மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..? முதலீட்டை உதறித் தள்ளுங்கள்!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..? முதலீட்டை உதறித் தள்ளுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..? முதலீட்டை உதறித் தள்ளுங்கள்!

செல்லமுத்து குப்புசாமி

மீபத்தில் ஒரு படகுத் துறைக்குச் சென்றிருந்தோம். அங்கே வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும். ‘‘பார்க்கிங் கட்டணம் 30 ரூபாய்’’ என்றார் பாதுகாவலர். பணம் தந்து விட்டு டிக்கெட் கேட்டால், “தேவை யில்லை சார். நான்தான் இருப்பேன்’’ என்றார்.

பிறகு படகில் சென்றோம். மோட்டார் படகு சவாரிக்கு 600 ரூபாய். படகு நெடுந்தொலைவு சென்று திரும்பிவரும் புள்ளியில், “வேண்டுமானால் ஏரியின் கடைசி வரை போகலாம். எனக்கு நூறு ரூபாய் மட்டும் கொடுங்க” என்று படகினை இயக்கியவர் கேட்டார். உடன் பயணித்தவர்கள் சரி என்றார்கள். படகில் சென்றவர் களுக்கு மகிழ்ச்சி. ஓட்டியவருக்கும் மகிழ்ச்சி.

பார்க்கிங் கட்டணம் ரூ.30 + கூடுதல் படகு சவாரிக்கான ரூ.100 இரண்டும் சேர்த்து ரூ.130 நிறுவனத்திற்கு (அதாவது, சுற்றுலாத் துறை அல்லது அரசு) கிடைத்திருக்க வேண்டிய வருமானம். இப்படி ஒரு நாளைக்குப் பலபேர் செய்வதன் மூலம் எவ்வளவு தொகை நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும்?

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..? முதலீட்டை உதறித் தள்ளுங்கள்!

முதலாளி எங்கோ இருக்கிறார். தொழிலை நடத்தும் நிர்வாகி, பிசினஸில் வரும் வருமானத்தை அப்படியே நிறுவனத்தின் கணக்கில் சேர்க்காமல், சிலவற்றைத் தன் பக்கத்தில் ஒதுக்கிக்கொள்வது ‘வியாபாரம்’ என்ற சங்கதி கண்டு பிடிக்கப்பட்ட காலம் தொடங்கி நடந்து வருகிற ஒன்று.

ஓர் உதாரணம். 1,300 வீடுகளை உள்ளடக்கிய ஒரு டவுன்ஷிப்பை நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் சராசரியாக ரூ.4,500 மாதந்திர பராமரிப்புச் செலவு. அந்த டவுன்ஷிப்பை நடத்துகிற அசோசியேஷனை மாதம் ரூ.60 லட்சம் புரள்கிற ஒரு நிறுவனமாகக் கருதலாம். ஒரு வீட்டிற்கு மாதம் 4,500 ரூபாயா? அதுவே ஒரு வாடகை போல உள்ளதே என வெளியூரிலிருந்து வந்து செல்லும் உறவினர்கள் வியந்து கேட்பார்கள். அப்படி என்ன செலவு? செக்யூரிட்டி வேலை செய்வோருக் கான ஊதியம், பார்க்கிங் ஏரியா விளக்குகள், லிஃப்ட் உள்ளிட்ட பொதுவான மின் உபயோகத்திற் கான மின் கட்டணம், பொதுவான வேலைகளுக்கான பணிப் பெண்கள், தச்சர், பிளம்பர், எலெக்ட்ரீசியன், கணக்குப் பிள்ளை ஆகியோருக்கான சம்பளம், நிலத்தடி நீர் இல்லாமல் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றி னால் அதற்கான செலவுகள்...  என நைல் நதி மாதிரி நீண்டு கொண்டே போகிறது.

இப்படி வசூல் செய்யப்படும் தொகையைக் கையாள்வோர் நேர்மையாகவும், சிஸ்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து விட்டு அந்தச் செலவுகளை எப்படிப் படிப்படியாகக் குறைப்பது என்ற நோக்கில் செயல் படுபவராகவும் இருக்கும் பட்சத்தில், பராமரிப்புச் செலவுக்காகச் செலுத்தும் தொகை நிச்சயமாகக் குறையும்.

