நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS

கவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS
பிரீமியம் ஸ்டோரி
News
கவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS

கவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS

ய்வுக் காலம் - இன்றைக்கு பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் வார்த்தை இது. குழந்தைகளின் படிப்புக்கும், திருமணத்துக்கும்,  வீட்டுக்கடனை அடைப்பதற்குமே நம் சம்பாத்தியம் அனைத்தும் சரியாகப் போய்விடும் நிலையில், ஓய்வுக்காலம் என்பது, ‘வந்தபிறகு பார்த்துக்கொள்வோம்’ என்கிற அளவுக்கே முக்கியத்துவம் பெறுகிறது. முன்புபோல இல்லாமல், இப்போது நம்மில் பலரின் வாழும் காலம் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்திருக்கிறது. ஆனால், முன்பைவிட பலவிதமான நோய்கள் ஓய்வுக்காலத்தில் நம்மைப் பாதிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதற்கான சிகிச்சைகளும், மருந்துகளுக்கான செலவுகளும் அதிகம். இந்தச் செலவுகளுக்கு ஓரளவுக்குத்தான் பிறரைச் சார்ந்திருக்க முடியும். இந்தச் செலவுகளுக்கு ஓய்வுக் காலத்தில், இல்லை என்றில்லாமல் செலவழிக்க வேண்டுமெனில், பென்ஷன் என்பது ஒவ்வொருவருக்கும் நிச்சயம் வேண்டும்.  

கவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS

2004-ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஊழியர் களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அரசும் நிறுவனங்களுமே செயல்படுத்தும் வகையில் இருந்தது. அதன்பிறகு, ஓய்வூதியம் தொடர்பான   சட்டம் மாற்றப்பட்டது. என்.பி.எஸ் என்று சொல்லப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் ஒருவர் சேர்ந்து, தனது ஓய்வுக்காலத்துக்கான தொகையைச் சேர்க்கலாம்.  

என்.பி.எஸ் திட்டத்தில் இதுவரை இரண்டு கோடிப் பேர் இணைந்திருக்கிறார்கள். மொத்தம் ரூ.2.25 லட்சம் கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடு, அடுத்த வருடத்தில் 40% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. என்.பி.எஸ் திட்டம் எதற்காக, யாருக்காக  என்பது பற்றி நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம்.

“ஓய்வுக்காலத்துக்கான முதலீடு ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமானது. ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பைச் செய்யாமல் நம்முடைய நிதி மேலாண்மை என்றும் முழுமை பெறாது. ஏனெனில் நம்முடைய சராசரி ஆயுள் அதிகரித்துவிட்டது.

கவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS

பணவீக்கம் உயர்வதால், எல்லாப் பொருள்களின் விலையும் உயர்ந்து வருகிறது. மருத்துவச் செலவுகள் உயர்ந்துவிட்டன. எனவே, ஓய்வுக்கால தேவைக்கான முதலீடு  மிகவும் அவசியம்.  

ஒருவர் எவ்வளவு சீக்கிரம் தன்னுடைய ஓய்வுக் கால முதலீட்டைத் தொடங்குகிறாரோ, அவ்வளவு நல்லது. ஏனெனில், முதலீட்டுக் காலத்துக்கேற்ப நம்முடைய வருமானமும் அதிகமாக இருக்கும். நம்முடைய ஓய்வுக் காலத்தின்போது அந்த முதிர்வுத் தொகையை வைத்து மாதாமாதம் ஓய்வூதியமாகக் கிடைக்கும் வகையில் ஆனுயுட்டி திட்டங்களைத் தொடர்ந்தால், இப்போது சம்பளம் வாங்கும்போது வாழுகிற மாதிரி அப்போதும் நம்மால் வாழ முடியும்.        

   யாரெல்லாம் என்.பி.எஸ் திட்டத்தில் சேரலாம்?

