நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வருமான வரிக் கணக்குத் தாக்கல்... நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா?

வருமான வரிக் கணக்குத் தாக்கல்... நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா?
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரிக் கணக்குத் தாக்கல்... நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா?

ப.முகைதீன் சேக்தாவூது

டந்த 31.3.2017-ம் தேதியுடன் முடிந்துபோன சென்ற நிதியாண்டுக்கு, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய கடைசித் தேதி இந்த மாதம் 31 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யத் தவறி யவர்களுக்கும், ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள வரிக் கணக்கில் ‘விடுபாடுகள்’ (Omissions) இருந்தால், அதனைத் திருத்தி அமைத்துக்   கொள்ளவும் இந்தக் ‘காலநீட்டிப்பு’ அருமையான வாய்ப்பு. ஆனால்...

வருமான வரிக் கணக்குத் தாக்கல்... நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா?

   ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகை...

இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. கடந்த 08.11.2016-க்கும், 30.12.2016-க்கும் இடைப்பட்ட தேதிகளில் வங்கிகளில் வைப்பீடு (Deposit) செய்யப்பட்ட ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகை பற்றியதுதான் அந்தச் சிக்கல்.

மேற்சொன்ன தேதிகள், ‘பணமதிப்பு நீக்க’ நடவடிக்கை நடைமுறையில் இருந்த காலமாகும். பணமதிப்பு நீக்கத்தின் நோக்கம், கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்ட பணத்தை வெளியே கொண்டுவருவதுதான். அதற்காகத் தரப்பட்ட அப்போதைய அவகாசம்தான் இது. இந்த நாள்களில், வங்கிகளில், அவரவர் சொந்தக் கணக்கு மற்றும் கடன் கணக்குகளில் (Loan Account) செலுத்தப்பட்ட தொகையானது ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், அது பற்றிய விவரம் வருமான வரிக் கணக்குடன் தெரிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு செலுத்தப் பட்ட தொகை, கணக்கில் காட்டப்படாமல் ‘விடுபட்ட வருமானம்’ எனில், தற்போது கணக்கில் சேர்த்து, அதற்கான வருமான வரியைச் செலுத்த வேண்டும். இத்துடன், அந்தப் பணம் எப்போது வந்தது, எந்த வகையான வருமானம் என்ற விவரங்களையும் விவரிக்க வேண்டும்.

சரியான விவரங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அந்தத் தொகைக்கு அதிகப்படியான வருமான வரி, அதற்கான வட்டி, அபராதம் முதலியனவும் விதிக்கப்படலாம். சட்டரீதியான பிற நடவடிக்கைகளுக்கும் ஆட்பட வேண்டியிருக்கும் என்பதையும் அரசு ஊழியர்கள் மறக்கக்கூடாது.

   ரூ.5 ஆயிரத்துக்கே அனுமதி

வருமான வரிக் கணக்குத் தாக்கல்... நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா?


அரசு ஊழியர் அல்லாத மற்றவர்கள், ரூ.2 லட்சத்தைத் தாராளமாக வங்கிக் கணக்கில் வைத்திருந்திருக்கலாம். ஆனால், அரசு ஊழியர்களைப் பொறுத்த வரை, அப்படி வைத்திருக்க முடியாது. காரணம், ஊதியம் தவிர, வேறு பணத்தைப் பிறரிட மிருந்து பெற தெளிவான வரை யறைகள் உண்டு. அந்த வரை யறைகளைக் கொஞ்சம் பாருங்கள்.

* திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் தமிழக அரசு ஊழியர் ரூ.5,000-க்கும் அதிகமான அன்பளிப்பு அல்லது பரிசு பெற அரசின் அனுமதி தேவை.

* அரசு மருத்துவர், கல்விக் கூடங்களிலிருந்து வரும் மாணவர் களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யலாம். அதற்குக் கட்டணமும் (Fee)  பெறலாம். ஆனால், அவ்வாறு பெறப்படும் தொகையானது ஓர் ஆண்டுக்கு ரூ.25,000-க்குமேல் இருக்கக்கூடாது.

