
செல்லமுத்து குப்புசாமி
வாழ்க்கையில் ஒப்பீடுகள் இல்லாமல் ஏதுமில்லை. மற்றவர்களோடு ஒப்பிடக் கூடாது என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், பொதுவான அளவுகோல் என்ற ஒன்றினை நாம் நாடத்தான் செய்கிறோம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண் வாங்கினால், அபாரமான மார்க் எனக் கருதிய காலம் ஒன்றிருந்தது. இப்போதெல்லாம் அநேகப் பள்ளிகளில் முதல் மதிப்பெண் 480 - 490 என்கிறார்கள். தற்போது சராசரி மதிப்பெண்ணே 400-க்கு மேல் என்கிறபோது, ஒரு மாணவன் 400 மதிப்பெண் என்றால் ‘அட, அவ்வளவுதானா?’ என்றுதானே யோசிப்போம்.
நாம் படிக்கிற படிப்பு, வசிக்கிற வீடு, வாங்குகிற சம்பளம், சேமிக்கிற பணம் எனச் சகல விஷயங் களிலும் இந்த அளவுகோல் (நாம் விரும்பியோ, விரும்பாமலோ) வியாபித்திருக்க, ஷேர் மார்க்கெட் முதலீட்டில் மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன?
ஒருவர் பங்குச் சந்தையில் இந்த வருடம், தான் 30% லாபம் ஈட்டியதாக நம்மிடம் சொன்னால் என்ன நினைப்போம்? வங்கியில் போட்டிருந்தால் அதிகபட்சம் 7% வட்டி கிடைத்திருக்கும் என்பதால், 30% லாபம் என்பது நிச்சயம் நல்ல லாபம் என்றுதானே!

ஆனால், அந்த வருடம் ஷேர் மார்க்கெட் ஒட்டுமொத்தமாக 80% லாபம் தந்தது என்றால்..? அதாவது, சென்செக்ஸ் குறியீடு 80% வளர்ந்து, ஒரு தனிநபராக இவர் செய்த முதலீடு வெறும் 30% மட்டுமே வளர்ந்திருக்கிறது என்றால், மார்க்கெட்டைவிட 50% குறைவான வளர்ச்சியே கிடைத்திருக்கிறது என்னும்போது அது வெற்றிகரமான முதலீடு என்போமா?
இன்னொரு வருடம், அதே நபரின் போர்ட் ஃபோலியோ 10% நஷ்டம் அடைகிறது. வருடத்தின் துவக்கத்தில் ரூ.10 லட்சமாக இருந்த அவரின் முதலீடு, ஆண்டு முடிவில் ரூ.9 லட்சமாகத் தேய்கிறது. அந்தப் பணத்தைப் பத்திரமாகப் பெட்டியில் பூட்டி வைத்திருந்தால்கூட ரூ.1 லட்சம் மிச்சமாகியிருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியாது.
ஆனால், அதே வருடம், சென்செக்ஸ் 30% சரிந்திருக்கிறது என வைத்துக்கொண்டால்? மார்க்கெட்டைவிட அவர் 20% அதிக லாபம் (அல்லது குறைவான நஷ்டம்) அடைந்திருக்கிறார் என்றுதானே அர்த்தம்?
1979-ம் வருடம் 100 புள்ளியில் தொடங்கிய சென்செக்ஸ், தற்போது சுமார் 34,000 புள்ளியில் உள்ளது. 39 ஆண்டுகளில் மார்க்கெட் 340 மடங்கு பெருகியிருக்கிறது. சராசரியாக ஆண்டுக்கு 16.12% என்ற அளவில் பெருகியிருக்கிறது. ஒரு சில ஆண்டுகளில் மார்க்கெட் இரட்டிப்பாகியிருக்கிறது. ஒரு சில ஆண்டுகளில் பாதியாகச் சரிந்தி ருக்கிறது. ஒரு சில ஆண்டுகளில் ஏறவும் செய்யாமல், இறங்கவும் செய்யாமல் மந்தமாக நிலவி யிருக்கிறது. ஆனால், நீண்ட கால அடிப்படையில் மற்ற முதலீடு களைவிட ஷேர் மார்க்கெட் கூடுத லான லாபம் ஈட்டித் தந்திருக்கிறது.