இந்தத் திட்டத்தில் இந்தியக் குடிமகனாக இருக்கும் ஒருவர், இந்தியாவில் வசிப்பவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் 18-65 வயதுக்குள் இருந்தால் என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதற்குத் தேவையான கே.ஒய்.சி விவரங்களையும் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங் களையும் சேர்த்துச் சமர்ப்பித்தால் என்.பி.எஸ் கணக்கைத் தொடங்கலாம். முகவரிச் சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் பிறந்த தேதி சான்றிதழ் போன்றவை தேவையான ஆவணங்களாகும். பான் எண், வங்கி கே.ஒய்.சி-யும் தேவை.

   எங்கே ஆரம்பிக்கலாம்?

தபால் அலுவலகங்கள், யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட், கேம்ஸ் (CAMS), முன்னணி தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளில் இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம். இதற்கென உள்ள விண்ணப்படிவம் ஒன்றை நிரப்பித் தரவேண்டும். 

கவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS

வருமானம் 14.2.18 நிலவரப்படி, சொத்துமதிப்பு 31.1.18 நிலவரப்படி  # சொத்துமதிப்பு 31.12.17 நிலவரப்படி
* என்.ஏ.வி 13.6.17 நிலவரப்படி

  ஆன்லைன் மூலமும் முதலீடு்

இப்போது ஆன்லைன் மூலமும் என்.பி.எஸ் முதலீட்டை எளிதாக ஆரம்பிக்க லாம். ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் என்.பி.எஸ் முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். (https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html) ஆன்லைனில் முதலீடு செய்ய செல் நம்பர், இ-மெயில் ஐ.டி, நெட் பேங்கிங் வசதியுடன் கூடிய வங்கிக் கணக்கு தேவைப்படும். உங்கள் புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கையெழுத்தை அப்லோடு செய்ய வேண்டும். ஆதார் அல்லது பான் எண் மூலம் உங்களைப் பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டு, உங்களுக்கு நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண் ஒதுக்கப்படும். இதனைப் பயன்படுத்தி நெட் பேங்கிங் மூலம் தொடர்ந்து முதலீட்டை மேற்கொண்டு வரலாம். ஆன்லைன் ஆரம்ப முதலீடு ரூ.500 ஆகும்.

   நிரந்தரக் கணக்கு எண்

என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய் பவர்களுக்கு 17 இலக்க நிரந்தர பி.ஆர்.ஏ.என் (Permanent Retirement Account Number) என்ற கணக்கு எண் தரப்படும். ஒருவருக்கு ஒரு எண் மட்டுமே தரப்படும். இந்த எண் மூலமாக இந்தியாவில் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்து, நம் கணக்கை நிர்வகிக்க முடியும். பதிவு செய்த சுமார் 20 நாள்களில் பி.ஆர்.ஏ.என் எண் மற்றும் அதற்கான கார்டு வந்துவிடும்.

   எப்படிச் செயல்படுகிறது?

என்.பி.எஸ் திட்டத்தில் டயர் 1, டயர் 2 என  இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. டயர் 1 கணக்குதான் முதன்மைக் கணக்காகும். என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்ய இந்தக் கணக்கைக் கட்டாயம் தொடங்க வேண்டும். இதில் செய்யப்படும் தொகைக்கு வரிச் சலுகை உண்டு. இதில் முதலீடு செய்யும் அதிகபட்ச பணத்துக்கு எந்த வரம்பும் இல்லை. ஆனால், முதலீட்டை வெளியே திரும்ப எடுக்க சில  நிபந்தனைகள் உள்ளன.

டயர் 2 கணக்கு என்பது டயர் 1 கணக்கின் இணைப்புக் கணக்குதான். இதிலும் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம். இதில் சேர்க்கும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப  எடுக்க முடியும். இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரிச் சலுகை கிடையாது. 

இந்தத் திட்டத்தில் பணமாகவோ, காசோலை அல்லது வரைவோலை அல்லது இ.சி.எஸ் மூலமாகவோ மற்றும் இ-என்.பி.எஸ் தளத்தின் வழியாக நெட் பேங்கிங், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு கொண்டோ பரிவர்த்தனை செய்து பணத்தைச் சேமிக்கலாம். 

கவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS

   எதில் எவ்வளவு முதலீடு்?

டயர் 1 கணக்கில் தொடங்கும்போது குறைந்தபட்சம் ரூ.500 செலுத்த வேண்டும்.  ஒரு வருடத்தில் குறைந்தது ரூ.1,000 (கட்டணங்கள்போக) முதலீடு செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஆனால், வருடத்துக்கு ஒருமுறை யாவது கணக்கில் பரிவர்த்தனை செய்ய  வேண்டும்.

அப்படி வருடத்துக்கு ரூ.1,000 சேமிக்கத் தவறினால், என்.பி.எஸ் கணக்கு முடக்கப்பட்டு, கணக்கின் அனைத்துச் சேவைகளும் நிறுத்தப்படும். மீண்டும் கணக்கைப் புதுப்பிக்க ரூ.500 செலுத்த வேண்டியிருக்கும்.

டயர் 2 கணக்கில் குறைந்தபட்சம் கணக்குத் தொடங்க ரூ.1,000 செலுத்த வேண்டும். அதன்பிறகு செலுத்தும் தொகையானது ரூ.250-க்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஆனால், ஒரு நிதியாண்டுக்கு குறைந்தது இவ்வளவு சேமிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.  அதேபோல், அதிகபட்ச சேமிப்புக்கும் தடையில்லை” என்றார்.

இந்த என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்வது குறித்தும், அதில் கிடைக்கும் வருமானம் குறித்தும் இன்டக்ரேட்டட் நிறுவனத்தின் உதவிப் பொதுமேலாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம்.     

“நம்முடைய ஓய்வுக்காலத்துக்காக நாம் செய்யும் முதலீடு முழுக்க முழுக்க அந்தத் தேவைக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த என்.பி.எஸ்  திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும்முன்பு நம்முடைய வயது, ரிஸ்க் எடுக்கும் திறன் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தில் நம் வயதின் அடிப்படையில் ஆக்டிவ் சாய்ஸ், ஆட்டோ சாய்ஸ் என இரண்டு வகையில் முதலீட்டைத் தேர்வு செய்ய முடியும்.    இளம் வயதினருக்கு அதிக ரிஸ்க் உடைய முதலீடும், வயது அதிகம் உள்ளவர்களுக்குக் குறைந்த ரிஸ்க் உள்ள முதலீடும் தேர்வு செய்யப்படும்.        

   ஆக்டிவ் சாய்ஸ்

  ஆக்டிவ் சாய்ஸில் நான்கு வகை அஸெட் கிளாஸ்கள் உள்ளன.

அஸெட் கிளாஸ் E - இது பங்குச் சந்தையைப் பிரதானமாகக் கொண்டதால், அதிக வருமானம், அதிக ரிஸ்க் கொண்டதாகும்.

அஸெட் கிளாஸ் C - இது நிறுவனப் பத்திரங்களில் முதலீடு செய்வது. இது  நடுத்தர வருமானம், நடுத்தரமான ரிஸ்க் கொண்டது.

அஸெட் கிளாஸ் G - நிலையான வருமானம் தரக்கூடிய முதலீடுகள். அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வது இது.

அஸெட் கிளாஸ் A - சி.எம்.பி.எஸ், எம்.பி.எஸ், ஆர்.இ.ஐ.டி.எஸ் மற்றும் ஏ.ஐ.எஃப் உள்ளிட்ட மாற்று முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யப்படுவது இது.

ஒரு முதலீட்டுத் திட்டத்திலிருந்து இன்னொரு முதலீட்டுத் திட்டத்துக்கு மாற முடியும். ஆனால், ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டும்தான் இப்படி மாற முடியும். இதற்குக் கட்டணம் உண்டு.    இவற்றில், ஒருவர் தனது பென்ஷன் முதலீடு முழுவதையுமே சி அல்லது ஜி அஸெட் கிளாஸ் களில் வைத்துக்கொள்ள அனுமதி உண்டு. ஈக்விட்டியில் அதிகபட்சம் 50% அஸெட் கிளாஸ் A-ல் 5% கொள்ளலாம்.

கவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS

   ஆட்டோ சாய்ஸ் முதலீடு:   

ஆக்டிவ் சாய்ஸ் முதலீட்டில் உள்ள அஸெட் கிளாஸ் எதிலும் முதலீடு செய்ய விரும்பாதவர்களுக்கு, அவர்களுடைய வயதுக்கேற்ப மாறும் போர்ட்ஃபோலியோவைக் கொண்டு முதலீடு செய்யப்படும். அதாவது, முதலீட்டாளர்களின் வயது உயர உயர அஸெட் கிளாஸ் E-ல் முதலீடு குறைக்கப்பட்டு, C மற்றும் G அஸெட் கிளாஸ்களில் முதலீடு அதிகரிக்கப்படும்.

இந்த ஆட்டோ சாய்ஸில் மூன்று வகைகள் உள்ளன.  1) LC 75 – இது அக்ரெஸிவ் முதலீடு ஆகும். இதில் பங்குச் சார்ந்த முதலீடு 35 வயது வரை 75 சதவிகிதமாக இருக்கும். பின்னர் வயதாக ஆக இந்த விகிதம் குறைக்கப்படும். 2) LC 50- மிதமான ரிஸ்க் கொண்ட முதலீடு. இதில் 35 வயது வரை பங்குச் சார்ந்த முதலீடு 50 சதவிகிதமாக இருக்கும். பின்னர் வயதாக ஆக இந்த விகிதம் குறைக்கப்படும்.     3) LC 25 - குறைவான ரிஸ்க் கொண்ட முதலீடு. இதில் 35 வயது வரை பங்குச் சார்ந்த முதலீடு 25 சதவிகிதமாக இருக்கும். பின்னர் வயதாக ஆக இந்த விகிதம் குறைக்கப்படும்.        

இந்த மூன்றில் ஒன்றைத் தேர்வு செய்யும்பட்சத்தில் இந்த ஆட்டோ மோட் வகை முதலீட்டில் LC 50 என்ற மிதமான ரிஸ்க் கொண்ட முதலீட்டு வகை செயல்படுத்தப்படும்.

   எப்படிக் கையாளப்படுகிறது?

என்.பி.எஸ் திட்டத்தில் செய்யப்படும் முதலீடானது, ஓய்வுக்கால நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பென்ஷன் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும். நிபுணத்துவம் பெற்ற ஃபண்ட் மேனேஜர்கள் மூலம், பங்குகள், அரசு பத்திரங்கள், நிறுவனக் கடன் பத்திரங்கள் என அனைத்தும் கலந்த டைவர்சிஃபைடு போர்ட் ஃபோலியோக்கள் உருவாக்கப்பட்டு, லாபமீட்டும் வகையில் முதலீடு செய்யப்படும். இந்த முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என்.பி.எஸ் கணக்குதாரர்களுக்கு வழங்கப்படும்.

ஃபண்ட்  நிறுவனங்களை நாமே தேர்ந்தெடுக்கும் அம்சமும் இதில் உள்ளது. மொத்தம் எட்டு பென்ஷன் ஃபண்ட்  நிறுவனங்கள் உள்ளன. மேலும், ஒரு வருடத்துக்கு ஒருமுறை ஃபண்ட் மேனேஜர்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.

கவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS

ஹெச்.டி.எஃப்.சி பென்ஷன் மேனேஜ்மென்ட் கம்பெனி, எல்.ஐ.சி பென்ஷன் ஃபண்ட்,  ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் பென்ஷன் ஃபண்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி, கோட்டக் மஹிந்திரா பென்ஷன் ஃபண்ட், ரிலையன்ஸ் கேப்பிட்டல் பென்ஷன் ஃபண்ட், எஸ்.பி.ஐ பென்ஷன் ஃபண்ட்ஸ் பிரைவேட், யூ.டி.ஐ ரிட்டயர்மென்ட் சொல்யூஷன்ஸ், பிர்லா சன் லைஃப் பென்ஷன் மேனேஜ்மென்ட் ஆகிய ஃபண்ட் நிறுவனங்கள்தான் அவை.

