மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - மின்சாரத்தைச் சேமிக்கும் சூப்பர் டெக்னாலஜி!

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - மின்சாரத்தைச் சேமிக்கும் சூப்பர் டெக்னாலஜி!
பிரீமியம் ஸ்டோரி
News
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - மின்சாரத்தைச் சேமிக்கும் சூப்பர் டெக்னாலஜி!

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 12

தொழில்நுட்பத் துறையில் அதிகம் வளர்ந்துவரும் விஷயங்களில் ஒன்று, இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (IoT). செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கத்தால், எதிர்காலத்தில் இது இன்னும் விஸ்வரூபம் எடுக்கும். அப்போது, இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் தொடர்பான நிறுவனங்களுக்கான தேவையும் அதிகரிக்கும்.  இந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முக்கியமானது எனர்ஜிலி (Energyly). இந்த நிறுவனத்தின் பயணத்தை நம்மிடம் எடுத்துச் சொன்னார் தயாளநாதன்.

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - மின்சாரத்தைச் சேமிக்கும் சூப்பர் டெக்னாலஜி!

   இன்ஸ்பிரேஷன்

‘‘இந்த நிறுவனத்தைத் தொடங்கும்முன்பு டிவிடி தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். டிவிடிக்களின் தேவை குறைந்துகொண்டே வந்த  சமயத்தில், வேறு பிசினஸ் செய்வது பற்றி யோசித்து வந்தேன். அது டிவிடி பிசினஸ் போல இல்லாமல், எப்போதும் தேவை இருக்கிற ஒரு பிசினஸாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அப்போது தான் மின்சக்தி துறைமீது என் கவனம் திரும்பியது.

நம் நாட்டில் சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன.  அவற்றில் ஒரு கோடி நிறுவனங்கள் உற்பத்தித் துறையில் ஈடுபட்டு உள்ளன. இவற்றின் மின் நுகர்வும் மிக மிக அதிகம். அத்துடன் மின்சாரத்திற் காக இவர்கள் செய்யும் செலவும் அதிகம். ஆனால், அவர்களுக்கு இதுகுறித்து விழிப்பு உணர்வே இல்லை.  அவர்கள் தகுந்தமுறையில் மின்சாரத்தைச் சேமித்தால் அவர் களுக்கு மின் கட்டணத்திலும்  லாபம் கிடைக்கும்; மின்சாரமும் மிச்சமாகும். இந்தப் பிரச்னை நான் இதற்குமுன்பு பணிபுரிந்த நிறுவனத்திலும் இருந்தது. அதனை எப்படி சரிசெய்யலாம் என யோசித்ததன் விளைவுதான் எனர்ஜிலி உருவானது.

   அடித்தளம்

ஒரு நிறுவனத்தின் மின் கட்டணத்தை மூன்று வகைகளில் குறைக்கலாம். ஒன்று, சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி என்று மாற்று மின் உற்பத்தியில் இறங்குவது. இது எளிது என்றாலும் அதிகம் செலவாகும்.இரண்டாவது, பழைய இயந்திரங் களை மாற்றிவிட்டுக் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் அதிகத் திறனுள்ள இயந்திரங் களைப் பயன்படுத்துவது. இதற்கும் அதிகம் செலவாகும். மூன்றாவது, தொடர்ச்சியான கண்காணிப்பு மூலம் மின்சாரம் வீணாவதைத் தடுப்பது. இதைத்தான் நாங்கள் செய்கிறோம். சின்னச் சின்னத் தொழில் நிறுவனங்களுக்கு மாதத்திற்கு எப்படியும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் கரன்ட் பில் வரும். ஆனால், சில மின் சேமிப்பு முறைகளைக் கையாண்டால் அவற்றைக் குறைக்கலாம்.

உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் மூன்று இயந்திரங்கள் இருக்கின்றன. அந்த மூன்றுமே ஒரே பணியைத் தான் செய்யும். ஒரே அளவுக்குத் தான் பொருள்களை உற்பத்தி செய்யும். ஆனால், அவை எடுத்துக் கொள்ளும் மின்சாரத்தின் அளவு வேறுபடும். இதனை சென்ஸார்கள் மூலம் கண்காணிப்பதன் மூலம் சரிசெய்ய முடியும். எந்த இயந்திரம்  அதிக மின்சாரம் எடுத்துக் கொள்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இதற்காக ஒரு ஹார்டுவேரை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதுதான் எனர்ஜிலி கிட். இயந்திரங்களை இந்த கிட்டுடன் இணைத்து விட்டால் போதும். அவற்றின் மின்பயன்பாடு குறித்த டேட்டா நம் மொபைலுக்கு வந்துவிடும். அவற்றைத் தொடர்ந்து ஆராய்வதன் மூலமாக மின்   செலவைக் குறைக்கலாம்.

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - மின்சாரத்தைச் சேமிக்கும் சூப்பர் டெக்னாலஜி!

