
ஓவியம்: அரஸ்
“அவசர மீட்டிங்குக்காக மும்பை வந்திருக்கேன். வாட்ஸ்அப்ல கேள்விகளை அனுப்புங்கள்”என்று ஷேர்லக் சொன்னதும், தயாராக இருந்த கேள்விகளை அனுப்பி வைத்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில், நம் மெயிலுக்குப் பதில்களை அனுப்பி வைத்தார் ஷேர்லக். இதோ நம் கேள்விகளும் அவரின் பதில்களும்...
ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனக் கடன் பத்திர ரேட்டிங்கை உயர்த்தியிருக்கிறதே மூடிஸ் நிறுவனம்?
“இந்த நிறுவனத்தின் மீதான கவர்ச்சி அதிகமாகி வருகிறது. ஸ்டீல் துறையில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் இந்த நிறுவனத்தின் கடன் பத்திரத்துக்கான ரேட்டிங்கை சர்வதேச நிதி முதலீடு மற்றும் ரேட்டிங் நிறுவனமான மூடீஸ் உயர்த்தியுள்ளது. பிஏ3 என்ற அளவில் இருந்த ரேட்டிங்கை பிஏ2-வாக உயர்த்தியுள்ளது. கடந்த வாரம், ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனமும் இந்த நிறுவ னத்துக்கான ரேட்டிங்கை நெகட்டிவிலிருந்து சமநிலைக்கு உயர்த்தியது.’’

அடுத்த நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்கிறதே க்ரிசில்?
“ஏற்கெனவே மூடிஸ் நிறுவனமும் இந்தியப் பொருளாதாரத் தின்மீது பாசிட்டிவான கணிப்பை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது க்ரிசில் நிறுவனமும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. க்ரிசில் நிறுவனம் தனது கணிப்புப்படி, நம்முடைய ஜி.டி.பி வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு ஜி.எஸ்.டி உள்ளிட்ட சீர்திருத்தங்களின் பலன்கள் தெரிய ஆரம்பித்திருப்பதும், வாராக் கடனை மீட்கும்படியான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டிருப்பதும்தான் காரணங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், நமது ஜி.டி.பி வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரேட்டிங் நிறுவனங்களின் கணிப்புப் படி, நம்முடைய பொருளாதாரம் வளர்ச்சியடையும்பட்சத்தில் நம் பங்குச் சந்தைகளும் நல்ல வளர்ச்சியை அடைய வாய்ப்புள்ளது.”
டாடா மோட்டார்ஸ் நிதிநிலை அறிக்கை வாட்ஸ்அப்பில் கசிந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறதே செபி?
“டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை, சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையம் செபி வெளியிடுவதற்கு முன்பே வாட்ஸ்அப்பில் வெளியானது. இதுபோன்று முன்கூட்டியே நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுவதில் பங்கு வர்த்தகத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு நிதி நிலை அறிக்கை வாட்ஸ்அப்பில் வெளியானது குறித்து விசாரிக்க செபி உத்தரவிட்டிருக்கிறது.”
அதானி குழும நிறுவனப் பங்குகள், கடந்த வாரத்தில் அதிகமாக இறக்கம் கண்டிருக்கின்றனவே?
“பாஜக எம்.பி.யான சுப்ரமணியன் சுவாமி, வாராக் கடன் அதிகமாக வைத்துள்ளதில் முதலில் அதானிதான் இருக்கிறார் என்று கூறியுள்ளார். ரூ.72 ஆயிரம் கோடி கடனை அவர் திரும்பக் கட்ட வேண்டும் எனவும், அவற்றை மீட்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப் போக, அதானி குழும நிறுவனப் பங்குகள் கடந்த வாரத்தில் அடுத்தடுத்த வர்த்தக நாள்களில் தொடர்ந்து இறக்கம் அடைந்தன. முன்பு கெஜ்ரிவால் வெளியிடும் கருத்துகளால் பங்கு வர்த்தகர்கள் பீதியடைவார்கள். இப்போது சுப்ரமணியன் சுவாமியின் கருத்துகளால் வர்த்தகர்கள் பீதியடை கிறார்கள்.”
வக்ராங்கி நிறுவனப் பங்கு விலை ஏற்றம் கண்டிருக்கிறதே?
“ஐ.டி துறை சார்ந்த நிறுவனமான வக்ராங்கி நிறுவனப் பங்கு எஃப்.டி.எஸ்.இ, இண்டெக்ஸில் நுழைந்திருக் கிறது. இதனால், கடந்த வாரம் புதன் கிழமை ரூ.178 என்ற நிலையில் அதன் தற்போதைய உச்ச வரம்பைத் தொட்டு வர்த்தகமானது. மார்ச் 16 முதல் இந்த இண்டெக்ஸில் அது வர்த்தகமாகும். அரசின் இ-.கவர்னன்ஸ் சேவையில் இந்த நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது.”
சந்தை வீழ்ச்சிக்கு வங்கிப் பங்குகள்தான் காரணமாக இருந்தன. இறக்கம் மேலும் தொடருமா?
“கடந்த 2017 டிசம்பர் 7- ம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தை, கடந்த வாரத்தில் பெரிய இறக்கத்தைச் சந்தித்திருக்கிறது. கடந்த ஆறு வர்த்தக நாள்களிலும் தொடர்ந்து சென்செக்ஸ் இறக்கத்தில் தான் வர்த்தகமானது. காரணம், வங்கிப் பங்குகள்தான். பஞ்சாப் நேஷனல் பேங்க், நீரவ் மோடிக்கு வழங்கிய கடன் மோசடி செய்தியால் பெரும்பாலான வங்கிப் பங்குகள் பாதிக்கப்பட்டன. சமீபத்தில், நீரவ் மோடி குழும நிறுவ னங்களுக்கு வங்கிகள் அளித்துள்ள கடன் பட்டியலும் வெளியானது.
