
அங்காடித் தெரு - 15 - வடசென்னையின் ஜவுளிக் கடல்!
சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனை எதிரே, 200 ஆண்டு பழமைவாய்ந்த ‘மணியக்காரர் சத்திரம்’ என்ற முதியோர் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லம் அமைந்துள்ளதன் நினைவாகவே, அப்பகுதியிலுள்ள சாலைக்கு, மணியக்காரச் சத்திரச் சாலை (எம்.சி. சாலை) என்ற பெயர் வந்தது. தியாகராய நகருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஜவுளி வியாபாரம் நடக்கும் வியாபாரத்தளமாக இந்த எம்.சி சாலை அமைந்து உள்ளது. தி.நகர் பகுதியிலுள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களே, இங்குவந்து ஜவுளியை மொத்த மாகக் கொள்முதல் செய்கின்றன.
இந்தப் பகுதி வியாபாரிகளின் சங்கமான, சென்னை வண்ணாரப் பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் செயலாளரான எம்.முகமது பஷீரிடம், அந்தப் பகுதியின் தொழில் வளர்ச்சி குறித்துக் கேட்டோம்.
“எங்களுடைய சங்கம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 1967-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அந்தக் காலத்தில் இந்த எம்.சி சாலை முழுவதுமே மொத்த விற்பனையகமாகத்தான் இருந்தது. குறிப்பாக, கட்பீஸ் வியாபாரம்தான் பெரிய அளவில் நடந்தது. ஆனால், தற்போது ரெடிமேட் ஜவுளிகளின் வளர்ச்சிக்குப்பின் கட்பீஸ் ஜவுளி வியாபாரம் குறைந்துவிட்டது. தற்போது மொத்த வியாபாரத்தைவிட சில்லறை விற்பனை அதிகம் நடக்கிறது.

இந்த எம்.சி சாலை மட்டுமல்லாமல், இதிலிருக்கும் குறுக்குச் சந்து களிலும் ஜவுளி வியாபாரம்தான் நடக்கிறது. சின்னச் சின்னச் சந்துகளில்கூட கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறும் அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.
எம்.சி சாலையின் பின்பகுதியில் சிங்காரத் தோட்டம் என்கிற பகுதி உள்ளது. இந்த இடம், முழுக்க முழுக்க மொத்த ஜவுளி வியாபாரம் மட்டுமே நடைபெறக்கூடிய பகுதியாகும். இங்கே கொள்முதல் செய்வதற்காக, தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா எனத் தென்னிந்தியா முழுவதிலுமிருந்து வியாபாரிகள் வருகிறார்கள்.
எம்.சி சாலையில் செமி ஹோல்சேல் என்றொரு வியாபார முறையும் இருக்கிறது. தவணை முறையில் விற்பனை செய்யும் வியாபாரிகள், இங்கிருந்து ஜவுளி களை விலைக்கு வாங்கிச் சென்றாலும், வாங்கிச் சென்ற வற்றில் சில பழுதான பீஸ்களைத் திரும்ப தருவார்கள். இதன் மூலம், வீட்டிலிருந்தே சிறிய அளவில் சுயதொழில் செய்யும் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவாக இந்த எம்.சி சாலை இருக்கிறது.
சென்னையில், தியாகராய நகரைவிட அதிகமாக எங்களால் வியாபாரம் செய்ய முடியும். ஆனால், எங்களுக்கிருக்கும் பெரிய சிக்கல், போக்குவரத்து வசதிக் குறைபாடு மட்டுமே. தியாகராய நகர், புரசைவாக்கம் பகுதிகளுக்கு இருக்கும் போக்குவரத்து வசதிகள் இங்கே கிடையாது.
எம்.சி சாலையானது போக்கு வரத்தைப் பொறுத்தவரை, சென்னையின் மற்ற பகுதிகளி லிருந்து துண்டிக்கப்பட்ட பகுதியாகவே இருக்கிறது. இங்கே ஜவுளி வாங்க வருபவர்கள், ஷேர் ஆட்டோ மூலமாகத்தான் வரவேண்டியிருக்கிறது. பாரிமுனை யிலிருந்துகூட இங்கு நேரடிப் பேருந்துப் போக்குவரத்து கிடையாது. இதனால், பாரிமுனை யிலிருந்து எம்.சி சாலைக்குச் சிறிய பஸ்களை விடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறோம். தற்போது நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் போக்குவரத்துப் பணிகள் நிறை வடைந்தால், ஓரளவு பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறோம்” என்றார்.
வடசென்னைப் பகுதியானது, நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் மிகுதியாக வசிக்கும் பகுதி ஆகும். அவர்களின் வருமானத்திற்கு ஏற்ற வகையில், குறைந்த விலையில், நிறைய ரகங்களில் இங்கே ஜவுளி விற்பனை நடக்கிறது. மேலும், இந்தப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் எம்.சி சாலைக்கு முக்கியப் பங்குண்டு. இங்கு தயாராகும் ஜவுளி ரெடிமேட் ஆடைகளின் தையல் யூனிட்டுகள், சென்னைக்கு வெளியே அரக் கோணம், விழுப்புரம், பொன்னேரி வரை சுற்றிலும் பரவியுள்ளது. எனவே, இதன் மூலம் லட்சக் கணக்கான மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைகிறார்கள்.

