நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தொழில் தொடங்கலாம் வாங்க... - கொண்டாட்டமாகத் திரண்டு வந்த கோவை தொழில்முனைவர்கள்!

தொழில் தொடங்கலாம் வாங்க... - கொண்டாட்டமாகத் திரண்டு வந்த கோவை தொழில்முனைவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில் தொடங்கலாம் வாங்க... - கொண்டாட்டமாகத் திரண்டு வந்த கோவை தொழில்முனைவர்கள்!

தொழில் தொடங்கலாம் வாங்க... - கொண்டாட்டமாகத் திரண்டு வந்த கோவை தொழில்முனைவர்கள்!

தொழில் என்கிற வார்த்தைக்குக் கோவை மக்கள் தரும் மரியாதையே தனி என்பதை அண்மையில் கோவையில் நடந்த ‘தொழில் தொடங்கலாம் வாங்க’ நிகழ்ச்சியைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஃப்ரான்சைஸி பிசினஸ் பற்றிய அந்த நிகழ்ச்சியில் பல நூறு ஆண்களும் பெண்களும் திரண்டுவரவே, கொண்டாட்டமாக நடந்துமுடிந்தது அந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் தொடக்கமாகப் பேசினார் ‘இயகோகா’ என்.சுப்பிரமணியம்.

‘‘புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்கள், எந்தத் தொழில் செய்யத் தொடங்குவதாக  இருந்தாலும், அது தொடர்பான அரசின் கட்டுப்பாடுகளை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அரசின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றா மல் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து தப்பித்து விடலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். இப்படி நீண்ட காலம் செய்ய முடியாது.

இதேபோல, அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியினைப் பைசா பாக்கி வைக்காமல் ஆண்டு தோறும் செலுத்திவிடுவது நல்லது. வரி ஏய்ப்பு செய்ய நினைத்தால், அது செய்ய நினைப்பவருக்கே பாதகமாக முடியும். ஆனால், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியினை ஆண்டுதோறும் செலுத்தி வந்தால், நீங்கள் தைரியமாக எந்த வங்கியை வேண்டுமானாலும் அணுகிக் கடன் கேட்கலாம். 

தொழில் தொடங்கலாம் வாங்க... - கொண்டாட்டமாகத் திரண்டு வந்த கோவை தொழில்முனைவர்கள்!

உற்பத்தி, சேவை, வியாபாரம், ஃப்ரான்சைஸி என எந்தவகையான தொழிலை நீங்கள்  செய்வ தாக இருந்தாலும், அதன் அடிப்படையை நன்கு கற்றுக்கொண்டு செய்யுங்கள். ஒவ்வொரு தொழிலுக்கான அடிப்படையும் மாறுபடும். அந்த அடிப்படைகளை நன்கு தெரிந்துகொண்டால் தான், அடுத்த அடியை உங்களால் எடுத்து வைக்க முடியும். 

நீங்கள் தொழில் செய்யும்போது, உங்களுக்குத் தோல்விகள் என்பது நிச்சயம் வரும். இந்தத் தோல்விகளைக் கண்டு ஒருபோதும் கலங்கி நின்று விடாதீர்கள். டாடாவுக்கும், பிர்லாவுக்கும், அம்பானிக்கும் தொழிலில் தோல்விகள் வந்திருக் கிறது. அந்தத் தோல்விகளையெல்லாம் அவர்கள் தாண்டிவந்ததால்தான், இன்று அசைக்க முடியாத வர்களாக இருக்கிறார்கள்.

தொழில்துறையில் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் வெளிநாட்டுத் தொழிலதிபர்களைப் படித்து ஊக்கம் பெற வேண்டியதில்லை. நம்மூரில் வெற்றி பெற்ற தொழிலதிபர்களைப் பார்த்தே நீங்கள் நிச்சயம் ஊக்கம் பெறலாம். நீங்கள் ஒரு அம்பானியாகவோ, ஜாக் மாவாகவோ ஆகவேண்டியதில்லை. நீங்கள் நீங்களாகவே இருந்து வெற்றி பெறுங்கள். தொழிலில் வெற்றி பெற நாணயத்தையும் நேர்மையையும் ஒருபோதும் தவறவிடாதீர்கள். நேர்மை வழியில் பெறாத வெற்றி ஒருகாலும் நிலைத்து நிற்காது.

