அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவரை பி.எஃப் திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அந்நிறுவனமே விரும்பி சேர்ப்பதென்றால் சேர்க்கலாம்.
அதேவேளையில், அந்த பணியாளருக்கு முன்பிருந்த நிறுவனத்தில் பி.எஃப் பிடித்தம் செய்திருந்தால் புதிதாக வேலைக்கு சேரும் நிறுவனத்தில் அடிப்படைச் சம்பளம் ரூ.15 ஆயிரம் அல்லது அதற்கு மேலான சம்பளத்தில் இருந்தாலும் கட்டாயம் பி.எஃப் பணப்பிடித்தம் செய்தாக வேண்டும். இந்த விதிமுறைகள், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் பொருந்தாது.’’
தொகுப்பு: தெ.சு.கவுதமன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.