
சா.ராஜசேகரன், Wisdomwealthplanners.com, நிதி ஆலோசகர்,
நுகர்வோர் கடன் வழங்கும் பிரபல நிறுவனத்திடமிருந்து ‘கடன் வேண்டுமா’ என்று எனக்கு போன் வந்தது. ‘‘பர்சனல் லோன் வெறும் 15.66% வட்டிதான்’’ என்றார் போனில் பேசியவர். ‘‘எனக்குக் குறுகிய காலக் கடனாக ரூ.3.70 லட்சம் தேவை. இதற்கு மாதமொன்றுக்கு நான் எவ்வளவு திரும்பக் கட்ட வேண்டும்?’’ என்று கேட்டேன். ‘‘ஐந்து நிமிஷம் கழித்து சொல்றேன் சார்’’ என்று போனை வைத்த வர், மீண்டும் கூப்பிட்டார்.
‘‘நீங்கள் ரூ.3,85,000 கடன் வாங்க வேண்டும். (இன்ஷூரன்ஸ் ரூ.15,000 சேர்த்து). நீங்கள் வாங்கும் கடனை மூன்று வருடங்களில் அடைத்தால், மாதம் ரூ.21,350 இ.எம்.ஐ-ஆகக் கட்டவேண்டும்” என்றார்.

சரி என்று சொல்லிவிட்டு, ஒரு ஃபைனான்ஷியல் கால்குலேட்டரை எடுத்துக் கணக்கு போட்டேன். எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. காரணம், இ.எம்.ஐ-ஆக சொன்ன தொகைக்கும், நான் போட்ட கணக்குக்கும் ரூ.7,879 வித்தியாசம். கடன் தருவதாகச் சொன்னவரை போனில் கூப்பிட்டு, கணக்கு உதைக்கிறதே என்றேன். ‘‘எப்படி?’’ என்று கேட்டார்.
‘‘நீங்கள் எனக்குத் தரும் கடன் ரூ.3,85,000. வட்டி 15.66%. மூன்று வருடங்களில் கடனைத் திரும்பக் கட்டினால் மாத இ.எம்.ஐ-ஆக ரூ.13,471-தான் செலுத்தவேண்டும். நீங்கள் சொல்கிறமாதிரி நான் மாதமொன்றுக்கு ரூ.21,350 செலுத்தினால், அதற்கான வட்டி 15.66% அல்ல, 52%. இது தனியார் வங்கிகள் விதிக்கும் வட்டியைவிட மூன்று மடங்கு அதிகம்’’ என்றேன். ‘‘அப்படியா சார், நான் விசாரித்துவிட்டு வருகிறேன்’’ என்றவர் இன்று வரை எனக்கு போன் செய்யவில்லை.
தனிநபர் கடனைத் தனியார் வங்கி/நிறுவனங் களில் வாங்கும்போது கடன் வாங்குபவர்தான் விழிப்புடன் இருக்கவேண்டும். வட்டி எவ்வளவு, எவ்வளவு காலத்தில் கடனைத் திரும்பக் கட்டப் போகிறோம், வட்டியாக மட்டும் எவ்வளவு தொகை என்பதையெல்லாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளாமல் கடன் வாங்க ஒப்புக் கொள்ளாதீர்கள். இந்தக் கணக்கையெல்லாம் போட்டுப் பார்க்க உங்களுக்குத் தெரியவில்லையா? ஒரு நல்ல நிதி ஆலோசகரின் உதவியை நாடுங்கள்.