சிறந்த நிர்வாகம் என்பதற்குத்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் முதல் மரியாதை செலுத்துகின்றன. சுவிட்சர்லாந்து நிறுவனம் ஒன்றுக்கு நாங்கள் சில பொருள்களை உற்பத்தி செய்துதந்தோம். உலகம் முழுக்கச் சிறந்த நிர்வாகம் செய்யும் நிறுவனத்துக்கு அந்த நிறுவனம் ஆண்டுதோறும் பரிசளித்துப் பாராட்டி வருகிறது. அந்தப் பரிசினை எங்களுக்கு அந்த நிறுவனம் தேடிவந்து தந்தது. அவர்களுடன் ஒப்பிடும்போது எங்கள் நிறுவனம் மிகச் சிறியது தான் என்றாலும், சிறந்த நிர்வாகத்தை நாங்கள் கடைப்பிடித்ததால், எங்களுக்கு இந்த விருது கிடைத்தது.

எங்கள் ‘இயகோகா’ சார்பில், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே சில தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்பிப் பயிற்சி பெறவைத்தோம். அப்படிப் பயிற்சி பெற்ற ஒருவர் திரும்ப வந்து என்னிடம் சொன்னார்... ‘அய்யா, ஜப்பானில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஒரு வாசகத்தை எழுதிப் போட்டிருக்கிறார்கள். ஜப்பானியர்களால் ஒரு வேலையைச் செய்ய முடியவில்லை என்றால், உலகத்தில் யாராலும் அந்த வேலையைச் செய்ய முடியாது என்பதுதான் அந்த வாசகம். என் ஆசை என்னவென்றால், இந்தியர்களால் ஒரு வேலையைச் செய்ய முடியவில்லை என்றால், கடவுளால்கூட அந்த வேலையைச் செய்ய முடியாது என்று நமது தொழிற்சாலைகளில் எழுதிப் போட வேண்டும்’ என்றார். இந்த எண்ணம் நம் எல்லோருக்கும் வந்துவிட்டால், நாம் ஜெயிப்பது நிச்சயம்’’ என எழுச்சி பொங்க பேசி முடித்தார் ‘இயகோகா’ எம்.சுப்பிரமணியம்.

இந்த நிகழ்ச்சியில் அடுத்து பேசினார் குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜியின் இணை நிர்வாகி சங்கர் வானவராயர். ‘‘நூறு ஆண்டுகளுக்குமுன்பு கோவையில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு, பல ஆயிரம் பேர் இறந்தார்கள். பெரிய அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் கோவை நகரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நீர்வளம் இல்லாத இந்த ஊர் இனி வளர்ச்சிக்கு லாயக்கற்றது என பிரிட்டீஷ் அரசாங்கம் ரிப்போர்ட் தந்தது. இத்தனை கஷ்டங்களையும் தாண்டி, இன்றைக்கு உலக அளவில் குறிப்பிட்டுச் சொல்லும்படி கோவை நகரம் வளரக் காரணம், கடின உழைப்பு ஒன்றுதான்.

தொழில் தொடங்கலாம் வாங்க... - கொண்டாட்டமாகத் திரண்டு வந்த கோவை தொழில்முனைவர்கள்!

ஆனால், இன்றைக்குத் தொழில் செய்யவேண்டும் என்கிற ஆர்வம் நம் இளைஞர் களிடம் குறைந்து வருகிறது. நாம் வசதியாக வளர்ந்துவிட்டதே இதற்குக் காரணம் என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த நிலை தொடர நாம் விட்டுவிடக் கூடாது. தொழில் தொடங்கி நடத்தவேண்டும் என்கிற ஆர்வத்தை நம்முடைய இளைஞர் களிடம் மீண்டும் விதைக்க வேண்டும்’’ என்கிற கோரிக்கை வைத்து, முடித்தார் சங்கர் வானவராயர்.

அடுத்துப் பேசிய டைகூன் ப்ளஸ் அட்வைசர்ஸ் நிறுவனத் தின் சி.இ.ஓ எம்.சத்யகுமார், ‘‘சென்னையில்தான் மிகப் பெரிய வளர்ச்சி இருக்கிறது என்கிறார்கள். ஆனால், கொங்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சியானது சென்னையை விடக் குறைந்ததில்லை. பெரிய நிறுவனங்களைவிடச் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே அதிக அளவில் வேலை வாய்ப்பினை அளிக்கின்றன. இந்தச் சிறிய நிறுவனங்களுக்குத் தான் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும்’’ என்றார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளார் கிருஷ்ண மூர்த்தி, சிறு தொழில் நிறுவனங் களுக்கு வங்கிகள் அளித்துவரும் கடன்கள் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்.

இறுதியில் பேசினார் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் சி.கே.குமரவேல். ‘‘இன்றைய இளைஞர்களிடம் நிறைய சக்தி இருக்கிறது. எம்.பி.ஏ படித்தால் தான் தொழில் செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள். பணம் இருந்தால்தான் தொழில் செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள். நம்பிக்கை யோடு தொழிலில் இறங்குங்கள். கடும் உழைப்பினைத் தாருங்கள். நிச்சயம் ஜெயிப்பீர்கள்.

