நடப்பு
அறிவிப்பு
Published:Updated:

ஷேர்லக்: இந்தியப் பங்குச் சந்தை... மார்கன் ஸ்டான்லி எச்சரிக்கை!

ஷேர்லக்: இந்தியப் பங்குச் சந்தை... மார்கன் ஸ்டான்லி எச்சரிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்: இந்தியப் பங்குச் சந்தை... மார்கன் ஸ்டான்லி எச்சரிக்கை!

ஓவியம்: அரஸ்

தியம் மூன்று மணிக்கு கலர்ஃபுல்லாக வந்து சேர்ந்தார் ஷேர்லக். அவருக்கு ஹோலி வாழ்த்துச் சொன்னோம். ‘‘செளகார்பேட்டையில் மார்வாடி நண்பர் ஒருவர் ஹோலி பண்டிகைக்கு அழைத்திருந்தார். அவருடைய வீட்டுக்குப் போய்விட்டு அப்படியே வந்துவிட்டேன். ஐந்து மணிக்கு இன்னொரு நண்பர் வீட்டுக்குப் போக வேண்டும்’’ என அவர் நம்மை அவசரப்படுத்த,  கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.  

டாடா ஸ்டீல் உரிமைப் பங்கு வெளியீட்டுக்கு வரவேற்பு எப்படி?

“டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ரூ.12,800 கோடி மதிப்பிலான உரிமைப் பங்கு வெளியீட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து, முழுவதுமாக விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த வெளியீட்டில், 23.32 கோடி பங்குகள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன. இதில் 15.54 கோடி முழு அளவில் அளிக்கப்பட்ட (ஃபுல்லி பெய்ட் அப்) பங்குகள், ரூ.510-க்கு விற்பனை செய்யப்பட்டன. இதற்கு 116% விண்ணப்பங்கள் வந்துள்ளன. 7.77 கோடி பகுதி அளிக்கப்பட்ட பங்குகள், ரூ.615-க்கு விற்பனை செய்யப்பட்டன. இதற்கு 170% விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விற்பனை மூலம் திரட்டப்படும் தொகையிலிருந்து ரூ.9,700 கோடி கடனை அடைக்கவும், பொது நிர்வாகச் செலவுகளுக்காக ரூ.2,953 கோடியும் பயன்படுத்தப்பட இருக்கிறது.”

ஷேர்லக்: இந்தியப் பங்குச் சந்தை... மார்கன் ஸ்டான்லி எச்சரிக்கை!

மூன்றாம் காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி அதிகரித்திருக்கிறதே?

“பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி போன்ற சீர்திருத்தங்களால் நம்முடைய ஜி.டி.பி வளர்ச்சி, கடந்த சில காலாண்டுகளில் பாதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பாதிப்புகளிலிலிருந்து மெள்ள மெள்ள விடுபட்டு, ஜி.டி.பி வளர்ச்சி மீண்டுவரும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்தது. அதன்படி மூன்றாம் காலாண்டில், இந்திய ஜி.டி.பி வளர்ச்சி 7.2 சதவிகிதமாகப் பதிவாகியிருக்கிறது. இந்த வளர்ச்சி, கடந்த 15 மாதங்களில் இல்லாத வளர்ச்சியாக இருக்கிறது. உற்பத்தி, வர்த்தகம் மற்றும் ஓட்டல் துறை, கட்டுமானத் துறை என அனைத்திலும் கணிசமாக வளர்ச்சி இருந்ததால், இந்த வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது.”

நீரவ் மோடி மோசடியால் பி.என்.பி வங்கிக்கு அரசு வழங்குவதாக இருந்த மறுமூலதனம் தாமதமாகும் போலிருக்கிறதே?

“நீரவ் மோடியின் மோசடியால் நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் பஞ்சாப் நேஷனல் பேங்க், ரொம்பவே அடிவாங்கிவிட்டது. இதனால், அரசு வழங்குவ தாக இருந்த மறுமூலதனமும் தாமதமாகும் போலிருக்கிறது. ஏனெனில் மல்லையா, நீரவ் மோடி என இருவரையுமே பிடிப்பதற்கு முயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அரசின்மீது வைக்கப்பட்டுவரும் நிலையில், அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்குவதாக இருந்த மறுமூலதனத் தொகையை பி.என்.பி வங்கிக்கு உடனடியாகத் தரக்கூடாது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

மத்திய அரசு, பி.என்.பி-க்கு ரூ.5,473 கோடி ஒதுக்கியுள்ளது. நீரவ் மோடி - பி.என்.பி விவகாரத்தில் நடக்கும் விசாரணையில் நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், இந்த மறுமூலதன நடவடிக்கையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய அவசிய மில்லை என்கிறார்கள். இந்த விவகாரம் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தபிறகு மறுமூலதனத்தை அரசு செய்யலாம் என்ற கருத்தை பெரும்பாலானோர் முன்வைக்கிறார்கள். அப்படிச் செய்தால் அரசின்மீதும், வங்கிகள்மீதும் மக்களிருக்கும் நம்பகத்தன்மை ஓரளவு காப்பாற்றப்பட உதவியாக இருக்கும்.’’

