நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்!

செல்லமுத்து குப்புசாமி

னக்குத் தெரிந்த நண்பரின் மனைவி அவரை வாழைப்பழம் வாங்கி வரச் சொல்லி யிருக்கிறார். காலை நேரம் - அலுவலகம் செல்லும் அவசரம். நண்பர் மகனைப் பள்ளியில் இறக்கி விட்டதும் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள காய்கறிக் கடையில் ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கி வர, அதைக் கண்ட மனைவி, “ஏங்க, நீங்க வாட்ஸ் அப் எல்லாம் படிக்கறதே இல்லையா. நாம எப்பவுமே நாட்டு வாழைப்பழம்தான வாங்கு வோம்.  ஹைபிரீட் பழம் விஷம்ங்க. குழந்தைக்கு விஷத்தைக் கொடுத்து கொன்னுறாதீங்க” என்று திட்டினாராம்.

மனிதர் அலறிவிட்டார்.இத்தனைக்கும் மனைவியும் அவரைப் போலவே, பொறியியல் பட்டதாரி. வாட்ஸ் அப்பில் வருவதையெல்லாம் அப்படியே நம்பிச் செயல்படுகிறார். வதந்திகளையும், பொய்யான செய்திகளையும் நாம் வேகமாகப் பரப்புகிறோம். அவை சுவாரஸ்யமாக இருப்பதால்  அப்படியே நம்பிவிடுகிறோம்.

வாட்ஸ் அப் மாதிரியான சமூக ஊடகங்கள் மட்டுமில்லை, இன்றைக்குச் செய்தி நிறுவனங்களே பல செய்திகளைப் பரபரப்புக்காக வெளியிடு கின்றன. செய்திகளைக் கவனிக்காமல்விட்டால், நமக்குக் குறைவான விஷயங்களே தெரியும். ஆனால், செய்திகளைக் கவனித்தால் தவறான விஷயங்களே நமக்குத் தெரியும் என்கிற  அளவில் உள்ளதுதான் இன்றைய நிலவரம்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்!

ஷேர் மார்க்கெட்டைப் பற்றிய ஒன்றுமே தெரியாமல் இருப்பதைவிட, தப்பும் தவறுமாகத் தெரிந்துவைத்துக்கொள்வது அபாயகரமானது. இந்த இடத்தில் obesity எனப்படும் உடல் பருமன் பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்கும். உடல் பருமன் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு முன்னர், உணவு கிடைக்காமல் பட்டினி கிடப்பது கொடுமையென்ற உண்மையை மனதில் வைத்தே பேசவேண்டியிருக்கிறது. நமது உடம்பு இயங்குவதற்கும், உடம்பின் அத்தியாவசியமான பாகங்கள் வளர்வதற்கும் உணவு உட்கொள்கிறோம். ஆனால், உடம்புக்குத் தேவைப்படாத உணவினை (கூடுதலாக) உண்பதன் மூலம் அது தேவையில்லாக கொழுப்பாக, ஊளைச்சதையாக உடலில் சேர்கிறது. பசிக்காகச் சாப்பிடாமல் ருசிக்காக மனிதன் உண்ணத் தொடங்கியபிறகுதான் உடல் பருமன், சர்வதேசப் பிரச்னையாக உருவெடுத்தது. 

இதேபோலத்தான் தகவல், அறிவு, செய்தி, டிப்ஸ் எல்லாமே. நமக்குத் தேவையான விஷயங்களைத் தேடிப்போய்ப் படித்த காலத்தில் பிரச்னை இல்லை. ஆனால், நம்மைச் சுற்றி எங்கும் தகவல்களாக உள்ள இந்தக் காலத்தில், நாம் தகவல் களைத் தேடிப்போவதில்லை. தகவல் நம்மை ஆக்கிரமிக்கிறது. அளவுக்கு அதிகமான தகவல்கள் நாலாபக்கமும் தாக்குகின்றன. அதில் எது அவசியம், எது குப்பை, அது துரித உணவு மாதிரி கெடுதல் விளைவிக்கக் கூடியது. எதெல்லாம் இயற்கையான வகையில் விளைவிக்கப்பட்ட உணவு என்பது போல, பிரீமியம் தகவல் என்ற பெயரில் பொய்யாக நம் மீது திணிக்கப்படுகிறது என்றெல்லாம் ஆராய்வதற்கே நமக்கு நேரம் போதுமானதாக இல்லை.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்!


