நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 27 - பாசக்கார அண்ணனின் பக்கா பிளானிங்!

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 27 - பாசக்கார அண்ணனின் பக்கா பிளானிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 27 - பாசக்கார அண்ணனின் பக்கா பிளானிங்!

ஓவியம்: பாரதிராஜா

கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் சிலர், தன் மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு மட்டுமே திட்டமிடுவார்கள். ஆனால், தன் சகோதரர்களுக்கும் சேர்த்து முதலீட்டுத் திட்டத்தைச் சொல்லுங்கள் எனத் தூத்துக் குடியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், பாசக்கார அண்ணனாக நம்மைத் தேடிவந்தது கொஞ்சம் நெகிழ்ச்சியான விஷயம். பாலசுப்ரமணியன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

“என் வயது 33. எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. எனக்கு இப்போது நான்கு மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. நான் சென்னையில் ஐ.டி கம்பெனி ஒன்றில் மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஆண்டுக்கு 5 - 8%  சம்பள உயர்வு இருக்கும். என் மனைவி பட்டப்படிப்பு படித்திருக்கிறார். ஆனாலும், வேலைக்குப் போகும் திட்டம் எதுவும் இல்லை. அவர் குடும்பப் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளவே நான் விரும்புகிறேன்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 27 - பாசக்கார அண்ணனின் பக்கா பிளானிங்!

என்னுடன் என் மனைவி, குழந்தை தவிர, என் பெற்றோர், என் இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள். என் அப்பா விவசாயம் பார்த்தவர். என் தம்பிகள் அதிகம் படிக்கவில்லை. இருவருக்குமே சொற்ப வருமானமே வருகிறது. நான் குடும்பச் செலவுக்காக மாதம் ரூ.30,000 என் அம்மாவிடம் தருகிறேன். என் தனிப்பட்ட செலவுகளுக்காக ரூ.5,000 வைத்துக்கொள்கிறேன். ரூ.25,000 வரை என்னால் முதலீடு செய்ய முடியும்.

நான் நாணயம் விகடன் இதழைக் கடந்த இரண்டு வாரங்களாக வாங்கிப் படிக்கிறேன். அதில் இடம்பெறும் நிதித் திட்டமிடல் பகுதியில் எனக்கும் திட்டமிட்டுக்கொடுத்தால் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்வேன்.

நான் இதுவரை எதிலும் முதலீடு செய்யவில்லை. தற்போது என் கையிருப்பாக ரூ.50,000 மட்டுமே உள்ளது. எனக்கு என் தம்பிகளின் திருமணத்துக்கு உதவக்கூடிய பொறுப்பும், கடமையும் இருக்கிறது. என் குடும்பத்தின் எதிர்காலத்துக்கு மட்டு மல்லாமல், அவர்களின் திருமணத்துக்கும் சேர்த்து முதலீட்டுத் திட்டத்தைக் கொடுத்தால் நன்றாக இருக்கும். என் பெற்றோர்களுக்கும் சேர்த்து அலுவலகத்தில் ரூ.2.5 லட்சத்துக்கு ப்ளோட்டர் பாலிசி எடுத்துக் கொடுத்துள்ளார்கள்” என்றவர் தன் தேவைகளைக் குறிப்பிட்டார்.

* முதல் தம்பியின் திருமணத்துக்கு இரண்டு வருடங்களில் ரூ.3 லட்சம் தேவை * இரண்டாவது தம்பியின் திருமணத்துக்கு நான்கு வருடங்களில் ரூ.3 லட்சம் தேவை  * என் குழந்தையின் மேற் படிப்புக்கு 17 வருடங்களில் ரூ.10 லட்சம்  தேவை * என் குழந்தையின் திருமணத்துக்கு 22 வருடங்களில் ரூ.10 லட்சம் தேவை  * சொந்த வீடு வாங்க 20 ஆண்டுகளில் ரூ.30 லட்சம் தேவை * என் ஓய்வுக்காலத்துக்கு மாதம் ரூ.20 ஆயிரம் தேவை  (பி.எஃப் 2,000 + 2,000. இதுவரை ரூ.2 லட்சம் வரை உள்ளது. அனைத்துத் தேவைகளும் இன்றைய மதிப்பில்.) 

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 27 - பாசக்கார அண்ணனின் பக்கா பிளானிங்!

“நீங்கள் இத்தனை வருடங்களில் எந்தவிதமான முதலீட்டையும் ஆரம்பிக்காதது தவறுதான்.  குறைந்தது மாதம் ரூ.1,000 முதலீடு செய்திருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்குப் பணத்தைச் சேர்த்திருக்க முடியும். நீங்கள் கேட்டுள்ள எல்லா இலக்கு களுக்கும் இப்போது நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமெனில், மாதம் ரூ.50 ஆயிரம் தேவையாக இருக்கும். ஆனால், உங்களால் இப்போது ரூ.25 ஆயிரம்தான் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் முதலீடுகளை உங்கள் சகோதரர் களின் திருமணத்துக்குமுன், திருமணத்துக்குப்பின் எனத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 27 - பாசக்கார அண்ணனின் பக்கா பிளானிங்!


