
நாணயம் புக் செல்ஃப்
புத்தகத்தின் பெயர்: டாலர்ஸ் அண்ட் சென்ஸ் (Dollars and Sense: How We Misthink Money and How to Spend Smarter)
ஆசிரியர்கள்: டான் ஆர்லி மற்றும் ஜெஃப் க்ரெய்ஸ்லர் (Dan Ariely and Jeff Kreisler)
பதிப்பகம்: Harper
‘‘பணத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பதில் தவறேதுமில்லை. ஆனால், அப்படி சிந்திப்பதன் மூலம் நம்மால் பணம் குறித்த சிறப்பான பல முடிவுகளை எடுக்க முடிய வேண்டும். நடப்பில் அது சாத்தியமா என்று பார்த்தால், மனித இனமே பணம் குறித்த தவறான முடிவுகளை எடுக்க படைக்கப்பட்டதைப் போன்ற தோற்றமே பெரும்பாலும் தெரியும். காரணம், பணச் சிக்கலை உருவாக்கிக் கொள்வதில் நாம் அனைவரும் கைதேர்ந்தவர்களாக இருக்கிறோம். இல்லையா?’’ என நெத்திப்பொட்டில் அடித்தமாதிரி ஒரு கேள்வியுடன் தொடங்குகிறது இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கிற புத்தகம்.
ஆர்லி மற்றும் ஜெஃப் க்ரெய்ஸ்லர் என இருவர் இணைந்து எழுதிய ‘டாலர்ஸ் அண்ட் சென்ஸ்’ என்கிற இந்தப் புத்தகம் பண ரீதியான விபத்துகள் என்றால் என்ன, அவை நம் வாழ்வில் வராமல் பார்த்துக்கொள்வது எப்படி என்பதை விரிவாக எடுத்துச் சொல்கிறது.

பணத்தைப் பற்றி நாம் நினைக்காத நாளில்லை. எவ்வளவு பணம் நம்மிடம் இருக்கிறது, எவ்வளவு பணம் நமக்குத் தேவை, அதை எப்படி சம்பாதிப்பது, நம்மிடம் இருக்கும் பணத்தை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது, நம் அண்டை வீட்டார், அலுவலக நண்பர்கள் எப்படிச் சம்பாதிக் கின்றனர் அல்லது செலவழிக் கின்றனர், சேமிக்கின்றனர் என்பது போன்ற பல விஷயங்கள் குறித்து நாம் பலநேரங்களில் சிந்திக்கவே செய்கிறோம்.
ஆடம்பரம், மாதாந்திர பில்கள், வாய்ப்புகள், சுதந்திரம், மன அழுத்தம், வீட்டு பட்ஜெட், நாட்டின் அரசியல், சேமிப்புக் கணக்கு, ஷாப்பிங் லிஸ்ட் என மனித வாழ்வில் பல்வேறு விஷயங்களுக்கும் பணமே மூலாதாரமாக இருக்கிறது. உலகின் அசுரவேக வளர்ச்சி யால் அன்றாடம் பல்வேறு வகையான கடன்கள், காப்பீடுகள், ஓய்வுகாலத் திட்டங்கள் போன்றவை வேறு நம்மை நோக்கிப் படையெடுத்து வந்து, நமக்குப் பெரும் சவால் களை விடுக்கின்றன.
நாம் ரொக்கமாக பணத்தைச் செலவு செய்கிறோமா அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்கிறோமா என்பதற்கு இந்த இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஏதும் இருக்கிறதா என்ன? எப்படிச் செலவு செய்தாலும் அது செலவுதானே என்பீர்கள்.
அதுதான் இல்லை. கையில் இருக்கும் ரொக்கத்தைச் செலவு செய்யும்போது செலவு குறித்த நம் பட்ஜெட் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வோம். அதே செலவை கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும்போது கொஞ்சம் அதிகமாகவே செலவாகிவிடும். அதைவிடக் கொடுமை என்னவென்றால், கடைவீதிக்குப் போகும்போது, பையில் இருக்கும் பணத்தைச் செலவு செய்து பொருளை வாங்கினால், பையில் இருக்கும் இருப்பு குறையக் குறைய நாம் வீட்டை நோக்கி நடையைக் கட்டுவோம். அதுவே கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும்போது பையில் இருப்பது குறையவே குறையாது (கிரெடிட் கார்டு லிமிட் கையிலிருக்கும் ரொக்கத்தைவிட நிச்சயம் அதிகமாகவே இருக்கும்!). அதனால் நமது பர்ச்சேஸ் தொடரவே செய்யும். இல்லையா?
