நடப்பு
அறிவிப்பு
Published:Updated:

தங்கம், வீடு... மாற வேண்டுமா பெண்களின் முதலீட்டு மனோபாவம்?

தங்கம், வீடு... மாற வேண்டுமா பெண்களின் முதலீட்டு மனோபாவம்?
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கம், வீடு... மாற வேண்டுமா பெண்களின் முதலீட்டு மனோபாவம்?

சுந்தரி ஜெகதீசன்

லைப்பைப் பார்த்ததுமே “மாறணுமா... இன்னுமா? ஏற்கெனவே நடந்த சில சின்ன  மாற்றங்களையே வீட்டில உள்ளங்க  சகிச்சிக்க மாட்டேங்கிறாங்க! இந்த அழகில் இன்னும் மாறணுமா?” என்று கேட்கும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது. ஆனால், மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா?

   எதில் மாறியிருக்கிறோம்?

வீட்டுக்குள்ளே பூட்டிக் கிடந்த நமக்குச் சிறகுகள் முளைத்திருக்கின்றன. கல்வியில்  சிறந்து விளங்குகிறோம்; நல்ல வேலைகள் நம்மைத் தேடி வருகின்றன; வீட்டு வேலை, குழந்தை பராமரிப்புடன் கார் ஓட்டுகிறோம்; நமது ஓட்டத்திற்கு உதவுகிற மாதிரி சுடிதார் அணிகிறோம்; அம்மா ஆசை ஆசையாக மருதாணி, செம்பருத்தி என்று அரைத்துத் தேய்த்து வளர்த்த நீள முடியைப் பராமரிக்க நேரமின்றி குட்டையாக்கிவிட் டோம். ஏ.டி.எம், இன்டர்நெட் பேங்கிங், ஆன்லைன் டிரான்ஸாக்‌ஷன்ஸ் என்று தூள் கிளப்புகிறோம். கமல்ஹாசன் பாடுவாரே ‘பொம்பளையா போனா ஆம்பளைக்கும் வேலை’ என்று. அப்படி உலக வேலைகளில் 66% நாமே செய்வதாக ஒரு சர்வே சொல்கிறது.

தங்கம், வீடு... மாற வேண்டுமா பெண்களின் முதலீட்டு மனோபாவம்?

   எதிலெல்லாம் மாறவில்லை?

நம்மை அறியாமலே நம் தலைக்கு மேல் ஒரு கண்ணாடிக் கூரையை அமைத்துக்கொண்டு,  தொட்டியிலே வட்டமிடும் மீன்களைப்போல் வெளியேறும் வகை தெரியாமல் தவிக்கிறோம். வீட்டுமனை தேடுவது, நிலத்தை நம் பேரில் ரெஜிஸ்டர் செய்வது, பட்டா சிட்டா அடங்கல் போன்ற முக்கியமான டாக்குமென்டுகளை வாங்குவது, கல்விக் கடன், வாகனக் கடன், வங்கிக் கடன் என்று பல சலுகைகளைப் பெறுவது இதிலெல்லாம் நாம் பட்டுக்கொள்வதே இல்லை.

வங்கியில் நான் வேலை பார்த்த 30 வருடங்களில் கவனித்தது என்னவென்றால், அநேகமாகப் பெண்கள், பாஸ்புக் என்ட்ரி போட, லோன் கட்ட, பணம் போட மற்றும் எடுக்க, எஃப்.டி ரசீது பெற, லாக்கர் ஆபரேட் செய்ய என்பது போன்ற எடுபிடி வேலைகளுக்குத்தான் வங்கிக்குள் வருகிறார்கள். நன்கு படித்த பெண்களும் இதற்கு விதிவிலக்கில்லை. அதனால்தான் பெண்கள் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் எப்போதும் அதிகப் பணம் இருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு பெண் ஆர்கிடெக்ட், பணத்தை பேங்க் எஸ்.பி அக்கவுன்டிலேயே வைத்திருக்கிறார். ஜஸ்ட் ஒரு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக் ஷன் கொடுத்தார் என்றால், பணம் எஃப்.டி-யாக மாறியிருக்கும்.  எவ்வளவு பெரிய வேலையில் இருக்கும் பெண்களுக்கும், வங்கி விவகாரங்கள், போஸ்ட் ஆஃபீஸ் சேவைகள், பி.பி.எஃப், என்.எஸ்.சி இவற்றைத் தாண்டிச் செல்ல பயம்.

  ஏன் மாற வேண்டும்?

தங்கம், வீடு... மாற வேண்டுமா பெண்களின் முதலீட்டு மனோபாவம்?


