நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா?

அன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா?

கேள்வி - பதில்

அன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா?

என் மனைவிக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை நான் அன்பளிப்பாகத் தந்துள்ளேன். வீடு என் பெயரில் உள்ளது. அந்த வீட்டை இப்போது வாடகைக்கு விட்டு வருமானம் பெறுகிறோம். இந்த வருமானம் தவிர, என் மனைவிக்கு வேறு வருமானம் இல்லை. இந்த நிலையில், வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டுமா?

அன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா?


திருமுருகன், வத்தலக்குண்டு

கே.ஆர். சத்யநாராயணன், ஆடிட்டர்

‘‘உங்கள் மனைவிக்கு வேறு வருமானம்  இல்லாதபட்சத்தில், அன்பளிப்பாகக் கிடைத்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாடகை வருமானம், வருமான வரி கட்டுவதற்கான வரம்பைத் தாண்டும்போது மட்டும் அவரின் வாடகை வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். அதே போல, கணவரின் வருமானது வருமான வரி வரம்பைத் தாண்டாமல் இருப்பதற்காக, அதாவது, வருமான வரி கட்டுவதைத் தவிர்க்கும் நோக்கில், மனைவிக்கு அந்தச் சொத்தானது அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக வருமான வரித் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் வாடகை வருமானம் கணவரின் வருமானத்துடன் இணைக்கப்பட்டு, கணவரின் பெயரிலேயே வரி செலுத்த நேரிடும்.’’

ரியல் எஸ்டேட்  நிறுவனத்தில் வீட்டு மனைக்காக ஜூன், 2005-ம் ஆண்டிலிருந்து மார்ச், 2010-ம் ஆண்டு வரை மொத்தம் ரூ.20 லட்சம் மாதத் தவணையாகக் கட்டியிருந்தேன். வீட்டு மனை ஏப்ரல், 2011-ம் ஆண்டு என் வசமானது. அதற்கான கிரயப் பத்திரம் ஜூன், 2012-ம் ஆண்டில் போடப்பட்டது. அந்த வீட்டு மனையை வேறொருவருக்கு 2017 ஜூலையில் ரூ.42 லட்சத்திற்கு விற்பனை செய்தேன். மூலதன ஆதாயத்தை எந்தத் தேதியிலிருந்து கணக்கிடுவது?

மகேஷ், செங்கல்பட்டு

அன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா?



பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்


‘‘வீட்டு மனை, அசையாச் சொத்து வகையின்கீழ் வருகிறது. எனவே, அசையாச் சொத்து உரிமை மாற்றச் சட்டப்படி (Transfer of immovable property act) எந்தவொரு அசையாச் சொத்தின் உரிமையும் பத்திரப் பதிவுக்குப்பிறகே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி பார்த்தால், 2011-ம் ஆண்டில் வீட்டுமனை வசமானபோதிலும் 2012-ம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் விற்பனைப் பத்திரம் (சேல்ஸ் டீட்) போடப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தேதியிலிருந்துதான் மூலதன ஆதாயமானது கணக்கிடப்படும்.’’

வருமான வரிவிலக்குப் பெறுவதற்காக இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். அதற்கேற்ற இரண்டு மியூச்சுவல் ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.

அன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா?



ரங்கநாதன், சேலம்

ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்

‘‘இ.எல்.எஸ்.எஸ் என்பது மூன்று ஆண்டுகளுக்கு லாக்-இன் பீரியட் கொண்ட, ஈக்விட்டி பங்குச் சந்தை அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டாகும்.  நீண்டகால செயல்திறன்  அடிப்படையில், ஐ.டி.எஃப்.சி  டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட், எல்&டி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளை நீங்கள் பரிசீலிக்கலாம்.’’

என் மனைவிக்கு வயது 29. அவருக்குப் புற்றுநோய் சிகிச்சைக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கலாமென்று இருக்கிறேன். என் மனைவியின் கர்ப்ப காலத்தில், அவருக்கு இயற்கையாகவே உருவான கருப்பை நீர்க்கட்டி இருப்பது தெரிய வந்தது. அவருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

நாகராஜன், ராஜபாளையம்

அன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா?


பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

‘‘ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்காக விண்ணப்பிக்கும்போது, ஏற்கெனவே உடலிலுள்ள நோய்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் விடுபட்டுவிடாமல் அளித்திட வேண்டும். தற்போதுள்ள பாலிசியின் விதிமுறைகளின்படி, பாலிசி எடுப்பதற்கு முன்பிருந்தே இருப்பதாகக் கண்டறியப்பட்ட நோய்களின் சிகிச்சைக்கு, நான்கு ஆண்டுகள் வரை  பாலிசியில் இழப்பீடு கோர  இயலாது. ஏற்கெனவே, திட்டமிடப்பட்ட எந்தச் சிகிச்சைக்கும் இதனைப் பயன்படுத்த இயலாது. தற்செயலான  அல்லது திடீர் நிகழ்வாக உண்டான நோய்களுக்குச் சிகிச்சையளிக்க மட்டுமே இதனைப் பயன்படுத்த இயலும்.’’

