நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மூன்றாம் காலாண்டு முடிவுகள்... லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள்!

மூன்றாம் காலாண்டு முடிவுகள்... லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மூன்றாம் காலாண்டு முடிவுகள்... லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள்!

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

டப்பு 2017-18-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை முடிவுகள், பெரும்பாலும் பாசிட்டிவான சிக்னலையே தந்துள்ளன. நிறுவனங்களின் நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஜி.வி.ஏ எனப்படும் மொத்த மதிப்பில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி (gross value added - GVA), டிசம்பர் காலாண்டில் 6.7 சதவிகிதமாக உள்ளது. இது, செப்டம்பர் காலாண்டில் 6.2 சதவிகிதமாக இருந்தது.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது, பணமதிப்பு நீக்கம் (Demonetization). இந்த நடவடிக்கையால், 2016 டிசம்பர் காலாண்டில் நிறுவனங்களின் நிதிநிலை வளர்ச்சி பெரிதும் குறைந்தது. ஆனால், 2017 டிசம்பர் காலாண்டில் வளர்ச்சி மீண்டுவந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) ஆகிய இரண்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது, இன்னும் வளர்ச்சியடைய வேண்டியிருக்கிறது.  

மூன்றாம் காலாண்டு முடிவுகள்... லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள்!

   அரசுத் துறைகளின் பங்களிப்பு இல்லாமல்...

இதில் சுவாரஸ்யமான விஷயம், அரசுத் துறைகளின் பங்களிப்பு இல்லாமல் தனியார் துறை நிறுவனங்கள் மட்டுமே 2017 டிசம்பர் காலாண்டில் 6.6 சதவிகித ஜி.வி.ஏ வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதுதான். இது, செப்டம்பர் காலாண்டில் 6.3 சதவிகிதமாக இருந்தது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அரசின் பங்களிப்பு இல்லாமலேயே நம்முடைய இந்தியப் பொருளாதாரம் மீண்டுவந்திருக்கிறது. எனவே, நம்முடைய பொருளாதாரத்தில் ஜி.வி.ஏ அடிப்படையிலான இந்த முன்னேற்றம், பங்குச் சந்தைக்கு உற்சாகம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

   உற்பத்தித் துறையின் வளர்ச்சி

இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, உற்பத்தித் துறையின் வளர்ச்சியைத்தான். ஏனெனில், கடந்த செப்டம்பர் காலாண்டில் 6.9 சத விகிதமாக இருந்த இந்தத் துறையின் வளர்ச்சி, கடந்த டிசம்பர் காலாண்டில் 8.1 சதவிகிதமாக வளர்ச்சி கண்டிருக்கிறது.

இந்தியப் பொருளாதாரப் புள்ளி விவரங்களைக் கண்காணிக்கும் மத்திய கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy data) அளித்துள்ள பங்கு நிறுவனங்களின் நிதிநிலை விவரங்களை ஆராய்ந்தபோது,  விதிவிலக்கான பொருள்களைத் தவிர்த்து, பிற துறைகள் ஒருங்கிணைந்து இந்த டிசம்பர் காலாண்டில் 15.6 சதவிகித வளர்ச்சி அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுவே செப்டம்பர் மாத காலாண்டில் 2.35 சதவிகிதமாக இருந்தது. நீண்ட காலத்துக்குப்பிறகு, உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி, நம்முடைய பொரு ளாதார வளர்ச்சிக்கு மிகவும் பாசிட்டிவான சிக்னலாக அமைந்துள்ளது. (பார்க்க இடது பக்கத்தில் உள்ள அட்டவணைகள்).

இந்த விவரங்களை வைத்துப் பார்த்தால், ஈட்டப்பட்ட வரு மானத்தின் (Income) அடிப்படையில் நிறுவனங்கள் 11.9% வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால், செலவினங் களும் 12.8% வரை உயர்ந்திருக்கிறது. இதனால், நிகர லாப வரம்பு (Net Profit Margin) வளர்ச்சியில் மாற்றம் என்பது பெரிய அளவில் இல்லை. 

ஆகமொத்தத்தில், வரிக்குப் பிந்தைய லாபம் என்ற அடிப் படையில், நிறுவனங்களின் வளர்ச்சியானது நிலையாகவே இருக்கிறது. மேலும், பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களின் நிகர இழப்பு 2017 ஜூன் காலாண்டில் 19.8 சதவிகிதமாக இருந்தது, தற்போது 12.5 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.

