
சி.சரவணன்
நிதிச் சேவைத் துறையில் கால் நூற்றாண்டுக்கு மேல் அனுபவமும், ஃபிக்ஸட் இன்கம் மியூச்சுவல் ஃபண்டுகளை நிர்வகிப்பதில் ஒரு டஜன் ஆண்டுகளுக்கு மேல் அனுபவமும் கொண்டவர் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஃபிக்ஸட் இன்கம் பிரிவின் தலைவர் மஹேந்திர குமார் ஜஜு. அண்மையில் சென்னை வந்திருந்த அவர், நாணயம் விகடன் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டின் ஓராண்டுக்கான வட்டி சுமார் 6.5% அளவுக்குக் குறைந்திருக்கிறது. இப்போது பிராவிடென்ட் ஃபண்ட் வட்டியும் 8.55 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இந்த நிலையில், முதலீட்டில் ரிஸ்க்கை விரும்பாத முதலீட்டாளர்கள் ஓரளவு நியாயமான லாபம் பார்க்க என்னதான் வழி?
“எஃப்.டி, தபால் அலுவலகச் சேமிப்பு உள்ளிட்ட முதலீடுகளின் வட்டி வருமானம் குறைந்திருக்கிறது. மேலும், ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவை, சமீபத்திய ஆண்டுகளில் நல்ல வருமானத்தைத் தரவில்லை. இந்த நிலையில், இந்த வகை முதலீட்டாளர்கள் சார்ட் டேர்ம் டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்த ஃபண்டுகளில் மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட நிலையில், இவற்றிலிருந்து கிடைக்கும் லாபத்துக்கு, பணவீக்க சரிகட்டலுக்குப் பிறகு 20% வரி கட்டினால்போதும். அந்த வகையில், வரிக்குப் பிந்தைய நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட இந்த ஃபண்டுகள் அதிக லாபத்தைத் தருவதாக இருக்கும். (பார்க்க அருகிலிருக்கும் அட்டவணை).”
இந்தியாவில் டைவர்சிஃபைடு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஆனால், டைவர்சிஃபைடு டெப்ட் ஃபண்ட் அதிகமாகப் பிரபலமாகவில்லையே, ஏன்?
“பங்குச் சார்ந்த ஃபண்டுகளைப் புரிந்துகொண்ட அளவுக்கு நம்மவர்கள், இன்னும் கடன் சார்ந்த ஃபண்டுகளை நன்றாகப் புரிந்துகொள்ளவில்லை. டைவர்சிஃபைடு ஃபண்டுகளில், பல்வேறு துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதுபோல், அனைத்து டெப்ட் ஃபண்டுகளிலும் முதலீடு பிரித்து மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக, என்.சி.டி, பாண்டுகள், அரசுக் கடன் பத்திரங்கள், கமர்ஷியல் பேப்பர், சர்டிஃபிகேட் ஆஃப் டெபாசிட் போன்ற முதலீட்டு ஆவணங்களில் பிரித்து முதலீடு செய்யப்படுகின்றன. கடன் சார்ந்த ஃபண்டுகளை நிலையான வருமானம் பெற விரும்புகிறவர்கள், ரிஸ்க் இல்லா நீண்ட கால முதலீட்டை விரும்புகிற வர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.”

ஒருவரின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் ஃபிக்ஸட் இன்கம் ஃபண்டுகள் எத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும்?
“ஒரு முதலீட்டாளர் 40 வயதுக்கு உட்பட்ட இளம்வயதினர் என்றால், மொத்த முதலீட்டில் பங்குச் சார்ந்த ஃபண்டுகளில் 70%, ஃபிக்ஸட் இன்கம் ஃபண்டுகள் (கடன் ஃபண்டுகள்) 30 சதவிகிதமாக இருக்கலாம். முதலீட்டாளர் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்றால் மொத்த முதலீட்டில் பங்குச் சார்ந்த ஃபண்டுகளில் 30%, ஃபிக்ஸட் இன்கம் ஃபண்டுகள் (கடன் ஃபண்டுகள்) 70 சதவிகிதமாக இருக்கவேண்டும். இது பொதுவான ஃபார்முலா. ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன், தேவைக்கேற்ப பங்கு மற்றும் கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீட்டை அமைத்துக் கொள்ள வேண்டும். போர்ட்ஃபோலியோ அதிக வருமானம் தரவேண்டும் என்றால், முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசிப்பது அவசியம். ஒவ்வொருவருக்கும் மருத்துவர் வேறு வேறு மருந்தைப் பரிந்துரை செய்வதுபோல், நிதி ஆலோசகரும் ஒவ்வொருவருக்கும் தனித் திட்டங்களைப் பரிந்துரை செய்வார்.”
தற்போதைய நிலையில் ஃபிக்ஸட் இன்கம் ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்பவர்கள் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?
“இப்போதைய சூழ்நிலையில் சார்ட் டேர்ம் டெப்ட் ஃபண்டுகள் சிறந்தவையாக இருக்கும். அவற்றை போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. எந்தவிதமான முதலீடாக இருந்தாலும் அதில் ஓர் ஒழுங்கை எப்போதும் பின்பற்ற வேண்டும். மேலும், சரியான முதலீட்டு போர்ட்ஃபோலியோவை அமைத்துக் கொண்டால், அதிக லாபம் கிடைக்கும். இதற்கு நிதி ஆலோசகர்களின் ஆலோசனை நிச்சயம் தேவைப்படும்.”
படம்: பா.காளிமுத்து