நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அல்காரிதம் டிரேடிங்... நல்லதா, கெட்டதா?

அல்காரிதம் டிரேடிங்... நல்லதா, கெட்டதா?
பிரீமியம் ஸ்டோரி
News
அல்காரிதம் டிரேடிங்... நல்லதா, கெட்டதா?

அல்காரிதம் டிரேடிங்... நல்லதா, கெட்டதா?

ங்குச் சந்தை வர்த்தகத்தில் ‘அல்காரிதம்’ என்ற வார்த்தைப் பிரபலமாகி வருகிறது.  ‘அல்காரிதம் டிரேடிங்’ என்றால் என்ன என்று தெரியாமலே பலரும் அதில் இறங்கி லாபம் சம்பாதித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். உண்மையில், ‘அல்காரிதம் டிரேடிங்’ என்றால் என்ன, அது எப்படிச் செயல்படுத்தப்படுகிறது, அதன் ப்ளஸ், மைனஸ் என்ன என அல்காரிதம் டிரேடிங்கில் அனுபவமுள்ள நிதி ஆலோசகர் விஜயானந்த் வெங்கட்ராமனிடம் கேட்டோம். அதுபற்றி அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

அல்காரிதம் டிரேடிங்... நல்லதா, கெட்டதா?

   அல்காரிதம் என்பது....

“அல்காரிதம் டிரேடிங் என்பது டெக்னிக்கல் அனாலிசிஸின் அடுத்தபடி எனலாம். டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது விலைநகர்வுகளை வைத்து ஒரு முடிவுக்கு வருவது. அல்காரிதம் டிரேடிங் என்பது, கடந்த காலப் புள்ளிவிவரங்களை வைத்து மறுஆய்வு (Backtesting) செய்து, அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைக் கண்டறிவது. அந்த ஒற்றுமை, வேற்றுமைகளை வைத்துப் பங்குகளின் அடுத்த நகர்வைக் கணிக்க முடியும்.

   மூன்று வகை...


இதில் அல்காரிதமிக், குவான்டிட்டேட்டிவ் மற்றும் ஹை ஃப்ரீக்வன்ஸி என மூன்று வகைகள் உள்ளன. இதில், தினசரி விலைநகர்வுகளை வைத்து நாம் உருவாக்கும் டெய்லி மாடல், மணிக்கணக்கிலான விலை நகர்வுகளை வைத்து உருவாக்கும் அவர்லி மாடல் மற்றும் அடுத்த டிக் பாயின்ட் எனப்படும் அடுத்த உடனடி விலைநகர்வு மாடல் என நமக்கேற்றவாறு உருவாக்கலாம். டெய்லி டேட்டா எனில் நாளை என்ன, டிக் டேட்டா எனில்  அடுத்த டிக் என்ன என்பதை அறிவதே அல்காரிதம் டிரேடிங்.

அல்காரிதம் டிரேடிங்... நல்லதா, கெட்டதா?


இவற்றில் டெய்லி மாடல், அவர்லி மாடல் போன்றவை குறைந்த மற்றும் மிதமான ஃப்ரீக்வன்ஸியில் செயல்படுபவை. ஹை ஃப்ரீகுவன்ஸி அனாலிட்டிக் ஸுக்கு டிக் டேட்டா அவசியம்.  ஏனெனில், எந்த அளவுக்கு அதிகமாக டேட்டா கிடைக் கிறதோ, அதைப் பொறுத்தே நம் மால் ஹை ஃப்ரிக்வன்ஸி டிரேடிங் மாடலை உருவாக்க முடியும்.

இந்த ஹை ஃப்ரீகுவன்ஸி அனாலிட்டிக்ஸ் மூலம் சந்தையின் ஒவ்வொரு நொடிக்குமான விலை நகர்வு விவரங்களை எடுத்துக் கொண்டு ஆய்வுசெய்து, அடுத்த நகர்வு எப்படியிருக்கும் என்பதைக் கண்டுபிடிக்கலாம். அதன் மூலம் தான் நாம் பெஸ்ட் ஆஃபர், பெஸ்ட் பிட் (Bid) செய்ய முடியும்.

