நடப்பு
அறிவிப்பு
Published:Updated:

பி.பி.எஃப் முதலீட்டில் மாற்றங்கள்... முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?

பி.பி.எஃப்  முதலீட்டில் மாற்றங்கள்... முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?
பிரீமியம் ஸ்டோரி
News
பி.பி.எஃப் முதலீட்டில் மாற்றங்கள்... முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?

பி.பி.எஃப் முதலீட்டில் மாற்றங்கள்... முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?

பி.பி.எஃப் முதலீடு என்பது அதிக ரிஸ்க் இல்லாமல் ஓரளவு நல்ல வருமானம் தரும் முதலீடாக இருப்பதால், பலரும் இதில் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றனர். மேலும், மியூச்சுவல் ஃபண்டைப் போலவே, பி.பி.எஃப்-லும் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். பி.பி.எஃப் முதலீட்டில் செய்யப்படும் முதலீட்டுக் கும், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்துக்கும் வரிச் சலுகையும் தரப்படுகிறது. இந்த முதலீட்டுக்கு 7.6% வட்டி வருமானம் கிடைக்கிறது.

இதுபோன்ற பல சிறப்பம்சங்கள் பி.பி.எஃப்-ல் இருந்தாலும், மக்களின் கவனத்தை இது பெரிய அளவில்  பெறவில்லை.காரணம், இதிலிருக்கும் பலவிதக் கட்டுப்பாடுகள். மத்திய அரசானது பி.பி.எஃப் முதலீட்டில் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. இந்த மாற்றங்களால் பி.பி.எஃப் முதலீட்டின் மூலம் என்னென்ன லாபம் கிடைக்கும் என்பதை நிதி ஆலோசகர் ரமேஷ் பட் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘பி.பிஎஃப் முதலீட்டில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை முதலீட்டை எடுக்க முடியாத நிலை இருந்துவந்தது. அந்தக் கட்டுப்பாட்டைத் தற்போது மத்திய அரசாங்கம்  தளர்த்தியுள்ளது.

இந்தப் பரபரப்பான வாழ்க்கையில், நீண்ட காலத்துக்குப் பணத்தைச் சேர்த்து வைத்திருப்பது பலருக்கும் சாத்தியப்படுவதில்லை. இந்த நிலையில், பி.பி.எஃப் முதலீட்டில் ஐந்து வருடங்கள் வரைக்கும் பணத்தைத் திரும்ப எடுக்காமல் இருக்க வேண்டுமா என்கிற கேள்வி, பலரையும் அதில் முதலீடு செய்யத் தடையாக இருந்தது.

பி.பி.எஃப்  முதலீட்டில் மாற்றங்கள்... முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?

இந்த நிலையில், மத்திய அரசு தற்போது பி.பி.எஃப் முதலீட்டில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, பி.பி.எஃப் கணக்கிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. அரசு சேமிப்புச் சான்றிதழ்கள் சட்டம் 1959 மற்றும் பொது வருங்கால வைப்பு நிதிச் சட்டம் 1968 ஆகிய இரண்டும், அரசு சேமிப்புகள், வங்கிகள் சட்டம் 1873 உடன் தற்போது இணைக்கப் பட்டிருப்பதால், பி.பி.எஃப் கணக்கு நடைமுறைகள் மேலும் எளிதாகியுள்ளன.

இந்தப் புதிய மாற்றங்களில், ஏற்கெனவே இந்த முதலீட்டில் இருக்கும் அனைத்துப் பலன்களும், சலுகைகளும் அப்படியேதான் இருக்கின்றன. அதாவது, 80-சியின் கீழ் பி.பி.எஃப் முதலீட்டில் ரூ.1.5 லட்சம் வரை நிதியாண்டுக்கு வரிச் சலுகையும், பி.பி.எஃப் முதலீட்டின்மீது கடன் பெறுவதும் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும். பி.பி.எஃப் கணக்கில் செய்யப்படும் முதலீட்டை எந்தக் காரணத்துக்காகவும், எந்தக் கடனுக்காகவும் ஈடாக நீதிமன்றத்தினால் கேட்க முடியாது.

இந்த அம்சங்களுக்குக் கூடுதலாக, பணத்தை எடுப்பதில் இருந்த கட்டுப்பாடுகளும் தற்போது  நீக்கப்பட்டுள்ளன. மருத்துவம் போன்ற அவசரத் தேவைகள் மற்றும் திருமணம், உயர்கல்வி போன்ற காரணங்களுக்காக எப்போது வேண்டுமானாலும் பி.பி.எஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

பி.பி.எஃப்  முதலீட்டில் மாற்றங்கள்... முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?மேலும், மைனர்களான குழந்தைகள் பெயரில் தொடங்கப்படும் கணக்குகளுக்குப் பொறுப்பு வகிக்கும் காப்பாளர்களுக்கு அந்தக் கணக்கின் மீதான அனைத்து உரிமைகளும் வழங்கப் பட்டுள்ளன. கணக்குதாரர் இறக்கும்பட்சத்தில் அவரின் நாமினி உடனடியாகப் பணத்தைப் பெறும்வகையில் சட்ட நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. மேலும் பி.பி.எஃப் கணக்குதாரர் என்.ஆர்.ஐ-ஆக மாறும்போது கணக்கை முடித்து, பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளும் வசதியும் கொடுப்பட்டிருக்கிறது.

இது மிகவும் வரவேற்கதக்கது. இதனால், பி.பி.எஃப்-ல் முதலீடு செய்பவர்களின்  எண்ணிக்கை அதிகரிக்கும். முன்கூட்டியே பணத்தை எடுப்பதில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால், இடையில் பணம் எடுக்கும்போது முதலீட்டாளர்கள் தங்கள் இலக்கை அடைய முடியாத நிலை ஏற்படலாம். ஆனால், அவசரத் தேவைக்கு இது நிச்சயம் கைகொடுக்கும். மேலும், முன்கூட்டியே பணத்தை எடுப்பதனாலும் வட்டி வருமானத்துக்கு வரியுமில்லை. அபராதக் கட்டணமும் இல்லை.

எனவே, அதிக ரிஸ்க் இல்லாத, கூட்டுவட்டி அடிப்படையில் நல்ல வருமானம் தரும் இந்த வரிச் சேமிப்பு முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து பயனடையலாம்” என்றவர், “முடிந்தவரை முன்கூட்டியே பணத்தைத் திரும்ப எடுக்காமல் இருப்பது நல்லது” என்றார்.

-ஜெ.சரவணன்