டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - இயற்கை விவசாயம் டு இயற்கை அழகுசாதனப் பொருள்கள்! - Bekind Bodycare

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 10
“இந்தியாவில் அழகுசாதனப் பொருள்களுக்கான சந்தை மதிப்பு சுமார் 6.5 பில்லியன் டாலர்கள். விரைவில் இது பத்து பில்லியன் டாலர்கள் ஆகும் என்கிறார்கள். இந்தளவுக்குப் பெரிய சந்தையைப் பன்னாட்டு நிறுவனங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்கின்றனவா என்றால் இல்லை. இயற்கையான காஸ்மெடிக் பொருள்களுக்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்பு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இயற்கையான காஸ்மெடிக்களுக்கான வெற்றிடம் அப்படியேதான் இருக்கிறது” என்கிறார் ராஜன். பிகைண்ட் பாடிகேர் (Bekind Bodycare) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர். இவரைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

இன்ஸ்பிரேஷன்
“நான் முதலில் ஒரு ஐ.டி நிறுவன வேலையில் இருந்தேன். விவசாயத்தின் மீது ஆர்வம் வந்தவுடன், அந்த வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டேன். ஆனால், துரதிருஷ்டவசமாக அது லாபகரமாக அமையவில்லை. அப்போதுதான் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் மீது கவனம் திரும்பியது. உடனே சிறிய அளவில் சிறுதானியங்கள் தொடர்பான மதிப்புக்கூட்டுப் பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய வாடிக்கையாளர்கள் வந்தனர். அவர்களில் பலரும் என்னிடம் கேட்ட விஷயம், வேதிப் பொருள்கள் கலக்காத இயற்கை யான அழகு சாதனப் பொருள்கள். மக்களுக்கு இயற்கையாக விளையும் பொருள்களின் மீது அதீத விருப்பம் இருக்கிறது. அவர்களுக்கு உதவும் வகையில் பலரும் ஆர்கானிக் காய்கறிகள், சிறுதானிய உணவுகள் போன்ற வற்றை விற்பனை செய்துவரு கின்றனர். ஆனால், காஸ்மெடிக்ஸ் பக்கம் யாருமே கவனம் செலுத்துவ தில்லை. காரணம், அதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாகக் கருதுவதுதான்.
ஆனால், நான் தைரியமாக இதற்குள் அடியெடுத்து வைத்தேன். எங்களுடைய குடும்பம் ஏற்கெனவே மூலிகை தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததால், இது எனக்கு எளிதாகவும் இருந்தது. எனவே, இயற்கையான மற்றும் Do it Yourself காஸ்மெடிக்ஸ்களைத் தயாரிக்க இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன்.
அடித்தளம்
தற்போது சந்தையில் கிடைக்கும் காஸ்மெடிக் பொருள்களைப் பொறுத்தவரை, இரண்டு முக்கிய பிரச்னைகள் இருக்கின்றன. ஒன்று, அதிகமான வேதிப்பொருள்கள் கலந்திருப்பது; இரண்டாவது, அவை தேவைக்கதிமாக பயன்படுத் தப்படுவது.
நம் நாட்டில் இருக்கும் காஸ்மெடிக் பொருள்களின் விளம்பரங்களைக் கவனித்தால், ஒரு பொதுவான அம்சத்தைக் காணமுடியும். அதாவது, எல்லா நிறுவனங்களுமே, ‘நீங்கள் வெள்ளையாக இல்லை, ஒல்லியாக இல்லை, சரியான எடையில் இல்லை, உங்கள் முடி நீளமாக இல்லை, என நம்மிடத்தில் தாழ்வு மனப்பான்மையை விதைக்கின்றன. நம்முடைய இயற்கையான நிறம், எடை போன்றவற்றைக்கூட குறைபாடாகக் காட்டி அழகு சாதனப் பொருள்கள் விற்கப்படு கின்றன. இதனால் நாம் தேவைக்கதி கமாக காஸ்மெடிக் பொருள்களை உபயோகப்படுத்துவதோடு மட்டுமின்றி, நம் உடல்நலனையும் கெடுத்துக்கொள்கிறோம்.
இதற்குத் தீர்வு இயற்கையான மூலிகைகளைக் கொண்டு நாமே அழகு சாதனப்பொருள்களைத் தயாரிப்பதுதான். மேலும், எங்களின் பொருள்கள் எதையுமே அழகுசாதனப் பொருள்களாக சொல்லி விற்பனை செய்யவில்லை. ஆரோக்கியத்திற்கு உதவும் பொருள்களாக சொல்லித்தான் விற்பனையே செய்கிறோம். அதுதான் எங்களின் நோக்கமே.
நிறுவனத்தைத் தொடங்கியதும் சிகைக்காய், மருதாணிப் பொடி என வெறும் ஐந்து பொருள்களை மட்டும் விற்பனை செய்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மூலிகைகள் தொடர்பாகத் தேடித் தேடிப் படித்தேன். ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள், மூலிகை ஆராய்ச்சி மையங்கள் போன்ற வற்றையெல்லாம் அணுகி, எந்த மூலிகையை, எதற்காகப் பயன்படுத்த வேண்டும் போன்ற விஷயங்களை எல்லாம் தெரிந்துகொண்டேன். பின்னர் இந்த எண்ணிக்கையை அதிகரித்து, தற்போது 20 வகையான பொருள்களை விற்கிறோம்.