   சவால்கள்

இந்த ஹார்டுவேரை வடிவமைத்தபின்பு, பல்வேறு நிறுவனங்களிடம் எடுத்துச் சென்றோம். உடனே அவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். அது தவறு என்பதைப் பிறகுதான்  புரிந்து கொண்டோம்.  அதிகச் செலவு, குறைவான வசதிகள், ஆப்பைப் பயன்படுத்துவது கடினமாக இருப்பது எனப் பல்வேறு காரணங்களைச் சொல்லி எங்கள் தயாரிப்பை ஏற்க மறுத்தார்கள்.  எங்களிடம் இருந்த சின்னச் சின்னக் குறைகளையெல்லாம் வாடிக்கையாளர் களின் கருத்துகளுக்கேற்ப சரிசெய்தோம். முதலில் ஒரு மின்சாரச் சேமிப்புக் கருவி யாக மட்டுமே இதை நாங்கள் வடிவமைத் தோம். பின்பு அதனைக் கணினியில் இருந்து கண்காணிக்கும் முறையைக் கொண்டு வந்தோம்.

மொபைலில் இருந்து இவற்றைப் பார்க்கமுடிந்தால் நன்றாக இருக்கும் எனப் பலர் கேட்டனர். உடனே டேட்டாவை கிளவுடில் மாற்றி, மொபைல் ஆப்பை வடிவமைத்தோம். இப்படிப் பல விஷயங்களைச் செய்ததன் மூலம் முழு IoT நிறுவனமாக மாறினோம். ஆரம்பக் கட்டத்தில் எங்களுக்குத் தெரிந்த நிறுவனங்களுக்கு மட்டும் சென்று இன்ஸ்டால் செய்தோம். அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே,  அவர்கள் மூலம் அடுத்தடுத்த நிறுவனங்களுக்கும் பின்னர் சென்றோம்.

   வெற்றி

தொடக்கத்தில், உற்பத்தி நிறுவனங் களுக்கு மட்டுமே திட்டமிட்டு இந்த சிஸ்டமை வடிவமைத்தோம். ஆனால், இந்தத் தொழில்நுட்பம்தான் மின்சாரம் பயன்படுத்தும் எல்லா நிறுவனங்களுக்கும் பயன்படும் என்பதால், உணவகங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், ஷோரூம்கள் எனப் பல்வேறு நிறுவனங்களுக்கு  எடுத்துச்சென்றோம். அங்கேயும் நல்ல வரவேற்பு இருந்தது. 30,000 முதல் 40,000 ரூபாய்க்குள் இதனைப் பொருத்தி விடலாம் என்பதால், இதற்கென  பெரிய செலவும் எதுவும் ஆகாது. அதேசமயம், மாதத்திற்கு ரூ.7,000 வரை மின் கட்டணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

ஒரு நிறுவனத்தில் இருக்கும் எல்லா இயந்திரங்களிலும் எங்கள் கருவிகளைப் பொருத்தமுடியும். இதன்மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த இயந்திரம் இயங்குகிறது, எவ்வளவு நேரம் இயங்குகிறது, எது அதிக மின்சக்தி இழுக்கிறது உள்பட எல்லா விவரங்களையும் பார்க்க முடியும். அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் தேவையற்ற மின்சார இழப்புகளையும் தவிர்க்கலாம். நம் நாட்டில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இப்படி மின் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டால், பெருமளவு மின்சாரத்தை நம்மால் மிச்சப்படுத்த முடியும்.

   இலக்கு

மின்சக்தித் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு, மின்சக்தி சேமிப்புத் தொடர்பான துறையில் முதல் மூன்று இடங்களில் எங்களுடைய நிறுவனத்தை இடம்பெற செய்ய வைக்க வேண்டும்’’ என நம்பிக்கையுடன் முடித்தார் தயாளநாதன்.

இவரது மின்சாரக் கனவுகள் பலிக்கட்டும்!

-ஞா.சுதாகர்,


படங்கள்: தே.அசோக்குமார்

ஜாக் மா செய்ததைத்தான் நானும் செய்தேன்!

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கும் பலரும் அதே துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவோ அல்லது அனுபவம் உள்ளவர்களாகவோதான் இருப்பார்கள். ஆனால், தயாளநாதனோ கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்.  மின்சாரத்துறைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாதவர்.  பின்னர் எப்படிச் சாதித்தார்? அவரே விளக்குகிறார்.

“முதலில் எனக்கும் மின்சாரம் பற்றி எதுவுமே தெரியாது.  எல்லாம் நான் கற்றுக் கொண்டவைதான். ஒரு விஷயத்தை உங்களால் செய்யமுடியவில்லை என்றால், அதனைச் செய்யத் தெரிந்தவர்களிடம் ஒப்படையுங்கள்” என  அலிபாபா நிறுவனர் ஜாக் மா சொல்வார். அதைத்தான் நானும் செய்தேன்.

திறமையான பணியாளர்களைத் தேர்ந்தெடுத்தேன். என்ன செய்ய வேண்டும் என்பதை நான் முடிவு செய்வேன்; அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். எல்லாம் சரியாக நடந்தது; எனவே, வெற்றியும் வசப்பட்டது. அனுபவம் இல்லாவிட்டாலும்கூட, நம்பிக்கை யுடன் ஒரே இலக்கை நோக்கிப் பயணித்தால் அனைவருமே ஜெயிக்க முடியும்” என்கிறார் அவர்.