நடப்பு
அறிவிப்பு
Published:Updated:

ஆன்லைனில் நிறுவனப் பதிவு... - இனி ஈஸியா தொழில் தொடங்கலாம்!

ஆன்லைனில்  நிறுவனப் பதிவு... - இனி ஈஸியா தொழில் தொடங்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைனில் நிறுவனப் பதிவு... - இனி ஈஸியா தொழில் தொடங்கலாம்!

ஆன்லைனில் நிறுவனப் பதிவு... - இனி ஈஸியா தொழில் தொடங்கலாம்!

மிழகத்தில் எளிதில் தொழில் தொடங்கவும், ஏற்கெனவே தொழில் தொடங்கியவர்கள் விரிவாக்கம் செய்யவும் பல்வேறு அனுமதிகளுக்காக இனி அரசு அலுவலகங்களுக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. அனைத்துத் துறைகளின் அனுமதியும் ஆன்லைன் வழியே உடனுக்குடன் கிடைக்கும் வகையில், ஒற்றைச் சாளர முறையை (Single Window Online Portal https://easybusiness.tn.gov.in/) அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. மேலும், தொழில் நிறுவனங்கள் எளிதில் அனுமதி பெறும்வகையில், `தொழில்முறை எளிமையாக்கல் சட்ட வரைவை’யும் சட்டமாக மாற்றியுள்ளது. இதனால், இனி  தமிழகத்தில் தொழில் வளர்ச்சி வேகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தொழில் தொடங்கத் தேவையான அனைத்து அனுமதிகளையும் ஒரே வழியில் பெறுவதையே `ஒற்றைச் சாளர முறை’ என்கிறோம். கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 2-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றைச் சாளர முறையைப் பயன்படுத்தி, இணையதளத்தின் வழியே விண்ணப்பித்து, நிறுவனத்தின் விரிவாக்கத்துக் கான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருக்கிறது கிருஷ்ணகிரியில் உள்ள பி.எஃப்.டபிள்யூ (BFW) நிறுவனம். மேலும், பதினைந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கத் தயாராகிவருகிறது தமிழ்நாடு தொழில் துறை வழிகாட்டுதல் ஆணையம் (Tamil Nadu Industrial Guidance Bureau).

ஒற்றைச் சாளர முறையின் செயல்பாடு குறித்து இந்தத் திட்டத்துக்கு ஆலோசனை வழங்கிவரும் ஆர்.கார்த்திக் அப்பாதுரையிடம் பேசினோம்.

ஆன்லைனில்  நிறுவனப் பதிவு... - இனி ஈஸியா தொழில் தொடங்கலாம்!

``தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிமையாக்கும் வகையிலும், வெளிப்படையான அனுமதியைப் பெறவும், தொழில் எளிதாக்கலுக்கான வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் `Business Facilitation Act’ என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது தமிழக அரசு. இந்தச் சட்டத்தின்மூலம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அனுமதி கேட்டு, இனி அரசு அலுவலகங்களில் சென்று காத்திருக்கவேண்டிய அவசியம் இருக்காது. தொழில் நிறுவனம் ஆரம்பிக்கவும் விரிவாக்கம் செய்யவும், தொழிலாளர் துறை, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, தொழில் பாதுகாப்புத் துறை எனப் பத்துக்கும் மேற்பட்ட துறைகளின் அனுமதியை ஆன்லைன் வழியே பெற்றுவிடலாம்.

தொழிற்சாலைக்குக் கட்டடம் கட்ட, நகரத் திட்டமிடல் துறையில் அல்லது சென்னை பெருநகர ஆணையத்தில் அனுமதி பெற வேண்டும். இவை தவிர, தீயணைப்புத் துறையிலும் முன்அனுமதி பெறவேண்டியது அவசியம். ஏற்கெனவே தொழிற்சாலை நடத்திவருபவர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் தீயணைப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறைகளின் அனுமதியைத் தொடர்ந்து புதுப்பித்து வரவேண்டும். இவற்றையெல்லாம் இனி ஒற்றைச் சாளர முறையில் ஆன்லைன் வழியே விண்ணப்பித்து அனுமதி பெற்றுவிடலாம்” என்று சொன்ன கார்த்திக் அப்பாதுரை, இந்த அனுமதிகளைப் பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும் விளக்கினார்.

