மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல!

செல்லமுத்து குப்புசாமி

வாட்ஸ் அப்பில் அடிக்கடி எதையாவது கிளப்பிவிட்டு, ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது’ எனப் பல ஃபார்வேர்டுகள் வருவதுண்டு. அவற்றில் பல சங்கதிகளின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியது என்றாலும் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம். அப்படி நம் முன்னோர்கள் சொன்ன ஒரு விஷயம் பற்றித்தான் இந்த வாரம் பேசுகிறோம். அகல உழாமல் ஆழ உழுமாறு நம் முன்னோர்கள் சொன்னதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

எதற்காக அப்படிச் சொன்னார்கள்? பக்கத்து தோட்டத்துக்காரன் செய்கிறானே என ஆத்திரத்துக்குப் பரவலாக விவசாயம் செய்து முழுவதுமாகக் கவனிக்க முடியாமல் போவதைவிட,  எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிலத்தில் சிரத்தையாக முழுக் கவனத்துடன் வெள்ளாமை செய்து மகசூல் ஈட்டுவது உகந்தது. அதன் பொருட்டே அப்படிச் சொல்லியிருப்பார்கள். ஆனால், அதை அப்படியே எடுத்துக்கொண்டு எந்த முடிவுக்கும் வந்துவிடக்கூடாது.

ஒரு மனிதன் பல வேலைகளைச் செய்து எதிலுமே நிபுணன் ஆகாமல் இருப்பதைக் காட்டிலும், ஏதேனும் ஒரு வேலையில் கெட்டிக்காரனாகத் திகழ்வது சரியான அணுகுமுறை.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல!

ஆனால், இதை அப்படியே எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்க்க முடியாது. தற்போதெல்லாம் மேனேஜ்மென்ட் வகுப்புகளில் பிளான் B இருக்க வேண்டுமென்கிறார்கள். ஒன்று போனால், இன்னொன்று. “சிலபேர் காதல் விஷயத்துலகூட ரிஸ்க் எடுக்கறதில்லை. ஒரேயொரு லவ்வர் இருந்தா ரிஸ்க்னு நெனச்சு நாலைஞ்சு காதலி மெயின்டெய்ன் பண்றாங்க” என்று நண்பர் ஒருவர் வேடிக்கையாகச் சொல்வார்.

உதாரணத்துக்கு, ஒரேயொரு கம்பெனியின் ஷேர் வாங்கி வைக்கிறீர்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து கணக்குப் போட்டுத் தெளிவாகவே முடிவெடுக்கிறீர்கள். ஆனாலும், சில எதிர்பாராத காரணங்களால் பிசினஸ் எதிர்மறையாகப் போகிறது. முதலீடு பெருநஷ்டத்தை நல்குகிறது. நம் தவறு ஏதுமேயில்லை என்றாலும் இது நடப்பதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.

இப்படி ஒரேயொரு நிறுவனத்தில் நம் முதலீடு மொத்தத்தையும் போட்டு வைப்பதற்குப் பதிலாக நான்கைந்து நிறுவனங்களில்  பிரித்துப் போட்டு வைத்திருந்தால், ஒரு நிறுவனத்தில் செய்த முதலீடு நமக்கு லாபம் கொடுக்கத் தவறினாலும், மற்றவை சரி செய்துவிடும். இதைத்தான் பரவலாக்கம் (Diversification) என்கிறோம்.

முட்டைகள் அனைத்தையும் ஒரே கூடையில் போடக் கூடாது என ஆங்கிலத்தில் கூறுவார்கள்.  ஒரு கூடை உடைந்தால்கூட மற்ற கூடைகள் பாதுகாப்பாக இருக்கும். நம் முட்டைகள் ஓரளவு பாதுகாப்பாக இருக்கும். மிக முக்கியமான அணுகுமுறை இது. தேர்ந்த முதலீட்டாளர் யாருமே ஒரேயொரு கம்பெனியில் மட்டும் தமது ஒட்டுமொத்த பணத்தையும் போட்டு வைக்கமாட்டார்கள்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல!


முதலீட்டுப் பரவலாக்கம் மிக, மிக அவசியமான ஒன்று. அதில் மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனால், எவ்வளவு பரவலாக்கம் வேண்டும் என்பதையே நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு நிறுவனம் 100% வளர்வதற்கான சாத்தியம் உள்ளது.

உங்கள் பணம் முழுவதையும் அதில் போடுவதற்குப் பதிலாக பாதிப் பணத்தை மட்டும் அதில் போட்டுவிட்டு, மீதிப் பாதியை 10% வளரக்கூடிய இன்னொரு நிறுவனத்தில் முதலீடு செய்கிறீர்கள் எனில், உங்கள் வளர்ச்சி 100 சதவிகிதத்திலிருந்து 55 சதவிகிதமாகக் குறைந்துவிடும்.

இப்படிச்  செய்யாமல் பத்து நிறுவனங்களில் பிரித்துப் போடுகிறீர்கள். ஒன்று 100% லாபமும், மற்றவை 10% லாபமும் தருகின்றன. அப்போது நமக்குக் கிடைக்கிற நிகர லாபம் வெறும் 19 சதவிகிதமாக மட்டுமே இருக்கும். நல்ல ஒரு கம்பெனி ஒன்றில் முதலீடு செய்யாமல் பத்து கம்பெனிகளில் பரவலாக்கம் செய்ததன் காரணமாக லாபம் 100 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.

