மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

செல்லமுத்து குப்புசாமி

சினிமா உலகில் ஒரு புது மாதிரியான படம் வந்து வெற்றி பெற்றதும், அதே மாதிரியான படங்கள் அடுத்தடுத்து வந்து குவியும். ஒரு நடிகர், குறிப்பிட்ட பாத்திரத்தில் நடித்து அது வரவேற்பைப் பெற்றால், அதே மாதிரியான வேடங்கள் மட்டுமே அவருக்குத் திரும்பத் திரும்பக் கிடைக்கும்.

சினிமாவைப் போன்றுதான் விளையாட்டும். ஷேவாக் அடித்து ஆடக் கூடியவர். திராவிட் நிதானமாக ஆடக் கூடியவர். கங்குலி ஆஃப் சைடில் சிறப்பாக விளையாடுவார். இந்தியாவில் டெஸ்ட் மேட்ச் நடந்தால் வேகப்பந்து எடுபடாது.

இப்படி நம்மீது பிறரும் பிறர்மீது நாமும் குத்தும் முத்திரைகள் சுவாரஸ்யமானவை. இந்தப் பிம்பங்கள் அறிந்தோ, அறியாமலோ நமது ஆளுமையைத் தீர்மானிக்கின்றன.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். சில பேருக்கு அதுவாகவே அமைந்துவிடும். சிலர் விரும்பி அமைத்துக்கொள்வார்கள். பலருக்கு, தான் அ(எ)ப்படியான ஒரு நபர் என்பதே தெரியாமல் வாழ்ந்து மடிந்துவிடுவார்கள்.

வாழ்வின் மற்ற அம்சங்களைப் போலவே, நம் முதலீட்டு அணுகுமுறையும் பலதரப்பட்டதாக அமைவதுண்டு. ‘நானெல்லாம் நீண்ட கால முதலீட்டாளர் தெரியுமா?’, ‘என் ஃபிரண்ட் வேல்யூ இன்வெஸ்ட்டிங் மட்டும்தான் செய்வார்’, ‘பொசிஷனை எடுத்து அது ஏறுமா, இறங்குமான்னு பார்த்துக்கிட்டேயெல்லாம் இருக்க முடியாது. அன்னைக்கே வாங்கினோமா வித்தோமான்னு இருக்கணும்...’, ‘மார்க்கெட் சேர்ந்தாப்ல நாலு நாள் லீவ் விட்டா நமக்கு கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடும்’, ‘டிவிடெண்ட் ஸ்டாக் மட்டும் வாங்கி வெச்சு அமைதியாகக் காத்திருக்கலாம்.’
இதில், ஏதாவது ஒன்றாக நமது முதலீட்டு ஆளுமை (Investment Profile) அமைவது வாடிக்கை. நீங்கள் என்ன மாதிரியான முதலீட்டாளர் என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கூற நிறைய விஷயங்கள் உள்ளன. அவை நமது பலம், பலவீனம் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லிவிடும்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!


எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், ஒரு குறிப்பிட்ட நாடாளுமன்றத் தேர்தலில், குறிப்பிட்ட முடிவை எதிர்பார்த்து நிறைய ஷார்ட் டேர்ம் ஃப்யூச்சர்கள் (F&O-வில் ஒரு வகை) வாங்கி வைத்திருந்தார். அவர் நினைத்த மாதிரியே முடிவுகள் வெளியானது. கொள்ளை லாபம். கொள்ளை லாபம் என்றால், அந்த லாபத்தை வைத்து சென்னையில் ஒரு அடுக்குமாடிக் கட்டடம் வாங்குகிற அளவுக்கு லாபம். 

ஆனால், மனிதர் அதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். அதேமாதிரி தினமும் வாங்கி விற்றுக்கொண்டிருந்தார். ஒரே வாரத்தில், அவர் பார்த்த லாபம் எல்லாவற்றையும் இழந்தார். அதோடு அடுத்துவந்த வாரங்களில் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து, நிறைய நண்பர்களிடம் கடன் வாங்கி, அதையும் மார்க்கெட்டில் போட்டு, வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தலைமறைவானார்.

