ஃபண்ட் டேட்டா! - 11 - சந்தையைவிட அதிக ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்களுக்கு! - ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட்

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

சந்தை தரும் லாபத்துக்கேற்ப நாமும் சம்பாதிக்க நினைப்பது ஒருவகை; சந்தையைவிட அதிக அளவில் சம்பாதிக்க நினைப்பது இன்னொருவகை. அப்படிப் பட்டவர்களுக்கு ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால் கேப் ஃபண்ட் ஏற்றதாக இருக்கும்.

2014-ல் மார்கன் ஸ்டான்லி மியூச்சுவல் ஃபண்டின் திட்டங்களை, ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியது. அப்போது மார்கன் ஸ்டான்லி ஏஸ் ஃபண்ட் (Morgan Stanely A.C.E Fund) என்கிற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்ட் எனப் பெயர் மாற்றப்பட்டது. செப்டம்பர் 2016-ல் மறுபடியும் ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
இந்த ஃபண்டின் குறுகிய கால செயல்பாட்டை வைத்துத்தான் நாம் பரிந்துரைக்கு எடுத்துக்கொண்டுள்ளோம். இதற்கு முக்கியக் காரணம், இதன் ஃபண்ட் மேனேஜர்களில் ஒருவரான சிரக் சேத்தல் வத்-தான். இவர் நிர்வாகம் செய்துவந்த திட்டங்களான ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்சூனிட்டீஸ், ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு, ஹெச்.டி.எஃப்.சி சில்ரன்ஸ் கிஃப்ட் போன்ற திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தன. தற்போது இவர் நிர்வகித்துவரும் அனைத்து திட்டங்களும் நன்கு செயல்பட்டு வருகின்றன.

இந்த ஃபண்ட், முழுக்க முழுக்க மிட் (50%) அண்ட் ஸ்மால்கேப் (50%) பங்குகளி லேயே தனது முதலீட்டை வைத்துள்ளது. தற்போது 64 பங்குகளில் முதலீடு செய்து உள்ளது. ஒரு பங்கைத் தவிர்த்து (சொனாட்டா சாஃப்ட்வேர் – 3.30%), எந்தப் பங்கிலும் 3 சதவிகிதத்துக்கு அதிகமான ஒதுக்கீடு இல்லை. இந்த ஃபண்டின் பீட்டா 0.98 என்ற அளவில் பங்குச் சந்தையை ஒட்டியும், ஆல்ஃபா 12.30 என்ற அளவில் உன்னதமாகவும் உள்ளது.
இதன் போர்ட் ஃபோலியோவின் டேர்னோவர் விகிதம் 13% என்ற அளவில் மிகக் குறைவாக உள்ளது. இந்த விகிதம், ஃபண்ட் மேனேஜர் தனது போர்ட் ஃபோலியோவில் உள்ள பங்குகளின் மேல் வைத்திருக்கும் உறுதியைக் காட்டுகிறது.
மேலும், பி/இ விரிவடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது எனவும் நம்புகிறது. அதேசமயத்தில், பெரும்பாலான ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில், ஏற்ற இறக்கம் லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளைவிட அதிகம் என நாம் அனைவரும் நினைப்போம். மாறாக, இந்த ஃபண்ட், அவ்விதமான ஏற்ற இறக்கம் பெரிய வித்தியாசத்தில் இல்லை என நம்புகிறது. இந்த ஃபண்ட் கிட்டத்தட்ட 1,231 ஸ்மால் கேப் பங்குகளிலிருந்து தனது போர்ட் ஃபோலியோவிற்குத் தேவையான 60 பங்குகளைத் தேர்வு செய்கிறது.

தற்போது சந்தையில் மற்றுமொரு பயம் என்னவென்றால், மிட் அண்ட் ஸ்மால்கேப் குறியீடுகளின் பி/இ அதிகமாக உள்ளது என்பதுதான். ஆனால் பலருக்குத் தெரியாத உண்மை என்னவென்றால், நஷ்டத்தில் இருந்துவரும் பங்குகளைக் குறியீட்டிலிருந்து எடுத்துவிட்டால், பி/இ வெகுவாகக் குறைந்துவிடும் என்பதுதான். இந்த ஃபண்டின் பி/இ 25.66 என்ற அளவில் உள்ளது.
பல மிட் அண்ட் ஸ்மால்கேப் ஃபண்டுகள், தற்போது மொத்த முதலீட்டை முதலீட்டாளர்களிடமிருந்து பெறுவதைத் தடை செய்துள்ளன. ஆனால், இந்த ஃபண்ட் இன்றளவிலும் மொத்த முதலீட்டைப் பெற்றுக் கொள்கிறது.
சந்தையைவிட அதிகமான ரிஸ்க்கை எடுக்க விரும்புபவர்கள், செல்வத்தை உருவாக்க மற்றும் வளர்க்க விரும்பு பவர்கள், நீண்ட காலம் (7 ஆண்டுகளுக்கு மேல்) பணத் தேவைப்படாதவர்கள், அதிக வருமானத்தை விரும்புபவர்கள் போன்ற அனைவரும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.