
உங்களை வளமாக்கும் முதலீட்டுச் சூட்சுமம்!
மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்து, அதன்மூலம் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளும் வழிமுறைகளைச் சொல்லித் தருவதற்காக, நாணயம் விகடன் சார்பாக ‘மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்’ என்ற ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு சென்னையில் நடந்தது. மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன் இந்தப் பயிற்சி வகுப்பை நடத்தினார்.

இந்தப் பயிற்சி வகுப்பில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களும், விநியோகஸ் தர்களும் கலந்துகொண்டார்கள். நல்ல வருமானம் தர வாய்ப்புள்ள மியூச்சுவல் ஃபண்டை எப்படி அடையாளம் காண்பது, எந்த மாதிரியான முதலீட்டாளர்களுக்கு எந்த வகை ஃபண்டுகள் ஏற்றவையாக இருக்கும், எஸ்.ஐ.பி, எஸ்.டபுள்யூ.பி முதலீட்டு முறைகளின் வித்தியாசம் என்ன, எஸ்.ஐ.பி முதலீட்டின் முக்கியத்துவம் என்ன, ஒரு போர்ட்ஃபோலியோவை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு மிகத் தெளிவாகப் பதில் அளித்தார் சொக்கலிங்கம் பழனியப்பன்.
‘‘மியூச்சுவல் ஃபண்ட் பற்றி எங்களுக்கு ஏற்கெனவே கொஞ்சம் தெரிந்திருந்தாலும், இப்போது விளக்கமாகத் தெரிந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சி’’ என்றார்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட முதலீட்டாளர்கள்.

‘‘இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டதன் மூலம் என்னுடைய மியூச்சுவல் ஃபண்ட் மீதிருந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துள்ளது. அடுத்த நிகழ்ச்சியில் என் நண்பர்களையும் கலந்துகொள்ளச் செய்கிறேன்’’ என்றார் இன்னொருவர்.
ஆக மொத்தத்தில், சிறப்பாக முடிந்தது இந்த மியூச்சுவல் ஃபண்ட் ஒருநாள் பயிற்சி வகுப்பு!
- தெ.சு.கவுதமன்
படங்கள்: பா.சரவணக்குமார்