உங்கள் முதல் சகோதரரின் திருமணத்துக்கு  மாதந்தோறும் ரூ.13,100 முதலீடு செய்ய வேண்டும். உங்கள் இரண்டாவது சகோதரரின்  திருமணத்துக்கு மாதந்தோறும் ரூ.6,400 முதலீடு செய்ய வேண்டும். அடுத்து உங்கள் குழந்தையின் மேற்படிப்புக்கு  மாதந்தோறும் ரூ.4,800 முதலீடு செய்ய வேண்டும்.

இந்த மூன்று இலக்குகளுக்கும் போக, மீதம் ரூ.1,000 மட்டுமே இருக்கும். இதனை  உங்கள் குழந்தையின் திருமணத்துக்கு முதலீடு செய்யவும். உங்கள் முதல் சகோதரரின் திருமணம் முடிந்ததும்  முதலீட்டை ரூ.3,200-ஆக அதிகரித்து, ஆண்டுக்கு 5% கூடுதலாக முதலீடு செய்வதன் மூலம் இந்த இலக்கை அடையலாம்.

வீடு கட்டுவதற்கு 20 ஆண்டு களில் ரூ.1.1 கோடி தேவையாக இருக்கும். இந்த இலக்குக்கு முழுமையாக முதலீடு செய்ய தற்போது வாய்ப்பில்லை. தற்போதைய சூழலில் உங்கள் சகோதரரின்  திருமணத்துக்குப்பிறகு மாதம் ரூ.5,500 முதலீடு செய்யவும். 20 ஆண்டுகளில் ரூ.41.7 லட்சம் கிடைக்கும். மீதம் ரூ.68 லட்சம் சேர்க்கவேண்டுமானால், உங்கள் சம்பளம் சில ஆயிரங்கள் உயர வேண்டும்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 27 - பாசக்கார அண்ணனின் பக்கா பிளானிங்!

ஓய்வுக்காலத்துக்கு கார்ப்பஸ் தொகையாக ரூ.3 கோடி சேர்க்க வேண்டும். தற்போது வரை பி.எஃப்-ல் உள்ள ரூ.2 லட்சமானது ரூ.16 லட்சமாகக் கிடைக்கும். மீதம் ரூ.2.84 கோடி சேர்க்க ரூ.15,500 முதலீடு செய்ய வேண்டும். பி.எஃப் மூலமான ரூ.2,750 போக இன்னும் ரூ.12,750 முதலீடு செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது, முதல் சகோதரரின் திருமணம் முடிந்தவுடன் ரூ.6,000 முதலீட்டை இதற்காக  ஆரம்பிக்க வும். சம்பளம் அதிகரிக்கும்போது தான் முதலீட்டை அதிகரித்துக் கொள்ள முடியும். தற்போது உங்களிடம் உள்ள ரூ.50 ஆயிரத்தை அவசரகால நிதியாக வைத்துக் கொள்ளவும். போனஸ் உள்ளிட்ட உபரி வருமானம் வரும்போது ரூ.50 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளவும். உங்களுக்கு 33 வயதுதான் என்பதால் கூடுதல் சம்பளம் பெறுவதற்கான முயற்சிகளைச் செய்யலாம். அடுத்த இரண்டு வருடங்களில் உங்கள் சம்பளம் ரூ.10-15 ஆயிரம் உயருமானால், உங்களின் எல்லா இலக்குகளுக்கும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி முதலீடுகளைச் செய்யலாம்.

பரிந்துரை: முதல் சகோதரரின் திருமணத்துக்கு: ஃப்ராங்க்ளின் இந்தியா டைனமிக் அக்ரூவல் ஃபண்ட் ரூ.7,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் கார்ப்பரேட் பாண்ட் ரூ.6,100. இரண்டாவது சகோதரரின்  திருமணத்துக்கு : ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட் ரூ.2,500, ஐ.சி.ஐசி.ஐ புரூ பேலன்ஸ்டு ஃபண்ட் ரூ.2,500, எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்ட் ரூ.1,400. மகளின் படிப்புக்கான முதலீடு: மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோகஸ்டு 35 ஃபண்ட் ரூ.2,500, கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.1,000       
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878                      

- கா.முத்துசூரியா

உங்களுக்கும்  நிதி ஆலோசனை வேண்டுமா?

finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களை குறிப்பிட்டு  குடும்ப புகைப்படங்களுடன் அனுப்புங்கள்.

உங்கள் செல்போன் நம்பரை தவறாமல் குறிப்பிடவும்.

தொடர்புக்கு:  9940415222