   லாபமல்ல நோக்கம்


பெரும்பாலான டெக்னிக்கல் அனாலிசிஸ் முறைகள் லாப நோக்கிலான ஆய்வுமுறையாகும். ஆனால், அல்காரிதம் டிரேடிங் அனாலிசிஸ் என்பது காஸ்ட் மினிமைஸிங் ஆய்வு முறையாகும். ஏனெனில், பங்கு வர்த்தகத்தில் நம்முடைய செலவு (Impact cost) என்பது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று. இதைக் கவனிக்காமல்விட்டால், நாம் செய்யும் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபமானது கட்டணங் களுக்கே சரியாக இருக்கும். எனவே, செலவினங்களைக் குறைப்பதே அல்காரிதம் டிரேடிங் முறையின் முதன்மை நோக்கமாக இருக்கும்.

அதாவது, ஒரு பங்கை ரூ.100 கோடிக்கு வாங்கினால் ஒரு செலவு; அதையே ரூ.50 கோடிக்கு வாங்கினால் ஒரு செலவும் ஆகும். இந்தச் செலவைக் குறைத்து, மிகக் குறைவான விலையில் அந்தப் பங்கை வாங்கும் வகையில், ஆர்டரை பிளேஸ் செய்ய வேண்டும். அந்த பாயின்ட்டைக் கணிப்பதுதான் அல்காரிதம் டிரேடிங் முறையின் வேலை. 

இந்த ஹை ஃப்ரீகுவன்ஸி முறை யில், நம்முடைய எக்ஸ்க்யூஷன் ரூல்தான் முக்கியம். மிகக் குறைந்த விலையில் எப்படி வாங்கலாம், செலவை எப்படிக் குறைக்கலாம் என்பதற்கேற்ப மாடலை உருவாக்க வேண்டும். 

அல்காரிதம் டிரேடிங்... நல்லதா, கெட்டதா?

   இண்டெக்ஸுக்கு ஏற்றது

கமாடிட்டி டிரேடிங்கில்தான் அல்கோ டிரேடிங் என்பதே உருவானது. குறிப்பிட்டதொரு பங்கு என்கிற அளவில், அல்கோ டிரேடிங் என்பது பெரிதாக இருக்காது. ஏனெனில், தனிப் பங்குகள் அந்த அளவுக்கான ஹை ஃப்ரீ குவன்ஸி டேட்டாக்களுடன் கிடைப்பது குறைவு. ஹை ஃப்ரீக்வன்ஸி டிரேடிங் என்பது இண்டெக்ஸ், கரன்சி மற்றும் கமாடிட்டி போன்றவற்றில்தான் செய்ய முடியும். காரணம், அதில்தான் அதிக அளவில் டேட்டாக்கள் கிடைக்கும். 

   எப்படித் தயார் செய்வது?


முதலில், நாம் செய்யப்போகும் வர்த்தகத்துக்கான ஐடியாவைப் பிடிக்க வேண்டும். என்ன மாதிரியான டேட்டாக்களை எப்படி ஆய்வு செய்து, என்ன அவுட்புட்டைப் பெறவேண்டும் என்பதற்கான விதிகளை எழுதவேண்டும். அந்த விதிகளைச் செயல்படுத்தும்படி மாடலை புரோகிராம் செய்ய வேண்டும்.

அல்காரிதம் டிரேடிங்... நல்லதா, கெட்டதா?அல்காரிதம் டிரேடிங் முறையில் இரண்டு வகையான ஆய்வு முறைகள் உள்ளன. ஒன்று, ட்ரெண்ட் ஃபாலோயிங். மற்றொன்று, மீன் ரிவர்சல் (Mean Reversal). ட்ரெண்ட் ஃபாலோயிங் என்பது, தொடர்ந்து ஏற்றத்திலேயே சந்தை நகர்ந்துகொண்டிருப்பதைப் பின் தொடர்வது. மீன் ரிவர்சல் என்பது ஏற்றத்தில் இருப்பது நின்று, இறங்க ஆரம்பிப்பது. 