நீங்கள் தொழிலில் ஜெயிக்க வேண்டும் எனில், மற்றவர்கள் செய்வதை நீங்களும் செய்யா தீர்கள். மற்றவர்கள் செய்வதையே நாமும் செய்தால், நமக்கென எந்தத் தனித்தன்மையும் இருக்காது. எல்லா விஷயத்திலும் புதுமையாக, வித்தியாசமாக நாம் இருக்க வேண்டும். தொழில் விஷயத்தில் உங்கள் பெற்றோரின் பேச்சைக் கேட்காதீர்கள். நீங்கள் எந்தக் கஷ்டமும்படாமல், வசதியாக இருக்க வேண்டும் என்றுதான் உங்கள் பெற்றோர்கள் நினைப்பார்கள். ஆனால், கஷ்டப் படாமல் எந்த வகையிலும் அடுத்த நிலையை அடைய முடியாது. கடவுளை நம்பாதீர்கள். நான் ஐய்யப்பனின் மிகப் பெரிய பக்தன். ஆண்டுதோறும் சபரிமலைக்குச் செல்வேன். என் கஷ்டம் அதிகரித்தபோது, ஆண்டுக்கு இரண்டுமுறை போனேன். பிறகு, திருப்பதி வெங்கடாஜல பதியின் பக்தனாக மாறினேன். ஒருநாள் நன்கு யோசித்தபோது தெரிந்தது, கடவுளால் எனக்கு ஓரளவுக்குத்தான் உதவ முடியும் என்று. இன்றைக்கு, காலையில்  ஐந்து நிமிடம் மனதாரக் கடவுளை வழிபடுகிறேன். மீதமுள்ள நேரத்தில் எப்படிக் கஷ்டப்பட்டு உழைக்கலாம் என யோசிக்கிறேன். வெற்றி தானாகவே கைகூடுகிறது. உங்கள் உழைப்பை நம்பிச் செயல்படுங்கள். கடவுள் உங்களைக் கைவிடமாட்டார்’’ என்றார் சி.கே.குமரவேல்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் நாமும் ஒரு தொழிலதிபர் ஆகவேண்டும் என்கிற முனைப்புடன் வெளியேறினார்கள் கோவை மக்கள்!

- ஏ.ஆர்.குமார்

படங்கள்: தி.விஜய்

தொழில் தொடங்கலாம் வாங்க... - கொண்டாட்டமாகத் திரண்டு வந்த கோவை தொழில்முனைவர்கள்!

கஷ்டப்பட்டு உழைத்தால், வெற்றி நிச்சயம்!

இந்த நிகழ்ச்சியில் நான்கு புதுமையான பிசினஸ் ஐடியாக்களை அருமையாக எடுத்துச்சொன்னார்கள் நால்வர். ‘ரெட் பாக்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் வைபவ் குமரவேல், உணவகத் தொழிலின் வேகமான வளர்ச்சி பற்றியும் அதில் தனது நிறுவனம் அளிக்கும் புதிய தொழில் வாய்ப்புகள் பற்றியும் விளக்கமாக எடுத்துச்சொன்னார்.  அடுத்து, சி.கே.பேக்கரி நிறுவனத்தின் மனு ரஞ்சித், பேக்கரி தொழிலில் தனது நிறுவனம் அளிக்கும் தொழில் வாய்ப்புகள் பற்றியும் எதிர்காலத்தில் பேக்கரி தொழில் எந்த அளவுக்கு வளர்ச்சி காண வாய்ப்புள்ளது என்பது பற்றியும் விரிவாக எடுத்துச்சொன்னார்.

கோவையில் மளிகைப் பொருள்களை வீட்டுக்கே கொண்டுவந்து தரும் டோர் டு டோர் நிறுவனத்தின் நிறுவனரும், சி.இ.ஓ-வுமான ராஜ்குமார், தனது நிறுவனம் அளிக்கும் தொழில் வாய்ப்புகளையும், இதன்மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதையும் எடுத்துச் சொன்னார். இறுதியாக, ஃப்ரான்சைஸி குளோபல் நிறுவனத்தின் சுப்பிரமணியம், தனது நிறுவனம் அளிக்கும் பல்வேறு ஃப்ரான்சைஸி தொழில்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார். ஓரளவுக்குப் பணம் இருக்கிறது. தொழில் செய்யும் ஆர்வமும் இருக்கிறது என்கிறவர்கள், இந்த நான்கு ஃப்ரான்சைஸி தொழில்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து, கஷ்டப்பட்டு உழைத்தால், நிச்சயம் வெற்றி பெறமுடியும் என்பதில் சந்தேகமில்லை!