* தமிழக அரசு ஊழியர் தேவைப்பட்டால் உறவினரிட மிருந்தோ, நண்பரிடமிருந்தோ தனது ஒரு மாத சம்பளத்துக்கு மிகாத தொகையை வட்டியில்லா கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.

* கூட்டுக் குடும்பத்தில் உறுப்பின ராக உள்ள, இந்து மதம் சார்ந்த தமிழக அரசு ஊழியர் ஒருவர், தாம் வசித்துவரும் பாகப்பிரிவினை செய்யப்படாத வீட்டைப் பழுது பார்க்க, தனது பங்களிப்பாகப் பணம் தரலாம். ஆனால், அவ்வாறான தொகை ரூ.50,000-க்கு அதிகமானால் உரிய அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

* அசையும் சொத்து (Movable Property) எனப்படும் நகை, பங்குகள், கடன் பத்திரங்கள், கார், மோட்டார் சைக்கிள், ஃபிரிஜ் முதலானவற்றை ஏ பிரிவினர் ரூ.80,000 வரையும், பி பிரிவினர் ரூ.60,000 வரையும், சி பிரிவினர் ரூ.40,000 வரையும், டி பிரிவினர் ரூ.20,000 வரையும் என ஒவ்வொரு பிரிவு ஊழியரும் தனக்கேற்ற வரையறைப்படி வாங்கலாம். இந்தச் சொத்துகள் வரையறைக்கு மேற்பட்டால், ஒரு மாதத்துக்குள் உரிய அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

* மனை வாங்க, வீடு வாங்க, வீடுகட்டப் பணம் தேவைப்பட்டால், தன் உறவினர் மற்றும் நெருங்கிய நண்பரிடம், ரூ.3 லட்சம் வரை வட்டியில்லாத தற்காலிகக் கடன் பெறலாம். இதற்கு உரிய அதிகாரியின் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்தச் சலுகை, பி, சி, டி. பிரிவினருக்கு மட்டுமே.

வருமான வரிக் கணக்குத் தாக்கல்... நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடு அரசு ஊழியர்களுக்கு ‘செக்’கா?

இந்த வரையறைப்படி பார்த் தால், அரசு ஊழியர்கள் பணமோ, சொத்தோ வைத்திருக்கக் கூடாதா என்று கேட்கலாம். தாராளமாக வைத்திருக்கலாம். அந்தப் பணம், நகை, சொத்து போன்றவை ஊழியருக்குக் கிடைத்த விதம், அதற்காகப் பெறப்பட்ட அனுமதி முதலான விவரங்கள், ஊழியரின் சொத்து விவரப் பட்டியலில் (கடன் உட்பட) இடம் பெற்றிருக்க வேண்டும். சொத்து விவரமானது 2005, 2010, 2015, 2020 என ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சமர்ப்பிக்கப்பட வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெறாத சொத்து, கணக்கில் வராததாகக் கருதப்படும்.

சரி, தமிழக அரசு ஊழியர்களுக்குப் பணப் பரிவர்த்தனை செய்ய இத்தனை நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் இருக்கும்போது, பணமதிப்பு நீக்க காலமான 08.11.2016 முதல் 30.12.2016 க்குள் ரூ.2 லட்சம் அளவுக்கு வங்கியில் வைப்பீடு செய்ய வாய்ப்பே இருக்காதா என்று நீங்கள் கேட்கலாம். வாய்ப்புண்டு. அவை பின்வரும் கணக்கில் வந்தவையாக மட்டுமே இருக்க வேண்டும்.

