
ட்விட்டர் சர்வே: உங்கள் ஓய்வுக் காலத்துக்கான முதலீடு எதில்?

ஓய்வுக்காலத்துக்கான முதலீடு என்பது இளமையில் யோசிக்க மறுக்கும் விஷயமாகவே இருக்கிறது. ‘ரிட்டையர்டு ஆக இன்னும் 20 வருஷம் இருக்கு’ என்று நினைத்தே காலத்தைத் தவற விட்டுவிட்டு, பிற்பாடு தவிப்பவர்கள் பலர். இந்த நிலையில், ஓய்வுக்காலத்துக்கான உங்கள் முதலீட்டை எதில் சேர்க்கிறீர்கள் என்று நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு சர்வே நடத்தினோம்.

இந்த சர்வேயில் 41% பேர் பி.எஃப் மூலமே தங்கள் ஓய்வுக் காலத்துக்கான பணத்தைச் சேமிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். பி.எஃப் மூலம் வருமானம் உத்தரவாதம், பணத்தைத் திரும்ப எடுக்கும்போது வரியில்லை எனப் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், ஓய்வுக்காலத்துக்கு அதை மட்டுமே நம்பியிருப்பது கூடாது.
இந்த சர்வேயில் கலந்துகொண் டவர்களில் 15% பேர் என்.பி.எஸ் மூலம் தங்கள் ஓய்வுக்கால முதலீட்டை மேற்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதிலும் பல சிறப்பம்சங்கள் உண்டு என்றாலும், இதை மட்டுமே நம்பியிருப்பதும் தவறு.

43% பேர் தங்கள் ஓய்வுக்கால முதலீட்டை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யும்பட்சத்தில், மற்ற எந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தைவிட கூடுதல் லாபம் கிடைக்கும் என்பது நிச்சயம்.
எனவே, அலுவலக பி.எஃப் அல்லது என்.பி.எஸ், இதில் ஏதாவது ஒன்றுடன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலமும் பணத்தைச் சேர்த்தால், ஓய்வுக் காலத்தில் நமக்குத் தேவையான பணம் கிடைக்க வாய்ப்புண்டு.
ஏ.ஆர்.கே