நடப்பு
தொடர்கள்
Published:Updated:

உணவுப் பூங்கா, கார்மென்ட் கிளஸ்டர்... சாதித்த தமிழக சி.ஐ.ஐ!

உணவுப் பூங்கா, கார்மென்ட் கிளஸ்டர்... சாதித்த தமிழக சி.ஐ.ஐ!
பிரீமியம் ஸ்டோரி
News
உணவுப் பூங்கா, கார்மென்ட் கிளஸ்டர்... சாதித்த தமிழக சி.ஐ.ஐ!

உணவுப் பூங்கா, கார்மென்ட் கிளஸ்டர்... சாதித்த தமிழக சி.ஐ.ஐ!

‘‘ஓராண்டுப் பதவிக் காலத்தைத் திருப்தியாகப் பூர்த்தி செய்ததில் மிகவும் மகிழ்ச்சி’’ என்று சந்தோஷமாகப் பேசு கிறார் பி.ரவிச்சந்திரன். இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் (CII) தமிழகப் பிராந்தியத்தின் தலைவராக, கடந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார் டான்ஃபாஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் பி.ரவிச்சந்திரன்.
 
‘‘கடந்த ஓராண்டில் நான்கு முக்கியமான பணிகளில் கவனம் செலுத்தினோம். முதலாவதாக, ‘விஷன் 2020 - 23’ திட்டத்தை இலக்காகக்கொண்ட செயல்பாடுகளை முடுக்கிவிடுவது. ‘விஷன் 2020 - 23’ திட்டத்தின்கீழ், எந்தெந்தத் திட்டங்களில் கவனம் செலுத்தவேண்டுமென்று நாங்கள் ஆய்ந் தறிந்தவற்றைத் தமிழக அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். இரண்டாவதாக, திறன் பயன்பாட்டில் இருந்த இடைவெளிகளை நீக்குவது. இதன்படி, தமிழ்நாட்டுக்குப் புதிதாக என்னென்ன திறன்கள் தேவைப்படுகின்றன என்பதில் கவனம் செலுத்தினோம்.

உணவுப் பூங்கா, கார்மென்ட் கிளஸ்டர்... சாதித்த தமிழக சி.ஐ.ஐ!

மூன்றாவதாக, போட்டி மனப்பான்மையை உருவாக்கி அதன்மூலம் உற்பத்தியை அதிகரிப்பது. சிவகாசி கிளஸ்டர், திருப்பூர் கிளஸ்டர், மதுரை யில் கார்மென்ட் கிளஸ்டர் இருக்கின்றன. மணப்பாறை, கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், மணப்பாறையிலுள்ள தொழிலாளர்களுக்குத் தனி கிளஸ்டர் இல்லை. எனவே, மணப்பாறையில் கிளஸ்டர் ஒன்றை  உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இதுபோல, புதிய கிளஸ்டர்களை அதிகரித்து, உற்பத்தியையும் அதிகரித்தோம்.

நான்காவதாக, தமிழகமெங்கும் சமமான தொழில் வளர்ச்சியைக் கொண்டுவருவது. வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு எனத் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமான பொருளாதார வளர்ச்சி உள்ளது. இதனைச் சமப்படுவதற்காக ‘விஷன் 2020 - 23’ டாக்குமென்டிலேயே தேவையான திட்டங்களைத் தீட்டியுள்ளோம்’’ எனத் தனது தலைமையின்கீழ் நடந்த நல்ல விஷயங்களைப் பெருமையுடன் பட்டியல் போட்டார் அவர்.

‘‘தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களின்  வசதிகளை மேம்படுத்த நினைத்தோம். விமான நிலைய உருவாக்கத்துக்காகவும், மேம்பாட்டுக் காகவும் மத்திய அரசு, பெருமளவு செலவழிக்கத் தயார் என்றாலும், நில ஆர்ஜிதம் செய்வதில்தான் தடங்கல் வருகிறது. கடந்த ஆறு மாத காலமாகத் தமிழக முதல்வரும் இது விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துச் செயல்படுகிறார். இதனை இன்னும் நாம் துரிதப்படுத்த வேண்டும். ஏனெனில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு வரும்போது விமான நிலையம் மிகச் சிறப்பாக இருந்தால்தான் அவர்களுக்கு இங்கே முதலீடு செய்யும் நம்பிக்கை வரும். இது தொடர்பாகவும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறோம்.

அடுத்ததாக, எங்களது இலக்கு, உணவுப்பதப்படுத்துதலுக்கான பாலிசி உருவாக்கமாகும். திண்டிவனம், கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் மூன்று உணவுப்பூங்காக்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அவற்றைச் செயல்படுத்து வதற்கான பெரிய முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம். இதற்காக, தமிழக அரசோடு இணைந்து செயல்படுகிறோம்.

