நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கோரிக்கையற்றுக் கிடக்கும் கோடிகள்!

கோரிக்கையற்றுக் கிடக்கும் கோடிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கோரிக்கையற்றுக் கிடக்கும் கோடிகள்!

ப.முகைதீன் சேக்தாவூது

மது நாட்டின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வெளி யிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, வங்கிக் கணக்குகளில் கேட்பாரற்றுத் தேங்கி யிருக்கும் பணத்தின் மதிப்பு ரூ.11,300 கோடி. உலகின் மிகப் பெரிய 50 வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India)  மட்டும் கோரிக்கையற்றுக் கிடக்கும் தொகை ரூ.1,262. பஞ்சாப் நேஷனல் வங்கியில் இப்படிக் கிடக்கும் தொகை ரூ.1,250 கோடி. தனியார் வங்கிகளானஐ.சி.ஐ.சி.ஐ,ஆக்சிஸ்,ஹெச்.டி.எஃப்.சி ஆகியவற்றில் சுமார் ரூ.1,416 கோடி கேட்பாராற்றுக் கிடக்கிறது. இதில், அதிக அளவாக ரூ.476 கோடி தேங்கிக் கிடப்பது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில். அயல்நாட்டு வங்கியான ஹாங்காங் அண்ட் ஷங்காய் பேங்கிங் கார்ப்ப ரேஷன் வங்கியிலும்கூட ரூ.105 கோடி ரூபாய் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பரிமாற்றமற்ற (Accounts without Transaction) கணக்குகள், செயல்பாடு இழந்த கணக்குகள் (Dormant Accounts) எனப்படுகின்றன. இத்தகைய கணக்குகளின் எண்ணிக்கையை அனைத்து வங்கிகளும், ரிசர்வ் வங்கிக்கு, ஆண்டுதோறும் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் திரண்ட கணக்கீடுதான் கேட்பாரற்றுத் தேங்கியிருக்கும் ரூ.11,300 கோடி.

கோரிக்கையற்றுக் கிடக்கும் கோடிகள்!

   தொழிலாளர் வைப்பு நிதி

கோரிக்கையின்றிக் கிடக்கும் பணம் வங்கிக் கணக்குகளில் மட்டுமல்ல, பல்வேறு வகையான வைப்பீடுகளிலும் (Deposit) பல லட்சம் கோடி ரூபாய் அப்படியே கிடக்கிறது. அவற்றுள் ஒன்று தொழிலாளர் வைப்பு நிதி. 3.76 கோடிக்கும் அதிக மான பயனாளிகளைக்கொண்ட தொழிலாளர் வைப்பு நிதியில், 31.3.16 அன்றுள்ள கணக்கின்படி, கோரிக்கையற்றுக் கிடக்கும் பணம் ரூ.40,865 கோடி. இவற்றுள் மிக அதிகபட்சமாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ரூ.8,349 கோடி  கேட்பாரற்றுத் தேங்கியிருக்கிறது.

   இதர வைப்பீடுகள்

மேற்கண்ட இரண்டு வகை வைப்பீடுகளில் மட்டுமல்லாமல், அஞ்சலக, சேமிப்புத் திட்டத்தில் அடங்கிய இந்திர விகாஸ் பத்திரம், கிஷான் விகாஸ், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் போன்றவற்றிலும் கோடிக்கணக்கான ரூபாய் கேட்பாரற்றுக் கிடக்கிறது.
இவற்றையெல்லாம் விட ஒரு பெரிய தொகை, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியில் (General Provident Fund) கேட்பாரற்றுக் கிடக்கிறது.

   என்ன காரணம்?

கோரிக்கையற்றுக் கிடக்கும் கோடிகள்!


