
உச்சத்தில் சந்தை... - மொத்தப் பணத்தையும் முதலீடு செய்யலாமா?
நாணயம் விகடன், இன்டக்ரேட்டட், என்.எஸ்.டி.எல் மற்றும் சிட்டி யூனியன் பேங்க் இணைந்து ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா அஸெட் அலொகேஷன்’ என்ற தலைப்பில் பொள்ளாச்சி மற்றும் ஈரோட்டில் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்ச்சி நிகழ்ச்சியை நடத்தின. இதில், இரண்டு ஊர்களிலும் வயது வித்தியாசம் பாராமல் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளில் முதலில் பேசிய என்.எஸ். டி.எல் நிறுவனத்தின் உதவி மேலாளர் சிவப்பழம், முதலீட்டுச் சந்தையில் என்.எஸ்.டி.எல் என்ன மாதிரியான பங்கு வகிக்கிறது என்பதை விளக்கினார். ‘‘முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் நாடு முழுவதும் 27 ஆயிரம் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. முதலீட்டாளர் களாகிய உங்களின் முதலீடு குறித்த அப்டேட்களை அனுப்பும் பணியையும் என்.எஸ்.டி.எல் செய்து வருகிறது’’ என்று கூறினார்.

அடுத்ததாக சிட்டி யூனியன் பேங்க் தரப்பி லிருந்து பேசிய அதன் கிளை மேலாளர்கள் பால மணிகண்டன் மற்றும் சீனிவாசன் இருவரும் பேசும்போது, சிட்டி யூனியன் வங்கி தனது போட்டி நிறுவனங்களுக்கு நிகராகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், தற்போது தனது வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க பிரத்யேக ரோபோக்களை அறிமுகப் படுத்தியுள்ளதாகவும் கூறினர்.
அடுத்ததாக, மியூச்சுவல் ஃபண்ட் பற்றி இன்டகிரேட்டட் நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளர் ஆர்.ரவிச்சந்திரன் பேசினார், ``நம் கனவுகளையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள நமக்குப் பணம் மிகவும் அவசியம். எல்லோரும் பணத்தைச் சம்பாதித்துவிடலாம் ஆனால், அதைப் பெரும்செல்வமாகப் பெருக்குவதுதான் புத்திசாலித்தனம். திட்டமிட்டு முதலீடு செய்வதன் மூலம் செல்வத்தைப் பெருக்க முடியும். அதற்கு ERL (Early, Regular, Longterm) என்ற மந்திரம் அவசியம். முதலீட்டை இன்றே தொடங்கி, தொடர்ச்சியாக, நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டும்” என்றார்.

அடுத்துப் பேசிய இன்டகிரேட்டட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளர் ஆர்.குருராஜன், இன்ஷூரன்ஸ் எடுப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்னார்.
``நாம் நம் குடும்பத்தை நேசிக்கிறோம் என்றால், அவர்களுடைய வாழ்க்கை நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறப்பாக இருக்க வழிவகை செய்ய வேண்டும். அதற்குத் தேவையான டேர்ம் இன்ஷூரன்ஸ், ஹெல்த் இன்ஷூரன்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் இறுதியாகப் பேசிய நிதி ஆலோசகர் வி.கோபாலகிருஷ்ணன், “முதலீடுகள் பல வகைகளில் இருக்கின்றன. இதுதான் சரி, இது தவறு என்று இல்லை. யாருக்கு எந்த முதலீடு, எவ்வளவு முதலீடு சரியானது என்பதில் தெளிவு இருந்தால் போதும். எல்லோரும் முதலீடு செய்கிறார்கள் என்று நாமும் முதலீடு செய்யக் கூடாது. நம் வயது, ரிஸ்க் எடுக்கும் தன்மை, நம்முடைய இலக்கு இரண்டையும் வைத்துதான் அதைத் தீர்மானிக்க வேண்டும். சந்தை உச்சத்தில் இருக்கிறது என்பதற்காக மொத்தப் பணத்தையும் ஈக்விட்டியில் முதலீடு செய்யக்கூடாது. எல்லோரும் முதலீடு செய்வதால்தான் சந்தை உச்சத்தில் இருக்கிறது” என்று விளக்கினார்.

ஈரோட்டில் பேசிய நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி, “நாம் செய்யும் முதலீட்டின் மீதான வருமானம் நமக்கு எப்போது வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்து விட்டுதான் முதலீடு செய்ய வேண்டும். உடனடியாகத் தேவைப்படும் பணத்தை முழுமையாகச் பங்குச் சார்ந்த திட்டங் களில் போடக்கூடாது. நீண்ட காலத்துக்குத் தேவைப்படாத பணத்தைப் பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்” என்றார்.
இறுதியாக, வாசகர்கள் முதலீடு குறித்த தங்களின் சந்தேகங்களை நிபுணர்களிடம் கேட்டுத் தெளிவடைந்தார்கள்.
- ஜெ.சரவணன்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி, க.விக்னேஷ்வரன்