அதேபோல, தமிழ்நாட்டுக்கென  கோழிப்பண்ணை தொடர்பான கொள்கைத் திட்டம் ஒன்று தேவை. நாமக்கல் பகுதியில் கோழிப் பண்ணைகளைப் பெரிய அளவில் அமைக்க  சில நிறுவனங்கள் மட்டுமே முயற்சித்து வருகின்றன. இதனை இன்னும் விரிவுபடுத்தினால் தமிழகத்திற்கு 5 பில்லியன் டாலர் வரை வருமானத்தை எதிர்பார்க்கலாம். இதற்காக ஒரு தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும் என தமிழக அரசை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

அதேபோல, நாமக்கல் பகுதியில் டிரான்ஸ்போர்ட் வணிகம் முதன்மையாக இருக்கிறது. ஆனால், நம்மிடம் தேசிய அளவிலான போக்கு வரத்து நிறுவனக் கொள்கை எதுவும் கிடையாது. எனவே, இதை உருவாக்கு வதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். எந்தவொரு கொள்கையை யும் ஒரே ஆண்டிற்குள் உருவாக்கி, அரசின் ஒப்புதல் பெற்று நடைமுறைப் படுத்த முடியாது. எனவே, இவை அனைத்தும் தொடர்ச்சியாக அடுத் தடுத்த தலைமையின் கீழும் செயல் படுத்தப்பட்டு நடைமுறைக்கு வரும்.

கடந்த ஓராண்டில் நடந்த  இன்னொரு முக்கியமான விஷயம், சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ் சிஸ்டமாகும். இதற்கான  சட்டம், (business facilitation act) கடந்த நவம்பரில் கொண்டுவரப் பட்டது. அதன்பிறகு, பிசினஸ் தொடங்குவதற்கான அனுமதி பெறும் நடைமுறை விரைவுபடுத்தப்பட்டது. சி.ஐ.ஐ கூட்டமைப்பைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களுக்கே 21 நாள்களுக்குள் அனுமதி கிடைத்தது. இந்தச் சட்ட மானது, புதிதாகத் தொழில் தொடங்கு பவர்களுக்கு மட்டுமின்றி, ஏற்கெனவே தொழில் நடத்தி வருபவர்களுக்கும் அவர்களது தொழில் விரிவாக்கம் தொடர்பான அனுமதிகளையும் விரைவாகப் பெற உதவும்படி, சட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறோம்’’ என்றார்.

“கடந்த ஓரிரு ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு குறித்து பிராண்டிங் செய்வதில் முனைப்பு காட்டாததால், நமக்கு வரவேண்டிய தொழில் வாய்ப்புகள் வேறு மாநிலங்களுக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டது. இதற்கு நம் மாநில அரசியலில் ஏற்பட்ட எதிர்பாராத சில நெருக்கடிகள், பெருவெள்ளம், ஜல்லிக் கட்டுப் போராட்டம், வர்தா புயல் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. அடுத்து வரவுள்ள தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், தொழில் நிறுவனங்களின் வருகை அதிகரிக்கக்கூடும்” என்றவர், ‘‘தற்போதைய முதல்வரை எளிதில் அணுகி விவாதிக்கும் சூழல் அமைந்திருப்பது நல்லதொரு அம்சமாகும். அவர், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்த கருத்துகளை ஆர்வத்தோடு அணுகுகிறார். எனவே, எங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு எளிதில் கொண்டு செல்ல முடிந்தது’’ என்று மகிழ்ச்சி பொங்கப் பேசி முடித்தார் ரவிச்சந்திரன்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட இவரை மனதாரப் பாராட்டுவோம்!

- தெ.சு.கவுதமன்

உணவுப் பூங்கா, கார்மென்ட் கிளஸ்டர்... சாதித்த தமிழக சி.ஐ.ஐ!

சி.ஐ.ஐ. சென்னைக்கு புதிய நிர்வாகிகள்!

சி.ஐ.ஐ அமைப்பின் சென்னை பிராந்தி யத்தின் தலைவராக பி.ஜி.ஆர். எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் வி.ஆர்.மகாதேவன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சி.ஐ.ஐ அமைப்பின் சென்னை பிராந்தியத்தின் துணைத் தலைவாக லுகாஸ் டி.வி.எஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பிரியம்வதா பாலாஜி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் அடுத்த ஓராண்டு காலத்துக்கு இந்தப் பொறுப்பை வகிப்பார்கள்.