அதனால் தெரிந்தோ, தெரியாமலோ நாம் information obese-ஆக மாறி வருகிறோம். மூளையில் தேவையில்லாத குப்பைகள் சேராமல் தகவல் பருமனாக மாறாமல், நம்மைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கெல்லாம் உள்ளது.

தகவல் ரீதியாக ஆரோக்கியமாக மாறுவது எப்படி? உடலை ஆரோக் கியமாக மாற்றுவது எப்படியோ, அப்படித்தான். முறையான உணவு, முறையான உடற்பயிற்சி, கெட்ட பழக்கங்கள் இல்லாத முறையான உறங்குகிற சீரான வாழ்க்கைமுறை, மனவளக் கலை மூலம் பிற/புற அழுத்தங்கள் நமது மதிப்பினைத் தீர்மானிக்க அனுமதிக்காதவாறு கவனித்துக் கொள்ளுதல் எனச் சில நடவடிக்கைகளைக் கூறலாம்.

தகவல் ரீதியாக ஆரோக்கியமாக மாறுவதற்குத் தொடர்ச்சியான புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது (learn), கற்றுக்கொள் வதுடன் பழைய தவறான செய்தி களை மறப்பது (unlearn),  ஆரோக் கியமான தகவல்களை மட்டுமே பெறுவது, தேவையில்லாத தகவல்களைத் தவிர்ப்பது  ஆகியன முதல் படி.

நான் அங்கத்தினராக உள்ள ஒரு வாட்ஸ் அப் குரூப் உள்ளது. அதில் பங்கு முதலீடு, பொருளா தாரம் மற்றும் அவை தொடர்பான சங்கதிகளைப் பகிர்வார்கள். அந்தக் குழுவில் சம்பந்தமில்லாத ஃபார்வேர்ட் எதையாவது அனுப்பினால் அந்த உறுப்பினரை வெளியேற்றிவிடுவார்கள். அதனால், அது உருப்படியான, ஆக்கபூர்வமான ஒரு குழுவாக உள்ளது. வேறு சில 30-40 குழுக்களில் இருந்து நான் வெளியேறியிருக்கிறேன். ஆனால், இதில் மட்டும் மகிழ்ச்சியாகத் தொடர இயலுகிறது.

உடல் பருமன் பற்றிப் பேசும்போது என்ன சமைக்க வேண்டும், என்ன உண்ண வேண்டும்? தினமும் காலையில் நான்கு பல் பூண்டு வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்; இரவு தூங்கும் முன் கடுக்காய் பொடியைப் பாலில் கலந்து குடிக்க வேண்டும்; சாப்பிடும்முன் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்; கார்போஹைட்ரேட் இல்லாத பேலியோ டயட் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்; சமையலுக்கு மரச்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும்; காபிக்கு நாட்டுச் சர்க்கரை சேர்க்க வேண்டும்; ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டுக் கோழி... இப்படியெல்லாம் பட்டியல் போட்டு உடல் பருமன் பேணும் நபரின் வாய்ப்பாட்டை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. தினம் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, அளவாக எல்லாவற்றையும் சாப்பிடுவது போதுமானது.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்!

சிலருக்கும் முந்திரியை நெய்யில் வறுத்துக் காலை உணவாக உண்பது சாத்தியமாகலாம். இன்னும் சிலர், ஒரு முட்டையை மூன்று பேர் பகிர்ந்து உண்கிற நிலையில் இருக்கலாம். ஆகவே, எல்லா சமைய லறைக்கும் பொருந்துகிற சமையல் குறிப்பென்று உலகில் ஏதுமில்லை.