அல்கோ டிரேடிங்கில் சக்சஸ் ரேட் என்பது லாபத்தைப் பொறுத்தது.  ட்ரெண்ட் ஃபாலோயிங் முறையில் சக்சஸ் ரேட்  என்பது 20% இருந்தாலே அதிகம். ஏனெனில், அவை ட்ரெண்ட் இருக்கும்போது மட்டுமே நன்கு வேலை செய்யும். அப்போது லாபமும் அதிகமாகக் கிடைக்கும். மீன் ரிவர்சல் முறை டிரேடிங்கில் சக்சஸ் ரேட் என்பது அதிகம். ஆனால், லாபம் குறைவாகக் கிடைக்கும். 

   வேண்டும் போர்ட்ஃபோலியோ

இப்படி நாம் உருவாக்கும் ஒரு மாடல் எவ்வளவு காலத்துக்கு வேலை செய்யும் என்பது தெரியாது. நம் முடைய மாடல் வேலை செய்யாமலும் போகலாம். எனவே, பாதுகாப்பான முதலீட்டுக்கு நாம் போர்ட்ஃபோலி யோவை உருவாக்குகிறமாதிரி, அல்கோ டிரேடிங் மாடல்களிலும் ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கிக் கொள்ளலாம். இதனால் ஒரு மாடல் நம்மைக் காப்பாற்றாமல் போனாலும், இன்னொரு மாடல் நமக்கு லாபம் தரும்.

அல்காரிதம் டிரேடிங்கில் எந்த ஃப்ரீக்வன்ஸியில் நாம் டிரேடிங் செய்யப் போகிறோம் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். அது நம்முடைய பட்ஜெட், கம்ப்யூட்டிங் பவர், சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தது. எளிமையான அல்கோ மாடல் ஒன்றை உருவாக்க, குறைந்த பட்சம் மூன்று நாள் ஆகலாம். நம்முடைய அக்யூரசியைப் பொறுத்து மாறும். எல்லா மார்க்கெட் சூழலையும் நம்மால் மாடலாக்க முடியாது என்பதும் முக்கியமான விஷயம்.   

அல்காரிதம் டிரேடிங்... நல்லதா, கெட்டதா?

   யாருக்குச் சரியாக இருக்கும்?

அல்கோ டிரேடிங்குக்கான மாடலை உருவாக்கும்போது நம்முடைய என்ட்ரி மற்றும் எக்ஸிட் ரூலை நாம் முடிவு செய்ய வேண்டும். அடுத்து முக்கியமானது, வால்யூம். பங்குகளின் எண்ணிக்கை தான் நமக்கான லாபத்தையும் நஷ்டத்தையும் நிர்ணயம் செய்யப் போகிறது. என்ன பொசிஷன் எடுக்கப்போகிறோம், லாபம் வரும் வரை நாம் எத்தனை முறை இழப்பைச் சந்திக்கத் தயார் என்பதில் நமக்குத் தெளிவு வேண்டும்.

   என்ன தேவை?

அல்கோ டிரேடிங் செய்வதற்கு நமக்கு ஜாவா அல்லது சீ ஷார்பர் அவசியம் தேவை. சிலர் பைதனைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதன் வேகம் அல்கோ டிரேடிங்குக்குப் போதாது. ஏனெனில் அது ஃபைனான்ஷியல் புராசஸ்களுக்காக உருவாக்கப்படவில்லை.

அல்கோ டிரேடிங் அனாலிசிஸுக்குத் தேவையான டேட்டாக்களை நாம் எக்ஸ்சேஞ்சிலிருந்து எடுக்க வேண்டியிருக்கிறது. அந்த டேட்டாக்களை எடுத்து நம்முடைய மாடலில் வைத்து பிராசஸ் செய்து, மீண்டும் எக்ஸ்சேஞ்சுக்கு ஆர்டர் அனுப்ப வேண்டும். டேட்டாவை எடுத்து மீண்டும் அனுப்ப அதிகபட்சம், 4 மில்லி செகண்ட் ஆகும். பலர் இதை விட அட்வான்ட்ஸாக நானோ செகண்டில் செயல்படுத்தி வருவதாகச் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு டிரேடிங்கில் போட்டி இருக்கிறது.