* வாழும் வயது கூடிக்கொண்டே போகிறது, முக்கியமாகப் பெண் களுக்கு (உங்களுக்குத் தெரிந்த வீடுகளில் அதிகம் இருப்பது தாத்தாவா, பாட்டியா?).

* நிரந்தர வேலை, நிரந்தர பென்ஷனெல்லாம் கனவாகிவிட்டது. 45 வயதுக்கு மேல் நீங்கள் வேலையில் தாக்குப் பிடித்தால் அதிசயம். 30:30 கான்செப்ட் அதாவது, பணியில் சேர்ந்து 30 வருடங்கள்  சம்பாதித்து, அடுத்த 30 வருடங்கள் சமாளிக்க வேண்டும் என்றாகிப் போனது.

* கூட்டுக் குடும்பமுறை குறைந்து வருகிறது. பிள்ளைகள் வெளியூர், வெளிநாடு என்று போனபின், கூட்டுக் குடும்பத்தை எப்படி எதிர்பார்ப்பது?

   மாறிவிட்ட முதலீடுகள்


இவை மட்டும்தானா..? நிலம், தங்கம், வங்கி எஃப்டி இவற்றிலிருந்து வரும் வருமானம், மிக மிகக் குறைந்துவிட்டது. வருமான வரி,  பணவீக்கம் போக, கையில் வருவது சில சமயம் நஷ்டத்தில் போய் முடிகிறது. 16.5% வட்டி தந்த எஃப்டி, இன்று 6%, 6.5% என்று தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நல்ல லாபம் வரும்போது விற்கலாம் என்ற எண்ணத்துடன் வாங்கிய வீட்டு மனையை இன்று வாங்குவார் இல்லை.  ரியல் எஸ்டேட் கோமா ஸ்டேஜில் உள்ளது.

நீங்கள் ஜனவரி 25-ம் தேதி, ரூ.28,300 மதிப்புள்ள 10 கிராம் நெக்லஸை செய்கூலி, சேதாரத்துடன் வாங்கியிருந்தால், 13 நாள்களில்  அதாவது, பிப்ரவரி மாதம் 8-ம் தேதியன்று ரூ.6,160 நஷ்டப்பட்டு இருப்பீர்கள். தங்க விலையின் ஏற்ற இறக்கத்தோடு செய்கூலி, சேதாரம் சேர்த்துப் பார்த்தால், இத்தனை நஷ்டமா என்று நமக்குத் தலைசுற்றும். 

தங்கம், வீடு... மாற வேண்டுமா பெண்களின் முதலீட்டு மனோபாவம்?



   ஃபைனான்ஸ் பற்றி அறிவது அவசியம் தோழி


புதிய முதலீட்டு முறைகள் தினமும் வெள்ளம்போல் வந்து நம்மை மிரட்டுகின்றன. டாக்டரோ, இன்ஜினீயரோ, சயின்டிஸ்டோ யாராக இருந்தாலும் ஓரளவாவது ஃபைனான்ஸ் பற்றித் தெரிந்தாக வேண்டும். இல்லாவிட்டால், நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தின் வசதிகள், நம் வயது காலத்தில் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். நம் ஏஜென்ட் அறிந்தோ, அறியாமலோ நமக்குத் தேவையற்ற சில முதலீடுகளை நமக்குச் சிபாரிசு செய்யலாம். அதைச் சீர்தூக்கிப் பார்க்க ,நமக்கே ஓரளவு கள அறிவு இருப்பது அவசியம்.

கணவர் இறந்தபின் வயதான பெண்கள் படும்பாடு மகா கொடுமை. என் தோழி உமாவின் கணவரும், மகனும் ஒரே ஆக்சிடென்டில் இறந்துவிட்டனர். 25 வருடங்களாகச் சிறகில் அவளை மூடி வளர்த்து உடன்வந்த துணையையும், கண்ணுக்குக் கண்ணாக வளர்த்துவந்த மகனையும் எண்ணி வருந்துவதற்குக்கூட நேரமில்லாமல், அவர் விட்டுச்சென்ற சொத்து, பணம் இவற்றைத் தேட வேண்டியுள்ளது. கணவர் இறந்த சில நாள்களில், வழக்கமாக வரும் ஏஜென்ட் வந்து இவளிடம் இருக்கும் டாக்குமென்ட்டுகள் எல்லாவற்றையும் வாங்கிச் சென்றிருக்கிறார். அந்த டாக்குமென்ட்டுகளில் ஒரு காப்பிகூட இவளிடம் இல்லை. கணவரோடு தோளோடு தோளாக நின்று,  சிக்கனமாக வாழ்ந்து சேமித்த அவள், அதன் பலனை அனுபவிக்க முடியாமல் காத்திருக்கிறாள். அந்த ஏஜென்ட் திரும்ப வந்து, உதவி செய்யலாம்; செய்யாமலும் போகலாம். உழைத்துச் சேர்த்த இவளுக்குக் கடைசி வரை அந்தப் பணம் உதவப் போகிறதா?

