நடப்பு
அறிவிப்பு
Published:Updated:

பங்குச் சந்தை முதலீடே பெஸ்ட்! - வாரன் பஃபெட் அசத்தல் அட்வைஸ்

பங்குச் சந்தை முதலீடே பெஸ்ட்! - வாரன் பஃபெட் அசத்தல் அட்வைஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை முதலீடே பெஸ்ட்! - வாரன் பஃபெட் அசத்தல் அட்வைஸ்

வி.கோபாலகிருஷ்ணன், Askgopal.com

லகத்தின் தலைசிறந்த முதலீட்டாளர்களில் முதன்மையானவரான வாரன் பஃபெட், ஒவ்வோர் ஆண்டும் முதலீட்டாளர்களுக்கு எழுதும் கடிதம் எல்லோராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் விஷயம். உலகெங்கிலும் பங்குச் சந்தையில் ஈடுபட்டிருக்கும் முதலீட்டாளர்களுக்கு அதிலும் குறிப்பாக, மதிப்பு முதலீட்டாளர்களுக்கு (Value Investors) அவரது ஆண்டுக் கடிதங்கள்தான், அந்த ஆண்டுக்கான முதலீட்டு வழிகாட்டி எனலாம். இந்தத் துறையில் பல முதலீட்டு ஜாம்பவான்கள் இருக்க, அவரின் கடிதத்திற்கு மட்டும் ஏன் இப்படி ஓர் எதிர்பார்ப்பு என்பதுதான் பலரின் கேள்வி. அந்த எதிர்பார்ப்புக்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாரன் பஃபெட், பங்குச் சந்தை முதலீட்டில் வெற்றிகரமாக முதலீடு செய்துவருகிறார் என்பது ஒரு காரணம் என்றாலும், பங்குச் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பல்வேறு ஏற்ற இறக்கங்களையும் சர்வசாதாரணமாகக் கடந்து, ஒரு வெற்றிகரமான முதலீட்டாளராக வலம் வருகிறார் என்பதுதான் அவரிடம் உள்ள  தனிச் சிறப்பு. அவரின் அந்த விலை மதிப்பில்லாத முதலீட்டு அனுபவத்தின் வாயிலாகத்தான், தன் கடிதத்தின் மூலம் தனது முதலீடுகள் மற்றும் பொதுவான முதலீட்டுக் கருத்தாக்கங்களையும், பொருளாதாரம் சார்ந்த கருத்துகளையும் ஒவ்வோர் ஆண்டும் பகிர்ந்து வருகிறார். என் அனுபவத்தில்,  அவரின் அனுபவ வார்த்தைகளைக் கேட்டுப் பிரமித்துப் போயிருக்கிறேன்.

பங்குச் சந்தை முதலீடே பெஸ்ட்! - வாரன் பஃபெட் அசத்தல் அட்வைஸ்

சமீபத்தில், இந்த ஆண்டுக்கான கடிதத்தை வெளியிட்டார் பஃபெட். அந்தக் கடிதத்தில் வாரன் பஃபெட் பல விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசியிருந்தாலும், பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்குச் சில முக்கிய அறிவுரைகளைக் கொடுத்திருக்கிறார். அந்த அறிவுரைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலாவதாக, பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கும்போது, அவற்றை வியாபார முதலீடுகளாகப் பார்க்கவேண்டுமே தவிர, வெறும் டிக்கர் குறியீடாக அதாவது, ஒரு வர்த்தகமாகும் பொருளைப்போல பார்க்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறார். அதாவது, முதலீட்டாளர்கள் பங்குகளை நீண்ட கால அடிப்படையில், நிறுவனங்களின் சாதக, பாதகங்களைக் கொண்டு வாங்குவதுதான் சிறப்பு என்றும், தங்கள் நிறுவனம் அதுபோன்ற முதலீட்டு அடிப்படையில்தான் பங்குகளை வாங்கி வருகிறது என்றும் சொல்லியிருக்கிறார். பங்கு வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள்தான் பங்குகளை ஒரு டிக்கர் குறியீடு போன்று வர்த்தகக் கோணத்தில் பார்ப்பார்கள். ஆனால், நீண்ட கால முதலீட்டாளர்கள். அவற்றை வியாபார முதலீடுகளாகப் பார்ப்பார்கள் என அவர் சொல்லியிருப்பது நமக்கு மிக முக்கியமான பாடம். 