``தொழில் தொடங்க, https://easybusiness.tn.gov.in/ என்ற இணைய தளத்தின் வழியே விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில், தொழில் நிறுவனம் குறித்த அடிப்படைத் தகவல்களை வழங்க வேண்டும். பல துறைகளையும் உள்ளடக்கிய வகையில் ஒருங்கிணைந்த விண்ணப்பமாக இது இருப்பதால், முதல்முறை விண்ணப்பிக்கும்போது அதிக அளவில் தகவல் வழங்கவேண்டியிருக்கும். அடுத்தடுத்த அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது குறைந்த நேரத்திலேயே விண்ணப்பித்துவிட முடியும்.

ஆன்லைனில்  நிறுவனப் பதிவு... - இனி ஈஸியா தொழில் தொடங்கலாம்!


தொழிற்சாலைக்குத் தேவையான மின்சார வசதி வேண்டியோ, குடிநீர் வசதி வேண்டியோ, எதற்கும் எந்த அரசு அலுவலகத்துக்கும் நேரில் செல்லவேண்டிய அவசியமில்லை. தொழிற்சாலைக்கு எவ்வளவு தண்ணீர் தேவை, மின்சாரம் தேவை என்பதை ஆன்லைனிலேயே குறிப்பிட்டால் போதும். சம்பந்தப்பட்ட துறைக்கான கட்டணத்தையும் ஆன்லைன் வழியே செலுத்திட முடியும். தொழிற்சாலை அமையவுள்ள  அல்லது அமைந்துள்ள இடத்துக்குச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் தகவலையும் முன்கூட்டியே ஆன்லைன் வழியே தெரிவிக்க வேண்டும்.

அனுமதிவேண்டி ஆன்லைன் வழியாகவே கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைக்கான வரைபடங்களைப் பதிவேற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கட்டட வரைபடங்கள் அதிக பக்கங்கள் கொண்டதாக இருந்தால், ஆன்லைனில் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து, அதனுடன் வரைபடங்களையும் இணைத்து விரைவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். இதை யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற தகவல் இணையத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கும். தபாலை அனுப்பியபிறகு, தபால் அனுப்பிய விவரங்களை இணையத்தில் பதிவு செய்திட வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தபால் கிடைத்த விவரத்தையும் ஆன்லைனில் பதிந்திட வேண்டும்.

தேவையான விவரங்கள் அனைத்தும் அனுப்பிய 10 நாள்களில் அனுமதிக் கடிதம் வழங்கவேண்டிய துறை, ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவையென்றால் விண்ணப்பித்த மூன்று வேலை நாள்களுக்குள்ளும், 15 நாள்களில் அனுமதி வழங்கவேண்டிய துறை ஏழு வேலை நாள்களுக்குள்ளும் ஆன்லைன் வழியாக விளக்கம் கேட்க வேண்டும். கூடுதல் விவரங்களைக் குறிப்பிட்ட நாள்களில் கேட்காவிட்டால், அதன்பிறகு கேட்டுப் பெற முடியாது. விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டதையும், நிராகரிக்கப்பட்ட விவரத்தையும் ஆன்லைன் வழியே தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து விவரங்கள் விண்ணப்பத்தாரருக்கு உடனுக்குடன் மொபைலில் குறுச்செய்தியாகச் சென்றுவிடும்.

தொழில் துறையினருக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் அனுமதி வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, மூன்று உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள், ஒவ்வொரு துறையும் சரியான முறையில் அனுமதி வழங்குகிறதா என்பதை, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுசெய்யும்.

ஆன்லைனில்  நிறுவனப் பதிவு... - இனி ஈஸியா தொழில் தொடங்கலாம்!