வங்கிக் கணக்கைப் பொறுத்தவரை, வைப்பீடுகள் கோரிக்கையற்றுப் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

* வைப்பீடு செய்தவர் இறந்துபோவது, * பினாமியின் பெயரில் கணக்கு வைத்திருப்பது, * பல்வேறு வங்கிகளில் பல்வேறு கணக்குகளை வைத்திருந்து பின்னர் மறந்துபோவது.

தொழிலாளர் வைப்பு நிதியில் உள்ள பணம் கோரிக்கை இழந்து நிற்பதற்கான காரணங்கள் என்ன என்று பார்த்தால், * வைப்பு நிதி உறுப்பின ரானபிறகு வேறு வேலைக்குச் சென்றுவிடுவது,  * வேறு வேலையில் வேறு கணக்கை ஆரம்பித்து விட்டு, முந்தைய கணக்கில் உள்ள தொகையைப் புதிய கணக்குக்கு மாற்றிக்கொள்ளும் முயற்சியை எடுக்காமல் இருப்பது, * வேலையை விட்டு நின்ற பிறகு கணக்கில் வந்து சேரும் நிலுவைத் தொகைகளைப் பெறாமலே இருப்பது.

* அனுப்பப்பட்ட முதிர்வுத்தொகையைப் பெறுகிறவர், சரியான முகவரியில் இல்லை என்கிற குறிப்புடன் திரும்ப வருவது.

பொது வருங்கால வைப்புநிதியைப் பொறுத்த வரை, * மாநிலக் கணக்காயரிடமிருந்து (Accountant General) துறைவாரியான கணக்கு எண் (Account Number with departmental Suffix) பெறாமல் சந்தா பிடித்தம் செய்வது,

* உறுப்பினராகச் சேர்ந்தபோது சமர்ப்பித்த வாரிசுப் படிவத்தை (Nomination Form) திருமணம், பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து மாற்றி அமைக்காமல் இருப்பது, * சந்தா பிடித்த அட்டவணையில் (Deduction Schedule) சரியான கணக்கு எண்ணைக் குறிப்பிடாமல் இருப்பது, * ஊழியர் இறந்த தகவலைத் தெரிவிக்காமல் இருப்பது, * ஊழியர் இறந்தபிறகு வாரிசுதாரர்களுக்குள் ஏற்படும் சச்சரவுகள் எனப் பல காரணங்கள் உள்ளன.

   எப்படித் திரும்பப் பெறுவது?

சரி, இப்படிக் கேட்பாரற்றுக் கிடைக்கும் தொகையை எப்படித் திரும்பப் பெறுவது?

தொழிலாளர் வைப்பு நிதியில் வழக்கொழிந்து போன (Inoperative Account) கணக்கில் உள்ள தொகை யையும் சந்தாதாரர் மற்றும் வாரிசுதாரர் பெறலாம். இதற்காக ‘Inoperative Accounts online help Dest’ என்ற இணைய தளம் வாயிலாக, வழக்கொழிந்து போன தொழிலாளர் வைப்பு நிதிக் கணக்கு தொடர்பான விவரங்களை அறியலாம்.

அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியில் உள்ள கோரிக்கையற்ற தொகை யானது, காணாமல் போன அல்லது இறந்துபோன ஊழியருக் குரியது எனில், அந்த ஊழியர் கடைசியாக வேலை பார்த்த அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தொகையைப் பெறலாம்.

பொது வருங்கால வைப்பு நிதியில் உள்ள நிலுவைத்தொகை இறந்துபோன / காணாமல் போன ஊழியரின் வாரிசுதாரர்கள் அனைவருக்கும் வாரிசு நியமனப் படிவத்தின்படி வழங்கப்படும்.  இதே நடைமுறைகள் பங்களிப்பு ஓய்வூதியம், சிறப்பு சேமநலநிதி முதலானவற்றுக்கும் பொருந்தும்.

