
ஹலோ வாசகர்களே..!
நீண்ட நாள்களுக்குப்பிறகு நிதி அமைச்சகத்துக்கும் மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கும் இடையே மீண்டும் மோதல் உண்டாகியிருக்கிறது. பஞ்சாப் நேஷனல் பேங்கில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடந்த மோசடிக்கான பொறுப்பினைத் தன்மீது மட்டுமே சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் சொல்லப் போக, நிதி அமைச்சகம் அதற்குப் பதிலடி தர, திரைமறைவில் நடந்த சண்டை வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இதில் யார் சொல்வது நியாயம் என்பதை நாம் கொஞ்சம் கவனமாகத்தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இந்த விஷயத்தில் கவர்னர் உர்ஜித் பட்டேலின் வாதத்தை முழுமையாக நிராகரித்துவிட முடியாது. வங்கி நிர்வாகம் விஷயத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு காலம்காலமாக இருந்துகொண்டுதான் வருகிறது. இன்னாருக்கு, இந்தத் திட்டத்துக்கு, இந்தத் துறைக்குக் கடன் தாருங்கள் என அரசியல்வாதிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்வதை வங்கி அதிகாரிகளால் மறுக்க முடிவதில்லை. பத்து ஆண்டுகளுக்குமுன்பு கல்விக் கடன், இன்று முத்ரா தொழில் கடன் எனப் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் தந்துவிட்டு, அந்தக் கடன் திரும்ப வராதபோது, கையைப் பிசைந்துகொண்டு நிற்பதுதான் வங்கிகளின் வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில், யாருடைய கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல், வங்கி விதிமுறைகளின்படி மட்டுமே நடக்கும் உரிமை தங்களுக்கு வேண்டும் என ரிசர்வ் வங்கியின் தலைமை சொல்வதில் நியாயம் இல்லாமல் இல்லை.
ஆனால், ரிசர்வ் வங்கிக்கு இப்போது அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரமே போதுமானதாக இருக்க, இன்னும் அதிகாரம் தேவையா என நிதி அமைச்சகம் கேட்பதும் சரியான கேள்வியே. ஒரு வங்கியின் தலைவர் மற்றும் இயக்குநர் குழுவை நியமிப்பது, எந்த நிறுவனத்துக்குக் கடன் வழங்குவது என்பதை முடிவு செய்வது உள்பட 13 முக்கியமான அதிகாரங்கள் ரிசர்வ் வங்கிக்கு ஏற்கெனவே தரப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை ரிசர்வ் வங்கியானது சரியாகப் பயன்படுத்தாமல், இன்னும் கூடுதலான அதிகாரம் வேண்டும் என்று கேட்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று நிதி அமைச்சகம் கேட்பதும் நியாயமான விஷயமே!
பொதுத்துறை வங்கிகளில் இனி எந்த மோசடியும் நடக்கக் கூடாது என்பதற்கு இந்த மோதல் வழிவகுத்தால், இதை ஓர் ஆரோக்கியமான விவாதமாகப் பார்க்கலாம். ஆனால், நடந்த செயலுக்கு நீதான் பொறுப்பு, நான் பொறுப்பில்லை என்கிற அளவில் இந்த மோதல் இனி நடக்குமெனில், அதனால் எந்தப் பயனும் நமக்குக் கிடைக்காது.
எந்த அமைப்பிலும் தவறுகள் நடப்பது இயற்கையானது. அந்தத் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்று, அவை மீண்டும் நிகழாதபடிக்கான நடைமுறைகளைக்கொண்டுவருவதே வளர்ச்சிக்கு அடிப்படை. எனவே, ஒருவர்மீது ஒருவர் வீணாகப் பழிபோடுவதை விட்டுவிட்டு, ஆரோக்கியமான விவாதத்துக்கு ஆர்.பி.ஐ-யும் மத்திய நிதி அமைச்சகமும் இனி வழிவகுக்கட்டும்!
- ஆசிரியர்