   நிதிச் சேவை சாராத நிறுவனங்கள்

பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்து நிதிச் சேவை சார்ந்த   நிறுவனங்களை விலக்கிவிட்டு ஆராய்ந்தால், வளர்ச்சியானது பெரும்பாலும் பாசிட்டிவாகவே இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இதிலிருந்து நிதித்துறை சாராத நிறுவனங்கள், தொடர்ந்து ஆரோக்கியமான வளர்ச்சியையும் நல்ல லாபத்தையும் அடைந்து வருவது தெரிகிறது. அவற்றின் நிகர லாப வளர்ச்சி, கடந்த செப்டம்பர் காலாண்டில் நான்கு சதவிகித இழப்பில் இருந்தது, கடந்த டிசம்பர் காலாண்டில் 13.7 சதவிகிதமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. நிதித்துறை சார்ந்த நிறுவனங்களின் மொத்த நிகர லாப வளர்ச்சி குறைந்ததற்குக் காரணம், சில வங்கிகளின் மோசமான செயல்பாடுகள்தான். 

இதன் அடிப்படையில் பார்க்கும்போது, பெரும்பாலானோரின் போர்ட்ஃபோலியோ வானது நிதித்துறை சாராத நிறுவனப் பங்குகளை அதிகம் கொண்டதாக அமைய வாய்ப்புள்ளது. 

மூன்றாம் காலாண்டு முடிவுகள்... லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள்!

   அதிசயிக்க வைத்த ஐ.டி பங்குகள்

மூன்றாம் காலாண்டில், எதிர்பாராத வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பவை மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் ஐ.டி, இன்டர்நெட் சர்வீசஸ், ஐ.டி கன்சல்டிங் மற்றும் சாஃப்ட்வேர் சர்வீசஸ் நிறுவனங்கள் ஆகும். மைண்ட் ட்ரீ, மாஸ்டெக், என்.ஐ.ஐ.டி டெக், எல் அண்டு டி டெக் சர்வீசஸ், டெக் மஹிந்திரா, டேக் சொல்யூஷன்ஸ்,

எல் அண்டு டி இன்ஃபோடெக் அண்டு எம்ஃபசிஸ் ஆகியவை விற்பனையிலும், லாப வளர்ச்சியிலும் நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கின்றன.

இனி, ஃபண்டமென்டல் மற்றும் டெக்னிக்கல்  அடிப்படையில் வாங்கத் தகுந்த பங்குகள் பற்றிய விவரங்களையும், அவற்றின் விலைநகர்வு தொடர்பான எதிர்பார்ப்புகளையும் பார்ப்போம்.

1. மைண்ட் ட்ரீ (துறை: ஐ.டி கன்சல்டிங், சாஃப்ட்வேர்)

மைண்ட் ட்ரீ நிறுவனம், டிஜிட்டல் தொழில் நுட்பச் சேவைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தத் துறையில் ஐடியாக்களை உருவாக்குவது, அவற்றைச் செயல்படுத்துவது மற்றும்  உலக அளவில் 2000 வாடிக்கையாளர்களைக் கவர்ந்து பிற நிறுவனங்களுக்குக் கடும் போட்டியை உருவாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். மிக எளிமையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் டிஜிட்டல் துறையில் தேவைக்கேற்ற தீர்வுகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. இதன்மூலம் மைண்ட் ட்ரீ, வருடாந்திர அடிப்படையில் 37% வரிக்குப் பிந்தைய லாப வளர்ச்சியைக் கண்டுள்ளது. காலாண்டு அடிப்படையில் 13% வரிக்குப் பிந்தைய லாப வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த பாசிட்டிவான நிதிநிலை, இந்தப் பங்கை வாங்குவதற்கான ஆர்வத்தை முதலீட்டாளர்களிடையே அதிகரித்திருக்கிறது.

இந்தப் பங்கு ரூ.774 - 994 என்ற நிலையில் வலுவான சப்போர்ட் ரெசிஸ்டன்ஸுடன் இருக்கிறது. மேலும், டெக்னிக்கல்படி, கடந்த ஆறு மாதங்களாக இந்தப் பங்கில் அக்யுமுலேஷன் இருந்து வருகிறது. எனவே, இந்தப் பங்கு விலை உயர்ந்து வர்த்தகமாகும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் இந்தப் பங்கு ரூ.870-910 என்ற நிலைக்கு உயர வாய்ப்புள்ளது.

2. ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் (துறை: ஸ்டீல்)

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், இந்தியாவின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாகும். இதன் உற்பத்தி நிலையங்களிலிருந்து ஆண்டுக்கு 18 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் மிக வேகமாக வளரும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் இந்த நிறுவனம், நூறு நாடுகளில் தனது விற்பனையைச் செய்துவருகிறது.

சமீபத்தில் வெளியான இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவு விவரங்களைப் பார்க்கும்போது,  விற்பனையிலும், லாப வளர்ச்சியிலும்  நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இந்தப் பங்கு ரூ.370-400 என்ற வரம்பில் வர்த்தகமாகி வருகிறது. தற்போது இதில் பிரேக் அவுட் நிலை உருவாகி, ரூ.370-400 வரை உயர வாய்ப்புள்ளது. நான்காம் காலாண்டிலும் இந்தப் பங்கு வலுவான போக்கைக்கொண்டிருக்கும் என்று நம்பலாம். நீண்டகால அடிப்படையில் இந்தப் பங்கை வாங்கலாம்.

மூன்றாம் காலாண்டு முடிவுகள்... லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள்!

3. சிட்டி யூனியன் பேங்க் (துறை: வங்கி)

சிட்டி யூனியன் பேங்க், மூன்றாம் காலாண்டில் ஆரோக்கியமான நிதிநிலை வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இதன் வருடாந்திர வரிக்குப் பிந்தைய லாப வளர்ச்சி 22  சதவிகிதமாகப் பதிவாகியிருக்கிறது. மொத்த வட்டி வருமானம், கடந்த ஆண்டில் ரூ.306.98 கோடியாக இருந்தது, 18.9% உயர்ந்து ரூ.365.14 கோடியாக வளர்ச்சி கண்டிருக்கிறது.

சிட்டி யூனியன் வங்கிக்கு 1.74% மட்டுமே நிகர வாராக் கடன் இருக்கிறது. ஆனாலும் வங்கித் துறையில் இந்த வங்கி ஆரோக்கியமான செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது. கிளைகளை விரிவுபடுத்துதல் மூலம் தொழிலை வளர்ப்பதில் தீவிரமாக இருக்கிறது. எனவே, பலரது போர்ட்ஃபோலியோக்களில் இந்தப் பங்கு இடம்பெறும் வாய்ப்புள்ளது. தற்போது ரூ.160-180 என்ற வரம்பில் வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது. 180 என்ற விலையில் பிரேக் அவுட் ஆகி ஏற்றமடைந்தால், ரூ.194-204 வரை உயர வாய்ப்புள்ளது. சிட்டி யூனியன் பேங்க், தனது தொழில் வளர்ச்சியை நிலையாக முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதில் முனைப்புடன் இருப்பதால், நீண்டகால அடிப்படையில் இந்தப் பங்கை வாங்கலாம்.

4. குஜராத் அல்கலிஸ் மற்றும் கெமிக்கல்ஸ் (துறை: கெமிக்கல்ஸ்)

இந்தியாவில் காஸ்டிக் சோடா உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனமாக  குஜராத் அல்காலிஸ் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் விளங்குகிறது. ஒரு நாளைக்கு 1,087 டன் உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் நிதிநிலையில் சிறப்பாக இருக்கிறது. காலாண்டு அடிப்படையில், இதன் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.112 கோடியாக இருக்கிறது.

இந்தப் பங்கின் இ.பி.எஸ் மதிப்பு ரூ.15.28-ஆக உள்ளது. மேலும், இந்த நிறுவனம் ஆகஸ்ட் 2013-லிருந்து ஒவ்வோர் ஆண்டும் நிலையாக டிவிடெண்ட் வழங்கி வந்திருக்கிறது. இந்தப் பங்கு, ரூ.670-770 என்ற வரம்பில் தற்போது வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இதன் வர்த்தகப் போக்கு நன்றாக இருப்பதால், ரூ.820 என்ற நிலையைத் தாண்டி ஏறும்போது 824/873/935 ஆகிய உச்சங்களுக்கு அடுத்தடுத்து உயர வாய்ப்புள்ளது. நீண்டகால அடிப்படையில் இந்தப் பங்கை வாங்கலாம்.  

5. வெல்ஸ்பன் கார்ப்  (துறை: கன்ஸ்ட்ரக்‌ஷன் மற்றும் இன்ஜினீயரிங்)

பைப் உற்பத்தியில் முதன்மை நிறுவனமாக இருக்கிறது இந்த நிறுவனம். அனைத்து விதமான பைப்களையும் உற்பத்தி செய்து சந்தைப் படுத்தி வருகிறது. மேலும், கோட்டிங், பென்டிங் மற்றும் டபுள் ஜாயின்ட் தயாரிப்புகள் என பைப் சார்ந்த தயாரிப்புகளில் 360 டிகிரி அடிப்படையில் அனைத்துத் தயாரிப்புகளையும் உற்பத்தி செய்து வழங்கிவருகிறது. சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு பைப்களை விற்பனை செய்கிறது. சில முக்கிய வாடிக்கையாளர்களுக்குச் சவாலான திட்டங்களுக்குக்கூட தனது தயாரிப்புகளை உற்பத்தி செய்து வழங்கியிருக்கிறது. இதன் மூலம் இந்தத் துறையில் தனித்துவத்துடன் திகழ்கிறது.

சமீபத்தில் வெளியான காலாண்டு முடிவுகள் விவரங்களைப் பார்க்கும்போது, காலாண்டு அடிப்படையிலான விற்பனை வளர்ச்சியில் 15% முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.664 கோடியாகும். இந்தப் பங்கை டெக்னிக்கல்படி பார்த்தால், தற்போது முக்கோண வடிவ பேட்டர்னுடன் இருக்கிறது. ரூ.150 என்ற நிலையை சப்போர்ட்டாகவும், ரூ. 180 என்ற நிலையை ரெசிஸ்டன்ஸாகவும் கொண்டிருக்கும் இந்தப் பங்கு, ரெசிஸ்டன்ஸ் நிலையில் பிரேக் அவுட் ஆகி ஏற்றமடைந்தால், குறுகிய காலத்தில் ரூ.197-210 என்ற நிலை வரை உயரலாம். நீண்டகால அடிப்படையில் இந்தப் பங்கை வாங்கலாம்.  

   நான்காம் காலாண்டு எப்படி இருக்கும்?

வங்கித் துறையின் செயல்பாடு நான்காம் காலாண்டில் சற்றுக் குறை வாக இருந்தாலும், டெக்ஸ்டைல், மெட்டல், இன்ஜினீயரிங், கட்டுமானம், விவசாயம், ஏவியேஷன், வணிக வாகனங்கள், வீட்டுக் கடன் துறை மற்றும் ஐ.டி துறை போன்றவை நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வட்டி விகித உயர்வு ஆகிய காரணங்களால் பங்குச் சந்தை கொஞ்சம் தாக்கத்துக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. மேலும், அமெரிக்கா, ஸ்டீல் மற்றும் அலுமினியம் போன்றவற்றுக்கு இறக்குமதி வரியைத் திடீரென்று விதித்திருப்பதால், மெட்டல் துறை நிறுவனங்களுக்குச் சவாலாகவும், வாய்ப்பாகவும் மாறலாம்.  நிஃப்டி 9985-10603 என்ற வரம்பில் வர்த்தகமாக வாய்ப்புள்ளது. சிறப்பாகச் செயல்பாடும் நிறுவனப் பங்குகளுக்கு டிமாண்ட் இருக்கும்; செயல்படாத நிறுவனப் பங்குகள் பாதிப்புக்குள்ளாகும்.’’

தொகுப்பு : ஜெ.சரவணன்

மூன்றாம் காலாண்டு முடிவுகள்... லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள்!

ஆதார் கார்டுக்குப் பெருகிவரும் ஆதரவு!

அனைத்து  நிதி தொடர் பான பரிவர்த்தனை களையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்தவகையில் இது வரையில் நாடு முழுக்க 16.65 கோடி பான் கார்டுகளும், 87.79 கோடி வங்கிக் கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்க இந்த மாதமே கடைசி என்பதால், இதுவரை இதனைச் செய்யாதவர்கள் இனியாவது அதை செய்துவிடுவது நல்லது. இல்லாவிட்டால், பணப் பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.

மூன்றாம் காலாண்டு முடிவுகள்... லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள்!

நான்காம் காலாண்டு... வளர்ச்சிக்கு வாய்ப்பு!

2017-18-ம் நிதி யாண்டில் வெளியான மூன்றாம் காலாண்டு முடிவுகள் வளர்ச்சிப் பாதை யைச் சுட்டிக்காட்டும் நிலையில், இந்த நிதி யாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகள் மீதான எதிர்பார்ப்பும் தற்போது வலுவாகவே இருக்கிறது. நீண்டகால மூலதன ஆதாய வரி காரணமாக, சிறு முதலீட் டாளர்கள் முதல் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் வரை பங்கு விற்பனையைச் செய்துவருவதால், பங்கு விலைகள் இறக்கத்தை நோக்கி நகர்கின்றன. ஆனால், துறைகளின் வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகள் ஆரோக்கியமாகவே இருக்கின்றன. எனவே, நான்காம் காலாண்டில் பாசிட்டிவான முடிவு களையே எதிர்பார்க்கலாம்.