* தமிழக அரசு ஊழியர் ஒருவர், தனது பொது வருங்கால வைப்பு நிதி யிலிருந்து கல்வி, திருமணம், மருத்துவம் போன்ற செலவுகளுக்காக முன்பணம் பெறமுடியும். பணமதிப்பு நீக்க நடவடிக்கை நாளான 8.11.2016-க்கு முன்பு, அவரது வங்கிக் கணக்கில் இ.சி.எஸ் மூலம் செலுத்தப்பட்ட முன்பணத்தை ரொக்கமாக எடுத்து வைத்திருந்து செலவு செய்ய முற்படும்போது, பண மதிப்பு நீக்கம் நடைமுறைக்கு வந்திருக்கும்பட்சத்தில், அந்த ரொக்கமானது மீண்டும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருக்கலாம்.

* வீடு கட்டும் முன் பணமாக ரூ.25 லட்சம் வரை அரசுக் கடன் பெற்ற ஓர் ஊழியர், கட்டுமானச் செலவுகளுக்காக பணத்தை எடுத்திருந்த நிலையில், பணமதிப்பு நீக்கம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து திருப்பிச் செலுத்தி இருக்கலாம்.

* ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சமர்ப்பிக்கப்படும் தனது சொத்து விவர (Property Statement) பட்டியலில், 31.12.2015 அன்று தனது வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சம் இருப்பில் (Closing Balance) உள்ளதாக ஆவண ஆதாரம் சமர்ப்பித்திருந்த ஊழியர் ஒருவர், தனது வீட்டை விஸ்தரிக்க ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான ஒரு தொகையைத் தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்திருக்கலாம்.  இந்த வழிகளில் வந்த பணம் எதுவும் வருமானம் என்கிற வகையில் வராது. இப்படிவந்த பணம் எதுவுமே விதி மீறலுக்கு உட்பட்டதல்ல. எனவே, தயக்கமின்றி வருமான வரிக் கணக்கை மறுதாக்கல் செய்யலாம்; முதல் தாக்கலும் செய்யலாம். 

மேலே சொல்லப்பட்டுள்ள இனங்கள் தவிர, பிற வகை வங்கி வைப்பீடுகள் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாகச் செலுத்தப்பட்டிருப்பின், அரசு ஊழியருக்கான பண வரையறையைக் கருத்தில் கொண்டு, செலுத்தப்பட்ட தொகை பற்றிய விவரங்களை நன்றாக ஞாபகப்படுத்திப் பார்த்து, அது தொடர்பான வங்கிப் பரிவர்த்தனை விவரங்களைத் தெரிவிக்கலாம். வரிக் கணக்கையும் தாக்கல் செய்யலாம்.

‘நேர்மையானவர்கள் அஞ்சத் தேவையில்லை’ என்பது பிரதமரின் அறைகூவல். ‘தூய்மையாக வருக’ (come clean) என்பது வருமான வரித்துறையின் வரவேற்பு. மொத்தத்தில், கடந்த காலத்தில் தவறு செய்திருந்தால், தப்பிக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்!

படங்கள்: சு.குமரேசன், கே.ஜெரோம்

படிவம் 26AS அவசியம்!

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்முன் படிவம் 26AS-யைப் பார்ப்பது அவசியம். வருமான வரித் துறையின் இணையதளத்தில் காணக் கிடைக்கும் இந்தப் படிவத்தில், பின்கண்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

* ஊழியரின் சம்பளம் வழங்கும் அதிகாரியால் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி, வங்கிக் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியின் கூட்டுத் தொகை.

* அதிக தொகைக்குப் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்ட விவரங்கள் முதலானவை.

(அரசு ஊழியரைப் பொறுத்தவரை சம்பளப் பட்டியல் அடையாள (Bill index number) எண்ணை, சம்பளம் தரும் அதிகாரி, அவர் மூன்று மாதத்துக்கு ஒருமுறை வருமான வரித் துறைக்கு அனுப்பும் படிவம் 24Q-ல் சரியாக குறிப்பிட்டிருப்பதால், பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியில் பிழை இருக்காது!)