நான் ஒரு மாணவன். எனக்குக் கிடைக்கும் கல்வி உதவித் தொகையிலிருந்து மாதம் ரூ.2,000 வரை சேமிக்க இயலும். இதற்கேற்ற ஆலோசனை கூறுங்கள்.

அன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா?


நிஷாந்த், புதுக்கோட்டை

எஸ்.பாரதிதாசன்,  நிதி ஆலோசகர்


‘‘உங்களுடைய முதலீட்டுக் காலம் எவ்வளவு என்பது தெரியவில்லை என்றாலும், மாணவராக இருப்பதால், ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு தேவை இருக்கலாமென்ற எண்ணத்தில் ஐந்து ஆண்டுகள் முதலீட்டுக்கான யோசனை சொல்கிறேன்.  

மாதாந்திர எஸ்.ஐ.பி முறையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நல்லதொரு சேமிப்பாக இருக்கும். ஐந்து ஆண்டுகால மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பொருத்தமானதாக இருக்கும். ஏ.பி.எஸ்.எல் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி டாப் 200, ஐ.சி.ஐ.சி.ஐ ஃபோகஸ் புளூசிப் மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் பிரித்து முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டுகள் நீண்டகால முதலீட்டுக்கு உகந்ததாக இருக்கும்.’’ 

எனது லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி தொடர்பான ஆவணங்களைப் பெற்றபோது, இன்ஷூரன்ஸ் முகவரிடம் இறுதியாகப் பேசியதிலிருந்து மாறுபட்டிருக்கிறது. தற்போது நான் என்ன செய்வது?

கவிதா, கோவில்பட்டி

அன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா?



கே.பி.மாரியப்பன் இன்ஷூரன்ஸ் நிபுணர்

‘‘பாலிசியில் மாற்றம் இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு அதை வேண்டாம் என மறுக்கும் உரிமை உள்ளது. பிரீ லுக்கிங் பீரியட் (Prelooking period), அதாவது, ஏதாவது  தவறுகளை முகவர் செய்துள்ளாரா எனச் சரிபார்ப்பதற்காகவும், அப்படி தவறு நடந்திருக்கும்பட்சத்தில் அந்தக் காப்பீட்டை ரத்து செய்யவும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தால் 15 நாள்கள் அவகாசம் தரப்படும். உங்கள் கையில் காப்பீடு கிடைத்த 15 நாள்களுக்குள் தகுந்த காரணத்தோடு கடிதம் எழுதி, அத்துடன் காப்பீட்டுப் பத்திரத்தையும் இணைத்து அனுப்பி விட்டால், நிறுவனம் உங்களுடைய பணத்தைத் திருப்பித் தந்துவிடும்.’’

எனக்கு வயது 26. ஆண்டுக்கு ரூ.4 லட்சம் சம்பாதிக்கிறேன். தற்போதைய சூழலில் அதிக ரிஸ்க்கான மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சரியானதாக இருக்குமா?

விக்னேஷ், கும்மிடிபூண்டி

அன்பளிப்பாக வீடு... வருமானத்துக்கு வரி உண்டா?



என்.விஜயகுமார், நிதி ஆலோசகர்

‘‘ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதற்கு, பங்குச் சந்தையின் அனைத்துக் காலச்சூழல்களும் பொருத்த மானவையே. இந்த முறையிலான முதலீட்டில் ரிஸ்க் குறைவே. நீங்கள் இளம்முதலீட்டாளராக இருப்பதால் லார்ஜ் கேப், மிட் கேப், டைவர்சி ஃபைட் ஃபண்டுகள் அனைத்திலும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். தற்போதுள்ள சூழ்நிலையில், செக்டோரல் / திமேட்டிக் / ஸ்மால் கேப், மைக்ரோ கேப் ஃபண்டுகளை முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

பங்குச் சந்தை உச்சத்திலிருக்கும்போதும், கீழிருக்கும்போதும் தொடர்ச்சியாக எஸ்.ஐ.பி முறையில் யூனிட்டுகளை வாங்கும்போது, ரூபாய் மதிப்பு சராசரி படி (Rupee Cost Average) அதிக இழப்பு இருக்காது. இது ரிஸ்க்கைக் குறைப்பதோடு லாபத்தையும் அதிகரிக்கச் செய்யும்.’’

தொகுப்பு : தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.