நாம் எவ்வளவு வேகமாக டிரேடிங் செய் கிறோம் என்பதையும் பார்க்கவேண்டி யிருக்கிறது. நாம் நமக்குத் தேவையான டேட்டாக் களை வேகமாகப் பெறுவதற்கு எக்ஸ்சேஞ்சிலேயே நம்முடைய டேட்டா ரிசீவரை வைக்கவேண்டி யிருக்கிறது. டேட்டாக்களைப் பெற ஒரு தொகை உண்டு. அதைச் செலுத்தினால் யாருக்கு வேண்டுமானாலும் எக்ஸ்சேஞ்சான டேட்டாக் களைத் தரும். ஆனால், யார் வேகமாக பிராசஸ் செய்கிறார்களோ, அவர்கள் நல்ல விலையில் ஆர்டர்களைப் பெற முடியும்.

   சரியாக வேலை செய்யவில்லை

சமீபத்திய சந்தை இறக்கத்தின்போது பெரும்பாலும் அனைத்து அல்கோ மாடல்களுமே சரியாகச் செயல்படவில்லை. எனவே, தனி ஒரு அல்கோ சரியாக வேலை செய்யாமல் போனாலும், போர்ட்ஃபோலியோ அல்கோக்கள் பாசிட்டிவான ரிட்டர்னைக் கொடுக்கும் வாய்ப்புள்ளது.

ஆக மொத்தத்தில், நாம் செலவு செய்யும் பணம், நேரம் போன்றவை நமக்கு என்ன பலனைத் தருகிறது என்று பார்ப்பது முக்கியம். நிறுவனங்கள் எல்லாம் பல கோடிகளைச் செலவு செய்து அதீத திறன் கொண்ட கணினிகளையும் பல மாடல்களையும் வைத்துக்கொண்டு, மிக விரைவாக அல்கோ டிரேடிங் செய்கின்றன. அவர்களுக்கு அடுத்த தாக, ஹை நெட்வொர்த் தனிநபர்கள் பெரும்செலவில் அல்கோ மாடல் களை உருவாக்கி டிரேடிங் செய்கிறார்கள். ஒரே ஒரு அல்கோ மாடலை வைத்து, இவர்களின் வேகத்தோடு நம்மால் போட்டி போட முடியாது.

அல்கோ டிரேடிங் என்பது முற்றிலும் நிறுவனங்களுக்கும் ஹை நெட்வொர்த் தனி நபர்களுக்குமானது. நாம் அல்கோ மாடலை உரு வாக்கச் செய்யும் செலவு போக, நம்முடைய வர்த்தக மதிப்புக்கான புரோக்கரேஜ் கட்டணத் தையும் கணக்குப் போட்டுப் பார்த்தால், கையில் ஒன்றுமே இருக்காது. சிறு முதலீட்டாளர்களுக்கு அல்காரிதம் டிரேடிங் என்பதே தேவையில்லாத விஷயம் என்பதே என் கருத்து’’ என்று முடித்தார் விஜயானந்த். இனியாவது சிறு முதலீட்டாளர்கள் அல்கோ டிரேடிங்கைப் பற்றிப் புரிந்துகொண்டு, அதிலிருந்து தள்ளியிருப்பார்கள் என்று
நம்புவோமாக!                          

- ஜெ.சரவணன்

அல்காரிதம் டிரேடிங்... நல்லதா, கெட்டதா?

பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் ரயில் பயணம்!

ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இந்தியா முழுக்க மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு கூட்டங்களை நடத்தி வருகிறது. தமிழகத்தில் இது நாணயம் விகடனுடன் இணைந்து கூட்டங்களை நடத்தி வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சென்னை - கோயம்புத்தூர் சதாப்தி ரயில் பயணம் செய்தவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விளக்கப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் (முதலீட்டாளர் கல்வி) கே.எஸ்.ராவ், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவு தலைவர் வைபவ் சுக், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் இந்த விழிப்பு உணர்வு நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.