   பணத்தைத் திரும்ப எடுத்தல்

தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து 60 வயதானபிறகே பணத்தை எடுக்க முடியும். அதில் 60% முதிர்வுத் தொகையை மட்டுமே எடுக்க முடியும் அதற்கு வரிவிலக்கு உண்டு. மீதமுள்ள 40% ஏதேனும் ஓர் ஆயுள் காப்பீடு நிறுவனம் வழங்கும் ஆனுயூட்டி திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் கிடைக்கும்படி வகை செய்யப்படும். ஒருவேளை முதிர்வுத் தொகை ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் முழுத் தொகையையும் எடுத்துக்கொள்ள லாம். நாம் விரும்பினால், அந்தப் பணத்தை 70 வயது வரை எடுக்காமல் வைத்துக்கொள்ளலாம். அதுவரை அதில் நம்மிடம் இருக்கும் பணத்தைச் சேமிக்கவும் செய்யலாம்.        

60 வயதுக்கு முன்பே என்.பி.எஸ் முதலீட்டிலிருந்து வெளியேற வேண்டுமென்றாலும் அதற்கு அனுமதி உண்டு. ஆனால், குறைந்தபட்சம் 10 வருடம் என்.பி.எஸ் முதலீட்டில் இருக்க வேண்டும். வெளியேறும்போது வரும் தொகையில் 80% ஏதேனும்  ஓர் ஆயுள் காப்பீடு நிறுவனம் வழங்கும் ஆனுயுட்டி திட்டத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும். மீதமுள்ள 20% தொகையை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். ஒருவேளை முதிர்வுத் தொகை ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், முழுத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்.

பத்து வருடங்களுக்குப் பிறகு  பணம் எடுக்க விரும்பினால், திருமணம், குடும்ப உறுப்பினர்களுக்குத் தீவிர நோய் பாதிப்பு, உயர்கல்வி, திருமணம், முதல்முறையாக வீடு வாங்குவது போன்ற காரணங்களுக்காக இந்தத் திட்டத்திலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். என்.பி.எஸ் கணக்கிலிருந்து மொத்தமாக மூன்று முறைதான் இடையில் பணம் எடுக்க முடியும். குறைந்தபட்சம் ஐந்து வருட இடைவெளியில்தான் பணத்தை எடுக்க முடியும்.    என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்தவர் இறந்தால், அவருடைய நாமினி முழு தொகையையும் பெற்றுக்கொள்ளலாம். நாமினி விரும்பினால், என்.பி.எஸ் முதலீட்டை அவருடைய பெயரில் தேவையான கேஒய்சி விவரங்களையும் ஆவணங்களையும் கொடுத்துத் தொடரலாம்.    

முதலீட்டுத் தொகையை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். மொத்தமாகவும் சேமிக்கலாம். உதாரணமாக, ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் பிற முதலீட்டில் கிடைக்கும் முதிர்வு தொகை போன்றவற்றை அப்படியே என்.பி.எஸ் திட்டத்தில் சேமிக்கலாம்.    

   வரிச் சலுகை என்ன?

80சி பிரிவின்கீழ் நம்முடைய வருமானத்தில் ரூ.1.5 லட்சத்துக்கு வரிச் சலுகை உள்ளது. டயர் 1 கணக்கில் செய்யப்பட்ட முதலீட்டில், 80 சிசிடி1 (பி) பிரிவின்கீழ் ரூ.50 ஆயிரத்துக்குக் கூடுதல் வரிச் சலுகை வாய்ப்புக் கிடைக்கிறது. இதன் மூலம், ஒருவர் மொத்தமாக ரூ.2 லட்சத்துக்கு வருமான வரிச் சலுகைப் பெறலாம்” என்றார்.