உலகம் முழுவதிலும் பெண்களின் நிலை இதுதான். மொத்த உழைப்பில் 66% நாம் செய்தாலும், 1% அளவே நம் பெயரில் சொத்து உள்ளது என்கிறது புள்ளிவிவரங்கள். அப்புறம் நம்மை யார் மதிப்பார்? ஒரே ஒரு உண்மையை நினைவில் கொள்ளுங்கள். உலகில் முக்கால்வாசிப் பேர் தமக்கு ஆதாயம் தரும் உறவு களையே விரும்புகிறார்கள். சொத்து முழுவதையும் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு, பத்து ரூபாய்க்குக்கூட அவர்கள் கையை எதிர்பார்ப்பது சரியா..? 

தங்கம், வீடு... மாற வேண்டுமா பெண்களின் முதலீட்டு மனோபாவம்?

   ஃபைனான்ஸ் பெண்கள்

ஃபைனான்ஸ் அறிவு இருக்கும் பெண்களுக்குக் கிடைக்கும் மரியாதையே தனி. அவள் சிறிது முன்பின்னாக நடந்துகொண்டாலும் யாரும் அவளை மரியாதைக்குறைவாக நடத்துவதில்லை. என் தோழி ஒருத்தி பட்ஜெட் வெளிவந்ததுமே, அடுத்த வருடம் யார் யார் எவ்வளவு எவ்வளவு டாக்ஸ் கட்ட வேண்டிவரும் என்பதைக் கணக்குப் போட்டு சொல்லிவிடுவாள். அவள் டேபிளைச் சுற்றி எப்போதும் கூட்டம்தான்.

இப்படி எத்தனையோ காரணங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 92% பெண் களுக்கு முதலீட்டில் சுதந்திரம் இல்லை என்று சர்வே சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இதற்கு நம் வீட்டு ஆண்களைக் குற்றம் சொல்லிப் பிரயோஜனம் இல்லை. அவர்கள் பொறுப்பை நம்மிடம் கொடுக்க ஓரளவு தயாராக இருந்தாலும், நாம் அதை எடுக்கத் தயாரில்லை. மும்பையில் நடந்த ஒரு ஃபைனான்ஸ் பொதுக் கூட்டத்தில் 400 ஆண்களும், 10 பெண்களும் இருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டேன்.ஆதங்கம் பொறுக்காமல், ஓர் இளம் வயதுக்காரரைக் கேட்டுவிட்டேன். “ஏன் மனைவியை அழைத்துக்கொண்டு வரவில்லை?” என்று. “மேடம், அவளுக்கு இதிலெல்லாம் ஆர்வமே இல்லை. டிவி சீரியல்தான் அவளுக்குப் பிடிக்கும்” என்று வருத்தத்துடன் கூறினார். ஆகவே, நமது அறிவையும், மரியாதை யையும் வளர்த்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

தங்கம், வீடு... மாற வேண்டுமா பெண்களின் முதலீட்டு மனோபாவம்?

   எப்படி மாற வேண்டும்?

நம் சேமிப்புகளில் அதிகம் லாபம் தரக்கூடியது எது? அரசாங்கம் நமக்கு அளிக்கக்கூடிய வரிவிலக்குத்தான். அவரவர் சம்பளத்துக்குத் தகுந்த மாதிரி 10%, 20%, 30% என்று வரி தள்ளுபடி ஆகும். அதுதவிர, அந்த முதலீடு தரக்கூடிய வருமானமும் கிடைக்கும்.

அனேகமாக, வேலை செய்யும் பெண்கள் அனைவருமே பி.பி.எஃப் அக்கவுன்ட் வைத்திருப்பார்கள்.  பி.பி.

எஃப் தரும் வட்டி விகிதம் 12 சதவிகிதத்திலிருந்து மெள்ள மெள்ள  இறங்கி, தற்போது  7.6% என்ற லெவலில் உள்ளது. நாம் பி.பி.எஃப்-பில் சேர்க்கும் தொகையில், குறைந்தபட்சம் பாதியை ஈக்விட்டி லிங்க்ட் சேவிங்ஸ் ஸ்கீமில் போட்டால், நீண்ட காலத்தில் ஆண்டுக்கு 15% வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

அதேபோல், குறுகிய காலத் தேவை களுக்கான பணத்தை, வெறும் சேமிப்புக் கணக்கில் 3.5-4% வட்டிக்கு வைக்காமல் லிக்விட் ஃபண்டில் போட்டு வைத்தால் 6% வட்டி கிடைக்குமே! மியூச்சுவல் ஃபண்ட் நம் வாழ்வின் ஓர்  அங்கமாகவே மாறிவிட்டது. அதைப்பற்றிய நம் அறிவை வளர்த்துக் கொள்வது நல்லது.காலங்கள் நிறையவே மாறி விட்டன. பக்கம் 14-ல்  இருக்கும் அட்டவணையைப்  பாருங்கள். கடந்த 15 வருடங் களில் பங்குச் சந்தையும், தங்கமும் தந்திருக்கும் வருமானம் எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியும்.

தங்கத்தின் வருமானம் தேய்ந்துகொண்டே  போகிறது.  இது செய்கூலி, சேதாரம் சேர்க்கப்படாத தங்கத்தின் மதிப்பு. அதையும் சேர்த்துவிட் டால் தங்கம் மூலமான வருமானம் நஷ்டக்கணக் கில்தான் இருக்கும். இது, கடந்த 24.04.2017-ன் நிலவரம். அதற்காக தங்கமே வாங்கக்கூடாது என்று கூற வரவில்லை. நமது போர்ட்ஃபோலியோவில் 5-10% அளவு தங்கம் இருக்கலாம். நகையாக வாங்குவதைவிட கோல்டு பாண்ட் போன்ற பேப்பர் கோல்டு அதிக லாபம் தரும். ‘அந்த பேப்பரைப் போட்டுக்கொண்டு நாலு இடத்துக்குப் போக முடியுமா மேடம்?’ என்று நீங்கள் கேட்கலாம். நம் அழகுக்கு அழகு சேர்க்கிற மாதிரி, கொஞ்சம் நகை அணிந்தால் போதுமே. நடமாடும் நகைக் கடைகளாகத்தான் அலைய வேண்டுமா? தங்கம் தரும் வருமானம் குறைவு என்றால், மனை, வீடுகள் தரும் வருமானமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

எங்கள் வங்கியில் ஒரு பெண் கடன் கேட்டு வந்தார். அவர் கேட்ட கடனுக்கு வட்டி 10% எனச் சொன்னவுடன் கிளம்பினார். காரணம் கேட்டேன். “மேடம், கந்து வட்டியைவிட உங்கள் வங்கி வட்டி அதிகமாக இருக்கிறதே! சேட்டுக் கடையில் 3% வட்டிதான்’’ என்றார். சேட்டுக் கடையில் 3% வட்டி என்பது உண்மையில் 36% என்பதை அவருக்கு விளக்குவதற்குள் போதும் போதும் என ஆகிவிட்டது. வட்டிக் கணக்கை நாம் சரியாகப் புரிந்துகொண்டால்தான், இனியாவது நம் முதலீட்டு மனப்பான்மையை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும்.

நாம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. பணத்தைச் சேர்க்கப் பணம் தேவையில்லை; மனம்தான் தேவை. நியூஸ் பேப்பர், இன்டர்நெட், யூடியூப் என்று ஃபைனான்ஸ் பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. புதிய முதலீடுகளில் உடனே ஓடிப்போய் குதிக்காமல் நம் விஷய ஞானத்தை வளர்த்துக்கொண்டால், அது கண்டிப்பாகத் தேவையான நேரத்தில் கைகொடுக்கும்.

இப்போது சொல்லுங்கள்; மாற்றம் தேவைதானே..?

படம்: பா.காளிமுத்து

தங்கம், வீடு... மாற வேண்டுமா பெண்களின் முதலீட்டு மனோபாவம்?

“பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறேன்!”

ஷில்பா, காஸ்ட் அக்கவுன்டன்ட்


‘‘ஒரு பங்கு முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருப்பதால், பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்டுள்ள நிறுவனங் களைப் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்வேன். அந்த நிறுவனங்களின் வளர்ச்சி, செயல்பாடு மற்றும் நிபுணர்களின் கருத்துகள் போன்றவற்றை ஆய்வு செய்த பிறகே முதலீடு செய்வேன். குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்ற வற்றைக் கணக்கிட்டு, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்து வரு கிறேன். பங்குச் சந்தையில் ரூ.6 லட்சம் வரையிலும், மியூச்சுவல் ஃபண்டில் ரூ.2.5 லட்சம் வரையிலும் முதலீடு செய்திருக்கிறேன்.’’

தங்கம், வீடு... மாற வேண்டுமா பெண்களின் முதலீட்டு மனோபாவம்?

“சிட் ஃபண்டில் முதலீடு செய்கிறேன்!”

சங்கீதா, தனியார் நிறுவன ஊழியர்.

‘‘பதிவு செய்யப்பட்ட சிட் ஃபண்டில் முதலீடு செய்வதே என் வழக்கம். ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் எனப் பணத் தேவைக்கேற்ப 15 மாதம், 20 மாதம் என்ற கால அளவில் சிட் ஃபண்டில் பணத்தைச் சேர்த்து வருகிறோம். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் நமக்குத் தேவைப்படும் நேரத்தில் எடுக்க முடியாதோ என்ற எண்ணத்தால், அதுபற்றி இதுவரை யோசிக்க வில்லை. அதுபோக, ஓய்வுக்காலத்துக்குப் பயன் படும்விதமாக எஃப்.டி-யிலும் பணத்தைச் சேர்த்து வருகிறேன். எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும் சேர்த்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளோம்.’’

தங்கம், வீடு... மாற வேண்டுமா பெண்களின் முதலீட்டு மனோபாவம்?

“70% வரை எஃப்.டி-யில்!”

மகாலட்சுமி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

‘‘கடந்த ஓராண்டாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறேன். எல்லோரும்போல, ஓய்வுக் காலத்திற்கான பணத் தேவைக்கு எஃப்.டி-களில் சேர்த்து வருகிறேன். என் முதலீட்டில் 70% வரை எஃப்.டி-யில்தான் வைத்திருக்கிறேன். 10% அளவில்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளேன். ஏழாம் வகுப்பு படித்து வரும் மகனின் மேற்படிப்புக்கு எஃப்டி-யில் முதலீடு செய்திருக்கிறேன். அதுபோக அவனது திருமணத்தைக் கணக்கில்கொண்டு தங்கத்திலும் முதலீடும் செய்துள்ளேன்.பங்குச் சந்தையில், தொடக்கத்தில் நல்ல வருமானம் கிடைத்தது, கடந்த பட்ஜெட்டுக்குப் பிறகுதான் பங்குச் சந்தை வருமானம் கொஞ்சம் பாதித்துள்ளது.’’

தங்கம், வீடு... மாற வேண்டுமா பெண்களின் முதலீட்டு மனோபாவம்?

“ஃபண்ட் மற்றும் தங்கம் என் சாய்ஸ்!”

உமா, தனியார் வங்கி ஊழியர்

‘‘நான் கடந்த 2009-ம் ஆண்டி லிருந்து எஸ்.ஐ.பி முதலீட்டின் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவருகிறேன். அதுபோக அவ்வப் போது ஏதேனும் நல்ல திட்டம், முதலீட்டு வாய்ப்பு வந்தாலும், அதிலும் முதலீடு செய்வேன். இதுவரை ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்துள்ளேன். இதுபோக, தங்கத்திலும் முதலீடு செய்துவருகிறேன். எங்களுக்கு நான்கு வயதில் ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு எஜூகேஷனல் சேவிங்ஸில் முதலீடு செய்துவருகிறேன். அவனது 16 வயதில் முதிர்வடையும்விதத்தில் அந்தத் திட்டம் இருக்கிறது. எனவே, அந்த வயதில் எங்களுக்கு ரூ.15 லட்சம் வரை கிடைக்கும்.’’

தங்கம், வீடு... மாற வேண்டுமா பெண்களின் முதலீட்டு மனோபாவம்?

“மியூச்சுவல் ஃபண்டில் ரூ.20 லட்சம்!”

ஜெயந்தி, குடும்பத் தலைவி

‘‘நான் மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்தவரை முதலீடு பற்றிப் பெரிதாக யோசித்ததில்லை. இங்கு வந்த பிறகுதான் முதலீடு செய்வதில் ஆர்வம் வந்தது. மியூச்சுவல் ஃபண்டில் ரூ.20 லட்சம் வரை முதலீடு செய்திருக் கிறேன். குழந்தைகளின் கல்வி, திருமணம், எங்கள்  ஓய்வுக்காலத் தேவைகளை மனதில்கொண்டு, சந்தை நிலவரத்திற்கேற்ப மியூச் சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்துவரு கிறேன். பெண்கள் வேலை பார்க்கும்போதே சேமிப்ப துடன் நின்றுவிடாமல், முதலீடுகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும். என் குழந்தைகளுக்கு இப்போதே முதலீடு பற்றி கற்றுத்தருகிறேன்.’’