சவால்கள்
இந்தத் துறையில் இருக்கும் மிகப் பெரிய சவால், வாடிக்கையாளர்களிடம் விழிப்புஉணர்வு குறைவாக இருப்பதே. இதற்காக எங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடம் சிறிய அளவில் மார்க்கெட்டிங் செய்தோம். எங்களுக்கு முன்னரே பலரும் இயற்கையான காஸ்மெடிக் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் எனத் தொடங்கி தோல்வி அடைந்துள்ளனர். அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களைக் கூற முடியும். ஒன்று, அதிகமான விலை. இதனால் மக்களிடம் வரவேற்பு குறைந்துவிடும். அடுத்தது, குறைவான தரம். இதுவும் பிசினஸைப் பாதிக்கும். இதுபோன்ற சிக்கல்களை எதிர்நோக்கி யிருந்தபோதுதான் ஸ்டார்ட்அப் இன்குபேட்டர் ஒன்றில் பயிற்சிக்காக இணைந்தேன். அதன்பின் என் பிசினஸ் மாடல் முழுவதுமே மாறிவிட்டது.
இந்தியா முழுவதும் விற்கப்படும் ஒரு பொருளின் பேக்கேஜிங் எப்படி இருக்க வேண்டும், எதுமாதிரியான விளம்பர உத்திகளைக் கையாள வேண்டும், விற்பனையை அதிகரிக்க என்ன செய்ய லாம், நிறுவனத்தின் நிதி நிர்வாகம் போன்ற நிறைய வழிகாட்டுதல்கள் எனக்கு அந்த இன்குபேட்டர் சென்டரி லிருந்து கிடைத்தது. இது, என் தொழிலில் நிறையவே உதவிசெய்தது.
வெற்றி
முதலில் கடைகள், சூப்பர் மார்க்கெட் களில் மட்டும்தான் எங்கள் பொருள்களை விற்றுவந்தோம். பின்னர் எங்கள் நிறுவனத்தை அமேசான், லாஞ்ச்பேடு திட்டத்தின்கீழ் தேர்வு செய்தது. இதன்பின்னர் ஆன்லைனிலும் விற்பனையைத் தொடங்கினோம்.
மற்ற அழகு சாதனப் பொருள்களைப் போல, நாங்கள் தனித்துவமான ஃபார்முலாக்கள் கொண்ட பொருள்கள் எதையும் செய்வதில்லை. மாறாக, தரமான மூலிகைப் பொருள்களை அவர்களுக்கு நியாயமான விலையில் அப்படியே விற்பனை செய்கிறோம். ஆரஞ்சு தோல் பொடி, சிகைக்காய் பொடி, செம்பருத்தி பொடி, கஸ்தூரி மஞ்சள், மாதுளை ஓடு பொடி என 20 வகையான பொருள்களை தனித்தனி பாக்கெட்டுகளாக விற்கிறோம். இதுதான் எங்கள் ஸ்பெஷல்.
இலக்கு
வேதிப்பொருள்கள் கலந்த காஸ்மெடிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தடுத்து, இயற்கையான அழகுசாதனப் பொருள்களை அனைவரையும் பயன்படுத்தச் செய்வதே இலக்கு’’ என்றார் ராஜன்.
இவரது நல்ல நோக்கம் கூடிய சீக்கிரத்திலேயே நிறைவேறட்டும்!
- ஞா.சுதாகர்
படங்கள் :ப.சரவணக்குமார்
இன்குபேட்டர் ஏன் அவசியம்?
ஸ்டார்ட்அப்களுக்கு தொழிலில் வழிகாட்ட பல்வேறு இன்குபேட்டர்கள் இயங்கிவருகின்றன. இவர்களின் பணியே ஸ்டார்ட்அப்-க்கான ஐடியாக்களுடன் வரும் ஒருவரை, தொழில்முனைவோராக மாற்றுவதுதான். ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சியில் இவர்களின் பங்கு குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் ராஜன். “ஸ்டார்ட்அப்கள் தொடங்கும் பலருக்கும் ஆரம்பத்தில் நிறைய சந்தேகங்களும், பிரச்னைகளும் இருக்கும். மேலும், எப்படி பொருள்களை வெற்றிகரமாகச் சந்தைப்படுத்துவது, முதலீட்டைத் திரட்டுவது, மார்க்கெட்டிங் செய்வது, சட்டரீதியான சிக்கல்கள் எனப் பல சந்தேகங்களும் இருக்கும். இதற்கெல்லாம் உதவுவதற்காக இருப்பவைதான் இன்குபேட்டர்கள். அனுபவமின்மையால், ஆரம்பகாலத்தில் நாம் செய்யும் பல தவறுகளை இவர்களின் உதவியுடன் தவிர்க்கலாம். ஸ்டார்ட்அப் தொடர்பான துறைகளில் இயங்கிவரும் நிபுணர்கள்தான் இன்குபேட்டர்களில் இடம்பெற்றிருப்பர். எனவே ஸ்டார்ட்அப் தொடங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் ஸ்டார்ட்அப் இன்குபேட்டர்கள் மூலம் ஆலோசனை பெறுவது நல்லது.”