இரண்டாவதாக, பங்குச் சந்தையில் ஈடுபடுவோர் கடன் வாங்கிப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது உகந்ததல்ல என்று அறிவுறுத்துகிறார். கடன் வாங்கி,  நீண்ட கால அடிப்படையில் பங்குகளில் ஈடுபட்டாலும், குறுகிய காலத்தில் பங்குகளின் விலையில் ஏற்படும் அதிகப்படியான ஏற்ற இறக்கங்களால் முதலீட்டாளர்களுக்கு அதீத பயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தால், கடன் வாங்கிப் பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவேண்டும் என்ற ஓர் உன்னதனமான அறிவுரையை யும் தந்திருக்கிறார். பங்குச் சந்தை முதலீடுகள் என்பது பணம் சம்பந்தப் பட்ட விஷயமாக இருந்தாலும், அதன் வெற்றி, தோல்வி என்பது மனம் சம்பந்தப் பட்ட விஷயம் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

பங்குச் சந்தை முதலீடே பெஸ்ட்! - வாரன் பஃபெட் அசத்தல் அட்வைஸ்


மூன்றாவதாக, அதிகக் கட்டணமுள்ள முதலீடுகளைத் தவிர்த்துவிட்டு, குறைந்த கட்டணங்கள் உள்ள முதலீடுகளில் கவனம் செலுத்தினால், முதலீட்டாளர் களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்.அவர் அப்படி கூறுவது மட்டுமல்லாது, பத்தாண்டு களுக்குமுன்பு, ஒரு முதலீட்டு ஆலோசனை வழங்கும் நிறுவனத்திடம் ஒரு பந்தயம் செய்தார். அதாவது, தான் ஒரு இண்டெக்ஸ் ஃபண்டிலும், அந்த முதலீட்டு ஆலோசனை நிறுவனம் ஐந்து ஹெட்ஜ் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து, பத்தாண்டுகளுக்குப் பிறகு யாருடைய முதலீடு அதிக லாபம் கொடுத்திருக்கிறது என்று பார்ப்போம் என்பதே பந்தயம். அந்தப் பந்தயத்தில் வெற்றியும் பெற்றிருக்கிறார் வாரன் பஃபெட். அந்தப் பந்தயத்தின் மூலமாக அவர் சொல்லவந்த செய்தி என்னவென்றால், நல்ல நிறுவனப் பங்குகளில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தாலோ அல்லது இண்டெக்ஸ் ஃபண்டுகள் போன்ற வற்றில் முதலீடுகளைச் செய்தாலோ முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும் என்று நிரூபித்திருக்கிறார். முதலீட்டு உத்தியை அடிக்கடி மாற்றி வர்த்தகத்தில் ஈடுபட்டால், ஃபண்ட் கட்டணமும் அதிகமாகி, அதன் தாக்கம் முதலீட்டு லாபத்தை பாதிக்கும் என்பது அவரின் கருத்து. அதை நிரூபித்தும் காட்டியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

அவர் மேலும் கூறுகையில், நீண்ட கால அடிப்படையில் பங்குச் சந்தை முதலீடுகள், கடன் பத்திரம் சார்ந்த முதலீடு களைக் காட்டிலும் சிறந்தது என்கிறார். குறுகிய காலத்தில் பங்குச் சந்தை முதலீடுகள், கடன் பத்திரம் சார்ந்த முதலீடுகளைக் காட்டிலும் அதிக ரிஸ்க் கொண்டதாக இருப்பினும், முதலீட்டுக் காலம் வளர வளர அந்த ரிஸ்க் என்பது வெகுவாகக் குறைந்து, பங்கு முதலீடு கள் அதிக லாபம் ஈட்ட வாய்ப்பிருக்கிறது என்றும் அறிவுறுத்துகிறார்.

மேலும், அவர் கூறும் அடிப்படை முதலீட்டு ஆலோசனைகளை முதலீட்டாளர்கள் கவனத்துடன் பின்பற்றினாலே பங்கு முதலீட்டில் வெற்றி பெற்று விடலாம் என்பதில் சந்தேகமில்லை!

மனம் சார்ந்த ஒரு விஷயம்!

தன் கடிதத்தில், தங்களது நிறுவனம் எடுக்கப்போகும் முக்கிய முதலீட்டு உத்திகளைப் பற்றியும், பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைகள் பற்றியும், தன் கருத்துகளைக் கூறும் வாரன் பஃபெட், முதலீட்டாளர்களுக்கு அதிமுக்கிய அறிவுரை ஒன்றையும் வழங்குகிறார். நிலையற்ற மனம் நல்ல முடிவுகளை எடுக்கப் பயன்படாது என்ற வார்த்தைகளின் வாயிலாக, பங்கு முதலீடு என்பது பணத்தையும் தாண்டி மனம் சார்ந்த ஒரு விஷயம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைப்பது முதலீட்டாளர்களுக்கு ஒரு மிகப் பெரிய அறிவுரையாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.