சந்தை, சென்செக்ஸ், குறியீடு தரும் சராசரி லாபத்தைக் காட்டிலும் கூடுதலான லாபம் ஈட்டுகிறவர்களை, அந்த லாபத்தை எல்லா வருடமும் ஈட்டுகிறவர்களை வெற்றிகரமான முதலீட்டாளர்கள் என்கிறோம். நாம் அப்படிப்பட்ட ஒரு வெற்றிகரமான முதலீட்டாள ராகத் திகழவேண்டிய அவசிய மில்லை. கட்டுப்பாடும், பொறுப்பு உணர்வும், நிதானமும் ஒன்றுகூடி மார்க்கெட் ஈட்டுகிற அதேயளவு வெற்றியை எய்த முடியுமானால் கூட, நாட்டில் உள்ள முக்கால்வாசி ஜனத் தொகையைக் காட்டிலும் லாபகரமான நபராக இருப்போம்.

அதேசமயம், நமக்குச் சந்தையை முந்துவது சாத்தியமா என்று சுய பரிசோதனை செய்வது நலம். வேண்டுமானால் நீங்கள் தனியாக ஆராய்ந்துபாருங்கள். மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாகிகளே தொடர்ந்து மார்க்கெட்டை முந்த குட்டிக் கரணம் அடிக்கிறார்கள். ஒருசில வருடங்களில், ஒருசில ஃபண்டுகள் மார்க்கெட்டை முந்தலாம். ஆனால், தொடர்ச்சியாக இதைச் செய்வது பெரிய காரியம்.
பங்கு முதலீடுகள் நீண்ட காலத்துக்கானவை என்கிறோம். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாகிகள் தம் மதிப்பைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பத்து, இருபது வருடங்கள் கழித்து அவர்கள் அதே கம்பெனியில் இருப்பார்களா எனத் தெரியாது. அவர்களது வேலை, சம்பளம், ஊதிய உயர்வு, புரமோஷன் ஆகியவை மாதாமாதம் அல்லது காலாண்டுக்குக் காலாண்டு அவர்களின் செயல்பாடு (ஃபண்டில் மதிப்பு) எவ்வாறு திகழ்கிறது என்பதையும், மற்ற ஃபண்டுகளோடு ஒப்பிட்டும் தீர்மானமாகிறது.
பெரும்பாலான ஃபண்டுகள் மார்க்கெட்டைவிட குறைவாகவே லாபம் தருவதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை, சில ஆண்டுகளுக்குமுன் ஒரு பரிசோதனை செய்தது. அதில் பங்குகளின் பட்டியலைச் சுவரில் ஒட்டி வைத்து, அதன்மீது ஒரு அம்பினைத் தூக்கிப்போட்டு எந்த கம்பெனியில் பெயரைத் தொடுகிறதோ, அவற்றையெல்லாம் சேர்த்து ஒரு போர்ட்ஃபோலியோவாக உருவாக்கினார்கள். அந்த போர்ட்ஃபோலியோ பல பிரபலமான மியூச்சுவல் ஃபண்டுகளைவிட அதிக லாபம் தந்தது. இதேபோல, கம்ப்யூட்டரில் குலுக்கல் முறையில் தேர்வான சில நிறுவனங்களை உள்ளடக்கிய போர்ட்ஃபோலியோக்கள் பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகளை மிஞ்சியதையும் ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
நிதி நிர்வாகிகள் தம்மால் மார்க்கெட்டில் விலை ஏறுவதற்கு முன்னதாக வாங்கி, விலை இறங்குவதற்கு முன்னதாக விற்றுவிட முடியும் என நம்புகிறார்கள். அதனால், அவர்கள் நீண்ட கால முதலீட்டாளர்களாக இல்லாமல் டிரேடிங்கில் மும்முரமாக ஈடுபடுவதைத் தவிர்க்க முடியாமல் போகிறது. மியூச்சுவல் ஃபண்டில் நாம் போடுகிற பணம்தான் நீண்டகால முதலீடே ஒழிய, அந்தப் பணத்தை வைத்து அவர்கள் செய்கிற முதலீடுகள் நீண்ட கால முதலீடாக இருக்கவேண்டிய அவசியமில்லை. (விவரம் தெரியாமல் கண்ட ஷேர்களில் பணத்தைப் போட்டு கையைச் சுட்டுக்கொள்வதைக் காட்டிலும், மியூச்சுவல் ஃபண்ட் பாதைச் சரியானது என்ற பின்னணியோடுதான் நாம் இதை அணுகவேண்டும்!)