பணம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில்தான் நாம் எத்தனை தவறுகளை செய்கிறோம். வீட்டிலுள்ள ஒரு பெட்டியின் சாவி தொலைந்துவிட்டது. சரி செய்ய ஒருவரை அழைக்கிறோம். சட்டென்று சரிசெய்து கொடுத்துவிட்டு ரூ.100 கேட்கிறார் ஒருவர். இன்னொருவர், இரண்டு மணி நேரம் நிதானமாக வேலை பார்த்துவிட்டு, ரூ.100 கேட்கிறார். அட, எவ்வளவு நிதானமாக வேலை செய்கிறார் என்று நினைத்து நாம் இரண்டாமவரைத்தான் தேர்வு செய்வோம். ஆனால் அவரோ ரூ.100 மட்டுமல்ல, நமது இரண்டு மணி நேரத்தையும் அல்லவா எடுத்துச் செல்கிறார்? அதை நாம் ஏன் உணர்வதே இல்லை?
பெட்ரோல் போட நினைக்கும்போது பக்கத்தில் இருக்கிற பங்க்கை யெல்லாம் விட்டுவிட்டு, பெட்ரோல் அளவு சரியாக இருக்கும் என்ற நினைப்பில் என்று பல கிலோ மீட்டர் தேடிப்போய் ஒரு பங்க்கில் பெட்ரோல் நிரப்பும் நாம், கடன் வாங்கும்போது ஏன் பல்வேறு ஆப்ஷன்களை பற்றிச் சிந்திக்காமல், யார் உடனடியாகத் தருகிறார்களோ, அவர்களிடத்திலேயே கடன் வாங்கத் தயாராகிறோம்?
இன்றைய சூழலில், பலருக்கும் அவர்கள் சேமிக்கும் பணம் அவர்களுடைய ஓய்வுக்காலத்துக்குப் போதாது என்பது தெரியாமலேயே இருக்கிறார்கள். ‘நான் ரிட்டையராகவே மாட்டேன்’ என்பது போன்ற எண்ணத்துடனேயே பலரும் வாழ்கின்றனர். இது தவறு என்று ஏன் பலரும் உணர்வதில்லை?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதில் என்ன? வெறுமனே பணத்தைப் பற்றிச் சிந்தித்தால் மட்டும் பணம் சம்பாதித்துச் சேமிக்க முடியாது. அது குறித்த நடவடிக்கைகளிலும் இறங்கியாகவேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, பணம் குறித்த பல ஆராய்ச்சி முடிவுகள் சொல்வதைப் பார்போம். பணப்பிரச்னை ஒருவரின் மனதில் வந்துவிட்டால் எந்தவொரு நடவடிக்கையிலும் அவரால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது என்கிறது ஒரு ஆய்வு. மற்றுமொரு ஆய்வு, பணக்காரர்கள் அதிலும் ‘அண்ணே நாமெல்லாம் பணக்காரர்கள் அண்ணே!’ என்று சகாக்களால் நினைவுபடுத்தப்படும் பணக்காரர்கள் சுலபத்தில் நீதி, நேர்மை, நியாயம் என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டுச் செயல்படுபவர்களாகவே இருக்கின்றனர். பணத்தைக் கண்ணால் பார்த்தல் என்பதே திருடவும், திருட்டுக் கணக்கு எழுதிப் பணத்தை எடுக்கவும் தூண்டுகோலாக அமைகின்றது என்கிறது மற்றொரு ஆய்வு. பணத்தைப் பற்றி மனம் நினைத்துவிட்டாலே குழப்பத்தை தவிர, அங்கே வேறொன்றும் ஏற்படுவதில்லை என்கிறது மற்றொரு ஆய்வு.
பணத்தைப்பற்றி நமக்கு எல்லாம் தெரியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தாலுமே அது நமக்கு என்ன செய்யும், நம்மை அது என்ன செய்யும் என்று நமக்கு அறவே தெரியாது. உலகத்தில் இருக்கும் பணம் பண்ணத்தெரிந்த பலரும் நம்மை பல வழிகளில் குழப்பி, மாற்றுவாய்ப்பின் மூலம் ஆகும் செலவு (opportunity cost) குறித்துச் சிந்திக்க லாயக்கற்றவர்களாக ஆக்கிவிடுகின்றனர்.
ஆடி காரும், பங்களாவும், சொந்த ஏரோப்ளேனும் என்றைக்காவது ஒரு நாள் வாங்கிவிடலாம் எனக் கனவு கண்டுகொண்டே, நாம் ஸ்மார்ட் போனுக்கும், பாப்கார்னுக்கும் பணத்தை அள்ளி இறைக்கிறோம். இதில் செய்யும் செலவைக் குறைத்தாலே நாம் ஆடி கார் இல்லாவிட்டாலும், நல்ல மனநிறைவுடன் வாழலாம் என்ற உண்மையை நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைப்பதில் உலகம் கைதேர்ந்ததாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். புரியவில்லையா?