ஏ.சி.சி - அம்புஜா நிறுவனங்களின் இணைப்பு நடக்காது போலிருக்கிறதே?

“சிமென்ட் நிறுவனங்களான ஏ.சி.சி மற்றும் அம்புஜா இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள், கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து நடந்துவருகின்றன. 2017 மே மாதத்தில், இரண்டு நிறுவனங்களின் இயக்குநர்களும் இந்த இணைப்பைச் செயல்படுத்த தனிக் குழுவை அமைக்க முடிவெடுத்தார்கள். ஆனால், தற்போது இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைப்பது சாத்தியமில்லை என்பது தெரிகிறது. கடந்த வாரத்தில் இந்த இணைப்புக்காக உருவாக்கப்பட்ட தனிக்குழு, இந்த இணைப்பைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக செபியிடம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த இணைப்பு நடவடிக்கை யைக்  கைவிடுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுமே மிகப் பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனமான லாஃபார்ஜ் ஹோல்சிம் நிறுவனத்தின் அங்கமாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.” 

பி.எஸ்.இ-யிலிருந்து 36 நிறுவனப் பங்குகள் டீலிஸ்ட் செய்யப்பட விருக்கிறதே?

“கடந்த மூன்று வருடங்களாக வர்த்தகம் அனுமதிக்கப்படாத 36 நிறுவனப் பங்குகள், மார்ச் 5 முதல்    பி.எஸ்.இ-யிலிருந்து டீலிஸ்ட் செய்யப்படு கின்றன. இவை டெக்ஸ்டைல், கெமிக் கல்ஸ், பார்மா மற்றும் டெக்னாலஜி ஆகிய துறைகளைச் சார்ந்தவையாக இருக்கின்றன. அவற்றில் மஃபத்லால் டைஸ் அண்டு கெமிக்கல்ஸ், வெரோனிகா லேபாரட்டரிஸ், போலார் பார்மா இந்தியா, ஷோங்க் டெக்னாலஜிஸ், பெல்லாரி ஸ்டீல்ஸ் அண்டு அலாய்ஸ், வோல்ப்லாஸ், அசோகா காட்சீட்ஸ், விஜய்குமார் மில்ஸ், கிரேட் வெஸ்டர்ன் இண்டஸ்ட்ரீஸ், ரூபல் லேமினேட்ஸ், என்விரோ க்ளீன் சிஸ்டம்ஸ் மற்றும் காந்திதம் ஸ்பின்னிங் ஆகியவை அடக்கம்.”

இந்தியப் பங்குச் சந்தையின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்திருக்கிறதே மார்கன் ஸ்டான்லி?

“பிரபல நிதிசார் தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி, இந்தியச் சந்தைகளின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ளது. சமீபகாலமாக இந்தியச் சந்தைகள் இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன. இதற்குப் பொதுத்துறை வங்கிகளின் நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டிருப்பதும், எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டிருப்பதும்தான் காரணம். பங்குச் சந்தையின் செயல்பாட்டில் வங்கித் துறையின் பங்கு அதிகமாக இருக்கிறது. வங்கித் துறை தொடர்ந்து சிக்கலில் இருந்துவருகிறது.

எனவே, மார்கன் ஸ்டான்லி இந்தியப் பங்குச் சந்தை களின் செயல்பாட்டை வலுவான காளையின் போக்கி லிருந்து குறைத்து மதிப்பிட்டுள்ளது. இதனால், வெளிநாட்டு முதலீடுகள் குறைய வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், டெக் மஹிந்திரா, கெயில் இந்தியா, சிப்லா மற்றும் டாடா பவர் நிறுவனப் பங்குகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாம் என மார்கன் ஸ்டான்லி சொல்லியிருக்கிறது. கிரெடிட் சூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹெச்.டி.எல் டெக்னாலஜிஸ், எஸ்.பி.ஐ, சன் பார்மா, டாடா ஸ்டீல் பங்குகளை முதலீட்டுக்குக் கவனிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது” என்றவர், ‘‘ரவி சுப்ரமணியம் எழுதிய ‘பிட்காயின் பித்தலாட்டம்’ நாணயம் விகடனில் வருகிறதா, சூப்பர்’’  என்றபடி டாட்டா காட்டிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்!

பி.ஏ.சி.எல் : கடைசி தேதி நீட்டிப்பு!

பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்து விட்டு, அந்தப் பணம் எப்போது கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், முதலீட்டாளர்கள் செபி தலைவர் அஜய் தியாகியைச் சந்தித்து, விரைவில் தங்களின் பணம் திரும்பக் கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். பி.ஏ.சி.எல் மோசடியில் பாதிக்கப்பட்ட, குறிப்பிட்ட சில முதலீட்டாளர்களின் பணத்தைத் திரும்பக் கொடுப்பதற்கான கடைசித் தேதியாக மார்ச் 31-யை செபி நிர்ணயித்துள்ளது. பி.ஏ.சி.எல் நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட பலரும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கால நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், இனியாவது விழிப்பு உணர்வுடன் இருந்து இதுமாதிரியான மோசடித் திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்!

ஷேர்லக்: இந்தியப் பங்குச் சந்தை... மார்கன் ஸ்டான்லி எச்சரிக்கை!