சிங்காரத் தோட்டம் பகுதி வியாபாரிகள் சங்கத் தலைவர் டி.வெங்கடேசன், செயலாளர் ஜி.என்.ஆர்.பாபு ஆகிய இருவரும் இந்தப் பகுதியின் வியாபாரம் குறித்து நம்மிடம் சொன்னார்கள்.
“சிங்காரத் தோட்டம் என்பது 16-க்கும் மேற்பட்ட தெருக்கள், சந்துகள் கொண்ட பகுதியாகும். இந்தப் பகுதி முழுவதும் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக மொத்த ஜவுளி வியாபாரம் மட்டுமே நடைபெறுகிறது. சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களில் வெளிநாட்டு ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்பட்ட ஆடைகளில் மிகுதியானவற்றை வாங்கிவந்து விற்கத் தொடங்கி, பின்னர் படிப்படியாக விரிவடைந்ததுதான் இந்த சிங்கார கார்டன் ஜவுளி மொத்த வியாபாரம். இங்குள்ள சிறிய கடைகளில்கூட கோடிக்கணக் கான ரூபாய் மதிப்புள்ள வியாபாரம் நடக்கும்.
தலையணை உறை, பாவாடைகள், குழந்தை களுக்கான ஆடைகளான பாபா ஷூட்ஸ், ஜட்டி போன்றவற்றை விற்கத் தொடங்கி, ஏற்றுமதி செய்ததுபோக மிச்சமான சட்டைகள், பெண்களுக் கான ஆடைகள், சார்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை ஆடைகளும், பிராண்டட் ஆடைகளும்கூட தற்போது இங்கே விற்பனையாகின்றன.
ரெடிமேட் ஆடைகளைத் திருப்பூர், மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், லூதியானா, டெல்லி போன்ற இடங்களிலிலிருந்து மொத்த விலைக்கு வாங்கிவந்து விற்பனை செய்கிறார்கள். எங்களின் வாடிக்கையாளர்கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஒடிசா போன்ற இடங்களிலிருந்தெல்லாம் வருகிறார்கள். அந்தந்த ஊரில் ஃபேமஸான பொருளை வாங்கும் போது, ஜவுளிக்காக எங்களுடைய சிங்காரத் தோட்டம் பகுதிக்கு வருகிறார்கள்” என்றார்கள்.
சிறு வியாபாரிகள் மட்டுமல்ல, வீட்டில் நடக்கும் விழாக்களுக்கு மொத்தமாக ஜவுளி வாங்குகிறவர்களும் எம்.சி சாலைக்குக் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். சென்னையின் முக்கியமான ஜவுளி கேந்திரங்களில் வண்ணாரப் பேட்டை எம்.சி சாலையை எப்போதும் தவிர்த்துவிட முடியாது என்பதே நிஜம்.
- தெ.சு.கவுதமன்
படங்கள்: வி.நரேஷ்குமார்

தவணை முறையில் சேலை வாங்கி விற்பவர்களை ஈர்க்கும் எம்.சி சாலை!
“2005-ம் ஆண்டிலிருந்து எம்.சி சாலையில் கடை நடத்தி வருகிறோம். இந்தப் பகுதியின் ஜவுளிக் கடைகளுக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல மதிப்பும், நம்பிக்கையும் இருப்பதால், அதைக் காப்பாற்றினாலே போதும், வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும்.
சென்னையைப் பொறுத்தவரை, வண்ணாரப் பேட்டை, தண்டையார்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர் எனச் சுற்றுப்பகுதி முழுவதும் பெரும்பான்மையாக நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் வாழும் பகுதியாகும். இந்த எம்.சி சாலை ஜவுளிக்கடைகளும் இந்த நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை இலக்காகக் கொண்டு, விலை குறைவான ஜவுளி ரகங்களை அதிக அளவில் விற்பனை செய்கின்றன. கார்களில் சென்று ஜவுளி ஷாப்பிங் செய்யும் மேல்தட்டு வர்க்க மக்கள் பெரும்பாலும் தி.நகர்ப் பகுதிகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். எம்.சி.சாலை வியாபாரமானது பெரும்பாலும் தவணை முறையில் சேலை வாங்கி விற்கும் சிறு வியாபாரிகள், தீபாவளி, பொங்கல் ஃபண்ட் போடுபவர்கள், மகளிர் சுய உதவிக்குழுப் பெண்கள் சார்ந்தது. மற்றும் தி.நகரைச் சேர்ந்த பெரிய ஜவுளி நிறுவனங்களுக்கான ஜவுளி ரகங்களை இங்கு தயாரித்து விற்பனை செய்கிறார்கள். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், மார்ச் இயர் எண்டு சேல்ஸ், ஆடி சேல்ஸ் போன்ற காலங்களில் இங்கே வியாபாரம் பெரிய அளவில் நடைபெறும். பொதுவாக, ஆடி மாதம் தொடங்கியதுமே ஜவுளி வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும். எம்.சி சாலையில் எத்தனை ஜவுளிக்கடைகள் வந்தாலும், வியாபாரத்திற்குக் குறைவு இருக்காது என்பதால், சிறிய அளவு இடம் கிடைத்தாலும் அதிலும் கடை நடத்தி வருமானம் பார்ப்பவர்கள் உண்டு” என்றார் ஸ்ரீசாந்தி சாரீஸ் நிறுவனத்தின் லதா சரவணன்.