
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)
ஃபிக்ஸட் டெபாசிட்டுக்குப் பழகிப்போனவர்கள் நம் நாட்டில் அதிகம். தற்போது வட்டி விகிதம் குறைவாக உள்ளதால், ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட சற்று அதிகமான வருமானத்தைப் பலரும் விரும்புகிறார்கள். அதேசமயம், அதிக ரிஸ்க்கையும் அவர்கள் விரும்புவதில்லை. இதுபோன்ற நபர்களுக்கு உரித்தான ஃபண்டுதான் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட். மூன்று வருட எஃப்.டி-யைவிட இதில் அதிக வருமானம் கிடைக்கும்; அதேசமயம், ரிஸ்க்கும் குறைவு.
இந்த ஃபண்டின் வெற்றியை இது நிர்வகிக்கும் தொகையிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். தற்போது ரூ.25,000 கோடிக்கும் அதிகமான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்டை சங்கரன் நரேன் உட்பட நான்கு ஃபண்ட் மேனேஜர்கள் மிகவும் ஆக்டிவாக நிர்வகித்து வருகின்றனர். இந்த ஃபண்ட், பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகளில் தனது முதலீட்டை மேற்கொள்கிறது. வருமான வரிக்கு இது ஒரு பங்கு சார்ந்த திட்டமாகப் பாவிக்கப்படும்.

தனக்கே சொந்தமான பி/ பிவி (P/BV – Price to Book Value) மாடலை வைத்து இந்த ஃபண்ட், தனது ஈக்விட்டி அலோகேஷனை மாற்றி அமைத்துக்கொள்கிறது. ஈக்விட்டி, 30 சதவிகிதத்திலிருந்து 80% வரை பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து இருக்கும். சந்தை ஏறிக்கொண்டே செல்லும்போது இந்த ஃபண்ட் தனது ஈக்விட்டி சதவிகிதத்தைக் குறைத்துக்கொள்ளும். சந்தை இறங்கும்போது தனது ஈக்விட்டி அலோகேஷனை அதிகரித்துக்கொள்ளும். இந்த ஃபண்டினுடைய தாரக மந்திரம், சந்தை குறையும்போது முதலீட்டாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதுதான். ஆகவே, அதிக ரிஸ்க்குடன் கூடிய அதீத வருமானத்தைத் தேடுபவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம்.

இந்த ஃபண்ட் மற்றும் இந்த வகை ஃபண்டுகள் ஒரு புது கேட்டகிரியாக உருவெடுத்துள்ளன. இந்த ஃபண்டுகளின் ரிஸ்க் லெவல், பேலன்ஸ்டு ஃபண்டுகளைவிடக் குறைவு. அதேசமயம், ஈக்விட்டி சேவிங்ஸ் மற்றும் எம்.ஐ.பி ஃபண்டுகளைவிட ரிஸ்க் அதிகம். இது, இந்த ஃபண்டின் பீட்டாவிலிருந்தே (–0.68) உங்களுக்குத் தெரியும். அதாவது, சந்தையைவிட குறைவான ஏற்ற இறக்கம்.
பங்கு சார்ந்த முதலீட்டில் இதன் டாப் ஹோல்டிங்ஸாக ஹெச்.டி.எஃப்.சி பேங்க், இன்ஃபோசிஸ், மதர்ஸன் சுமி, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் போன்ற பங்குகள் உள்ளன. அதுபோல், ஹெச்.டி.எஃப்.சி பேங்க்,
ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களின் கடன் பத்திரங்கள், இதன் கடன் சார்ந்த போர்ட்ஃபோலியோ வின் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டதன்படி, இந்த ஃபண்ட் மற்றும் அனைத்து பங்கு சார்ந்த ஃபண்டுகள் கொடுக்கும் டிவிடெண்டிற்கும் 10% வரி மூலத்திலேயே பிடிக்கப்படும் என்பதை நினைவில்கொள்வது அவசியம். ஃபண்டை ஒரு வருடத்திற்குமேல் வைத்திருக்கையில், நீண்டகால மூலதன ஆதாய வரி 10% கட்ட வேண்டி வரும். ஒரு வருடத்திற்கு 1 லட்சம் லாபம் வரை வரி ஏதும் கட்ட வேண்டாம்.
தற்போது இந்த ஃபண்ட், தனது போர்ட்ஃபோலியோவில் கிட்டத்தட்ட 34% பங்குகளை வைத்துள்ளது. எஞ்சியவை கடன் பத்திரங்களிலும், ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகளிலும் முதலீடு செய்யப் பட்டுள்ளன.
முதலீடு செய்த 540 நாள்களுக்குள், 15% வரை உள்ள யூனிட்டுகளை எந்தவிதமான வெளியேற்றுக் கட்டணமும் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். அதற்குப்பிறகு வெளியேறினால், முழு முதலீட்டிற்கும் எவ்விதமான வெளியேற்றுக் கட்டணமும் இல்லை.

ரெகுலரான பண வரத்தை விரும்புபவர்கள், எஸ்.டபிள்யூ.பி மூலம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்டதொரு தொகையை எடுத்துக்கொள்ளலாம். நீண்டகால அடிப்படையில் மாதத்திற்கு 0.75% அல்லது வருடத்திற்கு 9 சதவிகித்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த லெவலில் நீண்ட காலத்தில், உங்கள் அசல் குறையாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம்.
ஒவ்வொரு மாதமும் உறுதியான வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம். அதேசமயம், 3 – 5 ஆண்டுகள் குமுலேட்டிவ் டெபாசிட்டிற்குப் பதிலாக இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
குறைவான ரிஸ்க் உடைய, வெளிப்படைத்தன்மை மிகுந்த முதலீட்டைத் தேடுபவர்கள், டெபாசிட்டைவிட சற்று அதிகமான வருமானத்தைத் தேடுபவர்கள், குறைவான வரியுள்ள வருமானத்தைத் தேடுபவர்கள், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள், கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர்கள், 50 வயதைத் தாண்டியவர்கள், மீடியம் டேர்மில் பணம் தேவைப்படுபவர்கள், நீண்ட கால டெபாசிட்டை நாடுபவர்கள், கேஷ் ஃப்ளோ தேவைப்படுபவர்கள் போன்ற அனைவரும் இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.