இதன் தனித்தன்மையே இதுதான். ஒரே கூடையில் போட்டால் முட்டைகள் உடைந்துவிடும் என்பதற்காக பல கூடைகளில் போட்டால் நஷ்டம் பரவலாகும். ஆனால், பல கம்பெனிகளில் பிரித்துப் போட்டால் அபரிமிதமாக ஒரேயொரு கம்பெனியில் வரக்கூடிய லாபமும் பரவலாகும். இதனை மட்டும் புரிந்துகொண்டால் போதுமானது.

அதனால், உண்மையான பரவலாக்கம் என்பதைப் புரிந்துகொண்டு இயங்க வேண்டும். எதற்காகப் பரவலாக்கம் செய்கிறோம் என்ற கேள்வி நமக்குள் எழவேண்டும். குறிப்பிட்ட ஒரு நிறுவனம் ரிஸ்க் என்றால், வேறு சில நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்யலாம். குறிப்பிட்ட ஒரு துறை ரிஸ்க் என்றால், பல்வேறு துறைகளில் பிரித்து முதலீடு செய்யலாம்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு வங்கித் துறையில் இயங்கும் ஒரு கம்பெனிமீது ஆர்வம் அதிகம். அதன் பங்குகளை மட்டும் வாங்கிச் சேகரித்து வைத்திருந்ததால், ஒரு நாள் டைவர்சிஃபிகேஷன் பற்றி எங்கோ படித்துவிட்டுப் பரவலாக்கம் செய்வதென்று முடிவெடுத்தார். அதனால், மேலும் 20 நிறுவனப் பங்குகளை வாங்கினார். பிறகு ஒரு நாள் அந்த 20 கம்பெனிகள் பற்றி விசாரித்தேன். அவை எல்லாமே வங்கித் துறைப் பங்குகள்.

முதலில் வைத்திருந்தது அந்தத் துறையில் டாப் கம்பெனி. அது வெகுவான லாபம் தருவது. மற்றவற்றிலும் பிரித்துப் போட்ட பிறகு, அவர் வங்கித் துறையில் பங்குகள் தந்த சராசரி லாபத்தையே எட்ட முடிந்தது. அது மட்டுமல்லாமல், ஒரு நாள் வங்கித் துறையில் பங்குகள் எல்லாமே சரிந்தன. அப்போது அவரது ஒட்டுமொத்த முதலீடும் சரிந்தது. சரிவை அவரால் தடுக்கவே முடியவில்லை.

பரவலாக்கம் செய்வதால், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பிசினஸ் தவறாகச் சென்று, அதனால் ஏற்படுகிற இழப்பை மட்டுமே பரவலாக்கம் செய்ய முடியும். இதனை பிசினஸ் ரிஸ்க் என்கிறோம். பங்குச் சந்தை ஒட்டுமொத்தமாகச் சரியும்போது எல்லா பங்குகளும் சரியும். இது மார்க்கெட் ரிஸ்க். நீங்கள் என்னதான் பரவலாக்கம் செய்தாலும் மார்க்கெட் ரிஸ்க்கைத் தவிர்க்க இயலாது.

ஒரு சில பேர் 40 - 50 நிறுவனங்களில் பங்குகளை வாங்கி வைத்திருப்பார்கள். அதனால் எந்த ரிஸ்க்கையும் தவிர்க்க முடியாது. மேலும், சராசரிக்கும் மேலான லாபமும் ஈட்ட முடியாது. நிறைய நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது அவற்றைப் பின்தொடர்வதும் சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பதும் நம்மால் இயலாமல் போகும்.

அதனால் ஓரளாவுக்கு மட்டுமே பரவலாக்கம் செய்வது மட்டும் போதும். இந்த விஷயத்தில் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அகல உழுவதைவிட ஆழ உழலாமே!

(லாபம் சம்பாதிப்போம்)

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல!

திட்டங்கள் நிறைவேறுவதில் தாமதம்... அரசுக்கு நஷ்டம்!

இந்தியா முழுக்க 302 அரசுத் திட்டங்கள் நிறை வேறுவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதால், செலவு அதிகரித்து ரூ.1.45 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரம் மற்றும் திட்ட நிறைவேற்றத் துறை அமைச்சர் விவேக் கோயல் சொல்லியிருக்கிறார். 150 கோடி ரூபாய்க்கு மேலான 1,283 திட்டங்களில் 302 திட்டங்கள், குறித்த காலத்துக்குள் செய்து முடிக்க முடியாமல் கால தாமதம் ஆகிவருகின்றன. இதனால், மத்திய அரசாங் கத்துக்கு ரூ.1,45,679 கோடி ரூபாய்  வரை கூடுதல் செலவு ஏற்பட்ட தன் காரணமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது கடந்த 2017, நவம்பர் 1-ம் தேதி வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல!

10 ரூபாய்   காசு வெளியிடுவது நிறுத்தம்!

பத்து ரூபாய் காசுகளை அச்சடிப்பதை மத்திய அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. பத்து ரூபாய் காசுகள் ஏற்கெனவே போதிய அளவில் அச்சடித்து வெளி யிடப்பட்டிருப்பதால், மேற்கொண்டு புதிதாக இந்தக் காசுகளை அச் சடித்து வெளியிட வேண் டாம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. “இது தற்காலிக நிறுத்தமே தவிர, பத்து ரூபாய் காசு அச்சடிப்பதை நிரந்தரமாக நிறுத்த அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை’’ என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நாடாளு மன்றத்தில் தெரிவித்தி ருக்கிறார். சில மாதங் களுக்குமுன், பத்து ரூபாய் காசை சில நகர மக்கள் வாங்க மறுத்ததால் குழப்பம் நிலவியது குறிப் பிடத்தக்கது.