ஆனால், ஒரு தனிநபராக நமக்கு இவ்விதமான நெருக்கடிகள் கிடையாது. நாம் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. மேலும், மார்க்கெட் வல்லுநர்களைப்போல, நாம் எல்லாத் துறைகளைப் பற்றியும், எல்லா நிறுவனங்கள் பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நாம் ஒரு துறையில் பணியாற்றுகிறோம் என்றால், அந்தத் துறை தொடர்பான விஷயங்கள், நுட்பமான சங்கதிகள் மார்க்கெட் நிபுணர்ளைக் காட்டிலும் நமக்குக் கூடுதலாகத் தெரியும். நாம் அதில் மட்டும் கவனம் செலுத்தலாம். அவ்வாறு செய்தவன் மூலம் சராசரிக்கும் அதிகமான லாபம் ஈட்டுவது சாத்தியம்.
உண்மையிலேயே நம்மால் மார்க்கெட்டைவிட கூடுதலாக லாபம் ஈட்ட முடியாது என்று தோன்றினால், இன்டெக்ஸ் ஃபண்டில் பணத்தைப் போட்டு விட்டு நிம்மதியாக வேறு வேலையைப் பார்க்கலாம். அவை, மனிதத் தலையீடு இல்லாமல் கம்ப்யூட்டர் மூலம் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய குறியீடுகளில் முதலீடு செய்வது. மார்க்கெட்டை முந்தாவிட்டலும், பின்தங்கமாட்டீர்கள்!
(லாபம் சம்பாதிப்போம்)

கோவையில் ஸ்டார்ட் அப் முதலீட்டுத் திருவிழா!
கோவை ‘டை’ (TiE) அமைப்பின் சார்பில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீட்டுத் திருவிழா வரும் மார்ச் 24-ம் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் வியாபார யுக்திகளிலும் முதலீடு செய்ய பி.எஸ்.ஜி ஸ்டெப் (PSG STEP), நான் (NAN), கொங்கு டிபிஎன் (Kongu TBN), சென்னை ஏஞ்சல்ஸ் ஆகிய அமைப்புகள் உள்ளன. இந்த நிறுவனங்களில் ரூ.3 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள வித்தியாசமான பிசினஸ் ஐடியா வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் மார்ச் 10-ம் தேதி. விண்ணப்பங்களை ed.tiecbe@gmail.com என்கிற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தொடர்புக்கு: 9629204432 / 6380337673.

அஜய் தியாகியின் ஓராண்டு சாதனை!
செபியின் தலைவராக அஜய் தியாகி பதவியேற்று ஓராண்டு காலம் முடிந்தி ருக்கிறது. இந்த ஓராண்டு காலத்தில் செபியிடம் கிடப்பில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தி ருக்கிறது. ஓராண்டுக்கு முன்பு கிட்டத்தட்ட ஏழாயிரம் வழக்குகள் வரை செபியில் இருந்தன. கிட்டத்தட்ட 10 சதவிகித வழக்குகள் இப்போது குறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சில முக்கிய நிறுவனங் களின் காலாண்டு முடிவு கள், சமூக வலைதளங்கள் மூலம் முன்பே வெளியா னது தொடர்பான விசார ணையையும் முடுக்கி விட்டிருக்கிறார் அஜய் தியாகி. தவறுகளைத் தடுக்க கடும் நடவடிக்கை அவசியம்தான்!