   ஆசிரியர் வைப்பு நிதி

ஆசிரியர் வைப்புநிதி (Teachers Provident fund) போன்ற பிற வருங்கால வைப்புநிதிகளில் உள்ள நிலுவையை, வேலை மாற்றத்திற்குப்பின் பொது வருங்கால வைப்பு நிதிக்கு மாற்றிக்கொள்ளாமல் இருப்பது  போன்ற காரணங்களால் கோரிக்கையற்றுப் போன தொகையைத் திரும்பப் பெற முடியுமா என்று கேட்டால், நிச்சயம் திரும்பப் பெறலாம்.

வங்கி வைப்புகளில் உள்ள கோரப்படாத தொகையைத் தற்போது பெறலாம். நிலுவைத் தொகையுடன் அதே கணக்கையும் தொடர்ந்து பராமரிக்கலாம். கணக்குதாரர் இறந்துபோயிருந் தால் வாரிசுதாரர் பெறலாம்.

கோரிக்கையற்றுக் கிடக்கும் கோடிகள்!

   திரும்பப் பெறமுடியாத தொகை

சில கணக்குகளில்  கேட் பாரற்றுக் கிடக்கும் தொகையை நம்மால் திரும்பப் பெற முடியாது. வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் போன்றவற்றில் செய்யப்படும் வைப்பீடுகள் தவிர, அரசுக் கருவூலங்களில் செலுத்தப் படும் வைப்பீடுகளும் உள்ளன. அவை, வருவாய் வைப்பு (Revenue Deposit), தேர்தல் வைப்பு (Election Deposit) பல்வேறு உரிமங்களுக்கான வைப்பு (Deposit for various business Licenses) எனப் பலவகையாய் உள்ளன. அவற்றுள் முதன்மை யானது, வருவாய் வைப்பு. இதை ஓர் உதாரணத்துடன் பார்ப்போம்.

தேர்தல் சமயங்களில் அனுமதிக்கப்பட்ட பணத்துக்கு மேல் எடுத்துச் செல்லப்படும். உரிய ஆதார ஆவணமற்ற தொகை காவல்துறை மற்றும் வருவாய்த் துறையால் பறிமுதல் செய்யப் படலாம். இந்தத் தொகையானது ‘வருவாய் வைப்பு’ என்ற தலைப்பில், பறிமுதல் செய்த அரசு அதிகாரியால், அரசுக் கருவூ லத்தில் வைப்பீடாக செலுத்தப் படும். இது வருவாய் வைப்பின் ஒருவகை. மேலும் ஒரு மாவட்டத்தி லிருந்து மற்ற மாவட்டத்துக்கோ, மாநிலம் விட்டு மாநிலமோ அரிசி, நெல் போன்ற உணவு தானியங்கள் கொண்டு செல்லத் தடை உள்ளபோது, தடையை மீறி எடுத்துச் செல்லப்படும் தானிய மூட்டைகள் பறிமுதல் செய்யப்படும். அவற்றுக்கான ரொக்கம் கருவூலத்தில் வருவாய் வைப்பாகச் செலுத்தப்படும். இதுவும் ஒருவகை வருவாய் வைப்பு.

இந்த மாதிரி நிகழ்வுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அல்லது பொருள், சட்ட ரீதியான ஆவண ஆதாரங்களுடன் எடுத்துச் செல்லப் பட்டதுதான் என்பதற்கும், அவை தன்னுடையதுதான் என்பதற்கும் உரிய ஆதாரத்தை, பறிமுதல் செய்த அதிகாரியிடம் சமர்ப்பித்து அந்தத் தொகையைப் பெறலாம். இதற்கான காலக்கெடு, பறிமுதல் செய்யப்பட்ட தொகை எந்த நிதியாண்டில் வைப்பீடு செய்யப்பட்டதோ, அந்த நிதியாண்டு நீங்கலாக அடுத்த நான்கு நிதியாண்டுக்குள் விண்ணப்பித்துப் பெறலாம்.

