
ஓவியம்: பாரதிராஜா
“பலரும் எதிர்காலத்துக்கான முதலீட்டைத் தாமதமாக ஆரம்பிப்பார்கள். ஆனால், நானோ மிக மிகத் தாமதமாகத்தான் முதலீட்டைத் தொடங்கினேன். அதற்குக் காரணம், திருமணம் முடிந்தபின் முதலீட்டைத் தொடங்கிக்கொள்ளலாம் என நான் நினைத்ததுதான். திருமணத்துக்கும், முதலீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், அவை இரண்டு ஒன்று குழப்பிக் கொண்டதன் விளைவு, இப்போது முதலீட்டைத் தொடங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்’’ என்று தன்னைப் பற்றி பேச ஆரம்பித்தார் வாசு.
இவர், தற்போது வெளிநாட்டில் (வளைகுடா) பணிபுரிகிறார். இளமைக் காலத்தை வீணாக்கி விட்டோம் என்ற சிறிய வருத்தம் அவரின் பேச்சில் தென்பட்டாலும், எதிர்காலத்தை இனியாவது சிறப்பாக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து வாசு பேசினார்...

“என் வயது 47. நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டேன். என் மனைவி தீபாவுக்கு வயது 29. நான் தற்போது மெக்கானிக்கல் சூப்பர்வைஸராகப் பணிபுரிகிறேன். எனது மாத வருமானம் இந்திய மதிப்பில் ரூ.80,000. இதுவரை சேமிப்புகள் எதுவும் இல்லை. இனியாவது நல்லவிதமாகச் சேமிக்க வேண்டும். தற்போது என் மனைவியும் என்னுடன் வெளிநாட்டில்தான் இருக்கிறார். அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இன்னும் ஆறு மாதங்களில் குழந்தை பிறக்கலாம். எதிர்காலத்தில் என் மனைவியும், என் குழந்தையும் சிறந்த வாழ்க்கையை வாழத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது என் விருப்பம். நான் இன்னும் 10 ஆண்டுகள் வரை வெளிநாட்டில் பணிபுரியத் திட்டமிட்டுள்ளேன்.
என் குழந்தையின் மேற்படிப்புக்கும், திருமணத்துக்கும், என் ஓய்வுக் காலத்துக்கும் முதலீடு செய்ய வேண்டும். எவ்வளவு தேவை என்றுகூட என்னால் இப்போது கணிக்க இயவில்லை. தோராயமாக என் வருமானத்துக்குள் எவ்வளவு வரை திட்டமிட முடியும் என நீங்களாகவே இலக்கை நிர்ணயம் செய்து, முதலீட்டு வழிகளைச் சொன்னால் அதன்படி செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று சொன்ன வாசுவின் மாத வரவு செலவு இதோ...
மாத வருமானம் : ரூ.80,000
குடும்பச் செலவுகள் : ரூ.60,000
மீதம் : ரூ.20,000
இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“குடும்பச் சூழ்நிலை காரணமாக நீங்கள் தாமதமாகத் திருமணம் செய்ததில் தவறு எதுவும் இல்லை. ஆனால், எதிர்காலத்துக்கான முதலீட்டை இவ்வளவு தாமதமாகத் தொடங்குவது தவறு. இளமையில் தொடங்காத முதலீடு உங்கள் இலக்குகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாது. எதிர்காலத்தில் பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்தே ஆகவேண்டிய நிலை அது ஏற்படுத்திவிடும். நீங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 முதலீடு செய்திருந்தால்கூட கணிசமான தொகையானது இன்று உங்கள் கையில் இருந்திருக்குமே. இனி என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. முன்கூட்டியே முதலீடுகளைச் செய்யாமல் தவறவிட்டவர்களுக்கு நீங்கள் ஓர் உதாரணமாக இருக்கிறீர்கள். உங்களைப் பார்த்த பிறகாவது இந்தக் காலத்து இளைஞர்கள் 25 வயது முடிந்தவுடனே தங்கள் எதிர்காலத்துக்கென மாதமொன்றுக்கு ஆயிரமாவது முதலீடு செய்யத் தொடங்கட்டும். இனி உங்களுக்கான ஆலோசனைகளைச் சொல்கிறேன்.