முதல் குழு, தொழில் வழிகாட்டுதல் ஆணையத்தின் துணைத் தலைவர் தலைமையில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும், இரண்டாவது குழு, தலைமைச் செயலாளரின் தலைமையில் மாதம் ஒருமுறையும் கூடி விவாதிக்கும். மூன்றாவது குழு, தமிழக முதலமைச்சரின் தலைமையில் துறை அமைச்சர்களும், துறைச் செயலாளர்களும் ஆண்டுக்கு இரண்டு முறையாவது கூடி ஆய்வு செய்திட வேண்டும்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குச் சரியான வகையில் அனுமதி வழங்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யும். இரண்டாவது குழு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் துறை கமிஷனரின் தலைமையில், மாதம் ஒருமுறையும், மூன்றாவது குழு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் ஆய்வு நடத்திட வேண்டும்.

உயர்நிலை குழுக்கள் கூடி விவாதிக்கும்போது, அதிகாரிகள் நீண்ட காலமாக அனுமதி கொடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தால், அதற்குரிய விளக்கத்தை வழங்க வேண்டும். தொழில் துறையினர், குறிப்பிட்ட காலத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்ற விவரத்தை வழங்கினால், குறிப்பிட்ட காலத்துக்குள் அனுமதி வழங்காத அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் தவறான தகவல் வழங்கினால், அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தற்போது, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வசதிகள் வழங்க பணிகள் நடந்து வருகின்றன” என்றார் கார்த்திக் அப்பாதுரை.

இந்த ஒற்றைச் சாளர முறையைக் கொண்டுவந்ததில் முக்கிய பங்கற்றிய சி.ஐ.ஐ அமைப்பின் துணைத் தலைவர் எம்.பொன்னுசாமியிடம் பேசினோம். ``தொழில் துறையின் வளர்ச்சியில் நீண்ட நாள்களாக தமிழ்நாடு முதல் மூன்று இடங்களைத் தொடர்ந்து தக்கவைத்திருந்தது. தற்போது 18-வது இடத்துக்குச் சென்றுவிட்டது. மேலும், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகியவை தொழில் துறையினரைப் போட்டிபோட்டு கவர்ந்திழுத்து வருகின்றன.

இதையெல்லாம் கவனித்த தமிழக அரசு, கடந்த ஆறு மாதங்களாகத் தொழில் துறையின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தலைமைச் செயலாளரின் தலைமையில், தொழில் துறைச் செயலாளர், தொழில் நிறுவனங்களின் வழிகாட்டுதல் ஆணையத்தின் துணைத் தலைவர் எனப் பெரிய குழுவே செயல்பட்டுவருகிறது.

சி.ஐ.ஐ சார்பிலும் தமிழ்நாடு முழுவதும் தொழில் துறையின் கருத்துகள் கேட்கப்பட்டு, அதை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறோம். இதுகுறித்து, தொழில் துறையினர் முதலமைச்சரைச் சந்தித்தபோது, தொழில் துறையின் வளர்ச்சிக்குப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், தொழில் துறையினர் தங்களின் கருத்துகளை உடனுக்குடன் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட தமிழக முதலமைச்சர், விரைவில் தொழில் துறையின் ஒவ்வொரு செக்டாரையும் தனித்தனியே சந்தித்துக் கருத்துக் கேட்பதாகச் சொல்லியிருக்கிறார். தொழில் துறையினர் முதலமைச்சரைச் சந்தித்தபோது, ‘தமிழகத்தில் விரைவில் தொழில் தொடங்க, இந்தியா முழுவதும் தொழில் துறையினரிடையே விழிப்புஉணர்வுக் கூட்டங்கள் நடத்தவும், சென்னையிலும் டெல்லியிலும் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் அதிகாரிகளைச் சந்திக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. சென்னையில் புறவழிச்சாலைகளில் உள்ள தாம்பரம் - செங்கல்பட்டு, மதுரவாயல் - பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடிகளைக் குறைக்க, மத்திய அரசுடன் இணைந்து இந்தச் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாகத் தரம் உயர்த்தப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள ஐந்து விமான நிலையங்களையும் மேம்படுத்த பணிகள் நடந்துவருகின்றன. சென்னை மற்றும் கோவை விமானநிலையங்களின் விரிவாக்கத்துக்குப் பாதுகாப்புத் துறையிடம் உள்ள இடங்களைக் கேட்டுப்பெறவும், இதர விமானநிலையங்களுக்கு மாநில அரசு நிலங்கள் ஒதுக்கீடு செய்வதற்குமான பணிகள் ஆரம்பித்துவிட்டன. சென்னையில் `கிரீன் ஃபீல்ட் விமானநிலையம்’ ஏற்படுத்தவும் ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. திடக்கழிவு களைக் கொண்டு மின் உற்பத்தி செய்வது குறித்து ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் திடக்கழிவு மேலாண்மைக் காக இரண்டு பெரிய திட்டங்கள் வரவுள்ளன. கழிவுநீரைச் சுத்திகரித்து, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டமும் அரசிடம் இருக்கிறது. இந்தத் திட்டத்தை, சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் பயன்படுத்தவும் தமிழக அரசு முடிவுசெய்துள்ளது’ என முதலமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தொழில் எளிதாக்கலுக்கான சட்டத்தின் மூலம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலிருந்து பெரிய நிறுவனங்கள் வரை தொழில் நிறுவனத்தைத் தொடங்க அனுமதி பெறுவது எளிதாகியுள்ளது. இதைத் தொழில் துறையினர் முழுமையாகப் பயன்படுத்தும்போது, தமிழகம் தொழில் துறையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்” என்கிறார் பொன்னுசாமி.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது வெளிப்படை. அரசு செய்துவரும் வசதிகளைப் பயன்படுத்தி, தமிழகத்தில் தொழில் வளர்ச்சியைக் கொண்டுவருவது தொழில் துறையினரின் கையில்தான் உள்ளது.

