
நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரிஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்
சர்வதேச அளவில், கடந்த இரு மாதங்களாக அதிகரித்துவந்த கச்சா எண்ணெய் விலையானது, திடீரென்று சரியத் தொடங்கியுள்ளது. அதிக பட்சமாக ஒரு பேரல் (பீப்பாய்) 66 டாலர்களாக வர்த்தகமான கச்சா எண்ணெய், தற்போது 59 டாலர்களுக்கு இறக்கம் கண்டுள்ளது. என்ன காரணங்களினால் இந்த இறக்கம் நடந்துள்ளது, இந்த இறக்கம் மேலும் தொடருமா என்ற கேள்வி களுக்கு விடை தெரிந்துகொள்ள வேண்டு மானால், சர்வதேச அளவிலான நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இந்த விலை இறக்கங்கள் நம் அரசாங்கத்துக்குப் பயன் தரக்கூடியது என்பது முக்கியமான விஷயம். அதைவிட முக்கியமான விஷயம், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகளில், வரும் காலாண்டுகளில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது. இதைத் தெரிந்துகொண்டு இந்தப் பங்குகளில் முதலீடு செய்வது நல்லது.
முதலில், சர்வதேச அளைல் கச்சா எண்ணெய் விலை இறக்கத்திற்கான காரணங்களை அலசுவோம்.

ஷேல் எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பு
ஷேல் எண்ணெயை அமெரிக்கா அதிக அளவில் உற்பத்தி செய்து வருவதும், இதன் காரணமாக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100 டாலர்களிலிருந்து 40 டாலர்களாக விலை குறைந்ததும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இதில் புதிய செய்தி என்னவெனில், 2014-ல் அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் உற்பத்தியானது ஒரு நாளைக்கு எட்டு மில்லியன் பேரல்களாக இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து, தற்போது 10.25 மில்லியன் பேரல்களைத் தாண்டிவிட்டதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இது, இந்த வருட இறுதிக்குள்ளாகவே 11 மில்லியன் பேரல்களை தாண்டிவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது, கச்சா எண்ணெய் சந்தையை மிகவும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
ஈரான் அறிவிப்பு

ஈரானின் எரிசக்தி அமைச்சர், தங்கள் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேரல் அளவுக்கு அதிகப்படுத்தத் தயார் நிலையில் இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி
இவை எல்லாவற்றையும்விட அனைத்து நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு கச்சா எண்ணெய்க்கான தேவையை விட உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. கச்சா எண்ணெய்யின் தேவை உலகளவில் 2017-ல் ஒரு நாளைக்கு 97.8 மில்லியன் பேரல் களாக இருந்தது. ஆனால், 2018–ல் ஒரு நாளைக்கு 99.1 மில்லியன் பேரல்களாகத் தேவை இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், ஒட்டு மொத்த உலக உற்பத்தியானது 2018-ல் 97.7 மில்லியன் பேரல்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படு கிறது.
‘ஒபெக்’ அல்லாத நாடுகளில் கனடா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளும், இந்த ஆண்டு 1.7 மில்லியன் பேரல்களை அதிகரிக்க முடிவெடுத்திருப்பது, ‘ஒபெக்’ நாடுகள் எடுத்துவரும் உற்பத்திக் குறைப்பினை சரிக்கட்டுவதாக உள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, அதன் விலை அதிகரிப்பதைத் தடுக்கும் விதமாக இருக்கிறது.

அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து வருவது
அமெரிக்கா, தனது எண்ணெய் இறக்குமதியை மிகவும் குறைத்துக் கொண்டது மற்றொரு காரணம். குறிப்பாக, கனடா மற்றும் ஒபெக் நாடுகளிலிருந்து பல வருடங்களாக இறக்குமதி செய்துவந்ததைத் தற்போது நிறுத்திவிட்டது. 2005–ம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவின், இறக்குமதியானது 12 மில்லியன் பேரல்களாக இருந்தது, தற்போது வெறும் நான்கு மில்லியன் பேரல் களாகக் குறைந்துவிட்டது. அமெரிக்கா, சவுதியிலிருந்து 10 வருடங்களுக்குமுன் இறக்குமதி செய்த அளவில், தற்போது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இறக்குமதி செய்கிறது. இறக்குமதி குறையும்பட்சத்தில், உலக உற்பத்தியில் சப்ளை அதிகரித்து, விற்பனையில் தேக்கம் ஏற்படுகிறது. சப்ளை அதிகரித்தால், சந்தைப் போட்டியானது விலைச் சரிவை ஏற்படுத்துகிறது.
அமெரிக்காவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரிப்பது

