நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் (மினி)

பொதுவாகப் பங்குச் சந்தைக்கு எதிராகத் தங்கம் நகரும். தற்போது பங்குச் சந்தை வலிமையாக இறங்க ஆரம்பித்திருக்கும் நிலையில், தங்கமானது  தற்போதுள்ள பக்கவாட்டு நகர்விலிருந்து மேலே திரும்புமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

கடந்த இதழில் சொன்னது, “தங்கம் தற்போது மேலே 30700 என்ற எல்லையைத் தடைநிலையாகவும், கீழே 30300 உடனடி ஆதரவாகவும் கொண்டுள்ளது. அது உடைக்கப்பட்டால், அடுத்து 30100 என்பது மிக மிக முக்கிய ஆதரவு.  அது உடைக்கப்பட்டால், நல்ல இறக்கம் வரலாம்.”

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கடந்த வாரத்தில் தங்கத்தின் போக்கில்   பெரிய மாற்றம் இல்லாமலே முடிந்தது. அதிலும் நாம் கொடுத்திருந்த இரண்டு முக்கிய எல்லை களான, 30700 என்கிற தடைநிலையைத் தாண்டி ஏறவில்லை. அதைப்போலவே, கீழே 30300 என்ற உடனடி ஆதரவை அவ்வப்போது சோதித்து வந்தது. அந்த எல்லை உடைக்கப்பட்டால், 30100 என்ற மிக முக்கியமான ஆதரவை நோக்கி நகரலாம் என்று கூறியிருந்தோம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமலே சென்ற வாரம் முடிந்துள்ளது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்


சென்ற வாரம் திங்களன்று 30300 என்ற ஆதரவை, சற்று உடைத்து 30284 வரை சென்று மீண்டும் 30300-க்குமேல் முடிந்தது. அதேபோல், செவ்வாய் அன்றும் கீழே 30222 வரை இறங்கி, மீண்டும் 30300-க்குமேல் முடிந்துள்ளது. புதனன்று ஏற முயன்று 30545 வரை ஏறியது, ஆனால், தொடர்ந்து ஏறமுடியாமல், கீழே 30300-க்கு அருகில் முடிந்துள்ளது. அடுத்தடுத்த நாள்களில் இந்த 30300 என்ற எல்லையை மையமாகவே வைத்துச் சுழல்கிறது தங்கம்.

இனி என்ன நடக்கலாம்? தற்போதுள்ள நிலையில், 30300 என்ற எல்லைக்குக்கீழாக முடிந்தால், அது 30100 என்ற எல்லையை முதல் கட்டமாகவும், அதையும் உடைத்தால் கீழே மிக வலிமையாகவும் இறங்கலாம். மேலே 30600 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது.

வெள்ளி (மினி)

வெள்ளியானது கடந்த மூன்று வாரங்களாக ஒரு பக்கவாட்டு நகர்விலேயே இருந்து வருகிறது.  சென்ற வாரம் நாம் சொன்னது... “வெள்ளி தற்போது 38500 என்பதை வலுவான ஆதரவாகவும் மேலே 39300 என்பதைத் தடைநிலையாகக் கொண்டும் செயல்படுகிறது.’’

வெள்ளி, தங்கத்தைப்போலவே தொடர்ந்து பக்கவாட்டு நகர்வில் இருந்துவருவது குறிப்பிடத் தக்கது. ஆனால், ஒரு வித்தியாசம் என்னவெனில், முந்தைய வாரங்களில் இருந்த அளவிற்கு, அதிக வீச்சு இல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கி வருகிறது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

நாம் கொடுத்திருந்த தடைநிலையான 39300 என்ற எல்லையைத் தாண்ட முடியாமல், அதற்கருகே, புதனன்று சென்று மீண்டும் கீழே இறங்கிவிட்டது. ஆனால், வியாழன் மற்றும் வெள்ளியன்று இறங்கு முகமாகவே மாறிவிட்டது. ஆனாலும், 38500 என்ற எல்லை இதுவரை தக்க வைக்கப்பட்டுள்ளது.

இனி என்ன நடக்கலாம்? வெள்ளி மெள்ள இறங்கிவரும் நிலையில் முக்கிய ஆதரவான 38500, இன்னும் தக்கவைக்கப்பட்டாலும், உடைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.  அது உடைக்கப்பட்டால், கீழே 38000 என்பது அடுத்த முக்கிய ஆதரவு. மேலே 39000 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது.

கச்சா எண்ணெய்
(மினி)


கச்சா எண்ணெய் கடந்த வாரம் வலியான ஏற்றத்தில் முடிந்தாலும், அதன்பின் படிப்படியாக இறங்க ஆரம்பித்துள்ளது.

சென்ற இதழில் நாம் சொன்னது... ‘‘கச்சா எண்ணெய் தற்போது 3880 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகவும் மேலே 4020 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வருகிறது.”

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய், முந்தைய வாரத்தின் முடிவில் மிக மிக வலிமையான ஒரு ஏற்றத்தைக் கொடுத்தது. ஆனால், சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாயன்று வலிமையாகக் கீழே இறங்கி, எங்கிருந்து ஏற ஆரம்பித்ததோ, அங்கு வந்து சேர்ந்தது. ஆனாலும், புதன் மற்றும் வியாழனன்று சற்றே ஏறி 4000 என்ற எல்லையைத்தொட முயற்சி செய்கிறது. ஆனாலும், இன்னும் தடுமாறிக்கொண்டுதான் இருக்கிறது.

இனி என்ன நடக்கலாம்? தற்போது 4000 என்ற உடனடித் தடையாகவும், அதைத் தாண்டினால் 4040 அடுத்த தடை நிலை, பின் 4111 என்பது எல்லை மிகமிக வலிமையான தடையாக உள்ளது. கீழே 3900 வலிமையான ஆதரவாக எடுத்துக்கொள்ளலாம்!