நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்!

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்!

ஓவியம்: பாரதிராஜா

“என் பெயர் லோகநாதன். வயது 37. நான் எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறேன். என் சொந்த ஊர் திண்டுக்கல். எனக்கு ஐந்து வயது மற்றும் பத்து வயதில் இரண்டு பெண் குழந்தைகள்.

எனது மனைவிக்கு 34 வயது. 2016 முதல் அரசு வேலையில் இருக்கிறார். அவருக்கு ரூ.21,000 சம்பளம். என் மனைவி, குழந்தைகள் என் பெற்றோருடன் என் சொந்த ஊரில் உள்ளனர். நான் மட்டும்  கொல்கத்தாவில் வேலை பார்க்கிறேன். என் சம்பளம் ரூ.55,000. என் சம்பளத்தில் என் செலவு போக,  சில முதலீடுகளைச் செய்துள்ளேன். எனது மனைவி அவரின் சம்பளத்தில் குடும்பச் செலவுகள் போக, ரூ.7,000 வரை முதலீடு செய்துவருகிறார்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்!

நான் 2023-ல் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அப்போது தோராயமாக ரூ.18 லட்சம் கிடைக்க வாய்ப்புள்ளது. பென்ஷன் மாதம் ரூ.20,000 கிடைக்கும். பிறகு நான் ஏதேனும் பிசினஸ் செய்ய முடிவு செய்துள்ளேன்.

முதல் குழந்தையின் மேற்படிப்புக்கு 2025-ல் ரூ.5 லட்சம், இரண்டாவது குழந்தையின் மேற்படிப்புக்கு 2030-ல் ரூ.5 லட்சம்,  முதல் குழந்தையின் திருமணத்துக்கு 2032-ல் ரூ.10 லட்சம், இரண்டாவது குழந்தையின் திருமணத்துக்கு 2037-ல் ரூ.10 லட்சம்,  என் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான கார்ப்பஸ் தொகைக்குப் (அனைத்தும் இன்றைய மதிப்பில்) பணம் சேர்க்க வேண்டும். தவிர, 2022-ல் 1,000 சதுர அடியில் வீடு ஒன்றைக் கட்டவேண்டும்.

என் சம்பளம் ரூ.55,000-ல் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.18,000, பி.எஃப் ரூ.8,000, தங்கமகள் திட்டத்தில் ரூ.2,000, இன்ஷூரன்ஸ் பிரீமியம் மாதம் ரூ.5,000, என் செலவுகள் ரூ.5,000, இதர செலவுகள் ரூ.7,000 போக மீதம் ரூ.10,000 உள்ளது” என்றவர், தன் முதலீடுகள் மற்றும் இன்ஷூரன்ஸ் விவரங்களை மெயில் அனுப்பி வைத்தார்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்!



இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“நீங்கள் ஓய்வுபெற்றாலும் உங்கள் மனைவியின் வருமானம் இருப்பதால், உங்கள் இலக்குகளுக்கான முதலீடுகளைச் செய்வதில் உங்களுக்குச் சிரமம் இருக்காது. நீங்கள் ஏற்கெனவே நிறைய முதலீடுகளைச் செய்துவருவது பாராட்டுக்குரியது. நிறைய இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் எடுத்திருக்கிறீர்கள். அவற்றை எதிர் கால இலக்குகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் முக்கியமாக வரிசைப்படுத்தியிருக்கும் இலக்குகளுக்கு மாதம் ரூ.13,400 முதலீடு செய்தால் போதும். உங்களுக்கு பென்ஷன் இருப்பதால், ஓய்வுக் காலத்துக்குக் கவலைப்பட வேண்டியதில்லை.

நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவரும் ரூ.18 ஆயிரத்தில் உங்கள் இலக்குகளுக்கான முதலீட்டுக்கு ரூ.13,400 ஒதுக்கி விடவும். உங்கள் ஓய்வுக்குப்பிறகு உங்கள் பென்ஷனிலிருந்து இந்த முதலீட்டைத் தொடரவும். உங்கள் மனைவி 24 வருடங்களுக்கு வேலை பார்ப்பார் என்பதால், அவருடைய வருமானத்தைக்கொண்டு குடும்பச் செலவுகளை ஈடுசெய்யலாம். ரூ.18 ஆயிரத்தில் மீதம் ரூ.4,600 இருக்கும். அதற்கான விளக்கத்தைப் பின்னால் சொல்கிறேன்.

அடுத்து உங்கள் முதல் குழந்தையின் மேற்படிப்புக்கு அன்றைய நிலையில் ரூ.8.6 லட்சம் தேவை. இன்ஷூரன்ஸ் மூலமான முதிர்வுத் தொகை ரூ.6 லட்சம் கிடைக்கும். இன்னும் ரூ.2.6 லட்சம் சேர்க்க மாதம் ரூ.1,600 முதலீடு செய்தால் போதும்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்!