- ஞா.சக்திவேல் முருகன்

படங்கள்: ப.சரவணகுமார், ப.பிரியங்கா

ஆன்லைனில்  நிறுவனப் பதிவு... - இனி ஈஸியா தொழில் தொடங்கலாம்!

டாலர்களைக் கொட்டும் வெளிநாட்டுப் பயணிகள்!

வெளிநாட்டுப் பயணி கள் மூலம் நமக்குக் கிடைக் கும் டாலர் வருமானம், கடந்த ஜனவரியில் கணிச மான அளவில் உயர்ந்திருக் கிறது. கடந்த ஜனவரியில், வெளிநாட்டுப் பயணிகள் மூலம் நமக்குக் கிடைத்த வருமானம் ரூ.17,725 கோடி ஆகும். இது கடந்த ஆண்டு ஜனவரியில் கிடைத்த வருமானத்தை விட 9.9% அதிகம். அதாவது, கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.16,135 கோடி வருமானம் கிடைத் தது.

கடந்த 2016-ல் ரூ.13,671  கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது. வெளிநாட்டுப் பயணிகள் அதிக அளவில் நம் நாட் டுக்கு வரும் காரணத்தால் தான், அவர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரித்து வருகிறது.

ஆன்லைனில்  நிறுவனப் பதிவு... - இனி ஈஸியா தொழில் தொடங்கலாம்!

பில்லியனர்கள் பட்டியல்... அமெரிக்காவை முந்திய சீனா!

உலக அளவில் பில்லியனர்கள் அதிகம் இருப்பது எந்த நாட்டில் தெரியுமா..? கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்துவரும் சீனாவில்தான் என்பது ஆச்சர்யமான விஷயம். சீனாவில் மொத்தம் 819 பில்லியனர்கள் இருக்கிறார் கள்.

கடந்த ஓராண்டில் மட்டுமே சீனாவில் 210 பில்லியனர்கள் புதிதாக உருவாகியிருக்கிறார்கள். அமெரிக்காவில் மொத்தம் 571 பில்லியனர்கள்தான் உள்ளனர். கடந்த ஆண்டை விட வெறும் 19 பேர் மட்டுமே அமெரிக்காவில் புதிய பில்லியனர்கள் உருவாகியிருக்கின்றனர். நம் இந்தியாவில் 31 புதிய பில்லியனர்கள்  உருவாகி, தற்போது மொத்தம் 131 பேர் மட்டுமே பில்லியனர் களாக இருக்கின்றனர்.