இன்னொரு பக்கம், மார்க்கெட் படுபாதாளத்துக்கு இறங்கிய சமயங்களில்தான் நீண்ட கால முதலீட்டாளர், வேல்யூ இன்வெஸ்டர் என்று சொல்லிக் கொள்வோர் பலரும், தங்களிடம் கூடுதலாகப் பணம் இருந்தும் அதனை மார்க்கெட்டில் போடாமல் இருந்ததால், பெரும் லாபம் சந்திக்கும் வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள், நல்ல வாய்ப்பு என்று தெரிந்தும்! நல்ல வாய்ப்பு களைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதால் உருவான விளைவுகள் இவை.

ஒரு நல்ல முதலீட்டாளர் என்பவர் சூதாடியாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், சூதாட்டம் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. கிரிக்கெட் விளையாட்டில் நீங்கள் கவனித்திருக்கலாம். ஒரு நல்ல பேட்ஸ்மேன் ஆஃப் சைடில் அடிப்பது, மடக்கி அடிப்பது, சுழற்பந்துக்கு இறங்கிச் சென்று தூக்கி அடிப்பது, தேர்ட் மேனுக்கு தட்டிவிடுவது, ஹெலிகாப்டர் ஷாட், ஸ்வீர், ரிவர்ஸ் ஸ்வீப் எனப் பலவகையான ஷாட்களையும் அடிக்கத் தெரிந்தவராக இருப்பார்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

ஒரு பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து ஆறு ரன் கிடைத்து விட்டால், எல்லா பந்துக்கும் அதையே முயற்சி செய்ய  வேண்டியதில்லை. அதே மாதிரி மோசமான யார்க்கர் பந்தைத் தடுத்து விளையாடி விக்கெட்டை காப்பாற்றியதால், ஃபுல்டாஸ் பந்திற்கும் அப்படியே செய்ய வேண்டியதில்லை.

ஆக, ஒவ்வொரு பந்துக்கும் ஒவ்வொரு மாதிரியான ஷாட் பொருத்தமாக இருக்கும். அதனால் எல்லா மாதிரியான ஷாட்களையும் அடிக்கத் தெரிந்த ஒரு மட்டை யாளருக்கு ஆட்டம் சுலபம். ஒரு குறிப்பிட்ட ஸ்டைல் அல்லது ஆட்டம் மட்டுமே வரும் என்கிற பேட்ஸ்மேன் திணறுவார். இந்திய ஆடுகளத்தில் ஜொலிக்கிற ஒருவர், ஆஸ்திரேலிய வேகப்பந்து பிட்சில் தடுமாறுவார். ஆஸ்திரேலியா பிட்சில் வேகப்பந்தைச் சமாளிக்க, இந்தியாவில் சுழற்பந்தைக் கையாளும் அதே உத்தியுடன் செயல்பட முடியாது.

தற்போது நிறைய 20 - 20 ஆட்டங்கள் வந்துவிட்டன. அதனால், 50 ஓவர்கள் ஆடக்கூடிய ஒருநாள் போட்டிகளே  நீண்ட நேரம் நடப்பது போல நமக்குத் தோன்றும். ஐந்து நாள்கள் விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவற்றைப் பார்ப்பதற்கு ஆட்களுமில்லை. ஆட்டங்களும் அவ்வளவாக இல்லை. ஆனால், ஷேர் மார்க்கெட் முதலீடு டெஸ்ட் கிரிக்கெட் மாதிரி.

டெஸ்ட் போட்டியில் நாள் முழுவதும் விளையாடி விக்கெட்டை இழக்காமல், 270 பந்துகளில் 100 ரன் அடிக்கிற ஒரு பேட்ஸ்மேன், தனது அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றுகிறார் என்று ஒரு உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நூறு ரன்களை 12 பவுண்டரி, 2 சிக்ஸர், மூன்று முறை 3 ரன், 12 முறை 2 ரன், 15 சிங்கிள் என்று சேர்த்திருக்கிறார்.

