நிம்மதி தரும் நிதித் திட்டம் - 32 - வளமான எதிர்காலத்துக்குச் சரியான முதலீட்டுத் திட்டங்கள்!

ஓவியம்: பாரதிராஜா
சமீப காலமாக, குடும்ப நிதித் திட்டமிடலைச் செய்வதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார் கள் என்பதை, ‘நிதித் திட்டமிடல் வேண்டும்’ என்று கேட்டு வருபவர்களைக்கொண்டே அறிய முடிகிறது. அந்த வரிசையில் கவிதா இன்னொரு உதாரணம். அவர் நம்மிடம் பேசும்போது...
“எனக்கு வயது 45. நான் நிதி சார்ந்த பொதுத் துறை நிறுவனமொன்றில் பணிபுரிகிறேன். என் கணவர் நிதித் துறையில் பிசினஸ் செய்கிறார். அவருக்கு மாதம் இவ்வளவு வருமானம் எனச் சொல்ல முடியாது. ஆண்டுக்குத் தோராயமாக ரூ.2.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். என் மகன் தற்போது இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிக்கிறான். மகள் 9-ம் வகுப்பு படிக்கிறாள்.

என் மகன் இன்ஜினீயரிங் படிப்பை முடித்ததும், மேற்கொண்டு படிக்க வெளிநாட்டுக்குச் செல்ல ஆசைப்படுகிறான். எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளில் அதற்கு ரூ.10 லட்சம் சேர்க்க வேண்டும். அடுத்து, 2028-ல் என் மகனுடைய திருமணத்துக்கு ரூ.6 லட்சம் தேவையாக இருக்கும்.
என் மகளை அடுத்த மூன்றாண்டுகளில் மேற்படிப்பு படிக்க வைக்க ரூ.3 லட்சம் தேவை. 2029-ல் மகளின் திருமணத்துக்கு ரூ.8 லட்சம் தேவை. சொந்தமாக வீடு இருப்பதால், 2032-ல் என் ஓய்வுக்காலத்தில் குடும்பச் செலவுகளுக்கு ரூ.25,000 வரை தேவைப்படும். (தொகை அனைத்தும் இன்றைய மதிப்பில்).
எனக்குக் கிடைக்கும் மொத்த சம்பளம் ரூ.90 ஆயிரம். வீட்டுக் கடன் இ.எம்.ஐ ரூ.16,000, பி.எஃப் ரூ.5000, வி.பி.எஃப் ரூ.5,000, குழந்தைகளுக்கான இன்ஷூரன்ஸ் ரூ.3,000 மற்றும் மெடிக்ளெய்ம், டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் இதர பிடித்தங்கள் போக, கையில் ரூ.39 ஆயிரம் சம்பளம் வாங்குகிறேன். அத்துடன் வீட்டு வாடகை வருமானமாக ரூ.12 ஆயிரம் கிடைக்கிறது. மொத்தம் ரூ.51 ஆயிரத்தில் குடும்பச் செலவுகள் போக சில முதலீடுகளையும் செய்துவருகிறேன்.
என் சம்பளத்தில் குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்வதால் என் கணவரின் ஆண்டுச் சம்பளத்தில் அவருடைய செலவுகள் போக, குறைந்தது ரூ.2 லட்சம் கூடுதலாக முதலீடு செய்ய முடியும். அடுத்த ஆறு ஆண்டுகளில் எனக்குப் பதவி உயர்வு கிடைக்கும். அதன் காரணமாக சம்பள உயர்வும் கணிசமாகக் கிடைக்கலாம். தற்போது ஆண்டுக்கு ரூ.2,000 சம்பளம் உயர்கிறது. எனக்கு பென்ஷன் ரூ.50,000 கிடைக்கும். வளமான எதிர்காலத்துக்குச் சரியான முதலீட்டுத் திட்டங்களைச் சொல்லுங்கள்” என்றவர், தன் வரவு செலவு விவரங்களை மெயிலில் அனுப்பி வைத்தார்.