இதுமட்டுமில்லாமல், 2016-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஏற்றுமதி செய்யாமல் இருந்த அமெரிக்கா, இப்போது பெருமளவு கச்சா எண்ணெய்யை ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியிருப்பது ஒபெக் நாடுகளுக்குச் சவால்களைத் தோற்றுவித்துள்ளது. தற்போது உலக உற்பத்தியில் (ஒரு நாளைய) மூன்றாம் இடத்தில் இருக்கும் அமெரிக்கா, அடுத்த ஆண்டில் சவுதியையும், ரஷ்யாவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதலிடத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆசிய நாடுகளில் தென் கொரியா, ஜப்பானுக்கு மட்டுமில்லாமல், சீனாவிற்கும் அதிக அளவு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வருகிறது அமெரிக்கா. கடந்த ஜனவரியில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 9,57,000 பேரல்கள் என்கிற அளவிற்கு சீனாவிற்கு அமெரிக்க ஏற்றுமதி செய்துள்ளது முக்கியமான புள்ளிவிவரம் ஆகும்.
இதில் முக்கியமான விஷயம் என்ன வெனில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையைவிட, அமெரிக்க ஷேல் எண்ணெய்யின் விலை நான்கு டாலர் குறைவாக வர்த்தகமாவதால், சீனா அதிகம் இதற்கு முன்னுரிமை தருகிறது. மேலும், அமெரிக்க – சீனா இடையிலான வர்த்தகத்தில் தற்போது இடைவெளி குறைந்துள்ளது. இந்த இடைவெளி யானது கடந்த டிசம்பரில் 25.5 பில்லியன் டாலர்களாகக் காணப் பட்டது, கடந்த ஜனவரியில் 21.89 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, பெரிய கப்பல்கள் என்று சொல்லக்கூடிய வீ.எல்.சி.சி–க்களை கையாளக்கூடிய துறைமுகங்கள் தற்போதைய நிலையில் இல்லை என்பதால், மெக்சிகோ வளைகுடா பிராந்தியத்தில் லூசியானா ஆப்ஷோர் போர்ட் சர்வீசஸ் – இந்த வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவிற்கு என்ன நன்மை?
கச்சா எண்ணெய் விலை குறையும் பட்சத்தில் அது, பல்வேறு விதங்களில் இந்தியப் பொருளாதாரத்திற்குச் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும். நம் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்குச் செலவிடப்படும் தொகை குறைவதால், அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும்; நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறையும். பணவீக்கம் கட்டுக்குள் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, பணவீக்கம் குறையு மேயானால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்.
இந்திய நிறுவனங்களில், குறிப்பாகக் கச்சா எண்ணெய் யிலிருந்து பிரித்தெடுத்துப் பயன்படுத்தும் பல்வேறு பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களின் செயல்பாடுகளில் சாதகமான மாற்றங்களைத் தோற்றுவிக்கும். ஏற்கெனவே, சீனாவில் மாசு கட்டுப்பாடுகள் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் நிறுவனங்கள் உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நன்றாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.