அதுபோலத்தான் பங்குச் சந்தை முதலீடுகளும். என்ன பங்குகளை வாங்கலாம் என்பது ஒரு தகவல். இன்னொருவர் ஓர் உணவை உண்கிறார் என்பதற்காக (அல்லது எல்லோரும் உண்கிறார்கள் என்பதற்காக) நாமும் அதை வாங்கிச் சாப்பிடுவது சரியாக இருக்காது. தவிர, ஆரோக்கியமான உணவு என்றாலும் அது நமக்குக் கட்டுப்படியாகுமா என்று பார்க்க வேண்டும். நமது வருமானத்திற்கு, நமது வயிற்றுக்கு, நமது உடம்புக்கு எது சரிப்பட்டு வருமோ, அதை உண்பதே ஆரோக்கியம். இல்லையேல், ஹைபிரீட் வாழைப்பழம் விஷம் என்ற வாட்ஸ் அப் மெசேஜிலேயே வாழ்க்கை ஓடிவிடும்.

நமக்கேற்ற வாழ்க்கை முறை நமது ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது போல, நமக்கேற்ற முதலீட்டு உத்திகளை நாமே வகுத்துக் கொள்வது  மட்டுமே நமது பொருளாதார நலனை உறுதிப்படுத்தும். நாம் எந்த மேதையின் கருத்துகளையும் படிக்கலாம். வெற்றியாளரின் கதையையும் சிந்தனையாளரின் செய்திகளை உள்வாங்கலாம். ஆனால், அதிலிருந்து நமக்கேற்ற வழிமுறையைத் தேர்ந்தெடுப்பது நம் கையில் உள்ளது.

பங்குச் சந்தையில் ஒன்று நாம் கற்றுக்கொள்வோம் (learn) அல்லது பெற்றுக் கொள்வோம் (earn) என்பார்கள். அதாவது, லாபம் சம்பாதிப்போம் அல்லது நஷ்டம் அடைந்தாலும் நல்ல படிப்பினையைச் சம்பாதிப்போம்.  லாபமும் சம்பாதித்து நல்ல படிப்பினையும் பெறுவது வெகு சிலருக்கே சாத்தியம். ஆனால், அது சாத்தியமே. முயற்சி, திட்டமிடல், வெவ்வேறு சூழலுக்கு ஏற்ற மாற்று உத்திகளைக் கையாளுதல், தொடர்ச்சியான கற்றல் ஆகியவை மூலம் சாத்தியமே!

அப்படியான சாத்தியத்தை நோக்கிய தனித்துவமான பாதைக்கும், அதில் நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் பயணத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

(நிறைவு பெற்றது)

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்!

அதிகரித்து வரும் என்.ஆர்.ஐ பணம்! 

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நம் நாட்டுக்கு அனுப்பும் பணம், கடந்த சில ஆண்டு களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரியில் சுமார் 1.2 பில்லியன் டாலர் அளவுக்கு பணத்தை அனுப்பியிருக்கின்றனர். இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் 4.6 பில்லியன் டாலரும், முதல் 10 மாதங்களில் 8.17 பில்லியன் டாலர் அளவுக்கும் பணத்தை அனுப்பினார்கள். வெளி நாட்டிலிருந்து இந்தியர் ஒருவர், ஓராண்டுக்கு 50 ஆயிரம் டாலர் மட்டுமே அனுப்பலாம் என்பதை மாற்றி, 2.5 லட்சம் டாலர் வரை அனுப்பலாம் என ரிசர்வ் வங்கி மாற்றியபின், இங்கு  வரும் வெளிநாட்டுப் பணத்தின் அளவு கணிசமாக அதிகரித்து இருக்கிறது.வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நம் நாட்டுக்கு அனுப்பும் பணம், கடந்த சில ஆண்டு களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரியில் சுமார் 1.2 பில்லியன் டாலர் அளவுக்கு பணத்தை அனுப்பியிருக்கின்றனர். இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் 4.6 பில்லியன் டாலரும், முதல் 10 மாதங்களில் 8.17 பில்லியன் டாலர் அளவுக்கும் பணத்தை அனுப்பினார்கள். வெளி நாட்டிலிருந்து இந்தியர் ஒருவர், ஓராண்டுக்கு 50 ஆயிரம் டாலர் மட்டுமே அனுப்பலாம் என்பதை மாற்றி, 2.5 லட்சம் டாலர் வரை அனுப்பலாம் என ரிசர்வ் வங்கி மாற்றியபின், இங்கு  வரும் வெளிநாட்டுப் பணத்தின் அளவு கணிசமாக அதிகரித்து இருக்கிறது.