கார் வாங்கப்போனால் கதவு கைப்பிடி எவர்சில்வரில் இருப்பது, பவர் விண்டோ, பார்க்கிங் சென்சார் போன்ற சில உப்புப்பெறாத விஷயங்கள் கொண்ட மாடலே உச்சமான மாடல் என்று சொல்லி ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகம் கொடுத்து வாங்க முற்படுவதும், விடுமுறைக்கு ரிசார்ட்டில் சென்று தங்கிவிட்டு காலையில் குடிக்கும் காப்பிக்கு 125 ரூபாய் பில்லில் யோசிக்காமல் கையெழுத்திடுவதும், சூப்பர் மார்க்கெட் பில்லிங் கவுன்ட்டர் அருகே இருக்கும் சாக்லெட் போன்ற சர்க்கரையால் செய்த மிட்டாய்களையும், சின்னச் சின்ன விளையாட்டுப்பொருள்களையும் வாங்குவதும் எதனால் என்று சிந்தியுங்கள் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
இறுதியாக ‘இலவச அட்வைஸ்கள்’ என்ற தலைப்பில் சிலபல ஆலோசனைகளையும் ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர். பணத்தைப் பொறுத்தவரை, நம்முடைய சுயக்கட்டுப்பாடு என்பதே மிகப் பெரிய வெற்றிக்கான காரணியாகத் திகழ்கிறது. என்னதான் நாம் கட்டுப் பாட்டுடன் இருந்தாலும், எக்கச்சக்கமான அக மற்றும் புறத் தடைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது இந்த உலகத்தில். நம்முடைய எதிர்கால பணத்தேவைகள் பற்றிய எண்ணங்களே நிகழ்காலச் செலவு களை ஏற்படுத்தும் சலனங்களைச் சுலபத்தில் கடந்து செல்ல உதவுவதாக இருக்கும் என்று சொல்லும் ஆசிரியர்கள், இது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை என்றும் சொல்கின்றனர். ஏன் தெரியுமா? நாம் நம்முடைய எண்ணங்களைக் கட்டுப்பாடாக வைத்துக் கொண்டாலுமே பணச்செலவு குறித்த விஷயங்கள் நமக்கும் நம்முடைய எதிராளிகளான (பொருள் விற்பனை சந்தையில் செயல்படுபவர்கள்/விற்பனை/விளம்பர ஏஜென்ட்டுகள் போன்ற) ஒரு கூட்டத்திற்கும் இடையே நடக்கும் போராட்டமாகும்.
‘‘இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவது சுலபமான விஷயமில்லை. அது சுலபமாக இருந்தால், நாம் ஏன் லாட்டரி விழுந்த நபர்கள் பிற்காலத்தில் சோற்றுக்கே லாட்டரி அடிப்பதையும், புரஃபெஷனல் விளையாட்டு வீரர்களும் பிரபலங்களும் கடைசிக் காலத்தில் திவால் நிலையைச் சந்திப்பதையும் அவ்வப்போது கேள்விப்படுகிறோம்’’ என்று கேட்டு முடிக்கிறார்கள் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள்.
பணத்தின் மதிப்பைத் தெரிந்துகொண்டு, சிக்கனமாகவும், சிறப்பாகவும் வாழ்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருமே கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் இது.
- நாணயம் டீம்

ஐ.பி.எல்... அதிகம் செலவழித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் முனைப்போடு செயல்பட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான். இந்த அணியிடம் ரூ.67.5 கோடி இருந்தது. இதில் ரூ.67.3 கோடியை கிரிக்கெட் வீரர்களை வாங்குவதற்குச் செலவு செய்திருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக கிங்ஸ் 11 பஞ்சாப் அணி ரூ.67.4 கோடி செலவழித் திருக்கிறது. மும்பை இண்டியன்ஸ் அணியும் தன்னிடமிருந்த 47 கோடி ரூபாயில் 46.3 கோடி ரூபாயைச் செலவு செய்துள்ளது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னிடமிருந்து ரூ.47 கோடியில் ரூ.40.5 கோடி மட்டுமே செலவு செய்துள்ளது. சபாஷ், சரியான போட்டி... அசத்தலான ஆரம்பம்!

மாயமாய் மறைந்த 400 மில்லியன் பிட்காயின்!
ஏறக்குறைய 400 மில்லியன் டாலர் மதிப்பு பிட்காயின் மாயமாக மறைந்து போயிருக்கிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கிறது காயின் செக் என்னும் பிட்காயின் எக்ஸ்சேஞ்ச். இந்த நிறுவனத்திலிருந்து 500 மில்லியன் மதிப்புள்ள பிட்காயின்களை ‘சட்டத்துக்குப் புறம்பாக' ரகசியமாகப் பரிமாற்றம் செய்ய, அதில் 400 மில்லியன் மதிப்பு பிட் காயின் எங்கே போனதென்று தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறது அந்த நிறுவனம்.
பிட்காயின் வாங்குபவர் கள், அதில் உள்ள ரிஸ்க்கை தெரிந்துகொண்டு, அதிலிருந்து விலகி நிற்பது நல்லது. இல்லாவிட்டால், இந்த ஜப்பான் நாட்டு எக்ஸ்சேஞ்சுக்கு ஏற்பட்ட நிலைதான் வரும்!