வரவு செலவு விவரங்கள்
பிடித்தங்கள் போக சம்பளம் : ரூ.39,000
வாடகை வருமானம் : ரூ.12,000
மொத்தம் : ரூ.51,000
குடும்பச் செலவுகள் : ரூ.12,000
சீட்டு : ரூ.12000
மியூச்சுவல் ஃபண்ட் : ரூ.11,000
பி.பி.எஃப் : ரூ.3,000
மகனுடைய படிப்புச் செலவு : ரூ.4,000
மருத்துவச் செலவு : ரூ.1,000
இதர செலவுகள் : ரூ.1,000
மீதமாகும் தொகை : ரூ.7,000
இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“நீங்கள் இரண்டு பேரும் நிதித்துறையில் இருக்கும் நிலையில், உங்களுக்கான நிதித் திட்டமிடலைச் சிறப்பாகச் செய்து, மற்றவர் களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கலாம். ஆனால், இலக்குகளை நிர்ணயித்து அதற்கான முதலீடுகளை முன்கூட்டியே ஆரம்பிக்காமல் தவறவிட்டுள்ளீர்கள். போனது போகட்டும், இனி உங்கள் வாழ்க்கையை எப்படி சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.
உங்கள் மகன் வெளிநாட்டுக்குச் சென்று படிக்கவேண்டுமானால் ரூ.10 லட்சம் போதாது. ரூ.35 லட்சமாவது தேவைப்படும். சீட்டுத் திட்டத்தின் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் ரூ.2.3 லட்சம், மியூச்சுவல் ஃபண்டுகளில் இதுவரையில் முதலீடு செய்துள்ள ரூ.1.8 லட்சம், வி.பி.எஃப்-ல் இதுவரை முதலீடு செய்துள்ள ரூ.13 லட்சத்தில் ரூ.5 லட்சம் எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் மொத்தம் ரூ.9.12 லட்சம் கிடைக்கும். மேலும், மாதம் ரூ.4,000 முதலீடு செய்வதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1.40 லட்சம் என மொத்தம் ரூ.10.52 லட்சம் கிடைக்கும். மீதம் தேவைப்படும் தொகைக்குக் கல்விக் கடன் வாங்கிக்கொள்ளலாம்.
மகன் திருமணத்துக்கு அன்றைய நிலையில் ரூ.11.8 லட்சம் தேவையாக இருக்கும். இதற்கு மாதம் 5,100 ரூபாயை இப்போது முதல் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகளில் மகளின் மேற்படிப்புக்கு ரூ.3.6 லட்சம் சேர்க்க, மாதம் ரூ.8,500 முதலீடு செய்ய வேண்டும். மகளின் திருமணத்துக்கு ரூ.16.8 லட்சம் தேவை. அதற்கு மாதம் ரூ.6,200 முதலீடு செய்ய வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ரூ.11,000, இன்ஷூரன்ஸ் ரூ.3,000, பி.பி.எஃப் முதலீடு ரூ.3,000, மீதமாகும் தொகை ரூ.7,000 என மொத்தம் ரூ.24,000 உள்ளது. இந்தத் தொகையை மேற்கண்ட இலக்குகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அடுத்து, உங்கள் ஓய்வுக்காலம். தற்போது மாதம் ரூ.25,000 தேவையெனில், உங்கள் ஓய்வுக் காலத்தில் மாதம் ரூ.69,000 தேவை. உங்களுக்குக் கிடைக்கும் பென்ஷன் ரூ.50,000, வீட்டு வாடகை ரூ.15,000 என மொத்தம் ரூ.65,000 கிடைக்கும். பி.எஃப் மூலம் ரூ.62.9 லட்சம் கிடைக்கும். வி.பி.எஃப்-ல் இதுவரை உள்ள தொகை ரூ.13 லட்சத்தில், மகனின் மேற்படிப்புக்கு ரூ.5 லட்சம் போக மீத முள்ள ரூ.8 லட்சமானது, உங்கள் ஓய்வுக்காலத்தில் ரூ.27 லட்சமாக வளர்ந்திருக்கும். ஆக மொத்தம் ரூ.90 லட்சத்திலிருந்து கிடைக்கும் வட்டி வருமானத்தையும் ஓய்வுக்காலத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் கணவரின் ஆண்டு வருமானத்தில் ரூ.2 லட்சத்தை அவசர கால நிதியாகப் பயன்படுத்திக்கொள்ளவும்.
பரிந்துரை : ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட் ரூ.4,000, மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் 35 ஃபண்ட் ரூ.3,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மால் கம்பெனீஸ் ரூ.2,800, மிரே இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,400, ஹெச்.டி.எஃப்.சி கோல்டு ஃபண்ட் ரூ.1,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ பேலன்ஸ்டு ஃபண்ட் ரூ. 1,800.”
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878
- கா.முத்துசூரியா

உங்களுக்கும் நிதி ஆலோசனை வேண்டுமா?
finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களைக் குறிப்பிட்டு குடும்ப புகைப்படங்களுடன் அனுப்புங்கள்.

உங்கள் செல்போன் நம்பரைத் தவறாமல் குறிப்பிடவும்.
தொடர்புக்கு: 9940415222