* 13 வருடங்களுக்குப் பிறகு சேர்ந்த தொகையை மறுமுதலீடு செய்வதன் மூலம் இலக்குக்குத் தேவையான தொகையை அடையலாம்.
** இந்த இலக்குக்கு முழுமையாகச் சேர்க்க தற்போது வாய்ப்பில்லை. தோராயமான எதிர்பார்ப்பு பணவீக்கம் 7%, வருமானம் 12%
உங்களுக்கு இப்போது 47 வயதானாலும், அடுத்த 10 வருடங்களில் நீங்கள் ஓய்வுபெற இயலாது. 60 வயது வரை வேலை பார்த்தால்தான் ஓரளவு இலக்குகளை நெருங்க முடியும். உங்கள் எல்லா இலக்கு களுக்கும் மொத்தம் மாதம் ரூ.60,500 இருந்தால்தான் முதலீடு செய்ய முடியும். ஆனால், உங்களிடம் ரூ.20 ஆயிரம் மட்டுமே உள்ளது. இதைக்கொண்டு சில இலக்குகளை மட்டுமே அடைய முடியும்.
உங்கள் குழந்தையின் மேற்படிப்புக்கு அடுத்த 18 வருடங்களில் ரூ.27 லட்சம் தேவை. மாதம் ரூ.4,100 முதலீடு செய்து வந்தால் நீங்கள் ஓய்வு பெறும்போது அதாவது, அடுத்த 13 வருடங்களில் ரூ.15.35 லட்சம் கிடைக்கும். இதை ஐந்து வருடங்களுக்கு மறுமுதலீடு செய்தால் மேற்படிப்புக்குத் தேவையான தொகை கிடைக்கும்.
அடுத்து உங்கள் குழந்தையின் திருமணத்துக்குத் தற்போதைய மதிப்பில் ரூ.20 லட்சம் தேவையெனில், குழந்தையின் 24-ம் வயதில் ரூ.1 கோடி தேவையாக இருக்கும். மாதம் ரூ.7,800 முதலீடு செய்தால், 13 வருடங்களில் ரூ.29.20 லட்சம் கிடைக்கும். அடுத்த 11 வருடங்களுக்கு இதை மறுமுதலீடு செய்தால், ரூ.1 கோடியைப் பெற முடியும்.

அடுத்து, உங்களின் ஓய்வுக்காலம். உங்கள் மனைவிக்குத் தற்போது 29 வயதுதான் ஆகிறது. அவருடைய வாழ்நாள் 85 வயது வரை என எடுத்துக்கொண்டால், உங்கள் ஓய்வுக்காலத்துக்கு ரூ.1.73 கோடி தேவையாக இருக்கும். இதற்கு மாதம் ரூ.46,600 முதலீடு செய்தாக வேண்டும். ஆனால், உங்களால் தற்போது மாதம் ரூ.8,000 மட்டுமே முதலீடு செய்ய முடியும். 13 வருடங்களில் ரூ.29.8 லட்சம் மட்டுமே சேர்க்க முடியும். இதை அடுத்த ஐந்து வருடங்களுக்கு மறுமுதலீடு செய்தால் ரூ.52 லட்சம் கிடைக்கும்.
நீங்கள் 65 வயது வரை வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை நீங்கள் புரிந்து கொண்டு செயல் படுவீர்கள் என்று நம்புகிறேன். அப்படிச் செயல்பட்டால்கூட உங்களுக்கான இலக்குகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியாது.
அடுத்த இரண்டு ஆண்டு களில் உங்கள் வருமானம் இன்னும் ரூ.38 ஆயிரம் அதிகமானால் நிச்சயமாக உங்கள் எல்லா இலக்குகளுக்கும் முதலீடு செய்ய முடியும். அதிக வருமானத்துக்கான முயற்சிகளை மனம் தளராமல் செய்யுங்கள். முடியும் என்கிற எண்ணத்துடன் செய்யும் எந்த காரியமும் தோல்வியில் முடிவ தில்லை. முதலீட்டை இளமை யிலேயே தொடங்குவதே நல்லது என்பதை உங்களால் முடிந்த அளவுக்கு மற்றவர் களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
பரிந்துரை : மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ரூ.3,000, மோதிலால ஆஸ்வால் மோஸ்ட் ஃபோகஸ்டு மல்டிகேப் 35 ஃபண்ட் ரூ.4,000, டி.எஸ்.பி மிட் அண்டு ஸ்மால் கேப் ரூ.3,000, ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.4,500, ஐ.சி.ஐ.சி.ஐ லாங்க் டேர்ம் பிளான் ரூ.4,500, ஹெச்.டி.எஃப்.சி கோல்டு ஃபண்ட் ரூ.1,000.”
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878
- கா.முத்துசூரியா

உங்களுக்கும் நிதி ஆலோசனை வேண்டுமா?
finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களைக் குறிப்பிட்டு குடும்ப புகைப்படங்களுடன் அனுப்புங்கள்.
உங்கள் செல்போன் நம்பரைத் தவறாமல் குறிப்பிடவும்.
தொடர்புக்கு: 9940415222