
ஜி.அண்ணாதுரை குமார், ஆலோசகர்
பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் ரூ.1 லட்சத்துக்கும் மேற்பட்ட லாபத்துக்கு, வரும் ஏப்ரலில் இருந்து நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) 10% கட்ட வேண்டும் என்கிற அறிவிப்பு, மத்திய பட்ஜெட் 2018-ல் வெளியானது. இதனையடுத்து, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் குறைந்துவிடுமோ என்கிற சந்தேகம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்பவர்களிடம் ஏற்பட்டு உள்ளது. உண்மையில், அந்த வகை முதலீட்டாளர்களுக்கு இதனால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று பார்ப்போம்.

ஒருவர், அடுத்துவரும் 20 வருடங்களுக்கு மியூச்சுவல் ஃபண்டில் ரூ.1,000 முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். அவரது மாத முதலீடு ரூ.1,000. 20 வருடங்கள் அவர் முதலீடு செய்த தொகை ரூ.2,40,000. இந்த முதலீட்டின் மீதான வருமானம் 15% எனக்கொண்டால், 20 ஆண்டுகள் கழித்து அவருக்குக் கிடைக்கும் தொகை ரூ.10,87,073-ஆக இருக்கும்.

இதில் லாபத்தில் வரி விலக்காகக் கிடைப்பது ரூ.1,00,000. இதைக் கழித்தால், வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.9,87,073-ஆக இருக்கும். இதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% அதாவது, ரூ.98,707-யைக் கழித்தால், வரிபோக மீதமுள்ள முதலீட்டு லாபம் ரூ.8,88,366 ஆகும். இதனுடன் முதலீட்டு லாபம் ரூ.1 லட்சத்தையும் சேர்த்தால் (8,88,366+1,00,000) ரூ.9,88,360 கிடைக்கும். இதனுடன் முதலீட்டுத் தொகையையும் சேர்த்தால் (9,88,366 + 2,40,000) மொத்தம் ரூ.12,28,366 கிடைக்கும்.
இதன் மூலம், முதலீட்டாளருக்குக் கிடைக்கும் லாபம் 14.37% ஆகும். அதாவது, லாபத்தில் 0.63% மட்டுமே குறையும். இது பெரிய இழப்பு என்று சொல்ல முடியாது.
எனவே, இந்தப் புதிய வரியினால் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்குப் பெரிய பாதிப்பு எதுவும் வராது என்பதே உண்மை!