
கேள்வி - பதில்

என் மனைவிக்கு வயது 36. அவருக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க விண்ணப்பித்தோம். அவருக்குக் கல்லீரல் என்சைம்கள் அளவுக்கதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டு, பாலிசி வழங்குவதை ஆறு மாதத்துக்குத் தள்ளிவைத்துள்ளார்கள். நான் வேறொரு நிறுவனத்தில் அவருக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்க முயற்சி செய்யலாமா?

- தயாளன், புதுக்கோட்டை
எஸ்.ஸ்ரீதரன், வெல்த்லேடர்.காம்
‘‘உங்கள் மனைவிக்கு, கல்லீரல் என்சைம்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால்தான், இன்ஷூரன்ஸ் நிறுவனம் பாலிசி வழங்குவதைத் தள்ளிவைத்துள்ளது. ஆகவே, நீங்கள் வேறொரு நிறுவனத்தில் முயற்சி செய்தாலும், மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்து, அதே காரணத்தினால் அந்த நிறுவனமும் பாலிசி வழங்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு, ஆறு மாத காலத்திற்கு பிறகு டேர்ம் இன்ஷூரன்ஸ் பெற மீண்டும் முயற்சி செய்வது நல்லது.’’
நான் அரசு மருத்துவமனையில் செவிலியராக கடந்த 16 வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறேன். என் கணவர் அரபு நாட்டில் 12 வருடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்துவிட்டு எங்கள் இரண்டு குழந்தைகளின் (மகன் 14 வயது, மகள் 9 வயது) படிப்பின் காரணமாகக் கடந்த மாதம் தாய்நாடு திரும்பிவிட்டார். கையிலுள்ள பணத்தில் (ரூ.8.5 லட்சம்) சொந்தமாகக் கார் (ரூ.4.5 லட்சம்) வாங்கி கேப் ஓட்டுநராக விரும்புகிறார். மீதமுள்ள ரூ.4 லட்சத்தையும், எனக்குக் கிடைக்கும் வருமானத்திலிருந்து கிடைக்கும் பணத்தில் குடும்பச்செலவு போக, மாதந்தோறும் மீதமாகும் ரூ.4000-யும் எதில் முதலீடு செய்யலாம்?

- எஸ்.மல்லிகா, கும்பகோணம்
எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்
‘‘குடும்ப உறுப்பினர்களுக்கென்று ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை (மெடிக்ளெய்ம் - ஃப்ளோட்டர் பாலிசி) தேர்வு செய்யுங்கள். உங்கள் கணவர் வாகன ஓட்டுநர் என்பதால், அவருக்குக் கட்டாயம் ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி ரூ.25 லட்சத்துக்கு எடுப்பது அவசியம். இந்தச் செலவுகளுக்கெல்லாம் ரூ.50 ஆயிரத்தை ஒதுக்கிக்கொள்ளவும். அடுத்து ரூ.50 ஆயிரத்தை எளிதில் பணமாக்கக் கூடிய லிக்விட் ஃபண்ட் திட்டத்தில் (எல்.& டி லிக்விட் ஃபண்ட்) போட்டு வைத்தால், அவசரத்தேவைக்கு உதவக்கூடும். ரூ.1 லட்சம் வீதம் நான்கு வருடங் களுக்கு இரண்டு பேலன்ஸ்டு ஃபண்டுகளிலும், (எல் & டி இந்தியா ப்ரூடன்ஸ் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்ட் ஃபண்ட்), ரூ.50,000 வீதம் ஒன்பது வருடங்களுக்கு இரண்டு ஃபண்டுகளிலும் (ரிலையன்ஸ் ஸ்மால் கேப், ஆதித்யா பிர்லா ஸ்மால் & மிட் கேப்) முதலீடு செய்யுங்கள். உங்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் குடும்பச் செலவு போக மீதமாகும் பணத்தில், ரூ.2,000 வீதம் எஸ்.ஐ.பி முதலீட்டின் மூலம் கோடக் மிட்கேப் ஃபண்ட் மற்றும் எடெல்வைஸ் மிட் & ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.’’
என் குழந்தைகளின் கல்விக் கட்டணத்துக்காக அடுத்த பத்தாண்டுகளின் முடிவில் ரூ.25 லட்சம் வருமானம் பெறத் திட்டமிட்டுள்ளேன். அதற்காகக் கடந்த நான்கு மாதங்களாக எஸ்.ஐ.பி முறையில் ரூ.5000 வீதம், ஆதித்யா பிர்லா எஸ்.எல் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடன்ஷியல் பேலன்ஸ்டு, மோதிலால் ஆஸ்வால் மோஸ்ட் ஃபோகஸ்டு 35 ஆகியவற்றில் முதலீடு செய்து வருகிறேன். எனது இலக்கை எட்ட வேறு ஃபண்டுகளிலும் முதலீடு செய்யவேண்டுமா? அல்லது எனது எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யும் தொகையை அதிகரிக்க வேண்டுமா?
- ராஜசேகர், உடுமலைப்பேட்டை