கச்சா எண்ணெய் சுத்திரிகரிப்பு நிறுவனங்களின் மூலப்பொருள் இறக்குமதி விலை குறைந்தும், அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விலை அதிகரித்தும் காணப்படுவது, நிறுவனங்களின் நிகர சுத்திகரிப்பு மார்ஜினை (G.M.R) அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை மட்டுமில்லாமல், சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் ரப்பர் விலை கணிசமாக மீண்டும் குறைந்து காணப்படுவது, டயர் நிறுவனங்கள் மற்றும் அத்தகைய நிறுவனங்களுக்கு சப்ளை செய்யக்கூடிய கெமிக்கல் நிறுவனங்கள் ஆகியவற்றிற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.
சரிவு நீடிக்குமா?
ஒபெக் எடுத்த உற்பத்திக் குறைப்பு நடவடிக்கைகள், வட கடல் எண்ணெய்க் குழாய்களில் ஏற்பட்ட உற்பத்தி இழப்புகள் போன்றவை கச்சா எண்ணெய் விலையை 65 டாலருக்கு எடுத்துச் சென்றன. இந்தக் காரணங்கள் அனைத்தும், நீண்ட காலத்துக்கு நீடித்து நிற்கக்கூடிய அளவிற்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் பொருளாதார நிலைமை இல்லை என்பதால், விலைச் சரிவு தவிர்க்கமுடியாத ஒன்றாக அமைந்துவிடுகிறது. மேலும், உலக அளவில் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுவது, எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்கும் என்ற செய்திகளையும் சந்தைக்கு உணர்த்துகிறது.
முதலீட்டிற்கான வாய்ப்புகள்
ஐ.எம்.எஃப்.-ன் சமீபத்திய கணிப்பின்படி, உலகப் பொருளாதாரம் நடப்பாண்டில் (2018) உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.9 சதவிகிதமாக இருக்கும் என்று அறிவித்திருப்பதும், கச்சா எண்ணெய் விலை இறக்கம் கண்டுவருவதும் நம் நாட்டைப் பொறுத்தவரை, நிறுவனங்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் இருக்கும். அதேசமயம், குறியீடுகள் உச்சத்தில் இருந்தாலும், முதலீட்டாளர்கள், எதிர்கால வளர்ச்சி இருக்கக்கூடிய துறைகளைக் கண்டறிந்து நீண்ட கால முதலீடுகளை மேற்கொண்டால், இந்த ஆண்டும் முதலீட்டிற்கான வாய்ப்புகளை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அம்பானியின் பணத்தை வைத்து அரசை நடத்த முடியுமா?
உலக அளவில் பெரும் பணக்காரர்கள் வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு எத்தனை நாள்களுக்கு அந்த நாட்டு அரசாங்கத்தை நடத்த முடியும் என்பதைச் சொல்லும் ஒரு இண்டெக்ஸை புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அமேசானின் ஜெப் பேஜாஸிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு அமெரிக்க அரசை ஐந்து நாட்களுக்கும், அலிபாபாவின் ஜாக் மா வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு சீன அரசின் நான்கு நாட்களுக்கும், முகேஷ் அம்பானி வைத்திருக்கும் 40.3 பில்லியன் டாலரை வைத்து இந்திய அரசின் 20 நாள் செலவையும் செய்யலாமாம்!

எண்ணெய் பங்குகள்... எவற்றைக் கவனிக்கலாம்?
கச்சா எண்ணெய் விலைச் சரிவு, எண்ணெய் விற்பனை செய்யும் பங்குகளான பி.பி.சி.எல், ஹெச்.பி.எல் ஆகிய நிறுவனப் பங்குகளுக்கும், எண்ணெய் சுத்திகரிப்பில் பங்களிக்கிற சென்னை பெட்ரோலியம், எம்.ஆர்.பி.எல் போன்ற நிறுவனங்களுக்கும், டயர் உற்பத்தியில் இருக்கிற சியட், எம்.ஆர்.எஃப் மற்றும் ரப்பர் கெமிக்கல் துறையில் இருக்கிற நாசில் (Nocil) போன்ற நிறுவனங் களுக்கும் சாதகமான செய்தியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக வலுப்பெற்றால் மேற்சொன்ன பங்குகளில், வரும் காலாண்டு களில் நிகர லாபம் அதிகரிக்கும். பங்கு களின் விலை யிலும் ஏற்றத்தைப் பிரதிபலிக்க வாய்ப்புண்டு.