270 பந்துகளை அவர் சந்தித்திருந்தாலும் அவரது 100 ரன்களை வெறும் 30 பந்துகளில் அடித்திருக்கிறார். (மற்ற பந்துகளில் ரன் சேர்க்கவில்லை) அவர் சந்தித்த பந்துகளில் வெறும் 11.11 சதவிகித பந்துகள் மட்டுமே அவருக்கு ரன்களைத் தந்துள்ளன. இன்னும் ஆழமாக ஆராய்ந்தால், வெறும் 5.19% பந்துகளில் அவரது 60% ரன்கள் வந்திருக்கின்றன. அதாவது, 14 பந்துகளில் 60 ரன்கள். ஆனால், இது எந்த வகையில் சாத்தியமானது என்றால், அவர் 270 பந்துகளை எதிர்கொண்டு, நிதானம் தவறாமல் காத்திருந்து, சரியான பந்து கிடைத்தபோது அதில் ரன் அடித்ததால் மட்டுமே. நான் டெஸ்ட் மேட்ச் ஆட்டக்காரர். அதனால் பொறுமையாகத்தான் இருப்பேன் என்று நல்ல பந்து வரும்போது அடிக்காமல் விட்டால், ஒரு ரன்னும் தேறியிருக்காது.

ஷேர் மார்க்கெட்டில் நாம் என்னதான் நீண்டகால முதலீட்டாளராக இருந்தாலும், நல்ல பங்குகளாக வாங்கி நீண்ட நாள் வைத்திருந்தாலும்  நன்றாக ஆராய்ந்து பார்த்தால் நமது பெரும்பாலான லாபம் குறிப்பிட்ட ஒரு சில நாள்களில் அல்லது வருடங்களில் மட்டுமே வந்திருக்கும். அந்த குறிப்பிட்ட காலகட்டத்தைத் தவிர்த்துப் பார்த்தால், நீண்டகால முதலீட்டினால் எவ்விதப் பயனும் இருப்பதாகத் தோன்றாது.

அதனால், நீண்ட கால முதலீட்டாளராக நம்மைத் தயார்படுத்திக் கொள்வது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை முழுமையாகப் பயன்படுத்தக் கற்பதும். அதைச் செயல்படுத்துவதால் மட்டுமே நீண்ட கால முதலீட்டில் நன்மைகள் உண்டாகும். நல்ல முதலீட்டாளர், ராகுல் திராவிட் மாதிரி பவுலர்களைக் களைப்படையச் செய்து பொறுமையாகக் காத்திருந்து, நல்ல பந்து கிடைத்தால் பவுண்டரி அடிக்கும் கலையைக் கற்க வேண்டும்.

(லாபம் சம்பாதிப்போம்)

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

1 லட்சம் கோடி டாலர்... மும்பையின் புதிய இலக்கு!

வருகிற 2025-ம் ஆண்டில் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலரை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறார் அந்த மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பத்னாவீஸ். தற்போதைய நிலையில், மகாராஷ்ட்ரா வின் பொருளாதார வளர்ச்சி 9.4 சதவிகிதமாக இருக்கிறது. இதே வேகத்தில் வரும் ஆண்டு களிலும் பொருளாதார வளர்ச்சி இருக்குமெனில், 2029-ம் ஆண்டில்தான் மகாராஷ்ட்ரா இந்த இலக்கை எட்ட முடியும். ஆனால், 2025-ல் இதே இலக்கை எட்ட வேண்டு மெனில் ஆண்டுதோறும் 15.4% வளர்ச்சி காண வேண்டும். இந்த அளவுக்கு வேகமான வளர்ச்சிக்கு என்னதான் வழி..?