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா
‘‘பத்து வருடங்களில் ரூ.25 லட்சம் சேர்க்க, மாதத்துக்கு சுமார் ரூ.12,000 முதலீடு செய்தால் போதுமானது (வருடத்துக்கு 12% லாபம் வரும் என்ற அனுமானத்தில்). நீங்கள் ஏற்கெனவே ரூ.15,000 முதலீடு செய்துவருவது நிச்சயம் போதுமானதாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகளும் நல்ல, தரமான ஃபண்டுகளே. இவற்றிலேயே தொடர்ந்து மாதந்தோறும் முதலீடு செய்தால், உங்கள் குழந்தைகளின் கல்வி பிரகாசமாக அமைய நல்ல வாய்ப்புண்டு.’’
கடந்த ஐந்து ஆண்டுகளாக, டி.எஸ்.பி பிளாக் ராக் டாப் 100 ஈக்விட்டி, ஐ.டி.எஃப்.சி பிரீமியர் ஈக்விட்டி குரோத் ஆகிய இரண்டு மியூச்சுவல் ஃபண்டு களில் தலா ரூ.2,000 வீதம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். நான் ஒரு நீண்டகால முதலீட்டாளர். தற்போது இவ்விரு ஃபண்டுகளின் ரேட்டிங் கீழிறங்கி வருகிறது. எனவே, என்.எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்வதா அல்லது நிறுத்துவதா?
- கார்த்திக், தென்காசி

வி.சங்கர், நிதி ஆலோசகர்
‘‘லார்ஜ்கேப் ஃபண்டான டி.எஸ்.பி பிளாக் ராக் டாப் 100 ஈக்விட்டிக்குப் பதிலாக ஐ.சி.ஐ.சி.ஐ வேல்யூ டிஸ்கவரி ஃபண்டில் முதலீடு செய்யலாம். கடந்த பத்தாண்டுகளாக இந்த ஃபண்டின் செயல்பாடு மிகவும் நல்ல முறையில் இருந்து வருகிறது.
ஐ.டி.எஃப்.சி பிரீமியர் ஈக்விட்டி குரோத் மிட்கேப் ஃபண்டின் செயல்பாடு, கடந்த காலாண்டைப் பொறுத்தவரை சீராக இல்லை. பொது வாக, லார்ஜ்கேப் ஃபண்டுகளைவிட மிட்கேப் ஃபண்டுகள் நல்ல செயல் பாடுகளைக் கொண்டிருக்கும். ஆனாலும், முதலீட்டாளரின் கோணத்தி லிருந்து பார்க்கும்போது, சந்தை நிலவரத்திற்கேற்ப, மல்டிகேப் வகையைச் சேர்ந்த பாரக் பரிக் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டிற்கு மாறுவது சரியாக இருக்கும்.
இந்த ஃபண்டுக்கு மூன்றாண்டு காலக் குறுகிய வரலாறு மட்டுமே இருந்தபோதிலும், மதிப்பு வாய்ந்ததாக உள்ளதால், இதனைப் பரிந்துரைத்துள் ளேன். அதேபோல், முதலீட்டாளர் மிட்கேப் ஃபண்டில் மட்டுமே முதலீடு செய்ய விரும்பினால், தற்போது நல்ல முறையில் செயல்பட்டுவரும் ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.’’
தொகுப்பு : தெ.சு.கவுதமன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.