சில வீடுகளில் ஆட்களே இல்லாமல் பூட்டி வைத்திருந்தாலும் பராமரிப்புக்கான பணம் கட்டு கிறார்கள். ஏன், வாடகைக்கு யாரும் வருவதில்லையென்றால் அதிகமான பராமரிப்புக் கட்டணம் காரணம். என்னதான் லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் வீடு வாங்கியிருந்தாலும் அதனை வாடகைக்குவிட முடியாத நிலை. முதலீடாக வாங்கிப் போடலாம். எப்படியும் வாடகை வரும் என நினைத்து வாங்கியவர்களுக்குப் பெரும் அடி.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..? முதலீட்டை உதறித் தள்ளுங்கள்!

கடந்த ஐந்து ஆண்டுகளாக வீடுகளின் விலை ஏறவே இல்லை. அதிக விலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. வீட்டை விற்போம் என்று விற்க முயன்றாலும் யாரும் வாங்க வருவதில்லை. முறை கேடான அல்லது தான்தோன்றித் தனமான பராமரிப்புக் கட்டணம் நிகழ்கால, வருங்கால பலன்கள் எல்லாவற்றையும் தவிடுபொடி யாக்கிவிட்டது. தோதுவான வாய்ப்புக் கிடைத்தால் விற்று வெளியேற பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பங்குச் சந்தை முதலீடுகளும் இதே போலத்தான். நாம் பணம் போட்டு ஒரு நிறுவனத்தில் ஷேர்களை வாங்குகிறோம். அதன் நிர்வாகம் ஒன்று வருமானத்தைக் குறைவாகக் கணக்கில் காட்டிவிட்டு, சிலவற்றை அபேஸ் செய்யலாம். அல்லது செலவுக் கணக்கை அதிகமாகக்  காட்டிவிட்டு அதைத் தமது பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம். வெறும் பத்துக் கோடி மதிப்புள்ள சிறு கம்பெனியை ரூ.100 கோடி பணம் கொடுத்து வாங்கலாம். அந்த சிறு கம்பெனி, நிர்வாகியின் உறவினருக்குச் சொந்தமானதாக இருக்கலாம். வருடம் பத்தாயிரம் கோடி வியாபாரம் செய்கிற பெரிய கம்பெனிக்கு இது பெரிய தொகையாக இருக்காது.  ஆனால், வருடம் ஒரு கோடி மட்டுமே சம்பளம் வாங்குகிற சி.இ.ஓ-வுக்கு இது பெரிய டீல்.

நிறுவனத்தை நடத்தும் நிர்வாகம் (மேனேஜ்மென்ட்) பங்குதாரர்களாகிய முதலாளிகளின் நலனை மனதில்கொண்டு இயங்குவதை, பங்குதாரர்களுக்குப் பாதகமாக நடந்துகொள்ளாமல் இருப்பதை ‘கார்ப்பரேட் கவர்னன்ஸ்’ (Corporate Governance) என்று தனிப்பிரிவாக இப்போது கவனிக்கிறார்கள்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..? முதலீட்டை உதறித் தள்ளுங்கள்!பெரிய நிறுவனங்களில் மேனேஜ்மென்ட்டுகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, புரஃபஷனல் நிர்வாகிகள். இவர்கள் அந்த கம்பெனியில் பெரும் பங்குதாரர்களாக இருக்கமாட்டார்கள். சம்பளத்துக்கு வேலை செய்கிறவர்கள். பெரும்பாலான மேலை நாடுகளில் இதுவே நடைமுறை. ஆனால், இந்தியாவில் புரமோட்டர்கள் தமது கம்பெனிகளை நிர்வகிப்பதும் வாடிக்கையாக உள்ளது. அதாவது, புரமோட்டர்கள் பெரும்பான்மைப் பங்குதாரர்களாக இருப்பார்கள். இவர்களது நடவடிக்கை சிறுபான்மை பங்குதாரர்களுக்குப் பாதகமாக அமையலாம்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் 10% வட்டிக்குக் கடன் வாங்கி வைத்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.  அதன் புரமோட்டர்கள் 100% பங்குதாரர்களாக உள்ள இன்னொரு குரூப் கம்பெனிக்கு இந்த நிறுவனம், வட்டியில்லாக் கடன் வழங்கலாம். புரமோட்டர் குடும்பத்தின் ஆள்களுக்குத் தலைவர், துணைத் தலைவர் எனப் பொறுப்புகளைக் கொடுத்து, கோடிக்கணக்கான சம்பளம் வழங்க லாம். அவர்களுக்கு இ.எஸ்.ஓ.பி (ESOP) எனப்படும் ஸ்டாக் ஆப்ஷன்களை வழங்கலாம். அந்த நிறுவனத்தின் பிசினஸ் டீல்கள் சந்தேகத்துக்கு இடமளிப்பவையாக இருக்கலாம்.

இவற்றையெல்லாம் உன்னிப்பாகக் கவனிக்கும் பண்பை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் கண்ணிய மற்ற வகையில் நடந்துகொண்டிருப்பதாக நாம் கருதினால், அது எவ்வளவு சிறப்பான கம்பெனியாக, சூப்பர் துறையாக இருந்தாலும் அதிலிருந்து வெளியேறிவிடுவதே நல்லது.

அரசாங்கம் என்னதான் விதிமுறைகளை வகுத்தாலும், வெளிக் காட்டும் விதிமுறைகள் (Disclosure Norms) என்ற வகையில், நிர்வாகமானது தான் எடுக்கும் முடிவுகளையெல்லாம் முதலீட்டாளர்களுக்கும் தெரிவிக்க வலியுறுத்தினாலும், சிறுபான்மை முதலீட்டாளர்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகள் ஏதேனும் ஒரு வடிவத்தில் தொடர்ந்தபடியே உள்ளன. எல்லா நிறுவனங்களுமே அப்படியில்லை. ஆனால், அநேகமான கம்பெனிகளில் இதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை.

நல்ல குடும்பம், பரம்பரைச் சொத்துகளும் ஏராளம், வேலைக்கு போகாமலேயே நிரந்தர வருமானம் மாதந்தோறும் வருகிறது. அரசாங்க வேலையும்கூட. ஆனால், மாப்பிள்ளை நடத்தைச் சரியில்லை என்றால்... ஊதாரியாக, கெட்ட சகவாசம் உடையவனாக இருந்தால்... நம் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து தருவோமா? ஒருவேளை  விசாரிக்காமல் கல்யாணம் செய்துதந்திருந்தாலும்கூட, விஷயம் தெரிந்தபிறகு மணமுறிவு செய்து வெளியேறுவதை நாம் காண்கிறோம். அப்படியிருக்க,  தவறான நிர்வாகம் கையாளும் பிசினஸ் என்று தெரிந்தால், யோசிக்காமல் அந்த முதலீடுகளை விற்று வெளியேறுவதே உசிதம்.

(லாபம் சம்பாதிப்போம்)

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..? முதலீட்டை உதறித் தள்ளுங்கள்!

அறிவியல் ஆராய்ச்சி... பின்தங்கும் இந்தியா!

ஏதாவது ஒரு துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்குவது பத்து ஆண்டுகளுக்குமுன் பலராலும் விரும்பப்படும் விஷயமாக இருந்தது. ஆனால், தற்போது ஆராய்ச்சி என்றாலே பலரும் இந்தியாவில் ஒதுங்க ஆரம்பிக்கின்றனர். அறிவியல், தொழில் நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம் ஆகிய பாடங் களில் ஆராய்ச்சி செய்பவர் களின் எண்ணிக்கை  பத்து ஆண்டுகளுக்குமுன், ஆண்டொன்றுக்கு சுமார் 800-ஆக இருந்தது. தற்போது அது 2000 பேர் என்ற அளவில் இருக்கிறது.  சீனாவிலோ ஆண்டுக்கு 5000 பேர் ஆராய்ச்சி செய்கின்றனர். சீனாவோடு ஒப்பிடும்போது இந்தியா பின்தங்கியே உள்ளது.