இதில் அதிகபட்சமாக கனரா பேங்க் 19.5%, பஞ்சாப் நேஷனல் பேங்க் 14.7%, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் 12.3% வீழ்ச்சி கண்டுள்ளது. எஸ்.பி.ஐ 10.1% வீழ்ச்சி யடைந்துள்ளது. சென்செக்ஸ் 33000 என்ற நிலைக்கு அருகில் சென்று சோதித்தது. நிஃப்டி 10100 என்ற நிலையை நெருங்கியது.
ஏற்கெனவே, சர்வதேசக் காரணிகள் சந்தைக்கு நெகட்டிவாக உள்ள நிலையில், வங்கிப் பங்குகளின் அதீத இறக்கம் சந்தையை வெகுவாகப் பாதித்துள்ளது. வார இறுதியில், சந்தை சற்று இறக்கத்திலிருந்து மீண்டு வந்திருந்தாலும் வங்கிப் பங்கு களில் ஏற்பட்டுள்ள இந்தத் தாக்கம், குறுகிய காலத்துக்குத் தொடரும் வாய்ப்புகளே உள்ளன.”
புரமோட்டர்கள் அடமானம் வைத்திருந்த பங்குகளின் மதிப்பு குறைந்திருக்கிறதே?
“பங்குகளை அடமானம் வைத்துள்ள பட்டியலிட்டப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் 2,991-ஆக இருந்தது, பிப்ரவரியில் 3,062-ஆக உயர்ந்துள்ளது. ஆனால்,பி.எஸ்.இ-யில் உள்ள நிறுவனங்களின் அடமானம் வைக்கப் பட்ட பங்குகளின் மதிப்பு 6.88% குறைந்துள்ளது. அதாவது, ரூ.2.72 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.54 லட்சமாகக் குறைந்துள்ளது.
இதற்கு, சமீபத்தில் சந்தையில் ஏற்பட்ட திடீர் இறக்கமே காரணம். தொடர்ந்து இறக்கம் கண்டால், அடமானம் வாங்கியவர்கள் பங்குகளை விற்றுவிடும் அபாயம் இருக்கிறது. அந்த வகையில், அதிகமாகப் பங்குகளை அடமானம் வைத்திருக்கும் பங்குகள் மற்றும் அதிக விலை இறக்கம் கண்டுள்ள அடமானம் வைக்கப் பட்டிருக்கும் பங்குகளில் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.”
மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் மூன்றாவது பெரிய வங்கியாக உயர்ந்திருக்கிறதே கோட்டக் மஹிந்திரா பேங்க்?
“வங்கிப் பங்குகள் பலவும் தொடர்ந்து இறக்கத்தைச் சந்தித்து வந்தாலும் சில வங்கிப் பங்குகள் பாசிட்டிவான போக்கில் வர்த்தகமாகி வருகின்றன. அவற்றில் ஒன்றாக கோட்டக் மஹிந்திரா பேங்க் உள்ளது.
பெரும்பாலான வங்கிப் பங்குகள் இறக்கமடைந்ததால், மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அடிப்படையில் மூன்றாவது பெரிய வங்கி என்ற இடத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியைப் பின்னுக்குத் தள்ளி, கோட்டக் மஹிந்திரா பேங்க் பிடித்துள்ளது. இதன் தற்போதைய மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன், ரூ.2.06 லட்சம் கோடி ஆகும். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியைக் காட்டிலும் ரூ.22,531 கோடி அதிகம். அதேநேரம் தொழிலிலும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது’’ என்றார் ஷேர்லக்.
‘‘இந்த வாரம் கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதும் உண்டா’’ என நாம் கேட்டிருந்த கேள்விக்கு, ‘‘அடுத்த வாரம் உம்மை நேரில் வந்து சந்திக்கிறேன்’’ என்று பதில் சொல்லி யிருந்தார். நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம்!
பந்தன் பேங்க் ஐ.பி.ஓ
தனியார் வங்கியான பந்தன் பேங்க், பொதுப் பங்கு வெளியிடுவதற்கு முன்வந்து செபியிடம் விண்ணப்பித்து, அதற்கான ஒப்புதலையும் பெற்றுவிட்டது. இந்த ஐ.பி.ஓ வெளியீடு மூலம் பந்தன் பேங்க் 2.16 கோடி பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. இந்தப் பங்கு விற்பனையின் மூலம் ரூ.4,473 கோடி நிதித்திரட்ட திட்டமிட்டுள்ளது. பங்கு வெளியீடு மார்ச் 15-ம் தேதி தொடங்கி மார்ச் 19-ல் நிறைவடைகிறது. பங்கின் விலைப்பட்டையானது ரூ.370 - 375 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2014-ல்தான் வங்கிக்கான உரிமத்தை ரிசர்வ் வங்கியிடம் பந்தன் பேங்க் பெற்றது.
பாரத் டைனமிக்ஸ் ஐ.பி.ஓ
அரசுத் துறையைச் சார்ந்த பாதுகாப்புத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் பொதுப் பங்கு வெளியிடுவதற்கு (ஐபிஓ) செபியிடம் ஒப்புதல் பெற்றிருக்கிறது. இந்த வெளியீட்டின் மூலம் ரூ.960 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது.
பங்கின் விலைப்பட்டை ரூ.413 முதல் 428 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை மார்ச் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 2.2 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது.