
தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in
தங்கம் மினி
தங்கம் தற்போது ஒரு அப் டிரெண்டிலிருந்து, பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது. இதற்கு உலகச் சந்தைகளின் சூழலும் ஒரு முக்கியக் காரணம்.

கடந்த இதழில் நாம் சொன்னது... “தங்கம் டிரெண்ட் லைனை உடைத்து இறங்கியுள்ளது, இனி வலிமையான இறக்கங்கள் வரலாம் என்பதேயே காட்டுகிறது. கீழே 30050 என்பது மிக முக்கிய ஆதரவு. இதை உடைத்தால். வலிமை யான இறக்கம் வரலாம். அதுவரை ஒரு புல்பேக் ரேலியும் வரலாம்.”
பொதுவாக ஒரு அப் டிரெண்ட் லைன் உடைக்கப்படும்போது, அது அடுத்து இறங்குமுக மாக மாறலாம் அல்லது சிறிது காலம் பக்கவாட்டு நகர்வுக்கு மாறலாம். தற்போது தங்கம் இரண்டாவது வகை நகர்வில் உள்ளது. அதிலும் ஒரு நாள் ஏறியும், ஒரு நாள் இறங்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது, தங்கம் ஒரு நிச்சயமற்ற நிலையில் இருப்பதையே காட்டுகிறது.

கடந்த திங்களன்று, காளைகளின் ஏறுவதற்கான முயற்சியைக் கரடிகள் முறியடித்தன. அதே சமயம், காளைகள் 30300 என்ற எல்லையைத் தக்க வைத்தன. செவ்வாயன்று காளை பெருமுயற்சி எடுத்து, விலையை 30669 என்ற உச்சத்திற்குக் கொண்டுபோயின.அடுத்து, புதனன்றும் வலுவான ஏற்றத்திற்கு முனைந்தன. ஆனால், கரடிகள் அந்த ஏற்றத்தைத் தடுத்து, மெள்ள மெள்ள இறக்கின. புதனன்று 30404 வரை இறக்கிய காளைகள், அதற்குக்கீழ் இறக்க முடியவில்லை. ஆகவே, காளைகள் மீண்டும் 30300 என்ற ஆதரவைத் தக்கவைத்தன.
இனி என்ன நடக்கலாம்? தங்கம் தற்போது மேலே 30700 என்ற எல்லையைத் தடைநிலை யாகவும், கீழே 30300 உடனடி ஆதரவாகவும் கொண்டுள்ளது. அது உடைக்கப்பட்டால், அடுத்து 30100 என்பது மிக மிக முக்கிய ஆதரவு. அது உடைக்கப்பட்டால், நல்ல இறக்கம் வரலாம்.
வெள்ளி மினி
வெள்ளி , ஒரு தொடர் இறக்கத்திற்குப்பிறகு, சற்றே திரும்பி ஒரு ரிடிரேஸ்மென்டில் உள்ளது. ஆனாலும், இது இடைக்கால ஏற்றமாகவே இருக்க வாய்ப்புள்ளது.
சென்ற வாரம் நாம் சொன்னது... “ஒரு தொடர் இறக்கத்திலுள்ள வெள்ளி, மேலே 38920 என்ற தடை நிலையைக் கொண்டுள்ளது. கீழே 38760 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டு இயங்கி வருகிறது.’’

வெள்ளி, சென்ற வாரம் தங்கத்தைப் போலவே நகர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், நாம் கொடுத்திருந்த ஆதரவான 38760-யைக் கொஞ்சம் உடைக்கவும் முயன்றது. கடந்த வாரம் செவ்வாயன்று தடை நிலையான 38920 உடைத்து வலிமையாக ஏறி, 39527 வரை சென்றது. புதனன்று தங்கத்தைக் கரடிகள் இறக்கியதுபோலவே, வெள்ளியையும் கீழே இறக்கின. தற்போது வெள்ளியும் பக்கவாட்டு நகர்வில் உள்ளது.
இனி என்ன நடக்கலாம்? வெள்ளி தற்போது 38500 என்பதை வலுவான ஆதரவாகவும், மேலே 39300 என்பதை தடைநிலையாகவும் கொண்டு செயல்படுகிறது.

கச்சா எண்ணெய் மினி
கச்சா எண்ணெய், வாரத்தின் துவக்கத்தில் வலிமையாகவும், அதன்பின் படிப்படியாக வலிமை குன்றவும் ஆரம்பிக்கிறது.
சென்ற இதழில் சொன்னது... “தொடர்ந்து மூன்று நாள்களாக இறங்கியுள்ளதால், ஒருபுல்பேக் ரேலி வரலாம். கீழே ஆதரவான 3960-யை மீண்டும் உடைத்தால், இறக்கம் வலிமையானதாக இருக்கலாம்.”

கச்சா எண்ணெய், கடந்தவாரம் திங்களன்று வலுவான புல்பேக் ரேலியை நடத்திக் காட்டியது. நாம் கொடுத்திருந்த ஆதரவான 3960-யைத் தக்கவைத்து வலுவாக ஏறியுள்ளது. கடந்த திங்களன்று உச்சமாக 4088-யைத் தொட்டது. செவ்வாயன்று சற்றே மேலே நகர்ந்து, உச்சமாக 4110-யைத் தொட்டாலும் சற்றே இறங்கி முடிந்தது. ஆனால், புதனன்று கடுமை யான வீழ்ச்சியைச் சந்தித்து இறங்கியது.
இனி என்ன நடக்கலாம்? கச்சா எண்ணெய், தற்போது 3880 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகவும், மேலே 4020 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வருகிறது.

அக்ரி கமாடிட்டிப் பகுதியைப் படிக்க: http://bit.ly/2Gag90B