மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா?

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா?

செல்லமுத்து குப்புசாமி

ங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு போடலாம், ஒரே நிறுவனத்தில் எவ்வளவு குவிந்திருக்கலாம், எவ்வளவு பிரித்துப் போடலாம் என்பது  குறித்து முந்தைய அத்தியாயங்களில் பேசினோம்.  

நமது முதலீட்டை இப்படி பரப்பி வைப்பதாலோ அல்லது வைக்காமல் போவதாலோ என்ன நடந்துவிடும்? உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு லட்சம் ரூபாயை ஷேரில் முதலீடு செய்கிறீர்கள். இந்தக் கோட்பாட்டின்படி ஒரே கம்பெனியில் பணம் போடக்கூடாது என்பதை வைத்து இருபது கம்பெனிகளில் பிரித்துப் போடுகிறீர்கள். சராசரியாக ஒரு கம்பெனிக்கு ரூ.5,000 முதலீடு செய்கிறோம்.

இது சரியா, தவறா என்கிற கேள்விக்குப் பதில் தெரிந்து கொள்வதற்கு இந்த ஒரு லட்சமும், ஒவ்வொரு நிறுவனத்திலும் நீங்கள் பகிர்ந்து முதலீடு செய்த ரூ.5,000-மும் உங்களைப் பொறுத்தவரை எவ்வளவு பெரிய (அல்லது சிறிய) தொகை என அறிந்துகொள்வது அவசியம். 

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா?

உங்கள் நிகர சொத்து மதிப்பு என்ன? ஐந்து லட்சம், பத்து லட்சம், ஐம்பது லட்சம்..? நிஜமாகவே இந்தக் கேள்விக்குப் பல பேரிடம் பதில் இருக்காது. நிதானமாக யோசித்து கணக்குப் போட்டுப் பாருங்கள்.

பணமாக நம் கையில் எவ்வளவு இருக்கிறது, நகையாக எவ்வளவு இருக்கிறது,இன்ஷூரன்ஸ் பாலிசியில் எவ்வளவு உள்ளது,ஷேர்களில் எவ்வளவு உள்ளது, பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யாமல் மியூச்சுவல் ஃபண்டுகளின் வாயிலாக செய்த முதலீடு எவ்வளவு, பேங்க் டெபாசிட்டாக எவ்வளவு உள்ளது, கார்/பைக் உள்ளிட்ட வாகனங்களாக நமது சொத்து எவ்வளவு, ரியல் எஸ்டேட் முதலீடு எவ்வளவு..? இப்படியெல்லாம் கணக்குப் போட்டுப் பாருங்கள்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா?


இப்படி கணக்குப் போட்டு பார்க்கும்போது, ஷேர்களில் உள்ள உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும். அது எத்தனை சதவிகிதம் என ஆராய்ந்துபாருங்கள். உதாரணமாக, மேலே சொன்னவாறு கணக்குப் போட்டுப் பார்க்கும்போது உங்கள் நிகர சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் வருகிறது என்றால், அதில் ஷேரில் செய்திருக்கும் முதலீடு வெறும் ஒரு லட்சம்தான் எனும்போது ஷேர்களில் நீங்கள் ஒதுக்கியிருக்கும் சொத்து வெறும் 2% மட்டுமே.

இந்த 2% தொகையை இருபது பங்குகளில் முதலீடு செய்து பரவலாக்கம் செய்வதால் அதாவது, ஒவ்வொரு கம்பெனியிலும் 0.1% நிகர சொத்து மதிப்பை மட்டும் வைப்பதால், என்ன மாதிரியான ரிஸ்க்கை நாம் தவிர்த்துவிட முடியுமென்று யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்த 0.1% முதலீட்டை ஆராய்ந்து, அந்த கம்பெனி பற்றிய செய்திகளை, அதன் பிசினஸை, அதன் துறையை, எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதற்காக நீங்கள் செலவழிக்கும் நேரத்தை நியாயப்படுத்த முடிகிறதா? இது நம்மை நாமே கேட்டு சுயபரிசோதனை செய்ய வேண்டிய முக்கியமான கேள்வி.

‘அஸெட் அலோகேஷன்’  என்கிற தலைப்பில் இதுகுறித்து  விரிவான விவாதங்கள் நடக்கின்றன. வேண்டுமானால் குடியிருக்கும் வீட்டை விட்டு விடுங்கள். மற்றபடி முதலீடு மற்றும் சேமிப்பு என எடுத்துக்கொண்டால், அதில் எவ்வளவு விழுக்காடு ஷேர்களில் இருக்கலாம் என்பதை யொட்டி விவாதங்கள் எப்போதும் நடந்த வண்ணமே உள்ளன. 

நகை, பணம், வங்கி வைப்பீடுகள் அல்லது பணமாக மாற்றக்கூடிய முதலீடுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எவ்வளவு விழுக்காடு ஷேர்களில் உள்ளது என யோசிக்கலாம். அதற்குமுன் உங்கள் நிகர சொத்து மதிப்பில் எவ்வளவு விழுக்காடு பணமாக மாற்றக் கூடிய வடிவத்தில் உள்ளது  என யோசித்துப் பாருங்கள். சில பேருக்கு எத்தனை லட்சம் வந்தாலும், கோடிகள் வந்தாலும் அதை அசையாத சொத்தாக (விற்க முடியாத, நினைத்த நேரத்தில் பணமாக மாற்ற முடியாத) மாற்றிவிடுவார்கள். அவர்களிடம் எளிதில் பணமாக மாற்றக்கூடிய சொத்துக்களே (Liquid Assets) இருக்காது. அதனால் எந்தவொரு பெரிய பிரயோஜனமும் இல்லை.  

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா?

சரி, எளிதில் பணமாக மாற்றக்கூடிய சொத்துகளில் எத்தனை சதவிகிதம் பங்குகளில் இருக்கலாம் என்பது அஸெட் அலோகேஷன் பாடத்தில் அடிக்கடி விவாதிக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கு எல்லோருக்கும் பொதுவான பதில் கிடையாது. ஒவ்வொரு நபரைப் பொறுத்து மாறுபடும். ஆனால், பொதுவாகப் பரிந்துரைக்கிற விதியின்படி, வயது குறைவாக இருக்கும்போது ஷேர்களில் நிறையவும், வயது அதிகமாகும்போது ஷேர்களில் உள்ளதைக் குறைத்துக்கொண்டு வங்கியிலோ, பணமாகவோ வைப்பது நல்லதென்கிறார்கள்.

எத்தனை சதவிகித முதலீடு பங்குகளில் வைத்திருக்கலாம் என்பதற்கு, 100 என்கிற எண்ணிலிருந்து உங்கள் வயதைக் கழித்தால் அந்த அளவுக்கு வைத்திருக்கலாம் என ஒரு பொதுவான சூத்திரத்தைச் சொல்கிறார்கள். உங்கள் வயது 25 என்றால், 100-25=75. ஆக 75% சொத்து ஷேர்களில் இருக்கலாம். வயது குறைவாக இருக்கிற காரணத்தால் மார்க்கெட் சரிந்தாலும்கூட அதிலிருந்து மீண்டுவர போதுமான அவகாசம் இருக்குமென்பதால்தான் அப்படிச் சொல்கிறார்கள். இதுவே 40 வயது நபர் (100 - 40) 60% ஷேர்களிலும், 55 வயது நபர் (100 - 55) 45% ஷேர்களிலும் அதிகபட்சமாக வைக்கலாம் என்பது பொதுவான பரிந்துரை.

இந்தப் பொதுவான ஃபார்முலாவை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் பொதுவான விதிகளைப் பின்பற்றிப் பெரும் லாபமும், செல்வமும் சேர்வதில்லை என்பதே வரலாறு. உதாரணத்துக்கு, ஷேர் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. எல்லாப் பங்குகளும் 30 - 40 விகிதம் என்ற அளவில் விற்பனையாகின்றன. எந்த அளவுகோலின்படியும் ஷேர்களில் முதலீடு செய்வது அறிவார்ந்த செயலாக உங்களுக்குத் தோன்றாமல் போகலாம். 30 வயதான நீங்கள் உங்களின் 70% சொத்தை ஷேர் மார்க்கெட்டில் போட்டாக வேண்டிய அவசியமில்லை. வேண்டுமால் ஒரு 30 - 40 சதவிகிதத்தை மட்டும் விட்டு வைத்தபிறகு மீதியைப் பணமாக வைத்திருக்கலாம். மார்க்கெட் சரியும்போது, ஷேரில் உள்ள அஸெட் அலோகேஷனை 70 சதவிகிதமாக உயர்த்தலாம்.

மார்க்கெட் வெகுவாகச் சரிந்திருக்கிறது. மீண்டும் மேலேறுவதற்கான சாத்தியங்கள் அதிகம். அப்படியிருக்கும்போது 70% என்ற அதிகபட்ச வரம்பினால் கட்டுண்டு போக வேண்டிய அவசியமுமில்லை. ஷேர்களில் 100% அஸெட் அலோகேஷன் செய்யலாம். சில நேரங்களில் இது 100 சதவிகிதத்தைவிட அதிகமாகவும் இருக்கலாம். எப்படி என்கிறீர்களா?

“எல்லோரும் விற்கும்போது வாங்க வேண்டும்; எல்லோரும் வாங்கும்போது விற்க வேண்டும்” என்பார்கள். ஆனால், மார்க்கெட்டில் பல ஆண்டுகள் புழங்கிய ஆட்களைக் கேட்டுப் பாருங்கள். எல்லோரும் விற்கும்போது நம்மால் வாங்க முடியாது. 99% பேரிடம் அப்போது கையில் பணமிருக்காது. “அப்ப மட்டும் எங்கிட்ட பணம் இருந்து ஒரு பத்து லட்சத்துக்கு வாங்கிப் போட்டிருந்தா ஒரே வருசத்துல 50 லட்சம் ஆகியிருக்கும்” என எல்லோரிடமும் நிறையவே கதைகள் இருக்கும்.

மார்க்கெட் மிக மிகக் கவர்ச்சிகரமாக இருக்கும்போது உங்களால் 8% வட்டிக்குக் கடன் வாங்கி 50% லாபம் பெற முடிந்தால்..? அது சாத்தியம் என்று தெரிந்தால் நம்மால் 8% வட்டிக்குப் பணம் புரட்ட முடியுமா? நம்மிடம் இருக்கும் மற்ற, எளிதில் பணமாகக்கூடிய சொத்துகளை விற்று, ஷேரில் போட முடியுமா? அசையா சொத்துகளை வைத்து ஓரிரு நாள்களில் பெரும் பணம் புரட்ட முடியுமா?

இந்தக் கேள்விகள்தான் நமது அஸெட் அலோகேஷன் நிலைப்பாட்டையும், நாம் என்ன மாதிரியான முதலீட்டாளர் என்பதையும் தீர்மானிக்கின்றன.

(லாபம் சம்பாதிப்போம்)

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா?

பிசினஸ் ஐடியா போட்டி... குவியும் விண்ணப்பங்கள்!

பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்  நடத்தும் பிசினஸ் ஐடியா போட்டிக்கு ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் உள்ள 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளம் தொழில்முனைவர்கள் தொழில் ஐடியாக்களை அனுப்பி வைக்கலாம். இதற்கான விண்ணப்பம் பெற 96770-40509 / 87544 - 66655 என்கிற தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கிண்டியில் உள்ள எம்.எஸ்.எம்.இ, டி.ஐ.சி, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள இ.டி.ஐ, லயோலா கல்லூரியில் உள்ள லிபா ஆகிய இடங்களில் உள்ள பெட்டிகளில் போடலாம்.  கடைசி நாள் பிப்ரவரி  24-ம் தேதி.