
தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in
மென்தா ஆயில்
மென்தா ஆயில், 2017-ல் ஏற்றத்தின் வலிமையைக் காட்டி முடிந்ததற்கு நேர்மாறாக 2018-ல் ஜனவரி முதல் மார்ச் வரை ஒரு தொடர் இறக்கத்தில் இருந்து வருகிறது. ஒவ்வொரு முறை அது இறக்கத்தில் இருந்து மீளும்போதெல்லாம், அதன் முந்தைய உச்சத்தைத் தாண்ட முடியாமல், அடுத்தடுத்து இறக்கம் வரும் என்பதை உறுதி செய்துகொண்டுதான் இருந்தது. அதை மீண்டும் உறுதிசெய்யும் வகையில் கடந்த பிப்ரவரியில் தோற்றுவித்த 1240 என்ற வலிமையான ஆதரவைத் தக்கவைக்க முடியாமல், மார்ச் வரை உடைத்து இறங்கியது.
இந்த நிலையில், இதுவரை முக்கிய ஆதரவாக இருந்த 1240 என்கிற ஆதரவு நிலை, தற்போது தடைநிலையாக மாறியுள்ளது. இனி, இந்தத் தடைநிலை தாக்குபிடிக்குமா அல்லது தகர்த்து எறியப்படுமா என்றுதான் பார்க்கவேண்டும்.

முந்தைய இதழில் சொன்னது... “கடந்த வாரம் முக்கிய ஆதரவாக இருந்த 1240 என்ற எல்லை தற்போது தடைநிலையாக மாறியுள்ளது. இதை உடைத்து ஏறினால், திசை மாற்றம் வரலாம். கீழே 1206 என்ற உடனடி ஆதரவாக உள்ளது. உடைத்தால் மீண்டும் இறக்கம் வரலாம்.”
மென்தா ஆயில், நாம் சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையைத் தாண்ட முடியாமல், மெள்ள மெள்ள இறங்க ஆரம்பித்தது. எனவே, 1240 என்ற தடைநிலை வலுவான ஒரு தடைநிலையாக இன்னமும் உள்ளது. இதற்கு மாறாக, கீழே நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லை யான 1026-யை உடைக்கும் முயற்சியில் திங்களன்று ஈடுபட்டது. செவ்வாயன்று அந்த ஆதரவை மிக வலுவாக உடைத்து, அடுத்தகட்ட இறக்கத்திற்கு வழிவகுத்தது. அடுத்தடுத்த நாள்களில் புதன், வியாழன் என்று புதிய குறைந்தபட்சப் புள்ளியைத் தோற்றுவித்தது. வெள்ளியன்று மட்டும் சற்றே மேலே திரும்பி ஒரு புல்பேக் ரேலிக்கு முயற்சி செய்கிறது.
இனி என்ன செய்யலாம்? மென்தா ஆயில், அடுத்தகட்ட இறக்கத்திற்குப்பிறகு, 1146 என்ற எல்லையைத் தற்போதைய ஆதரவாகக் கொண்டுள்ளது. இந்த ஏற்றம் மேலே 1240-ல் வலிமையாகத் தடுக்கப்படலாம்.

காட்டன்
காட்டன் சென்ற வாரம் நல்ல ஏற்றத்தைக் கொடுத்து வலிமையைக் காட்டியது. ஆனால், அந்த வலிமையான ஏற்றம், முக்கியத் தடை நிலையான 21100 என்ற எல்லையில் தடுக்கப் பட்டது. அதன் ஏற்றம் முடிவுக்கும் வந்தது.
முந்தைய இதழில் சொன்னது... “காட்டன் தற்போது 21100 என்ற தடைநிலையில் இடித்து நிற்கிறது. உடைத்தால், புதிய உச்சங்கள் தோற்று விக்கப்படலாம். கீழே 20600 மிக மிக முக்கிய ஆதரவு ஆகும். இது உடைக்கப்பட்டால், பெரிய இறக்கங்கள் வரலாம்.’’
காட்டன், சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த முக்கியத் தடைநிலையான 21100-யைத் தாண்ட முடியாமல் கீழ்நோக்கி இறங்கியது. அடுத்த கட்டமாக, கீழே நாம் கொடுத்திருந்த முக்கிய ஆதரவான 20600-யைத் திங்களன்று சோதித்தது. நாம் சொன்னது அடுத்தடுத்த நாள்களில் நடக்கவே செய்தது. திங்களன்று வலிமையாக இறங்கிய காட்டன், 20600 என்ற எல்லையைத் தக்கவைத்தது. அடுத்து, செவ்வாயன்று 20600 என்ற எல்லையை உடைத்து, 20520 என்ற எல்லை வரை இறங்கினாலும், மீண்டும் ஏறி 20600 என்ற ஆதரவைத் தக்கவைத்தது.

ஆனால், புதனன்று கரடிகள் சந்தையில் தங்கள் வலிமையைக் காட்டி, 20600 என்ற ஆதரவை உடைத்துக் கீழே இறங்கி, 20501 என்ற எல்லையில் முடித்தன. இதனால் காளைகள் கையிலிருந்த சந்தை, கரடிகள் கைக்கு மாறியது. அதன்பின் வியாழன் அன்றும் இறக்கம் தொடர்ந்தது. கரடிகள் அடுத்தக்கட்டமாக காட்டன் விலையை 20400 என்ற எல்லைக்கு எடுத்துச் சென்றன. வெள்ளி அன்றும் இறக்கம் தொடர்ந்துள்ளது.
இனி என்ன செய்யலாம்? காட்டன் வலிமை யாக இறங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்து 20230 என்பது முக்கிய ஆதரவு ஆகும். மேலே முந்தைய ஆதரவான 20600 என்பது தற்போது வலிமையான தடைநிலையாக மாறியுள்ளது!