நமது ஓய்வுக்காலத்தைச் சமாளிக்க இப்போதுள்ள நிலையில், என்.பி.எஸ் சிறப்பான திட்டமாக உள்ளது.  இப்போது தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் இளைஞர்கள், வேலைக்குச் சேர்ந்தவுடனே என்.பி.எஸ் கணக்கினைத் தொடங்குவது அவசியம். 25 முதல் 45 வயதினர் இந்தக் கணக்கைத் தொடங்காமல் இருந்தால், உடனடியாகத் தொடங்குவதன் மூலம் ஓய்வுக்காலத்தைக்  கவலையில்லாமல் கடக்கலாம்.

- ஜெ.சரவணன், தெ.சு.கவுதமன்

கவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS

‘‘இது ஒரு பாதுகாப்பான முதலீடு!’’

“எனக்குத் தற்போது 60 வயது ஆகிறது. நான் டி.ஜி.பி அலுவலகத்தில் அட் மினிஸ்ட் ரேசன் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் ஆலோசகராகப் பணியாற்றுகிறேன். எனக்கு  பென்ஷன்போக கூடுதலாக வருமானம் வருவதால், வரிப் பிடித்தத்தில் கழிவு பெறவும், ஓய்வூதியமாகவும் பயனளிக்கும் விதமாக என்.பி.எஸ்  திட்டம் இருந்ததால், எனது 58-வது வயதில் அதில் சேர்ந்தேன். ஆண்டுக்கு ரூ.50,000 என்ற அளவில் மூன்று ஆண்டுகளாகக் கட்டியிருக்கிறேன். இது ஒரு பாதுகாப்பான முதலீடாக எனக்குப்படுகிறது.”

கவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS

‘‘நம்பிக்கை வந்துள்ளது!’’

‘‘என் வயது 45. பி.பி.எஃப் திட்டத்துக்கு மாற்றான சிறந்த திட்டமாக என்.பி.எஸ் திட்டத்தைக் கருதுகிறேன். இதில் குறைந்தபட்ச உத்தரவாதம், மற்றும் வரிச் சலுகை போன்றவை இருப்பதால், நல்ல முதலீடாக இருக்கிறது. எனவே, தற்போது ஆண்டுக்கு ரூ.50,000 என்ற அளவில் இதில் முதலீடு செய்து வருகிறேன். இந்தத் திட்டத்தில் சேர்ந்திருப்பதால், எனது ஓய்வுக்காலம் பாதுகாப்பானதாக இருக்குமென்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.’’

கவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS

‘‘நல்ல வருமானம் கிடைக்கும்!’’

‘‘என் வயது 26. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். 2013-லிருந்து என்.பி.எஸ் திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்துவருகிறேன். எனது அம்மா ஏற்கெனவே 15 ஆண்டுகளாக, மாதம் 1,000 ரூபாயை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்துவருகிறார்.  இதில் நல்ல வருமானம் கிடைக்கும் என்று நம்புகிறோம். எங்களுக்குத் தெரிந்த ஒருவர், பணி ஓய்வு பெற்றபோது அவருக்கு நல்ல வருமானம் கிடைத்தது. இது ஓய்வுக் காலத்துக்கேற்ற நல்ல திட்டம். பி.எஃப் வசதி இல்லாத பணியாளர்கள், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வுக் காலத்தை நிம்மதியாக எதிர்கொள்ளலாம்.’’

கவலையில்லாத ஓய்வுக்காலம்... இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS

‘‘எனக்குக் கவலையில்லை!’’

‘‘என் வயது 28. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கேற்ற ஓய்வூதியத் திட்டம் குறித்துத் தேடியபோது என்.பி.எஸ் குறித்துத் தெரிந்துகொண்டேன். நீண்ட கால முதலீட்டுக்கு இந்த என்.பி.எஸ் திட்டம் பயனுள்ளதாக இருக்குமென்று கருதினோம். தற்போது இந்தத் திட்டத்தில் டயர்1 பிரிவில், மாதம் 6,000 ரூபாய் முதலீடு செய்து வருகிறேன்.  இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின் என் ஓய்வுக்காலம் குறித்துக் கவலையில்லாமல் இருக்கிறேன்.’’