நான்கு நிதியாண்டுக்குப் பின் அந்தத் தொகை ‘காலம் கடந்த வைப்பு’ (Lapsed Deposit) எனப்படும். அவ்வாறு காலம் கடந்த ஓராண்டுக்குள், கருவூலம் மூலம் பறிமுதல் செய்த அதிகாரியால் அந்தப் பணம் பெற்றுத்தரப்படலாம். காலம் கடந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டால், பறிமுதல் செய்த அதிகாரியின் துறைத் தலைவர் அனுமதி பெற்று, அந்தத் தொகையைக் கருவூலம் மூலம் பெறலாம். காலம் கடந்த நிலை ஆறு ஆண்டுகளுக்குள் எனில், அரசு அனுமதி பெற்று தொகை பெறலாம். ஆறு ஆண்டுகளுக்கு மேல் பெற முடியாது. காலம் கடந்த வைப்பைப் பெற அதிகபட்சக் காலக்கெடு ஆறு ஆண்டுகள்தான்.

சாலை அமைத்தல் / அகலப்படுத்துதல், பாலம் கட்டுதல், அரசு அலுவலகம் கட்டுதல் போன்ற தேவைகளுக்காக அரசு, நிலத்தைக் கையகப்படுத்தும். அதற்கான இழப்பீட்டையும் வழங்கும். இழப்பீட்டைப் பெற மறுத்தால், அந்தத் தொகையும்கூட ‘வருவாய் வைப்பு’ என்ற தலைப்பில் செலுத்தப்பட்டுவிடும். மேற்கண்ட நடைமுறைபடி இந்தப் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

   கோரிக்கையற்றுப் போகாத தொகை!

தமிழக அரசு, தனது ஊழியர்களுக்குக் ‘குடும்பப் பாதுகாப்புத் திட்டம்’ என்கிற காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதற்கான மாதச் சந்தா ரூ.60. பணியில் உள்ளபோது இறந்துபோகும் ஊழியர் குடும்பத்துக்குக் காப்பீட்டுத் தொகையாக ரூ.3 லட்சம் தரப்படுகிறது. இந்தத் தொகை கோரிக்கையற்றுப் போய்விடாதிருக்க அருமையான விதிமுறையும் உள்ளது. அதாவது, பணியில் புதிதாகச் சேரும் ஊழியருக்கு, அவரது முதல் மாதச் சம்பளத்தைக் கொடுக்கும்முன்  குடும்பப் பாதுகாப்பு நிதியைப் பெறுவதற்கான உறுப்பினர் பற்றிய நியமனத்தைப் பெற்றுக்கொள்வதுதான் அந்த நடைமுறை.

கோரிக்கையற்று கிடக்கும் பங்கு வைப்பு மற்றும் செயல்படாத வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை வங்கிகள் அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் அறிவுரை. ஆனாலும், பணத்துக்கு உரியவர்கள், தங்களுக்குச் சேரவேண்டிய பணத்தைத் திரும்பப் பெற முயற்சி செய்வது அவர்களின் கடமை என்றுதான் சொல்ல வேண்டும்.

கோரிக்கையற்றுக் கிடக்கும் கோடிகள்!

  ஈரோட்டுக்கு கடன் ரூ.5,017 கோடி!

ஈரோடு மாவட்டத்துக் கான 2018-19-ம் ஆண்டின் கடன் திட்டத்தை அண்மையில் வெளியிட்டார் அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பிரபாகர். இந்தக் கடன் திட்டத்தின்படி, விவசாயக் கடனாக மட்டும் ரூ.5 ஆயிரம் கோடிக்குமேல் வழங்கலாம் எனத் திட்ட மிடப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2,145 கோடி கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி, வீட்டுக் கடன் மற்றும் சுய உதவிக் குழுக் களுக்கு ரூ.357 கோடி கடன் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கடன் திட்டத்தை ஈரோடு மாவட்டத்தின் முன்னோடி வங்கியான கனரா வங்கி தயார் செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.