இரண்டாவது குழந்தையின் மேற்படிப்புக்கு ரூ.12 லட்சம் தேவை. இன்ஷூரன்ஸ் முதிர்வுத் தொகை ரூ.10 லட்சம் கிடைக்கும். இன்னும் ரூ.2 லட்சம் சேர்க்க, மாதம் ரூ.950 முதலீடு செய்ய வேண்டும்.

முதல் குழந்தையின் திருமணத்துக்கு ரூ.27.6 லட்சம் தேவை. அதற்கு மாதம் ரூ.6,400 முதலீடு செய்ய வேண்டும். இரண்டாவது குழந்தையின் திருமணத்துக்கு ரூ.38.7 லட்சம் தேவை. அதற்கு ரூ.4,500 முதலீடு செய்ய வேண்டும்.

அடுத்ததாக, ஐந்து வருடங்கள் கழித்து 1,000 சதுர அடியில் வீடு வாங்கத் தோராயமாக ரூ.21 லட்சம் ஆகக்கூடும். உங்கள் சம்பளத்தில் தற்போது மீதப்படும் ரூ.10 ஆயிரத்தை முதலீடு செய்துவந்தால், ரூ.8.14 லட்சம் கிடைக்கக்கூடும். மீதம் ரூ.12.86 லட்சம் தேவை. உங்களுக்கு ஓய்வு பெறும்போது கிடைக்கும் செட்டில்மென்ட் தொகை ரூ.18 லட்சத்திலிருந்து ரூ.13 லட்சத்தை இதற்கு எடுத்துக்கொள்ளவும். மீதமுள்ள ரூ.5 லட்சத்தை பிசினஸ் செய்ய பயன்படுத்திக் கொள்ளவும்.

அடுத்ததாக, ஓய்வுக் காலத்தில் அதாவது, உங்கள் மனைவி ஓய்வுபெறும்போது, தற்போதைய குடும்பச் செலவுகளின் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால், மாதம் ரூ.66 ஆயிரம் தேவை. உங்களின் பென்ஷன் ரூ.20 ஆயிரத்தைக் கழித்தால் மீதம் ரூ.46 ஆயிரம் தேவை. அதற்கு கார்ப்பஸ் தொகையாக ரூ.1.3 கோடி தேவை.

 நீங்கள் ஓய்வுபெற்றவுடன், உங்களுக்குக் கிடைக்கும் பென்ஷனில் இலக்குகளுக்கான முதலீடு ரூ.13,400 போக, மீதமுள்ள ரூ.6,400-ஐ உங்கள் மனைவி ஓய்வுபெறும் வரை முதலீடு செய்தால் ரூ.1.06 கோடி கிடைக்கும்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்!

தற்போது நீங்கள் செய்துவரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மீதமுள்ள ரூ.4,600-யை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ரூ.6 லட்சம் கிடைக்கும். இதை மறுமுதலீடு செய்வதன்  மூலமும், உங்கள் மனைவியின் இன்ஷூரன்ஸ் முதிர்வுத் தொகையைக்கொண்டும் கார்ப்பஸ் தொகையை முழுமையாகச் சேர்க்க முடியும்.

உங்கள் பிசினஸ் மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு அவசர கால நிதியை உருவாக்கிக்கொள்ளவும். நிறைய ஃபண்டுகளைத் தவிர்த்து,  இங்கே சொல்லப்படும் பரிந்துரையை ஃபாலோ செய்யவும். உங்கள் மனைவி தற்போது செய்துவரும் முதலீடுகளை உங்கள் ஓய்வுக் காலத்துக்கு முந்தைய காலத்துக்கான அவசர கால நிதியாக வைத்துக் கொள்ளவும்.

பரிந்துரை : ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ரூ.1,800, மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ரூ.1,800, மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோகஸ்டு மல்டி கேப் 35 ஃபண்ட் ரூ.3,600, ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட் ரூ.3,600, மிரே அஸெட் எமர்ஜிங் பிசினஸ் ரூ.2,700, எல் அண்டு டி எமர்ஜிங் பிசினஸ் ஃபண்ட் ரூ.2,700, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால் கேப் ஃபண்ட் ரூ.1,800.”

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்கு மானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878                     

- கா.முத்துசூரியா

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 30 - விருப்ப ஓய்வு... வீடு... பிசினஸ்!

உங்களுக்கும்  நிதி ஆலோசனை வேண்டுமா?

finplan@vikatan.com  என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களைக் குறிப்பிட்டு  குடும்ப புகைப்படங்களுடன் அனுப்புங்கள்.

உங்கள் செல்போன் நம்பரைத் தவறாமல் குறிப்பிடவும்.

தொடர்புக்கு:  9940415222